Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Wednesday, 24 May 2017

குண்டோதரனுக்கு தாகமெடுத்தால்……


சித்திரைத் திருவிழாவின் மற்றொரு முக்கியமான நிகழ்வு...

மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் மதுரையில் வெகு விமரிசையாக நடந்து விருந்து தடபுடலாக நடக்கிறது. விண்ணிலிருந்து வந்த தேவர்கள் உட்பட விருந்தினர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்படுகிறது. விருந்தினர்கள் அனைவரும் உண்ட பின்பும் சமைத்த உணவு தீரவே இல்லை. மீனாட்சிக்கு பெருமை தாங்கவில்லை. தன் கணவரிடம் “உங்கள் சொந்தத்தில் யாரேனும் விருந்துண்ணாமல் இருக்கிறார்களா?” என்று கேட்டு கர்வம் கொள்கிறாள்.

குண்டோதரன் என்ற பூதம் மட்டும் விருந்துண்ணாமல் உள்ளதை அறிந்து ஈசன் குண்டோதரனை விருந்துண்ணப் பணிக்கிறார். ஈசன் அருளால் அடங்காப் பசி எடுத்த குண்டோதரன் உணவு அனைத்தையும் உண்டு முடிக்கிறார். மீண்டும் மீண்டும் சமைத்துப் பரிமாறியும் குண்டோதரன் பசி அடங்கவில்லை. இது ஈசனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த மீனாட்சி தன் தவறை உணரவும் ஈசன் குண்டோதரனின் பசியை அடக்குகிறார்.

பசியடங்கிய குண்டோதரனுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் மட்டும் தீரவே இல்லை. கடைசியில் குண்டோதரன் தாகத்தைத் தீர்க்க ஈசன் தன் ஜடாமுடியில் இருக்கும் கங்கையைப் பொங்கியெழச் செய்கிறார். பொங்கிய வேகத்தில் அது வருசநாட்டு மலைத் தொடரில் போய்ப் பாய்கிறது. அங்கிருந்து வழிந்து தேனி, ஆண்டிபட்டி, அணைப்பட்டி, குருவித்துறை, சோழவந்தான் வழியாக வைகை ஆறாகப் பாய்ந்து மதுரையை அடைந்து குண்டோதரனின் தாகம் தீர்க்கிறது. தாகம் தீர்த்து எஞ்சிய தண்ணீர் இறுதியில் இராமநாதபுரம் பெரிய கண்மாயில் போய்க் கலக்கிறது. அன்று குண்டோதரனுக்காக உருவான வைகை பிறகு மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்த்தது.
வைகை அணை 

மற்றொரு முறை வைகையில் பெருவெள்ளம் வர, கரையடக்க வீட்டிற்கு ஒரு ஆள் வருமாறு பாண்டிய மன்னன் மக்களைப் பணித்து அதன் விளைவாக ‘பிட்டுக்கு மண் சுமக்க இறைவனே’ வந்த திருவிளையாடலும் நாம் அறிந்ததே. இதன் மூலம் அன்று கரை கடந்து வைகையில் தண்ணீர் ஓடியதை அறிகிறோம். ஆனால் இன்றைய நிலைமை என்ன?

சமீபத்தில் முடிந்த சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கக்கூடத் தண்ணீர் இல்லை. செயற்கையாய் அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டியில் இறங்கிச் சென்றிருக்கிறார். ஒருமுறை மூலவைகையில் வெள்ளம் வந்து தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள ‘இராமச்சந்திராபுரம்’ என்ற ஊரே அழிந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்கள், அவ்வூர் மக்களுக்கு ஒரே நாளில் வேறொரு இடம் ஒதுக்கி ‘புதுராமச்சந்திராபுரம்’ என்ற ஊர் உருவாகியது வரலாறு.


முல்லை பெரியாறு அணை

வருசநாட்டில் உருவாகும் மூலவைகையில் இன்று தண்ணீர் வரத்து இல்லை. இன்று வைகையாற்றில் பாய்வதெல்லாம் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்கள் கட்டிய பெரியாறு அணையில் இருந்து தமிழகம் நோக்கித் திருப்பிவிடப்படும் முல்லைப்பெரியாறே!! அதுவும் அபரிமிதமாக மழை பொழிந்து பெரியாறு அணை நீரம்பி வழிந்தால் மட்டுமே வைகையில் தண்ணீர் கரைகடந்து ஓட வாய்ப்புள்ளது. ஒருவேளை கேரளா நமக்குத் தண்ணீர் தர மறுத்தாலோ அல்லது முல்லைப் பெரியாறு அணை இல்லாமல் போனாலோ வைகை என்ற நதியே இங்கு இருக்க வாய்ப்பு இல்லை, பிறகு வைகை அணைக்கும் வேலை இல்லை.



மூலவைகை காக்கப்பட வேண்டுமானால் வருசநாட்டு மலைத் தொடரின் பசுமை காத்து பேணப்பட வேண்டும். அதுவரை குண்டோதரனின் தாகத்தைத் தீர்க்க வைகையில் தண்ணீர் இல்லை.

Monday, 22 May 2017

அழகரின் திருவிளையாடல்

image source: alagarkovil.org
சித்திரைத் திருவிழா!!! மதுரை மக்கள் கொண்டாடும் விழாக்களிலேயே மிகக் கோலாகலமானது. வெளிநாட்டினரும் வந்து கண்டுகளிக்கும் அவ்விழாவில் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருமணத்தை சிறப்பாக நடத்துவார்கள். மிகப் பிரம்மாண்டமாக அவ்விழாவை முடித்துவிட்டு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது மதுரை மாநகரம்.. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நடக்கும் இந்த விழா மூலம் அழகர் நமக்கு இரு விஷயங்களைப் புலப்படுத்துகிறார்.

மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் நடக்கும் இந்தத் திருமணம் ஒரு கலப்புத் திருமணம் தெரியுமா? ஆம், சைவ மதத்தைச் சேர்ந்த சுந்தரேசுவரருக்கும் (ஈஸ்வரன்) வைணவ மதத்தைச் சேர்ந்த அழகரின் (பெருமாள்) தங்கை மீனாட்சிக்கும் நடக்கும் காதல் திருமணம் இது. ஒரு சின்ன ஃபிளாஸ்பேக்…..

மதுரையை  அரசாண்ட அரசி மீனாட்சி திக்விஜயம் செய்து உலகை வெல்கிறாள். மண்ணுலகம் வென்றும் திருப்தி அடையாத மீனாட்சி விண்ணுலகையும் வெல்ல எண்ணி கைலாயத்திற்குப் படையெடுக்கிறாள். போரில் ஈசனின் தீரம் கண்டு, வந்த வேலையை மறந்து அவன் மீது காதல் கொள்கிறாள். கணை தொடுத்து எதிரிகளை மண்ணில் வீழ்த்தியவள், ஈசன் தொடுத்த மலர்கணையில் வீழ்கிறாள். ஈசனுக்கும் மீனாட்சியைப் பிடித்துவிட வாக்குக் கொடுத்ததுபோல் மதுரை வந்து மீனாட்சியை மணமுடிக்கிறார்.

விஷயம் என்னவென்றால், ஈசன் வேற்று மதத்தவன் என்று தெரிந்தும் அழகர் தன் தங்கையின் காதலுக்குக் குறுக்கே நிற்கவில்லை. தன் தங்கையின் விருப்பத்திற்காக அவனைத் தன் தங்கைக்கு மணமுடித்து வைக்க சம்மதிக்கிறார். இதிலிருந்து கடவுளற்குள்ளே சாதி மத வேறுபாடு இல்லை என்பது தெளிவகிறது.

மற்றொன்று, மதுரையை ஆண்டது மீனாட்சி என்பதை அறிவோம். மீனாட்சியின் சகோதரர் எனும்போது மதுரையில் சரிபாதி உரிமை அழகருக்கு உள்ளது. ஆண் வாரிசு என்ற முன்னுரிமையில் அவர் மதுரையை ஆள விரும்பவில்லை. மாறாகத் தன் தங்கைக்கு சொத்தை விட்டுக்கொடுத்துவிட்டு அழகர்மலை காட்டிற்குள் போய் எளிமையாக வாழ்கிறார். பணத்தைவிடப்  பாசமே பெரிது என்றும் பெண்குழந்தைக்கும் சொத்தில் சமவுரிமை உண்டு என்பதையும் உணர்த்துகிறார்.

என்னைப் பொறுத்தவரை இவையிரண்டும் அழகரின் திருவிளையாடல்களே…

ஆனாலும் மீனாட்சி, இவ்வளவு அன்பான அண்ணன் வரும்வரை காத்திருக்காமல் நீபாட்டுக்கு கல்யாணத்தை முடிச்சுக்கிட்டியே??? அழகர் எவ்ளோ ஃபீல் பண்ணியிருப்பார்.. இது ரொம்ப தப்புமா…..

(சித்திரைத் திருவிழா கூறும் மற்றொரு விஷயம் அடுத்த பதிவில்...)