Showing posts with label சுவை. Show all posts
Showing posts with label சுவை. Show all posts

Saturday, 16 September 2017

குற்றாலம் - பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல்

அதிகாலையே குற்றால மெயின் அருவி சென்று மக்கள் வெள்ளத்தில் அடித்துப் பிடித்துப் புகுந்து அருவி வெள்ளத்தில் குளித்து வந்ததில் உள்ளே இருக்கும் குண்டோதரன் விழித்துக் கொண்டான். மெயின் அருவி அருகில் நல்ல உணவகம் எது என்று விசாரித்த போது பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். அங்கே சென்றோம். மெயின் அருவியில் இருந்து வெளியே வந்து இடதுபுறம் திரும்பி ஐந்தருவி செல்லும் சாலையில் சென்றால் சிறிது தூரத்தில் வலதுபுறம் ஒரு தெரு பிரிகின்றது. அந்தத் தெருவில் கொஞ்சம் முன்னேறினால் பாண்டியன் லாட்ஜ் ஹோட்டலை அடையலாம். 


மற்ற உணவகங்கள் எல்லாம் இட்லி சாம்பார் என்று வழங்கிக் கொண்டிருக்க காலை வேளையிலேயே நல்ல வெட்டுக்குத்து வேண்டுவோர் அணுகும் இடம் தான் இந்தப் பாண்டியன் லாட்ஜ் உணவகம். உணவகத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இல்லை. கட்டிடத்தைச் சுற்றிலும் பல பெயர் பலகைகள் வைத்துள்ளனர். பழைய காலத்து வீடு போல் இருந்தது உணவகம். வரவேற்பறையில் சுற்றிலும் இருக்கும் சாமி படங்கள் ஊதுபத்தி மணத்துடன் நம்மை வரவேற்கிறது. சுவர்கள் வெண்மை பூசப்பட்டு உணவகம் மிகத் தூய்மையாக இருக்கிறது.  

வரவேற்பறை
ஒரே ஒரு மேஜையைத் தவிர அனைத்தும் காலியாக இருந்தது. நல்ல உணவகம் இந்தக் காலை வேளையில் அரவம் இன்றி இருந்தது நமக்கு ஆச்சரியம் அளித்தது. உள்ளே சென்று நாமாக ஒரு இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நேரம் கழித்து வாழை இலையும் தண்ணீரும் வைக்கப்படுகிறது. சர்வரிடம் உணவகத்தின் அமைதிக்கான காரணத்தைக் கேட்டோம். “அவர் குற்றாலத்தில் சீசன் இல்லாததால்..” என்றார். அருவிகளிலும், நேற்று மதியம் பார்டர் கடையிலும் கண்ட கூட்டதிற்கு பின் அவர் சொல்லை நம்ப முடியவில்லை. 

காத்திருக்கும் படலம்
சரி இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு தோசையும் மட்டன் கொத்துக்கறியும் கேட்டோம். கொத்துக்கறி செய்யவில்லை என்றார். மட்டன் சுக்காவும், கோழி சாப்ஸும் கொண்டு வரச் சொன்னோம். மெல்லிய தோசையும் உடன் சிறிய கிண்ணங்களில் சாப்ஸும் சுக்காவும் வந்தது. கோழி சாப்ஸ் அளவு சிறிதாகவும் மட்டன் சுக்கா துவையல் அளவும் இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. சட்னி கேட்டோம். காலியாகி விட்டது என்றனர். மணி பத்து தான் ஆகியிருந்தது. ஆகட்டும் என்று தோசையைப் பிட்டு மட்டன் சுக்காவில் தொட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.


சுவையில் குறை இல்லை. மிதமான காரத்துடன் மட்டன் சுக்கா பிரமாதமாக இருந்தது. பொடிது பொடிதாக வெட்டப்பட்ட மட்டன் துண்டுகள் மசாலுடன் கலந்து நன்றாக வேகவைக்கப்பட்டிருந்தது. தோசையுடன் சேர்த்துச் சுவைத்தபோது மாவைப் போல் கரைந்து போனது.


கோழி சாப்ஸும் அதேபோல் நல்ல பதத்துடன் தயாரிக்கப்பட்டு நல்ல சுவையில் இருந்தது. சுக்கா போல் அதையும் சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு குருமாவோடு அள்ளி தோசையுடன் சேர்த்து சுவைத்த போது அற்புதமாய் இருந்தது. அருவிக் குளியல் தந்த களைப்பில் உணவு போன இடம் தெரியவில்லை. சுக்காவும் சாப்ஸும் சுவையின் இரு வேறு பரிணாமங்களைக் காட்டின. உணவருந்திவிட்டு அதற்கான விலை கொடுத்தபோது அதிகமெனத் தோன்றியது. 


பாண்டியன் லாட்ஜ் உணவுகள் சுவையில் பார்டர் கடை உணவுகளுக்கு சற்றும் குறையில்லை தான். ஆனால் அந்த உணவை வழங்கும் விதத்தில் தான் இரண்டுக்கும் வித்தியாசம். என்ன தான் சுவையான உணவாக இருந்தாலும் விற்கும் விலைக்கேற்ப உணவின் அளவும் இருந்தால் தானே உண்பவர்களுக்குத் திருப்தி. பார்டரில் இருக்கும் தாராளம் பாண்டியனிடம் இல்லை. எல்லாவற்றையும் விடுத்து சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் தாராளமாகப் பாண்டியன் லாட்ஜ் உணவுகள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். 

Saturday, 2 September 2017

பிரானூர் - பார்டர் கடை புரோட்டாவும் நாட்டுக்கோழியும்..


நண்பர்கள் குற்றாலம் பயணத் திட்டமிட்டவுடன் நான் உடனே சம்மதம் தெரிவித்ததும் உள்ளே இருக்கும் குண்டோதரனுக்கு ஒரே குஷி. காரணம் அருவியில் விளையாடுவதற்கல்ல, 'பிரானூர் பார்டர் கடை' புரோட்டா சால்னாவில்(குருமா) புகுந்து விளையாடவே. இன்று என்னைப் போல் பலரும் குற்றாலம் வருவது அருவிகளில் குளித்து மகிழ்வதோடு பார்டர் கடை புரோட்டா, கோழிகளை ஒரு கை பார்க்கும் ஆவலுடன் தான்

குற்றாலம் சென்று முதலில் மெயின் அருவிக்குச் சென்றால் சுமார் அரை கிமீக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சரி ஐந்தருவிக்குப் போய்ப் பார்க்கலாம் என்றால் அங்கேயும் அதே நிலை. இந்தக் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று குளிப்பதற்குக் குளிக்காமலேயே இருக்கலாம் என்று இருந்தது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது நமக்கு உள்ளே இருக்கும் குண்டோதரன் தன் வேலையைக் காட்டினான். நான், "கூட்டம் குறைந்ததும் இரவு வந்து குளிப்போம். இப்போது போய் பார்டர் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல  தூக்கம் போட்டால் என்ன?" என்று கூறவும் நண்பர்களும் அதை ஆமோதித்தனர். குண்டோதரன் குதூகலமானான்ஐந்தருவியில் இருந்து நேராக பைக்கை பார்டர் கடை நோக்கி விரட்டினோம்


கடையின் எதிரே பைக்கை நிறுத்தினோம். சிமெண்ட் சீட் போடப்பட்ட கட்டிடம். பெரிய பெயர் பலகையைத் தவிர ஒரு பிரபலமான உணவகம் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆவலுடன் உள்ளே சென்ற நமக்குப் பெரிய அதிர்ச்சி. குற்றால அருவிகளில் இருந்ததில் பாதிக் கூட்டம் அங்கே தான் இருந்தது. அனைத்து மேஜைகளும் கூட்டத்தால் நிரம்பி வழிய, மேஜையில் சிக்கிய இடத்தில் எல்லாம் இலையை விரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு இலையிலும் சால்னா (குருமா) அருவியாக ஓடிக்கொண்டிருக்க, மக்கள் அதில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். “இந்தக் கடையில் அப்படி என்னதான் இருக்கிறது? இவ்வளவு கூட்டம் அள்ளுகிறது”, என்று உடன் வந்த நண்பர் கேட்டார். “சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றேன். ஒவ்வொரு இருக்கைக்குப் பின்பும் உண்பவர் எழுந்த பின்பு அந்த இருக்கையைக் கைப்பற்ற அடுத்தவர் தயாராக நின்றுகொண்டிருந்தார். பசி ருசியை மட்டுமல்ல பண்பையும் அறியாது போலும். நமக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு சங்கடப் பட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான் என்று நாமும் ஒரு இருக்கைக்குப் பின்னால் போய் நின்று காத்துக் கொண்டிருந்தோம்J


காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கடையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 'பார்டர் கடை' பெயரே விசித்திரமாக இருக்கிறதல்லவா? அது ஒரு காரணப் பெயர் ஆகும். 1956க்கு முன்னர் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாத சமயத்தில் செங்கோட்டைத் தாலுகா கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது தமிழக-கேரள எல்லை (பார்டர்) இந்தக் கடை இருக்கும் பிரானூர் அருகில் இருந்ததால் இந்தக் கடை 'பார்டர் கடை' என்று பெயர் பெற்றுள்ளதுமுதலில் பார்டரில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுனர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை வழங்கிய சுவையில் அதன் புகழ் பரவி இன்று தமிழகமெங்கும் இருந்து ‘மலர் தேடும் வண்டுகளைப் போல்’ சுவை விரும்பிகள் இந்தக் கடையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். குற்றாலம் சென்று வந்தவர்கள் தங்கள் நட்புகளிடம் 'பார்டர் கடையில் சாப்பிட்டேன்' என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். 



அதோ இருக்கை காலியாகிவிட்டது. டபக்கென்று புகுந்து இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். பெரிய வெற்றி பெற்றதைப் போல் ஒரு உணர்வு.  மேஜை சுத்தம் செய்யப்பட்டு நமக்காக இலை விரிக்கப்படுகிறது. தண்ணீர் தெளித்து மீண்டும் காத்திருந்தோம். வெறும் இலையைப் பார்த்துக் கொண்டு உணவுக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களே.. ஆனால் அவர்கள் அதிகம் நம்மைக் காக்க விடவில்லை. ஒரு பெரிய வட்டகை நிறைய புரோட்டா வர, அனைவர் கண்களும் வட்டகையையே நோக்குகிறது. அனைவருக்கும் சமமாக மூன்று புரோட்டாக்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள். வட்டகையில் புரோட்டாக்கள் குறைந்துகொண்டே வர வர “இங்கே வாருங்கள்”, “எனக்கு வையுங்கள்” என்ற, பல குரல்களின் ஒலி கூடிக் கொண்டே வந்தது. பலரது முகங்களிலும் புரோட்டாவைப் பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தீர்ந்து விடுமோ என்ற ஏக்கமும் தெரிந்தது. 



நமக்குக் கிடைத்தது. பொன்னிற புரோட்டாக்கள் ஒவ்வொன்றும் சிறியதாக உள்ளங்கை அளவே இருந்தது. பிறகு ஒரு வாளி நிறைய சால்னா கொண்டு வந்து மேஜைக்கு ஒன்று வைத்து விடுகின்றனர். நாமே வேண்டிய அளவு எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.  கொஞ்சம் சால்னா எடுத்து இலையில் ஊற்றியபோது அது கெட்டியாக இல்லாமல் இலையில் ஓடிப் பரவியது. முதலில் கொஞ்சமாக புரோட்டாவைப் பிட்டு கொஞ்சமாகச் சால்னாவில் தொட்டு சுவையை சோதிக்கிறோம். சோதனைக்காகக் குறுகியிருந்த கண்கள் புரோட்டா சால்னா சுவையில் பரவசமடைந்து விரிகின்றன. வழக்கமான சாலனாவின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு புதிய சுவையை உணர்த்தியது. பிறகென்ன புரோட்டாவைச் சால்னாவில் தொட்டுத் தின்பதை விடுத்துக் குழைத்து உண்டோம். நாம் மட்டுமல்ல மேஜையில் இருந்த அனைவரும் அப்போது புரோட்டா சூரியாக மாறியிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அதே போல் ஒரு பெரிய வட்டகை நிறைய வருக்கப்பட்ட நாட்டுக்கோழியைக் கொண்டு வந்து “வேண்டுமா? வேண்டுமா?” என்று ஒவ்வொரு இலையாகக் கேட்டுக் கொண்டே வைக்கின்றனர். பீஸ்கள் ஒவ்வொன்றும் பெரிதாக உள்ளது. அதில் கொஞ்சமாய்ப் பிட்டு சுவைத்தோம். வீட்டு மசால் கலந்து மிளகு தடவப்பட்டு நன்றாக வருக்கப்பட்ட நாட்டுக்கோழி காரமாக சுவையாக இருந்தது. எண்ணையில் பொறித்தது போல் அல்லாமல் வேகவைக்கப்பட்டது போல் நாட்டுக்கோழி அவ்வளவு மிருதுவாக இருந்தது.



சால்னாவும் கோழியும் இவ்வளவு  சுவையாக இருக்கக் காரணம் அவர்கள் வீட்டிலேயே தயாரிக்கும் மசால் தான். புரோட்டாவைச் சால்னாவில் பிரட்டி அதோடு கொஞ்சம் நாட்டுக்கோழியையும் சேர்த்து வாய்க்குக் கொடுத்து சுவைத்த போது அங்கே ஒரு இன்னிசைக் கச்சேரியே நடந்தது. அடுத்து ஆம்லெட் வந்தது. நாங்கள் நிமிர்ந்து பார்க்காமல் புரோட்டாவையும் கோழியையும் வேட்டையாடினோம். மீண்டும் அடுத்த சுற்று புரோட்டா வர அதையும் ஒரு கை பார்த்தோம். திருப்தியாக உண்டு எழுந்தபோது நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டு டபார் என்று ஒருவர் நம் இருக்கையை பிடித்து அமர்ந்தார். சற்று நேரத்திற்கு முன்னால் நாம் உணர்ந்த வெற்றிக் களிப்பு இப்போது அவர் முகத்தில்… 


விலைப் பட்டியலில் பல வகை உணவுகள் உள்ளன. அவையெல்லாம் கூட்டம் இல்லாத சாதாரண நாட்களில் கிடைக்கும். ஆனால் சீசன் நேரங்களில் புரோட்டா, சிக்கன், ஆம்லெட், புரோட்டா பிடிக்காதவர்களுக்கு இடியாப்பம் அவ்வளவே கிடைக்கிறது. புரோட்டா ஒன்றுக்கு எட்டு ருபாயும், நாட்டுக்கோழி வருவலுக்கு 140 ரூபாயும் வாங்குகின்றனர். அந்த சுவைக்கும், கஞ்சத்தனம் இல்லாமல் அவர்கள் கோழியை அள்ளி வைக்கும் பாங்கிற்கும் அந்த விலை தாராளமாகக் கொடுக்கலாம்.  விலையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது குற்றாலம் வந்த பயணப் பயனை அடைந்தது போல் உணர்ந்தோம். “இப்போது தெரிகிறது, ஏன் இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம்”, என்றார் உடன் வந்த நண்பர். 



Friday, 25 August 2017

ஸ்ரீவில்லிபுத்தூர் - ஹோட்டல் கதிரவன்

நண்பர்களுடன் குற்றாலத்திற்குப் பயணம். உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி பேரையூர் கடந்து ஸ்ரீவில்லிப்புத்தூரை அடைந்தபோது காலை மணி ஒன்பது. உள்ளே இருக்கும் குண்டோதரன் கதவைத் தட்ட அவனை அங்கேயே சமாதானப்படுத்த எண்ணினோம். நல்ல உணவகம் எது என்று விசாரித்தபோது பல கைகள் காட்டிய இடம் ஹோட்டல் கதிரவன்.


ராஜபாளையம் செல்லும் சாலையில் தேரடிக்கு அருகில் இருபுறமும் இருக்கும் பால்கோவா கடைகளில் இருந்து வரும் இனிய மணத்தை அனுபவித்துக் கொண்டே சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் ஒரு வேப்பமரத்தின் அடியில் இருக்கிறது இந்த உணவகம். 




பழமையான கட்டிடம். முற்றத்தைத் தேக்குமரத் தூண்கள் தாங்குகின்றன. வெளியே இருந்து பார்க்கும் போது சிறிய உணவகம் போல் தோன்றியது. அதிக உயரமில்லாத நிலைக் கதவில் முட்டிக்கொள்ளாமல் குனிந்து உள்ளே சென்றபோது தான் கடையின் அளவு தெரிகிறது. வரிசையாக நான்கு அறைகள் உள்ளன. நம் வீட்டை விட உயரமாக எழுப்பப்பட்ட கான்கிரீட் கூரை. நாம் சென்ற போது உணவகம் தன் முழு கொள்ளளவில் இயங்கிக் கொண்டிருந்தது. கை  கழுவிவிட்டு, இடம் காலியாகும் வரை ஒரு ஒரமாக ஒதுங்கி ஓட்டப் பந்தய வீரரைப் போல் இடம் பிடிக்கத் தயாராக நின்றோம். நம்மைப் போல் இன்னும் சிலரும்... 



உணவகத்தின் பழமையைப் போல் வருபவர்களைக் கவனிப்பதிலும் பழைய பண்பு இருக்கிறது. நாம் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு கடையின் முதலாளி நாம் எத்தனை பேர் என்று விசாரித்து உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதே போல் கல்லாவை மட்டும் கவனிக்காமல் உணவு உண்பவர்களுக்கு இடையிடையே என்ன வேண்டும் என்று கேட்டுத் தருவித்தார். ஒவ்வொரு இருக்கைக்கு மேலும் இருக்கை எண் எழுதப்பட்டிருக்கிறது. சர்வர் வந்து உணவுகளைப் பரிமாறிவிட்டு இருக்கை எண்ணைச் சொல்லவும் கல்லாவில் இருப்பவர் கணக்கு வைத்துக் கொள்கிறார். 
நல்ல அகலமான வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு குவளையில் தண்ணீர் வைக்கப்படுகிறது. இலையில் தண்ணீர் தெளித்துவிட்டு முன்பசிக்கு இட்லி சொல்லலாம் என்று நினைத்தபோது, ஒரு பெரிய தாம்பளத் தட்டு நிறைய இரண்டு இரண்டாகப் பூரிகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு இலையாக ‘’வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டு சர்வர் வர, இட்லியை மறந்து நாமும் ஒரு செட் பூரி வாங்கிக்கொண்டோம். மேலே இருக்கும் பூரியை எடுத்தபோது சிற்பிக்குள் இருக்கும் முத்தைப் போல் பூரிகளுக்கு நடுவில் உருளைக் கிழங்கு மசால் ஒழிந்திருந்தது.



சுத்தமான கோதுமையில் செய்யப்பட்ட பூரி சிறிதாக இருந்தாலும் மிருதுவாக இருந்தது. பூரியைப் பிட்டு உருளைக் கிழங்கு மசிய வேகவைக்கப்பட்ட மசாலில் தொட்டுக் கொண்டு சுவைத்தபோது அருமையாக இருந்தது. வித்தியாசமான சுவைக்கு தொட்டுக்கொள்ள சாம்பாரும் தருகிறார்கள். அதுவும் நன்றாகவே இருந்தது. 




அடுத்து ஒரு பொங்கலும் வடையும் வங்கிக் கொண்டோம். பச்சரிசியுடன் பாசிப்பருப்பும் நெய்யும் செழிப்பாகக் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொங்கல், சுவையில் பூரிக்கு சளைக்கவில்லை. பாசிப்பருப்பும் பச்சரிசியும் நன்றாகக் குழைந்து ஒன்றோடு ஒன்று பிணைந்து அல்வா பதத்தில் இருந்தது. ஒரு வாய் எடுத்து சாம்பாரில் பிரட்டி சுவைத்தபோது அப்படியே கரைந்து போனது. வழக்கமாக பொங்கலில் சேர்க்கப்படும் மிளகு பொங்கலின் சுவையைக் கூட்ட இடையிடையே இருக்கும் சீரகம் மெல்லப்படும்போது அது அந்த சுவையான உணவுக்கு ஒரு அற்புதமான மணத்தைக் கொடுக்கிறது. 



பொங்கலைப் போல் வடையும் இங்கே நல்ல சுவையில் கிடைக்கிறது. இன்று உளுந்து விற்கும் விலையில் பல கடைகளில் உளுந்து வடையில் உளுந்துடன் அரிசியைக் கலந்து மெதுமெதுவென்று இருக்க வேண்டிய வடையை வறவறவென்று தருகின்றனர். ஆனால் இங்கே சுத்தமான உளுந்தமாவை உருட்டி எண்ணையில் பதமாகப் பொறித்துப் பொன்னிறத்தில் கொடுக்கின்றனர். வடை அவ்வளவு மிருதுவாக இருக்கிறது. பொங்கலுக்கு சரியான பங்காளி. உடன் வந்த நண்பர், நெய் தோசையும் அருமை என்றார். நான் சுவைக்கவில்லை.

ஆண்டால் பாடிய பாசுரங்களைக் கேட்டு ரங்கமன்னார் மயங்கியது போல் கதிரவன் ஹோட்டல் தந்த உணவுகளின் சுவையில் நாங்கள் மயங்கி நின்றோம். இவ்வளவு சுவையான உணவுகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் விலை இன்று எங்கெங்கும் முளைத்திருக்கும் பல உயர்தர பவன்களைக் காட்டிலும் குறைவு என்பது மிகச் சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் – ரங்கமன்னாரை தரிசித்த மனநிறைவோடு கதிரவனில் வயிறை நிறையுங்கள் அது ஒரு சுகானுபவமாக இருக்கும்.

Sunday, 2 July 2017

பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை - திருவானைக்காவல்


திருச்சி, தஞ்சை பகுதி கோயில்களுக்குச் செல்கிறோம் என்றதுமே அந்தப் பகுதியின் சிறந்த உணவகங்களைத் தொகுத்து ரகசியமாக வைத்துக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருந்து கல்லூரி நண்பர்கள் திண்டுக்கல் பிரபாகரன் மற்றும் கோவை அரூண் ஆகியோருடன் காரில் பயணம். திருச்சியை அடைந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கூகிள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுகொண்டிருந்தோம். காலை உணவிற்கு ஸ்ரீரங்கம் ஆருகில் திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை என்று குறித்திருந்தேன். ஆனால் நண்பர்களின் குறி ரங்கநாதராக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தசாரதி விலாஸை மறந்தேன்.

ஆனால் 'கூகிள் ஆண்டவரின்' தவறான வழிகாட்டுதலில் நமது வண்டி தானாக திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயம் முன் போய் நின்றது. "ஜம்புகேஷ்வரா!! உன் மகிமையே மகிமை!!"  என்று வேண்டிக் கொள்கிறோம். சரி அங்கிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வழி கேட்க அரூண் எத்தனிப்பதற்குள், கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமின்றி அரூணை முந்திக்கொண்டு பார்த்தசாரதி விலாஸ் உணவகத்திற்கு வழி கேட்கிறோம். அருகிலேயே இருந்தது அந்த உணவகம். ஜம்புகேஷ்வரர் ஆலய நுழைவாயிலின் முன்புறம் உள்ள தெருவில் (மேல விபூதி பிரகாரம்) நம் வலதுபுறம் திரும்பி சிறிது தூரம் நடந்தால் வண்ணமயமான பெயர் பலகையுடன் பார்த்தசாரதி விலாஸ் நம்மை வரவேற்கிறது. 



உள்ளே செல்கிறோம்.  உணவகத்தின் பாரம்பரியம் கட்டிடத்தில் தெரிகிறது.  பழைய காலத்துக் கட்டிடம் அது. தேக்கு மரக் கட்டைகள் வரிசையாய் அடுக்கப்பட்டு அதன் மேல் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. இருவர் சேர்ந்து அணைக்கும் அளவுக்கு பருமனான சதுரத் தூண்கள் அந்தக் கட்டைகளைத் தாங்குகின்றன. அறை முழுதும் சாமி படங்கள் நிறைக்க அங்கு வீசிய சாம்பிராணி மணம் நாம் ஒரு உணவகம் அன்றி மடத்திற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. 



நாம் உள்ளே சென்றதில் இருந்து "ஒரு சூப்பர்... ரெண்டு சூப்பர்" என்று சத்தம் கேட்க, ஒன்றும் புரியாமல் இருக்கையில் சென்று அமர்கிறோம். பளிங்கு மேசை நமக்காக துடைக்கப்பட்டு, இளம் வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்படுகிறது. தண்ணீர் வைத்த அம்மையார் "வெளியூரில் இருந்து வருகிறீர்களா?" என்று நம்மைக் கேட்டு, "இங்கு நெய் தோசை நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாம் கேட்காமலேயே நமக்குப் பரிந்துரைத்தார். 

சப்ளையர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க நாம் நெய் என்று ஆரம்பித்து  தோசை என்று முடிப்பதற்குள் "மூனு சூப்பர்" என்று கூறிவிட்டு நகர்ந்தார். 'சூப்பர்' என்றால் அங்கு நெய் தோசை என்று அப்போது புரிந்தது. 'மாவு' என்றால் ஊத்தாப்பமாம். 

சிறிது நேரத்தில் நெய் தோசை வந்து இலையை நிறைத்தது. இலையில் விழுந்த வேகத்தில் சூடான தோசையில் இருந்து வந்த ஆவி நெய் மணத்தையும் தன்னோடு பரப்பியது. நெய் தாராளமாக விடப்பட்ட பொண்ணிற தோசையில் மாஸ்டர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுழற்றியதால் ஏற்பட்ட ரேகை காவி நிறத்தில் வளையமாய் இருந்தது. தோசையைக் கொஞ்சமாய் பிட்டு சாம்பார் சட்னி எதுவும் தொடாமல்  முதல் வாய் அப்படியே சாப்பிட்டு நெய் மணத்தை அனுபவித்தோம். உணவு உண்ணாத குழந்தை கூட தோசை என்றால் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடும் அல்லவா, நாமும் அது போலவே இந்த நெய் தோசையின் சுவையில் குழந்தையானோம். திருவானைக்காவலில் குடிகொண்டிருக்கும் ஜம்புகேஷ்வரரைச் சுற்றி எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருப்பதைப் போல நெய் தோசையின் சுவையில் நமது நாவிலும் நீர் ஊறுகிறது. உண்மையாகவே 'சூப்பர்' சூப்பர் தான்....


பிறகு அந்த நெய் தோசையைக் கொஞ்சம் சாம்பாரில் நனைத்து சுவைத்தபோது எப்போதும் சாப்பிடும் தோசையில் ஒரு புதிய சுவை தெரிந்தது. நம் ஊரில் கிடைக்கும் பருப்பு சாம்பார் அல்லாமல் சின்ன வெங்காயம் போடப்பட்ட சாம்பார் அருமையாக இருந்தது. நெய் தோசையும் வெங்காய சாம்பாரும் போட்டி போட்டுக் கொண்டு சுவையைக் கொடுத்தன. பிறகென்ன ஒரு வாய் நெய் மணத்தோடு தோசை மட்டும், ஒரு வாய் சாம்பாருடன், ஒரு வாய் சட்னியுடன் என மாறி மாறி சுவைத்து முடித்தோம். 

அரூண்

பிரபாகரன்

தோசையின் சுவையோடு நம் மனதை நிறைத்தது அந்த தோசையின் விலை. ஆம், வெறும் 40 ரூபாய் தான். இந்த விலையில் வேறெங்கும் நெய் தோசை கிடைக்குமா என்பது ஐயமே.. இன்றைய கார்ப்பரேட் உணவகங்களுக்கிடையில் இது போன்ற ஜனரஞ்சகமான உணவகங்கள் கொடுக்கும் சுவை உண்பதைக் கூட ஒரு நல்ல அனுபவமாக மாற்றி விடுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரரின் ஆலயத்தைப் போல் பார்த்தசாரதி விலாஸ் தோசையின் ருசி காலத்தைக் கடந்து நிற்கிறது.

(பின்குறிப்பு: நெய் தோசையின் மணத்தில் மயங்கி அதை சுவைக்க ஆரம்பித்துவிட்டேன். இடையில் நினைவு வர பிறகு படம்பிடிக்கப்பட்டது தான் அந்த மீதி தோசை )

Friday, 9 June 2017

கள்ளும்...கப்பையும்...மீன் குழம்பும்...

சமீபத்தில் வாகமன் சென்றிருந்த போது ‘குளுக்கிய சர்பத்’ அருந்திய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். இது அதே வாகமன் பயணத்தில் மற்றொரு சுவையான அனுபவம்.


வாகமன் பயணத்தை முடித்துவிட்டுச் ‘செங்கரா’ வழியாகக் குமுளி திரும்பிக் கொண்டிருந்தோம். சாலையின் இருமருங்கும் பசுமை சூழ்ந்திருக்க அதை ரசித்துக் கொண்டு பயணித்தோம். ‘ஃபாத்திமுக்கு’ என்ற இடத்தைக் கடக்கும்போது அந்தப் பசுமைக்குள் இருந்து ஒரு சிறிய கட்டிடம் எட்டிப் பார்க்கிறது. வெள்ளைப் பலகையும் அதில் உள்ள கருப்பு எழுத்துக்களும் நம் கண்களை மின்னச் செய்ய, அதைப் பார்த்ததும் சடன் பிரேக் அடித்து நிற்கிறோம். 


பின்னணியில் "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்.... இந்தப் பார்வை பார்க்கப் பகலிரவா பூத்திருந்தேன்....", என்ற பாடல் வரிகள் நமக்குக் கேட்கிறது. ஆம், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரளப் புகழ் கள்ளுக் கடை இது தான். நம்மூரில் தலைகீழாய் நின்றாலும் கிடைக்காத ஒன்று.. விட்டுவிடுவோமா? கடைக்குப் படையெடுத்தோம்.

முதலில் நம் மனதைக் கவர்ந்தது அந்தக் கடை அமைந்த இடம். சுற்றிலும் மிளகுக் கொடி படர்ந்த பலா மரங்களும், ஊடே வாழை மரங்களும் சூழ்ந்திருக்க கீழே ஆறு ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது. தோட்டத்தின் நடுவே இந்தக் கடை மட்டுமே..




கடையின் உள்ளே சென்றோம். மிகச் சிறிய கடை இரண்டே இரண்டு பெஞ்ச் போடும் அளவுக்கு இருந்தது. இரண்டையும் நாம் ஆக்கிரமித்தோம். உள்ளே இரண்டு பெரிய அண்டாக்களில் பால் போன்று வெள்ளை நிறத்தில் கள் நிரம்பியிருந்தது. நமக்கு இருந்த ஆவலில் அண்டாவைத் தூக்கி அப்படியே குடித்துவிடத் தோன்றியது. 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தில் கள் உண்பது தவறு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி வெள்ளை வெளேர் என்று வெள்ளந்தியாக இருக்கும் கள்ளை நம்மால் புறக்கணிக்க முடியவில்லை. வள்ளுவரிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு கடைக்காரரிடம் கள் வேண்டும் என்றோம். 'தென்னையா? இல்லை பனையா?' என்றார். 'கேரளாவில் பனை மரம் எங்கே இருக்கிறது?' என்று நினைத்துக் கொண்டு, எதற்கு வம்பென்று தென்னங்கள் கேட்டோம். தொட்டுக் கொள்ள வேக வைத்த கப்பைக் கிழங்கும், மீன் குழம்பும் சொல்லிவிட்டு ஆவலாய் காத்திருந்தோம்.




ஒரு லிட்டர் அளவுடைய இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் கள் வந்தது, பின்னாடியே கப்பையும் மீன் குழம்பும்.. ஆளுக்கு ஒரு கண்ணாடிக் கோப்பையில் கள்ளை ஊற்றிக் கொண்டு பயபக்தியுடன் அதை எடுத்து ஒரு வாய் பருகிப் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது, அமிர்தம் என்றால் அது இது தான். நாவின் நுணி இனிப்பை உணர, நாவின் பக்கவாட்டில் உள்ள சுவை நரம்புகள் கள்ளின் புளிப்பைப் பெற்று மூளைக்கு செலுத்துகிறது. புளிப்பும் இனிப்பும் கலந்த அந்தக் கள்ளின் சுவைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் மயங்கினோம். 


சிறகடிப்போம்

அந்தச் சுவையின் மயக்கத்தில் அப்படியே கப்பைக் கிழங்கை ஒரு விள்ளல் எடுத்து மீன் குழம்பில் தொட்டு, கொஞ்சம் மீனோடு வாய்க்குக் கொடுத்த போது ஏற்கனவே கள்ளின் சுவையில் மெய் மறந்திருந்த நாம் இப்போது மீன் குழம்பின் சுவையில் திக்குமுக்காடி விடுகிறோம். சூரியா ஜோதிகா போல் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் கள்ளும் மீன் குழம்பில் நனைந்த கப்பையும்...



தென்னை மரத்தில் தேங்காய் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு உயரத்தில் ஏறி தென்னம்பாளை பூப்பதற்குள்  அதன் முனையை சீவி விட்டால் அதில் இருந்து அமிர்தம் போன்ற ஒரு திரவம் வரும். அதைப் பருகி இன்புறலாம் என்று கண்டுபிடித்து நமக்குச் சொன்ன நம் முன்னோர்களை என்னவென்று பாராட்டுவது!!

மீன்குழம்பின் காரம் நாவைத் தூண்ட கை தானாகக் கள் இருக்கும் கோப்பையை நாடுகிறது. இவ்வாறு ஒரு ஐந்தாறு கோப்பைகள் தீர்ந்ததும் நமது வயிறோடு மனதும் நிறைந்தது. நினைத்துப் பாருங்கள் பகலெல்லாம் பாடுபட்டு, அந்தி சாய்ந்ததும் இது போன்ற ஒரு இயற்கை நிறைந்த இடத்தில் கையில் ஒரு கோப்பை கள்ளும்   தொட்டுக் கொள்ள கப்பையும் மீன் குழம்பும் இருக்க, கவலை மறந்து வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில் ஜேசுதாஸ் "கடலினக்கர போனோரே... காணா பொன்னினு போனோரே..."  என்று பாடிக்கொண்டிருப்பார். மண்ணுலகில் இதை விட சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்...

Tuesday, 16 May 2017

குலுக்கிய சர்பத் - வாகமன் (கேரளா)

கோடைக்காலம் வந்தாலே குளிர்பான விற்பனை அமோகமா இருக்கும். சாலை ஓரங்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு விற்கும் சீசன் கடைகள் முளைத்திருக்கும். இந்தக் கடைகளும் இல்லனா வெயில சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். அந்த வகையில் இந்தக் கடை வச்சுருகிறவங்க எல்லாம் நம்மைக் காக்க வந்த அவதாரப்புருசர்கள் தான்.

இப்படிக் கோடைய சமாளிக்க மனிதன் கண்டுபிடித்த பானங்களில் ஒன்று தான் சர்பத். நம்மில் சர்பத் குடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டோம். கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் வராத காலங்களில் சர்பத் மட்டுமே நம் தாகம் தீர்த்த குளிர்பானம். அந்தக்கால டீக்கடைகளில் இருக்கும் மர மேஜையின் முன்புறம் நம் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் கண்ணாடி பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் மூடி போட்டு மூடப்பட்டிருக்கும் நீளமான கண்ணாடி பாட்டில்கள். அதில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளை நிற லேபிளில் கோட்டு அணிந்த சேட்டு போன்ற ஒருவரின் படம் இருக்கும். அதில் தேன் பதத்தில் இருக்கும் அந்த சிவப்பு நிற திரவத்தைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறாத குழந்தைகள் யாரும் இருந்திருக்க மாட்டோம்.

அம்மா கடைக்குப் போகச் சொன்னால் கால் வலிக்கிறது, முடியாது என்று அடம்பிடிக்கும் நாம், சர்பத் வாங்கிவரச் சொன்னால் முதல் ஆளாக சொம்பை தூக்கிக்கொண்டு ஓடுவோம் கடைக்கு.. கடைக்காரரிடம் ஒரு சர்பத் என்று சொம்பை நீட்டிவிட்டு அந்த சிவப்பு நிற பாட்டில்களையே பார்ப்போம். கடைக்காரர் அதில் ஒரு பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து அதில் இருக்கும் சிவப்பு திரவத்தைக் கொஞ்சம் சொம்பில் ஊற்றுவார். பிறகு அதில் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன்மேல் ஐஸ்கட்டிகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு செல்லும்போது ஐஸ்கட்டியின் குளிர்ச்சியால் சொம்பின் வெளிப்புறம் வியர்த்து நீர்த்துளிகளாய் இருக்கும். சொம்பைக் கண்ணத்தில் வைத்து குளிர்ச்சியை அனுபவித்துப் பரவசப்படுவோம்.

வீட்டில் அம்மா அதை டம்ளரில் ஊற்றித் தரும்போது, டம்ளரின் விளிம்புவரை வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக் குடிப்போம். அதும் போதாது என்று அம்மாவின் பங்கில் பாதியையும் ஆட்டையைப் போட்டுவிடுவோம். குடித்து முடித்தபின் சர்பத் எசன்ஸால் சிவந்திருக்கும் நாக்கைப் பார்த்து யருக்கு அதிகமாக சிவந்திருக்கிறது என்று போட்டி போடுவோம். நாகரீக மாற்றத்தால் இன்று பன்னாட்டுக் குளிர்பானங்கள் வந்த பின்பு சர்பத் அருந்துவது குறைந்தாலும் அதை விரும்புவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய சர்பத் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையில் பரவியிருக்கிறது. அப்படி ஒரு வகை தான் கேரளாவில் கிடைக்கும் 'குலுக்கி(ய) சர்பத்'.  

தங்கல்பாறை
சமீபத்தில் நண்பர்களுடன் வாகமன் சென்றிருந்தோம். அங்கே தங்கல்பாறை என்ற மலையில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் உள்ளது. ஒரு மணி நேரம் மலையேறி உச்சியை அடையலாம். மலையேறிவிட்டு இறங்கியதும் கலைப்பு நீங்க எதாவது குளிர்பானம் அருந்தலாம் என்று அங்கிருந்த ஒரே ஒரு கடைக்குச் சென்று கேட்டபோது, குலுக்கி சர்பத் (மலையாளத்தில் குலுக்கி மட்டுமே) இருக்கிறது என்றார். பெயரே வித்தியாசமாக இருந்ததால் அதைப் பருக ஆவலாய் ஆளுக்கொன்று சொல்லிவிட்டு குலுக்கி சர்பத் தயாராவதை வேடிக்கை பார்த்தோம். 




முதலில் பாழுக்காத பச்சை எலுமிச்சங்காயில் இருந்து சாற்றை ஒரு கண்ணாடி டம்ளரில் பிழிந்துவிட்டு அந்த எலுமிச்சந்தோலையும் அதில் போடுகிறார். சிறிதளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்த இஞ்சி பேஸ்ட் கொஞ்சம் போடும்போது ஏனோ சிறு பயம் நமக்கு, சர்பத் என்றால் இங்கு வேறு அர்த்தமோ என்று.  பிறகு வழக்கமான சர்பத் எசன்ஸுக்கு பதில் சர்க்கரைப் பாகு சேர்க்கிறார். அடுத்து துளசி விதைகள் (கஸ்கஸ்) சேர்க்கிறார்.  அது பார்க்கத் தவளை முட்டை போன்றே இருக்கிறது. பச்சை மிளகாயையும் அதில் வெட்டிப் போடும்போது நமது பயம் அதிகமாகி அவரையே நோக்குகிறோம். இறுதியாக ஐஸ்கட்டிகளைச் சேர்த்து மீதி டம்ளரைத் தண்ணீரால் நிரப்புகிறார்.

குலுக்கி சர்பத்
இப்போது இன்னொரு எவர்சில்வர் டம்ளரை எடுத்து அதன் வாயால் இந்தக் கண்ணாடி டம்ளரின் வாயை மூடி, மேலும் கீழுமாய் ஒரு 30 நொடிகள் குலுக்கித் திறந்ததும் அது மிக்சரில் அடித்தது போல் நன்றாக நுரைத்திருக்கிறது. இப்போது குலுக்கிய சர்பத் நாம் பருகத் தயார். மிளகாய் எல்லாம் போட்டிருக்கிறாரே என்று முதல் வாய் ஐயத்துடனே எடுத்துப் பருகி இரு நொடிகள் சர்பத்தை வாயிலேயே வைத்துக் கண்களை மூடி சுவையை அரிய முயல்கிறோம். சும்மா சொல்லக் கூடாது ‘பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு’ என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒரே நேரத்தில் எலுமிச்சையின் புளிப்பும், சர்க்கரையின் இனிப்பும், இஞ்சி மற்றும் மிளகாயின் கார்ப்பும் இவற்றோடு ஐஸ்கட்டியின் குளிர்ச்சியும் சேர்ந்துகொள்ள சுவையில் நா திக்குமுக்காடிவிடுகிறது. பிறகு ஒவ்வொரு வாயும் மெல்ல ரசித்து ரசித்துப் பருகிவிட்டு நாம் கேட்டது “சேட்டா ஒன்ஸ்மோர்”. ஆம், மீண்டும் ஒரு குலுக்கிய சர்பத்தைக் கேட்டு வாங்கிச் சுவைத்து மகிழ்ந்தோம். விலை வெறும் 20 ரூபாய் தான் ஆனால் அந்த சுவை அளித்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. 


குலுக்கி சர்பத் V2.0


குலுக்கி சர்பத்துக்கு அடிமையாகிப் போன நாம் வாகமன் விட்டுக் கிளம்பும்போது மீண்டும் ஒருமுறை இங்கு வந்து சுவைத்துவிட்டுச் செல்ல எண்ணினோம். ஆனால் நேரமின்மையால் தங்கல்பாறை வரை செல்ல இயலாததால் வேறு இடத்தில் குலுக்கி சர்பத்தைத் தேடியபோது 'வாகமன் புல்வெளி' அருகில் ஒரு கடையைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து ஒரு குலுக்கி சர்பத் என்றோம். இங்கே குலுக்கி சர்பத்தில் மேற்சொன்னவைகளோடு சர்க்கரைப் பாகுக்கு பதில் சீனி சேர்த்து, மேலும் சிவப்புக் கலரில் ஒரு விதையும் சேர்த்து வழங்கினார். சுவை சற்று வித்தியாசமாக நன்றாகவே இருந்தது. 




இவ்வளவு சுவையான குலுக்கி சர்பத் கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கள்ளைப் போல் கேரளாவில் அவசியம் சுவைக்க வேண்டிய பானம். இதிலேயே சோடா, அன்னாசித் துண்டுகள் அல்லது தர்பூசணி சேர்த்து அவரவர் சுவைக்கேற்ப பருகலாம்.  இப்போதெல்லாம் வீட்டில் தாகமாக இருந்தால் குலுக்கி சர்பத் தான்.