Saturday, 22 April 2017

மேகமலைப் பயணம் - நிறைவு

                    
              மேகமலைப் பயணம் - பாகம் 1
              மேகமலைப் பயணம் - பாகம் 2
              மேகமலைப் பயணம் - பாகம் 3
                                                
உதவியாளர் கண்ணன் சொன்ன அடையாளங்களை வைத்து நாங்கள் முன்னேறினோம். ஏரியை ஒட்டி செல்லும் சாலை, ஓரிடத்தில் பேருந்து நிறுத்தம், அதை ஒட்டி வலதுபுறம் ஏரிக்குள் இறங்கும் பாதை, ஏரிக்குள் பயணம், ஓரிடத்தில் உடைந்த சின்னப் பாலம், இவற்றைத் தாண்டினால் மறுகரையில் வெளியேறி மீண்டும் தேயிலை எஸ்டேட்டுக்குள் பயணம். ஏரிக்குள் பைக்கை ஓட்டிச் சென்றது புது அனுபவமாக இருந்தது.

ஏரிக்குள் செல்லும் பாதை

அணை கட்டியபோது வெட்டப்பட்ட பலநூறு மரங்களின் தண்டுப்பகுதி தண்ணீருக்கு வெளியே தெரிகின்றது. அதில் ஒரு சில மரங்கள் ஒரு டபுள் பெட் அளவுக்கு அகளமாக இருந்தது ஆச்சரியம்.


தண்ணீரின் விளிம்பு வரை புற்கள் முளைத்து பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருந்தது. வற்றியிருந்த தண்ணீர் ஆங்காங்கே சிறு தீவுகளை உருவாக்கியிருந்தது. அங்கேயே ஒரு குடில் அமைத்துக் தங்கிவிடத் தோன்றியது.





தண்ணீருக்கு அருகில் பைக்கைக் கொண்டு சென்று நிறுத்தினோம். புல்தரை தண்ணீர் ஊரிப்போய் பொதுபொதுவென்று இருந்ததால் பைக்கின் சைடு ஸ்டாண்டு பூமிக்குள் இறங்கியது.




அணைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. தூய்மையான அந்தத் தண்ணீரை ஆசை தீர அள்ளிப் பருகினோம். தண்ணீரின் உண்மையான சுவையை உணர முடிந்தது. முகம் கழுவிப் புத்துணர்ச்சி அடைந்தோம். பயணத்தைத் தொடர்ந்தோம். உடைந்த பாலத்தைக் கடக்கும்போது கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்கிறது.  வழியில் வெண்ணியாறு எஸ்டேட் வருகிறது. அங்குதான் sandriver cottage உள்ளது. எஸ்டேட் விடுதியில் தங்கினால் நாம் அவர்களின் எஸ்டேட்டுக்குள் செல்லவோ சுற்றிப் பார்க்கவோ தடை இல்லை. அவர்களின் டீ பேக்டரியையும் இலவசமாகச் சுற்றிப் பார்த்து டீ தயாரிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் தலைக்கு ரூ.100 கொடுத்துப் பார்க்கலாம்.



தொடர்ந்து பயணித்தோம். இதுவரை வெட்டவெளியில் சென்ற சாலை மெல்ல மெல்லக் காட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அடர்ந்த காடு பகலிலும் இருளைக் கொடுக்கிறது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த மரங்கள் அந்த இருளில் திகிலை ஏற்படுத்துகிறது. ஒரு வித நடுக்கத்துடனே பைக்கைச் செலுத்தினோம். காட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் நிம்மதி பிறந்தது. ஒரு வழியாக 1 மணி நேரம் கழித்து மஹாராஜாமெட்டை அடைந்தோம். மஹாராஜாமெட்டு என்பது ஒரு கிராமம். அங்கேதான் நாம் பார்க்க வேண்டிய வியூ பாயிண்ட் இருக்கிறது. வியூ பாயிண்ட் செல்லும் பாதை தெரியாமல் சாலை முடியும் வரை சென்றபோது நாங்கள் இரவங்களாறு அணையை அடைந்தோம். அணை உள்ளே செல்ல அனுமதி கிடைக்கிறது. நேரமின்மையால் நாங்கள் உள்ளே செல்லவில்லை.

இரவங்கலாறு அணை



மஹாராஜாமெட்டு வியூ பாயிண்ட் செல்ல நாம் வந்த பாதையிலேயே திரும்பி வந்து, அந்தச் சாலையின் ஒரு வளைவை ஒட்டி செல்லும் ஒரு சின்னக் கல்பாதையில் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலம் இல்லை. நட்டுக்குத்தலான பாதை. திரில்லுக்காக நாங்கள் அதில் எங்கள் பைக்கை ஏற்றிச் சென்றோம். ஆனால் நடந்து செல்வதே பாதுகாப்பு. ஒற்றையடிப் பாதை நம்மை ஒரு மலைக் குன்றின் மேல் கொண்டு செல்கிறது. மரங்களற்ற புற்கள் மேவிய ஒரு மொட்டைக்குன்று. சுற்றிலும் மூன்று புறமும் பள்ளத்தாக்கு. மூன்றுபுறமும் வெவ்வேறு காட்சிகள். இடதுபுறம் தேயிலைத் தோட்டங்கள், வலது புறம் சென்றால் தமிழகத்தின் சமவெளிப் பகுதி, நேராகப் பார்த்தால் கேரளாவின் தேக்கடி மலைப் பகுதி. நாம் சென்றபோது யாருமே இல்லை. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தோம். முதலில் வலதுபுறம் சென்று மலைமுகட்டில் சிறிது நேரம் அமர்ந்தோம். சின்னமனூர், கம்பம் போன்ற தமிழகப் பகுதிகள் தெரிகிறது. நல்ல காற்று வெயிலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சொர்க்கதில் இருந்து பூமியைப் பார்த்தது போல் ஒரு தோற்றம். சற்றுத் தடுக்கினால் நிஜமாகவே சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்பது வேறு விசயம்.


பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை. ஆகையால் நமது மனதுக்கும் வேலி இட முடியவில்லை. இது போன்ற சூழல் மனச்சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்க வல்லது. சிறிது நேரம் இருந்துவிட்டு மலைமுகட்டின் மேற்குப் பக்கம் சென்றோம். ஒரு போலீஸ்காரர் எங்களை அங்கே செல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் பத்து நிமிடத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லி அனுமதி வாங்கிச் சென்றோம். அது மலைமுகட்டின் உயரமான இடம். கேரளாவை நோக்கி உள்ள பகுதி. போகும் வழியில் ஒரு சிலுவை நிருவப்பட்டிருந்தது, பொங்கல் வைத்த தடங்களும் இருந்தன. நம்மையும் அறியாமல் உடலில் சிலிர்ப்பைக் கொடுக்க சிறிது நேரம் பிரார்த்தனை செய்தோம்.




அதற்கு அடுத்து ஒரு சிரிய சோலை தென்பட்டது. அருகில் சென்றால் நடுவில் ஒரு சிறிய கோயில். அழகாக இருந்தது. கோவிலுக்கு செல்லும் பாதை முன்பு ஒரு இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அருகே சென்று பார்த்தபோது தான் அது ஒரு சிறிய கேணி என்பது தெரிந்தது. இயற்கையான நீர் ஊற்றால் அமைந்திருந்தது. நல்ல ஆழமாகவே இருந்தது. இயற்கை நமக்கு வழங்கும் ஆச்சரியங்கள் இது தான். அவ்வளவு உயரத்தில் இப்படியான ஒரு நீரூற்றை நாம் எதிர்பார்க்க முடியுமா??!! வனத்துறை அனுமதி கிடைத்தால் கேம்ப் அமைத்துத் தங்க அருமையான இடம்.




 
நீரூற்றைக் கடந்து சென்றால் போலீஸ் கட்டிடம் ஒன்று இருந்தது.  அருகில் சிதிலமடைந்த மற்றொரு கோயில் கோபுரம் இன்றி இருந்தது. உள்ளே காளி போன்று ஒரு கடவுள் சிலை இருந்தது. வணங்கினோம். 

கோபுரமில்லாக் கோவில
சிதிலமடைந்த சிலைகள்
கோயில் பின்புறம் இருந்த நிழலில் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தோம். சிறிது ஓய்வுக்குப் பின் தேக்கடியை நோக்கிய மலை முகட்டிற்கு சென்றோம். முகட்டிலேயும் ஒரு சிரிய தின்னைக் கோயில் அழகாக இருந்தது.


இங்கிருந்து பார்த்தால் தேக்கடி அணையும், சபரிமலையும் தெரியும் என்றார்கள். அன்று தேக்கடி மலைப் பகுதி முழுதும் மேகமூட்டமாக இருந்ததால் எங்களால் பார்க்க இயலவில்லை. மலைமுகட்டில் நின்று ஊஊஊஊஊஊ…… என்று கத்தினோம். புகைப்படம் எடுத்தோம்.  பள்ளத்தாக்கைப் பார்த்தவுடன் பழனிக்கு பயம் வந்துவிட்டது. மிக எச்சரிக்கையாகவே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். நம்மையும் விளிம்புக்குச் செல்ல விடவில்லை. 


ஆங்காங்கே தும்பைச் செடிகள் முளைத்திருந்தன. பட்டாம்பூச்சிகள் தேன் உண்ணுமே சின்னச் சின்ன வெள்ளைப் பூக்களையுடைய அந்தச் செடி தான். எங்கள் ஊரில் கூடப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. அதில் இருந்தப் பூக்களை எடுத்துத் தேனைச் சுவைத்து ஆனந்தப் பட்டோம். மலைக்குன்றின் பக்கவாட்டில் இருந்து கீழிறங்கிச் செல்லும் ஒரு பாதை கேரளச் செக்போஸ்ட் வரை செல்கிறது.. நேரமின்மையால் அங்கிருந்து திரும்ப மனமின்றித் திரும்பினோம். வரும்போது அந்தப் போலீஸ்காரருக்கு நன்றியைத் தெரிவித்தோம். அவரும் சந்தோஷமாக நமக்குக் கையசைத்து வழியனுப்பி வைத்தார்.
ஒரு மணிக்கு அறையை அடைந்தோம். இனி ஊருக்குக் கிளம்ப வேண்டும். கிளம்புவதற்கு மனது வரவில்லை. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். பேக் செய்து உதவியாளர் கண்ணனிடம் கூடிய சீக்கிரம் திரும்பி வருவோம் என்று கூறிவிட்டுக் கிளம்பினோம். மேகமலை நினைவுகளுடன் சீராக பைக்கைச் செலுத்தினோம். வழியில் இரண்டு இடங்களில் வெடி வைக்கப்பட்டப் பாறைகள் சாலையை அடைத்திருந்தது. சீர் செய்யப்படும்வரை உச்சி வெயிலில் காத்திருந்தோம்.
சீர் செய்யப்படும் சாலை
நமக்குப் பின்னால் எக்ஸ்.யூ.வி காரில் வந்த வடநாட்டு இளைஞர்களும் காத்திருந்தனர். மினி ஸ்கர்ட் அணிந்த இரண்டு பெண்களும் அதில் இருந்தனர். சாலை சீராகத் தாமதம் ஆனதால் அதில் ஒரு பெண் ஒரு பீர் பாட்டிலை எடுத்து ரோட்டோரம் அமர்ந்து குடிக்க ஆரம்பித்து விட்டார். அரை மணி நேரத்தில் சாலை சீரானதும் கிளம்பினோம். கீழே இறங்க இறங்க பசுமை குறைந்து வெயிலும் படிப்படியாக அதிகரித்தது. மண்ணாக இருந்த சலையில் பைக்கை சுதாரிப்புடன் செலுத்த வேண்டி இருந்தது. இருந்தும் ஓரு திருப்பத்தில் என் பைக்கின் டயர் வாரிவிட்டு பைக் கீழே விழுந்தது. பைக் சாயும்போதே நான் அதில் இருந்து தவ்வி தரையில் கையை ஊன்றி பேலன்ஸ் செய்து தப்பித்தேன். கையுறை அணிந்திருந்ததால் கையில் அடிபடவில்லை. பைக்கை நிமிர்த்தி சோதித்தேன். பம்பர் உடைந்திருந்தது. ஃபுட்ரெஸ்ட் தேய்ந்திருந்தது. பைக் பாடியில் சீராய்ப்பு எதும் இல்லாததால் நிம்மதி அடைந்தேன். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பி ஒரு வழியாக அடிவாரத்தை அடைந்தோம். வெற்றிகரமாக ஒரு மலைப்பயணத்தை முடித்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்தோம். ஆனந்தக் கூச்சலிட்டோம். ஆம் எத்தனையோ முறை மூணாறு, கொடைக்கானல், சிறுமலைக்கு அசால்ட்டாக பைக்கில் சென்று வந்திருந்தாலும் மேகமலைப் பயணம் மட்டுமே சவால் நிறைந்ததாக இருந்தது. கிளம்புமுன் சற்று பயத்துடன் தான் கிளம்பினோம். ஆனால் அந்தக் கரடுமுரடான சாலை அளித்த சவாலைக் கடந்து வந்தது எங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்திருந்து. இமயமலை போன்ற பகுதிகளுக்கு சாகசப் பயணம் செல்ல விரும்புவோர் ஒரு முன்னோட்டமாக மேகமலை சென்று வரலாம் என்பது என் கருத்து. சின்னமனூரில் மதிய உணவை 4 மணிக்கு முடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு விடை பெற்றோம். 6 மணிக்கு வீட்டை அடைந்தபோது அப்பாடா என்றிருந்தது.
வாட்ஸ்அப் குரூப்பின் பெயரை “ மேகமலை நினைவுகள் ‘’ என்று மாற்றினேன். ஆம் மேகமலையின் நினைவுகள் குறைந்தது ஒரு மாதத்திற்காவது என்னுள் மாறாது இருக்கும். அன்றாட அலுவல்களால் அலுத்துப்போன மனதிற்கும் உடலுக்கும் பயணம் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அதனால் சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை பயணம் கூட  தியானம் போன்றதே…
நன்றி!!!

பயண அனுபவத்தில் இருந்து டிப்ஸ்:
Ø  மேகமலை செல்பவர்கள் முன்கூட்டியே அறை முன்பதிவு செய்துகொள்வது நல்லது. இல்லையென்றால் விடுமுறை நாட்ளில் அறைகள் கிடைப்பது கடினம்.
Ø  பட்ஜெட் அறைகள்: 1.inspection bangalow, உள்ளேயே TASMAC கடை உள்ளது. 2. பஞ்சாயத்து விடுதி. இரண்டுக்கும் முன்பதிவு செய்ய, திரு.முருகன் (ஹோட்டல்காரர்) CELL NO: 9442781748, பஞ்சாயத்து விடுதி உதவியாளர்கள் கண்ணன் 7598250335, முருகன் 9488227944. அறை வாடகை ரூ.850-/-. எக்ஸ்ரா பெட் ரூ.350-/-.
Ø  சொகுசு அறைகள் Sand river cottage, cloud mountain bangalow. இவர்களுக்கு தனி வலைதளம் உள்ளது.
Ø   உணவுக்கு முருகன் கடை. பஞ்சாயத்து விடுதி வளாகத்தில் உள்ளது. சுவை சாப்பிடும் அளவுக்கு இருக்கும்.
Ø  Route சென்னை, கோவை, பெங்களூரில் இருந்து வருவோருக்கு, திண்டுக்கல்>வத்தலக்குண்டு>பெரியகுளம்>தேனி>சின்னமனூர்>மேகமலை>ஹைவேவிஸ்
Ø  கேரளாவில் இருந்து குமுளி>கம்பம்>சின்னமனூர்>மேகமலை>ஹைவேவிஸ்
Ø  சின்னமனூரில் ஸ்னாக்ஸ், குடிநீர் வாங்கிக்கொள்ளலாம். பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொள்ளலாம்.
Ø  பைக்கில் வருவோர் இஞ்சின், டயர், பிரேக், கிளட்ச் கண்டிசன் செக் செய்து எடுத்து வருவது நல்லது. மலைச் சாலையில் பழுதோ, பஞ்சரோ ஏற்பட்டால் ரொம்ப கஷ்டம்.
Ø  காரில் வருபவர்கள் SUV, MPV வகை கார்களில் வருவது நல்லது.
Ø  இரவில் குளிர் அதிகமாக இருக்கும். ஸ்வெட்டர், கையுறை, VASELIN கொண்டு வருவது நல்லது.
Ø  மழைக்காலத்தில் அட்டைப் பூச்சிகள் தொல்லை இருக்கும்.
Ø  சரிவான பாதைகளில் நடக்க நல்ல கிரிப் உள்ள ஷூக்கள் தேவை.
Ø  பார்க்க வேண்டிய இடங்கள் ஹைவேவிஸ் டேம், மஹாராஜாமெட்டு, இரவங்களாறு டேம், தூவானம் டேம். வட்டப்பாறை.
Ø  ஹைவேவிஸ் டேம் வரும் வழியிலேயே உள்ளது.
Ø  மஹாராஜாமெட்டு, இரவங்களார் டேம் செல்ல முருகன் கடையில் ஜீப் ரூ.2500-/- வாடகைக்கு கிடைக்கும்.
Ø  தூவானம் டேம் நடந்து செல்லலாம். வாகனத்தில் செல்ல EB Dept அனுமதி வேண்டும்.
Ø  வட்டப்பாறை தனியார் எஸ்டேட் உள்ளே உள்ளது. விலங்குகள் வரும் இடம். எஸ்டேட் ரிசார்ட்டில் தங்கினால் பார்க்க அனுமதி கிடைக்கும்.
Ø  சீசன்: ஜூன் – நவம்பர், மழைக்காலம். டிசம்பர் – ஃபிப்ரவரி, கடும் குளிர். மார்ச் – மே, வெயில் காலம்.
Ø  செல்போன்- BSNL சிக்னல் மட்டுமே கிடைகிறது.
குறிப்பு: சின்னமனூரில் இருந்து மேகமலைக்குச் சாலை அமைக்கப்பட்டு விட்டால் மேகமலை வணிகமயமாவது உறுதி. பிறகு மனித நடமாட்டம் அதிகமாகி மற்ற மலைப்பிரதேசங்களைப் போல் தன் இயற்கையை இழந்து அனைத்தும் செயற்கையாகி விடும். ஆகவே, மேகமலையின் உண்மையான அழகை ரசிக்க வேண்டும் என்றால் சாலை அமைப்பதற்குள் சென்று வருவது நல்லது.


   அப்போ மேகமலை கிளம்புறீங்க தானே??!!

15 comments:

  1. Super.. உன் எழுத்துகளே எங்களை மேகமலை போய்ட்டு வந்த திருப்தி ஏற்படுத்திருச்சு.. ரொம்ப நல்லா இருந்துச்சு..

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. ஒருமுறை சென்று வரவும்

      Delete
  2. Arumai....padicha undanae anga poittu varanum pola irukku.

    ReplyDelete
    Replies
    1. அருமையான இடம் சென்று வந்து தங்கள் அனுபவத்தைப் பகிரவும்

      Delete
  3. அருமையான வர்னணை ராஜ்கண்ணா...
    வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உனது இனிய பயண அனூபவங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா..

      Delete
  4. Wow bro
    உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருப்பது கண்டு ரொம்ப சந்தோஷம். கட்டாயம் குடும்பத்துடன் போய் வருவேன். உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி.. சென்று வந்து தங்களின் அனுபவத்தையும் பகிரவும்...

      Delete
  5. Wow bro
    உங்களுக்குள் இப்படி ஒரு திறமை இருப்பது கண்டு ரொம்ப சந்தோஷம். கட்டாயம் குடும்பத்துடன் போய் வருவேன். உங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  6. சார், அங்கு தங்குவதற்கு உள்ள நம்பர் கொடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் இறுதியில் கொடுத்துள்ளேன்...நன்றி..

      Delete
  7. ரொம்ப சந்தோஷம் மிகவும் தெளிவாக வர்னணை கொடுத்துள்ளிர்கள் மிகவும் சந்தோஷம்.

    ReplyDelete