Saturday 16 September 2017

குற்றாலம் - பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல்

அதிகாலையே குற்றால மெயின் அருவி சென்று மக்கள் வெள்ளத்தில் அடித்துப் பிடித்துப் புகுந்து அருவி வெள்ளத்தில் குளித்து வந்ததில் உள்ளே இருக்கும் குண்டோதரன் விழித்துக் கொண்டான். மெயின் அருவி அருகில் நல்ல உணவகம் எது என்று விசாரித்த போது பாண்டியன் லாட்ஜ் ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர். அங்கே சென்றோம். மெயின் அருவியில் இருந்து வெளியே வந்து இடதுபுறம் திரும்பி ஐந்தருவி செல்லும் சாலையில் சென்றால் சிறிது தூரத்தில் வலதுபுறம் ஒரு தெரு பிரிகின்றது. அந்தத் தெருவில் கொஞ்சம் முன்னேறினால் பாண்டியன் லாட்ஜ் ஹோட்டலை அடையலாம். 


மற்ற உணவகங்கள் எல்லாம் இட்லி சாம்பார் என்று வழங்கிக் கொண்டிருக்க காலை வேளையிலேயே நல்ல வெட்டுக்குத்து வேண்டுவோர் அணுகும் இடம் தான் இந்தப் பாண்டியன் லாட்ஜ் உணவகம். உணவகத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இல்லை. கட்டிடத்தைச் சுற்றிலும் பல பெயர் பலகைகள் வைத்துள்ளனர். பழைய காலத்து வீடு போல் இருந்தது உணவகம். வரவேற்பறையில் சுற்றிலும் இருக்கும் சாமி படங்கள் ஊதுபத்தி மணத்துடன் நம்மை வரவேற்கிறது. சுவர்கள் வெண்மை பூசப்பட்டு உணவகம் மிகத் தூய்மையாக இருக்கிறது.  

வரவேற்பறை
ஒரே ஒரு மேஜையைத் தவிர அனைத்தும் காலியாக இருந்தது. நல்ல உணவகம் இந்தக் காலை வேளையில் அரவம் இன்றி இருந்தது நமக்கு ஆச்சரியம் அளித்தது. உள்ளே சென்று நாமாக ஒரு இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நேரம் கழித்து வாழை இலையும் தண்ணீரும் வைக்கப்படுகிறது. சர்வரிடம் உணவகத்தின் அமைதிக்கான காரணத்தைக் கேட்டோம். “அவர் குற்றாலத்தில் சீசன் இல்லாததால்..” என்றார். அருவிகளிலும், நேற்று மதியம் பார்டர் கடையிலும் கண்ட கூட்டதிற்கு பின் அவர் சொல்லை நம்ப முடியவில்லை. 

காத்திருக்கும் படலம்
சரி இருக்கட்டும் என்று ஆளுக்கு ஒரு தோசையும் மட்டன் கொத்துக்கறியும் கேட்டோம். கொத்துக்கறி செய்யவில்லை என்றார். மட்டன் சுக்காவும், கோழி சாப்ஸும் கொண்டு வரச் சொன்னோம். மெல்லிய தோசையும் உடன் சிறிய கிண்ணங்களில் சாப்ஸும் சுக்காவும் வந்தது. கோழி சாப்ஸ் அளவு சிறிதாகவும் மட்டன் சுக்கா துவையல் அளவும் இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. சட்னி கேட்டோம். காலியாகி விட்டது என்றனர். மணி பத்து தான் ஆகியிருந்தது. ஆகட்டும் என்று தோசையைப் பிட்டு மட்டன் சுக்காவில் தொட்டுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.


சுவையில் குறை இல்லை. மிதமான காரத்துடன் மட்டன் சுக்கா பிரமாதமாக இருந்தது. பொடிது பொடிதாக வெட்டப்பட்ட மட்டன் துண்டுகள் மசாலுடன் கலந்து நன்றாக வேகவைக்கப்பட்டிருந்தது. தோசையுடன் சேர்த்துச் சுவைத்தபோது மாவைப் போல் கரைந்து போனது.


கோழி சாப்ஸும் அதேபோல் நல்ல பதத்துடன் தயாரிக்கப்பட்டு நல்ல சுவையில் இருந்தது. சுக்கா போல் அதையும் சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு குருமாவோடு அள்ளி தோசையுடன் சேர்த்து சுவைத்த போது அற்புதமாய் இருந்தது. அருவிக் குளியல் தந்த களைப்பில் உணவு போன இடம் தெரியவில்லை. சுக்காவும் சாப்ஸும் சுவையின் இரு வேறு பரிணாமங்களைக் காட்டின. உணவருந்திவிட்டு அதற்கான விலை கொடுத்தபோது அதிகமெனத் தோன்றியது. 


பாண்டியன் லாட்ஜ் உணவுகள் சுவையில் பார்டர் கடை உணவுகளுக்கு சற்றும் குறையில்லை தான். ஆனால் அந்த உணவை வழங்கும் விதத்தில் தான் இரண்டுக்கும் வித்தியாசம். என்ன தான் சுவையான உணவாக இருந்தாலும் விற்கும் விலைக்கேற்ப உணவின் அளவும் இருந்தால் தானே உண்பவர்களுக்குத் திருப்தி. பார்டரில் இருக்கும் தாராளம் பாண்டியனிடம் இல்லை. எல்லாவற்றையும் விடுத்து சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் தாராளமாகப் பாண்டியன் லாட்ஜ் உணவுகள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். 

Saturday 2 September 2017

பிரானூர் - பார்டர் கடை புரோட்டாவும் நாட்டுக்கோழியும்..


நண்பர்கள் குற்றாலம் பயணத் திட்டமிட்டவுடன் நான் உடனே சம்மதம் தெரிவித்ததும் உள்ளே இருக்கும் குண்டோதரனுக்கு ஒரே குஷி. காரணம் அருவியில் விளையாடுவதற்கல்ல, 'பிரானூர் பார்டர் கடை' புரோட்டா சால்னாவில்(குருமா) புகுந்து விளையாடவே. இன்று என்னைப் போல் பலரும் குற்றாலம் வருவது அருவிகளில் குளித்து மகிழ்வதோடு பார்டர் கடை புரோட்டா, கோழிகளை ஒரு கை பார்க்கும் ஆவலுடன் தான்

குற்றாலம் சென்று முதலில் மெயின் அருவிக்குச் சென்றால் சுமார் அரை கிமீக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சரி ஐந்தருவிக்குப் போய்ப் பார்க்கலாம் என்றால் அங்கேயும் அதே நிலை. இந்தக் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று குளிப்பதற்குக் குளிக்காமலேயே இருக்கலாம் என்று இருந்தது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது நமக்கு உள்ளே இருக்கும் குண்டோதரன் தன் வேலையைக் காட்டினான். நான், "கூட்டம் குறைந்ததும் இரவு வந்து குளிப்போம். இப்போது போய் பார்டர் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல  தூக்கம் போட்டால் என்ன?" என்று கூறவும் நண்பர்களும் அதை ஆமோதித்தனர். குண்டோதரன் குதூகலமானான்ஐந்தருவியில் இருந்து நேராக பைக்கை பார்டர் கடை நோக்கி விரட்டினோம்


கடையின் எதிரே பைக்கை நிறுத்தினோம். சிமெண்ட் சீட் போடப்பட்ட கட்டிடம். பெரிய பெயர் பலகையைத் தவிர ஒரு பிரபலமான உணவகம் என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. ஆவலுடன் உள்ளே சென்ற நமக்குப் பெரிய அதிர்ச்சி. குற்றால அருவிகளில் இருந்ததில் பாதிக் கூட்டம் அங்கே தான் இருந்தது. அனைத்து மேஜைகளும் கூட்டத்தால் நிரம்பி வழிய, மேஜையில் சிக்கிய இடத்தில் எல்லாம் இலையை விரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு இலையிலும் சால்னா (குருமா) அருவியாக ஓடிக்கொண்டிருக்க, மக்கள் அதில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். “இந்தக் கடையில் அப்படி என்னதான் இருக்கிறது? இவ்வளவு கூட்டம் அள்ளுகிறது”, என்று உடன் வந்த நண்பர் கேட்டார். “சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றேன். ஒவ்வொரு இருக்கைக்குப் பின்பும் உண்பவர் எழுந்த பின்பு அந்த இருக்கையைக் கைப்பற்ற அடுத்தவர் தயாராக நின்றுகொண்டிருந்தார். பசி ருசியை மட்டுமல்ல பண்பையும் அறியாது போலும். நமக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு சங்கடப் பட்டால் பட்டினி கிடக்க வேண்டியதுதான் என்று நாமும் ஒரு இருக்கைக்குப் பின்னால் போய் நின்று காத்துக் கொண்டிருந்தோம்J


காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கடையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 'பார்டர் கடை' பெயரே விசித்திரமாக இருக்கிறதல்லவா? அது ஒரு காரணப் பெயர் ஆகும். 1956க்கு முன்னர் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாத சமயத்தில் செங்கோட்டைத் தாலுகா கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது தமிழக-கேரள எல்லை (பார்டர்) இந்தக் கடை இருக்கும் பிரானூர் அருகில் இருந்ததால் இந்தக் கடை 'பார்டர் கடை' என்று பெயர் பெற்றுள்ளதுமுதலில் பார்டரில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுனர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை வழங்கிய சுவையில் அதன் புகழ் பரவி இன்று தமிழகமெங்கும் இருந்து ‘மலர் தேடும் வண்டுகளைப் போல்’ சுவை விரும்பிகள் இந்தக் கடையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். குற்றாலம் சென்று வந்தவர்கள் தங்கள் நட்புகளிடம் 'பார்டர் கடையில் சாப்பிட்டேன்' என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். 



அதோ இருக்கை காலியாகிவிட்டது. டபக்கென்று புகுந்து இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். பெரிய வெற்றி பெற்றதைப் போல் ஒரு உணர்வு.  மேஜை சுத்தம் செய்யப்பட்டு நமக்காக இலை விரிக்கப்படுகிறது. தண்ணீர் தெளித்து மீண்டும் காத்திருந்தோம். வெறும் இலையைப் பார்த்துக் கொண்டு உணவுக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களே.. ஆனால் அவர்கள் அதிகம் நம்மைக் காக்க விடவில்லை. ஒரு பெரிய வட்டகை நிறைய புரோட்டா வர, அனைவர் கண்களும் வட்டகையையே நோக்குகிறது. அனைவருக்கும் சமமாக மூன்று புரோட்டாக்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள். வட்டகையில் புரோட்டாக்கள் குறைந்துகொண்டே வர வர “இங்கே வாருங்கள்”, “எனக்கு வையுங்கள்” என்ற, பல குரல்களின் ஒலி கூடிக் கொண்டே வந்தது. பலரது முகங்களிலும் புரோட்டாவைப் பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தீர்ந்து விடுமோ என்ற ஏக்கமும் தெரிந்தது. 



நமக்குக் கிடைத்தது. பொன்னிற புரோட்டாக்கள் ஒவ்வொன்றும் சிறியதாக உள்ளங்கை அளவே இருந்தது. பிறகு ஒரு வாளி நிறைய சால்னா கொண்டு வந்து மேஜைக்கு ஒன்று வைத்து விடுகின்றனர். நாமே வேண்டிய அளவு எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.  கொஞ்சம் சால்னா எடுத்து இலையில் ஊற்றியபோது அது கெட்டியாக இல்லாமல் இலையில் ஓடிப் பரவியது. முதலில் கொஞ்சமாக புரோட்டாவைப் பிட்டு கொஞ்சமாகச் சால்னாவில் தொட்டு சுவையை சோதிக்கிறோம். சோதனைக்காகக் குறுகியிருந்த கண்கள் புரோட்டா சால்னா சுவையில் பரவசமடைந்து விரிகின்றன. வழக்கமான சாலனாவின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு புதிய சுவையை உணர்த்தியது. பிறகென்ன புரோட்டாவைச் சால்னாவில் தொட்டுத் தின்பதை விடுத்துக் குழைத்து உண்டோம். நாம் மட்டுமல்ல மேஜையில் இருந்த அனைவரும் அப்போது புரோட்டா சூரியாக மாறியிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் அதே போல் ஒரு பெரிய வட்டகை நிறைய வருக்கப்பட்ட நாட்டுக்கோழியைக் கொண்டு வந்து “வேண்டுமா? வேண்டுமா?” என்று ஒவ்வொரு இலையாகக் கேட்டுக் கொண்டே வைக்கின்றனர். பீஸ்கள் ஒவ்வொன்றும் பெரிதாக உள்ளது. அதில் கொஞ்சமாய்ப் பிட்டு சுவைத்தோம். வீட்டு மசால் கலந்து மிளகு தடவப்பட்டு நன்றாக வருக்கப்பட்ட நாட்டுக்கோழி காரமாக சுவையாக இருந்தது. எண்ணையில் பொறித்தது போல் அல்லாமல் வேகவைக்கப்பட்டது போல் நாட்டுக்கோழி அவ்வளவு மிருதுவாக இருந்தது.



சால்னாவும் கோழியும் இவ்வளவு  சுவையாக இருக்கக் காரணம் அவர்கள் வீட்டிலேயே தயாரிக்கும் மசால் தான். புரோட்டாவைச் சால்னாவில் பிரட்டி அதோடு கொஞ்சம் நாட்டுக்கோழியையும் சேர்த்து வாய்க்குக் கொடுத்து சுவைத்த போது அங்கே ஒரு இன்னிசைக் கச்சேரியே நடந்தது. அடுத்து ஆம்லெட் வந்தது. நாங்கள் நிமிர்ந்து பார்க்காமல் புரோட்டாவையும் கோழியையும் வேட்டையாடினோம். மீண்டும் அடுத்த சுற்று புரோட்டா வர அதையும் ஒரு கை பார்த்தோம். திருப்தியாக உண்டு எழுந்தபோது நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டு டபார் என்று ஒருவர் நம் இருக்கையை பிடித்து அமர்ந்தார். சற்று நேரத்திற்கு முன்னால் நாம் உணர்ந்த வெற்றிக் களிப்பு இப்போது அவர் முகத்தில்… 


விலைப் பட்டியலில் பல வகை உணவுகள் உள்ளன. அவையெல்லாம் கூட்டம் இல்லாத சாதாரண நாட்களில் கிடைக்கும். ஆனால் சீசன் நேரங்களில் புரோட்டா, சிக்கன், ஆம்லெட், புரோட்டா பிடிக்காதவர்களுக்கு இடியாப்பம் அவ்வளவே கிடைக்கிறது. புரோட்டா ஒன்றுக்கு எட்டு ருபாயும், நாட்டுக்கோழி வருவலுக்கு 140 ரூபாயும் வாங்குகின்றனர். அந்த சுவைக்கும், கஞ்சத்தனம் இல்லாமல் அவர்கள் கோழியை அள்ளி வைக்கும் பாங்கிற்கும் அந்த விலை தாராளமாகக் கொடுக்கலாம்.  விலையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது குற்றாலம் வந்த பயணப் பயனை அடைந்தது போல் உணர்ந்தோம். “இப்போது தெரிகிறது, ஏன் இங்கு மட்டும் இவ்வளவு கூட்டம்”, என்றார் உடன் வந்த நண்பர். 



Friday 1 September 2017

உயிரைக் குடித்த அனிதாவின் கனவு

கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார். கனவு ஒரு மனிதனின் வாழ்வை மட்டுமின்றி அவன் வாழும் நாட்டையும் முன்னேற்றும். ஆனால் இன்று நடந்தது அதுவல்லவே. கனவு ஒரு அபலை மாணவியின் வாழ்வையல்லவா பறித்திருக்கிறது.  


ஆம் அனிதா என்ற அந்த ராசியில்லா ராணி, மருத்துவர் ஆகும் தன் கனவுகள் நிறைவேறா விரக்தியில் இன்று தன் உயிரைத் தொலைத்திருக்கிறாள். மற்றவர்களைப் போல புத்தகச் சுமையைத் தோளிலும் கனவுகளை மனதிலும் சுமந்து பள்ளி சென்ற அம்மாணவி பெற்றது 1176 என்னும் இமாலய மதிப்பெண்கள். அதைப் பெற அவள் எவ்வளவு கடினப்பட்டிருப்பாள். இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் நீட்(NEET) தேர்வில் வெற்றி பெற இயலாததால் அவளது மருத்துவக் கனவு கலைந்துவிட்டது. தூக்கம் மறந்து அவள் கண் விழித்துப் படித்த ஒவ்வொரு இரவும் அவளுக்குத் தெரிந்திருக்குமா அவள் பெறப் போகும் மதிப்பெண்கள் அனைத்தும் காற்றில் கரையும் கற்பூரம் போல் ஆகும் என்று. பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் அத்தனை மாணவர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்கள் சொல்லும் பொதுவான அறிவுரை "இந்த ஒரு வருடம் மட்டும் நீங்கள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் போதும், பிறகு நீங்கள் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்." என்பதே. அதைத் தானே செய்தாள் அனிதா. பிறகு ஏன் அவளுக்கு இந்த நிலை.

ஒரு வருடம் கடினப்பட்டுப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்றால் அவை மதிபெண்கள் அல்ல மதிப்பில்லா எண்கள் தானே. அந்த மதிப்பில்லா எண்களைப் பெறவா ஒரு தேர்வு. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று எத்தனை மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அனைத்திற்கும் அர்த்தம் இல்லாமல் செய்யவா இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு தான் முடிவு என்றால் பிறகு பொதுத் தேர்வின் அவசியம் என்ன? பலதரப்பட்ட பாடத்திட்டங்களைக் கொண்ட நாட்டிற்கு ஓரே நுழைவுத் தேர்வு என்பது பொதுவாக இருக்க முடியுமா?  

பரந்த இந்த தேசத்தில் கல்வியின் தரம் பணத்தின் தரத்திற்கு ஏற்பவல்லவா இருக்கிறது. அம்பானிக்குக் கிடைப்பது அனிதாவுக்குக் கிடைப்பதும் சமமாகுமா? இருவரையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது நியாயமா? அனைவருக்கும் பொதுவான நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசாங்கம் அதன் முதல் படியாக அனைவருக்கும் பொதுவான கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும் அல்லவா? கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை மாறி அனைவருக்கும் அரசாங்கமே இலவசமாகக் கல்வியை வழங்குவதோடு ஒரு பொதுவான பாடத் திட்டத்தையும் கொண்டு வந்தால் மட்டுமே பொதுத் தேர்வு என்பது ஞாயமாக இருக்கும். அப்போது தான் அனிதா போன்ற பல திறமைசாலிகளின் இழப்பை இந்த நாடு தவிர்க்கும். அனிதாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.