Showing posts with label மண்ணவனூர். Show all posts
Showing posts with label மண்ணவனூர். Show all posts

Tuesday, 2 May 2017

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம் - நிறைவு

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம்-நிறைவு
                

இருளோடு சேர்ந்து குளிரும் சூழ ஆரம்பித்தது. பெரியவர் கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். கேம்ப் ஃபயர் போட பெரிய இடம் ஒன்றும் இல்லை. விடுதிக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய இடத்தில் அமைத்துக்கொண்டோம். பெரியவரும் நம்முடன் சேர்ந்துகொண்டார். மண்ணவனூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்து அவர்களைத் தன் நிலங்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு இந்த விடுதியில் பணிபுறிகிறார்.


மண்ணவனூரின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் தொல்லைக்கு இடையில் விவசாயம் செய்கின்றனர். பள்ளிக்குச் செல்வதிலும் அங்குள்ள குழந்தைகளுக்குப் பெரிய ஆர்வம் இல்லை போலும். வயல் வேலை செய்கின்றனர்.

இந்தப் பகுதிக்குக் கேரளாவில் இருந்து இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களாம். காரணம் இங்கு கிடைக்கும் மேஜிக் காளான் எனப்படும் போதைக்காளான். உயிருக்கு ஆபத்தான அந்தக் காளான்களை போதைக்காக அவர்கள் வாங்கி உண்பதாக வருத்தப்பட்டார். இங்கிருக்கும் சிலரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள். பொதுவாக அவர்கள் தமிழர்களை அணுகுவதில்லை. சாலையில் காத்திருக்கும் அவர்கள் கேரள வாகனங்களைக் கண்டால் தேடிப்போய் விற்கிறார்கள். காலக் கொடுமை…

அரட்டை தொடர்ந்துகொண்டிருக்க சூடான சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும் தேடி வந்தது. வழக்கமான காரமான கிரேவியாக இல்லாமல் தேங்காய் சேர்த்து ஒருவித இனிப்பாகத் தயார் செய்திருந்தார். நன்றாகவே இருந்தது. சப்பாத்திகளை உள்ளே தள்ளிவிட்டு நிறைந்த மனதும், நிறைந்த வயிறுமாய் இரவுக்கு விடைகொடுத்தோம். கடும் குளிருக்குக் கம்பிளி கொடுத்த கதகதப்பில் படுத்தவுடன் தூங்கிப் போனோம். 



காலை 6 மணிக்கெல்லாம் விழிப்புத்தட்ட எழுந்துவிட்டோம். ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு தேனீர் அருந்தக் கிளம்பினோம். காலை, தேனீர் தயார் செய்து வைத்திருப்பதாகச் சொன்ன ஹோட்டல்காரர் இன்னும் கடையைத் திறந்திருக்கவில்லை. நேற்று தேனீர் அருந்திய கடைக்குச் சென்றோம். தேனீர் அருந்திவிட்டு அப்படியே காலாற நடந்தோம்.

எங்கள் அறைக்கு எதிரே

அந்த நேரத்தில் நாம் மட்டுமே உலாவிக்கொண்டிருந்தோம். ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. மிதமான குளிர் இதமாக இருந்தது. புல்வெளி பனியால் போர்த்தப்பட்டிருந்தது ரம்யமாக இருந்தது.




வழியில் இந்த ஜீவன் ஜீவனைத் துரந்து சாலையில் கிடந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வாகனம் அதற்கு மோட்சத்தை அளித்திருந்தது. யார் யார் இடத்தில் அத்துமீறியது??!! 

சாலையில் இறந்து கிடந்த பாம்புக்குட்டி

அறைக்கு வந்தோம். குளியலறையில் ஹீட்டர் இருந்தது. ஆனால் அதில் வரும் சுடுதண்ணீர் முகம் கழுவக்கூடப் போதவில்லை. அந்தக் குளிரில்  ஐஸ் போன்ற பச்சைத் தண்ணீரில் குளித்ததில் கொஞ்ச நேரத்திற்கு நாடி நரம்புகள் வேலை செய்யவில்லை. காலை உணவு ஹோட்டலில் முடித்துவிட்டுக் கிளம்பினோம். அப்போது தான் மனோ தன் பைக் சாவி காணவில்லை என்பதை உணர்ந்தார். பையிலும் அறையிலும் இல்லை. கடைசியில் சாவி பைக்கிலேயே இருந்தது. நேற்று இரவு பைக்கை நிறுத்தும்போது அதிலேயே மறந்துவிட்டிருந்தார். மனோவுக்கு நல்ல நேரம்.

முதலில் மத்திய அரசு நிறுவனமான தென்மண்டல செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்தைப் பார்க்கச் சென்றோம். நுழைவுக் கட்டணம் உண்டு. பண்ணையின் மேற்பார்வையாளர் திரு.கணேசன் அவர்கள் நம்மை வரவேற்றுப் பண்ணையைப் பற்றி விளக்கினார். பழகுவதற்கு இனிய மனிதர்.
திரு.கணேசன் அவர்களுடன்
நாம் சென்றபோது நேற்றிரவு காட்டுப்பன்றியால் சேதப்படுத்தப்பட்ட கேரட் வயலை பணியாட்களுடன் சீர் செய்துகொண்டிருந்தார். சுற்றிலும் கம்பிவேலியிடப்பட்ட அந்த வயலை பன்றிகள் வேலிக்கு அடியில் பள்ளம் தோண்டி உள்ளே வந்து நாசம் செய்திருக்கிறது.  


சேதப்படுத்தப்பட்ட கேரட் வயல்

1966ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை, 1340 ஏக்கர் பரந்த புல்வெளியைக் கொண்டது. செம்மறியாட்டில் இருந்து தரமான ரோமம் எடுப்பதற்கான ஆராய்ச்சி இங்கு நடைபெறுகிறது. ரஷ்ய நாட்டுச் செம்மறியாட்டினத்துடன் நம் நாட்டின் இனத்தைச் சேர்த்து உருவான தரமான ரோமம் தரும் “பாரத் மெரினோ” என்ற இனத்தை நவீன முறையில் கொட்டகை அமைத்துப் பராமரிக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ரோமங்கள் ராஜஸ்தானில் உள்ள மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே தயராகும் கம்பளியை இங்கே வருவோருக்கு விற்பனையும் செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கறிக்காக வளர்க்கப்படும் சோவியத் சின்செல்லா மற்றும் வெள்ளை ஜெய்ன்ட்  இன முயல்களும் பராமரிக்கப்படுகிறது.

வெள்ளை ஜெய்ன்ட் 

சோவியத் சின்செல்லா
நாம் சென்றபோது ஆடுகள் சுதந்திரமாகப் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தன. குட்டியும் தாயுமாய் அவை மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.  




பண்ணையைச் சுற்றிப் பார்த்தோம். பண்ணைகுள்ளேயே தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதியும் உள்ளது. பண்ணையில் சிறிய அளவில் கேரட்,  கடுகு, கோதுமை, பட்டானி போன்றவை பயிரிடப்படுகிறது.


கோதுமை வயல்

பண்ணையில் குதிரை ஒன்று மேய்ந்துகொண்டு இருந்தது. அதனை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தோம்.




பண்ணைக்குப் பின்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் புல்வெளி மட்டும் தான். வெறும் ஆட்டுப்பண்ணை என்று எண்ணி வந்த நம் கண்களுக்கு இயற்கை அழித்த விருந்தாகவே தோன்றியது. பரந்த புல்வெளியும் அதன் ஒருபுறம் இயற்கையான ஏரியும் காணக்கிடைக்காத பேரழகு.





 நடுவில் இருந்த புல் மேவிய குன்றும் அதன் மேல் இருந்த சில பைன் மரங்களும் அற்புதம்!! இப்போது புரிந்தது உலகநாயகன் ஏன் இங்கே திரைப்படம் எடுக்க வருகிறார் என்று.. “இள நெஞ்சே வா.. தென்றல் தேடி எங்கும் போய்வரலாம்” என்று பாடிக்கொண்டே புல்வெளி முழுதும் சுற்றி வந்தோம். 




இங்கு நமக்குப் பிடித்த மற்றோரு விஷயம் ‘தூய்மை‘. பண்ணையும் புல்வெளியும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. மனிதர்கள் வந்து செல்லும் இடம் என்பதற்கு எந்தத் தடையமும் இல்லை. அதற்காகப் பண்ணையின் தலைவர் டாக்டர்.ராஜேந்திரன் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்ணையை ஒரு சமயம் மத்திய அரசு மூடுவதற்காக முயற்சி செய்துள்ளது. இங்கு பணி புரிவோரின் கடும் முயற்சியால் தலைமையகத்தில் இருந்த நிறுவனத்தின் தலைவர் இங்கு வரவழைக்கப்பட்டு, அவர் பண்ணையை நேரில் பார்த்த பின் இதன் அருமை உணர்ந்து மூடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டுள்ளது. 




புல்வெளியில் உலாவிவிட்டுத் திரும்பும்போது முன்னர் மேய்ந்துகொண்டிருந்த குதிரை இப்போது சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யத் தயாராக இருந்தது. சவாரி செய்து மகிழ்ந்தோம். குதிரையின் உண்மையான கம்பீரம் அதில் சவாரி செய்யும்போது மட்டுமே தெரியும். ஏற்ற இறக்கங்களையுடைய புல்வெளியைப் பொருட்படுத்தாமல் அது அனாயசமாகச் சுற்றி வந்தது. கணேசன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்து மண்ணவனூர் ஏரிக்குச் சென்றோம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி. நுழைவுக் கட்டணம் உண்டு. வாகனம் நிறுத்த வசதி இல்லை. சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். நுழைவாயில் அருகிலேயே சிற்றுண்டி மற்றும் தேனீர் விடுதி உள்ளது. ஏரிக்குச் செல்லப் பத்து நிமிடம் நடக்க வேண்டும். 

ஏரிக்குச் செல்லும் பாதை
சுற்றிலும் புல்வெளியால் சூழப்பட்ட அழகிய  ஏரி. இறைவன் வரைந்த ஓவியம் என்றே சொல்ல வேண்டும். கண்டதும் காதல் என்பார்களே அது உண்மை தான். முதல் பார்வையிலேயே தன் அழகில் நம்மை மயக்கி விடுகிறாள். கரையில் அமைக்கப்பெற்ற இருக்கைகள் அவளை நாம் நிதானமாக ரசிக்க உதவுகிறது.

மண்ணவனூர் ஏரி


கிராமத்தில் ஆறு குளங்களில் குளித்து மகிழ்ந்த நமக்கு இவ்வளவு அழகான ஏரியைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா?? குதித்துவிடத் தோண்றியது. முடியாது என்பதால் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டோம். தண்ணீரின் குளிர்ச்சி உள்ளங்கால் வழியாக உடலுக்குள் ஏறிச் சில்லிட வைத்தது.


பரிசல் பயணத்திற்கு அனுமதி உண்டு. மூங்கிலால் செய்யப்பட்ட பரிசல்கள். பரிசலில் பயணம் செய்தோம். பரிசலில் ஏரியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். ஏரியின் மறுபுறம் அமைந்த மரத்தாலான ஒரு சின்னப் பாலம் அவ்விடத்தின் அழகைக் கூட்டியது. பரிசலில் சென்று அவ்விடத்தில் இறங்கி ஏரியைச் சுற்றிக் காலாற நடந்து வரலாம். அதற்கான நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 



ஏரியின் நடுவில் பரிசலில் சென்ற போது பரிசல் ஓட்டி நம்மைப் பரிசலை நன்றாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னார். எதற்கு என்று நாம் யோசிக்கும் போது துடுப்பால் பரிசலை மெதுவாக நின்ற இடத்திலேயே சுழற்றினார். இவ்வளவு தானா என்று நாம் எண்ண, மெதுவாக ஆரம்பித்த சுழற்சி மெல்ல மெல்ல வேகம் எடுத்து அதே இடத்தில் ராட்டினம் போல் வேகமாக சுழன்றது செம திரில்லாக இருந்தது. உற்சாகத்தில் கூச்சலிட்டோம். தென்னரசுவிற்கு தலை சுற்ற ஆரம்பிக்க பரிசலை நிறுத்தச் சொல்லிவிட்டார். 



பரிசல்காரர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் பரிசலை சுழற்ற கடைசியில் நமக்கும் தலை சுற்றுவதுபோல் ஆகிவிட்டது. ஆனால் தீம் பார்க்குகளில் இருக்கும் ரைடுகளில் கிடைக்கும் திரில்லை ஒரு பரிசல்காரரால் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டோம். இது போன்று கிடைக்கும் எதிர்பாராத சந்தோசத்துக்கு ஈடு ஏதும் இல்லை. இத்தகைய நிகழ்வுகளே பயணத்தை சுவாரஷ்யமாக்குகின்றன. பரிசல்காரருக்கு நன்றிகளைத் தெரிவித்து விடை பெற்றோம்.

பைக்கை எடுத்துக்கொண்டு கவுஞ்சி வரை ஒரு ரைடு சென்றோம். வழியெங்கும் மலையைச் செதுக்கிச் செய்யப்பட்ட விவசாய நிலங்களின் அழகை ஆசை தீர ரசித்துவிட்டுத் திரும்பினோம்.


அப்படியே தொடர்ந்து சென்றால் பூண்டியை அடையலாம். மண்ணவனூரைப் போல் பூண்டியும் அழகிய இடம் என்றும் அங்கே தங்க நல்ல விடுதியும் உள்ளது என்பதை அறிந்தோம். பூண்டியை அடுத்த பயணதிற்கு விட்டுவிட்டுத் திரும்பினோம்.  

அறையைக் காலி செய்து பெரியவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.  மண்ணவனூரில் நாங்கள் இருந்தது குறைந்த நேரமே என்றாலும் அது நமக்கு நிறைந்த மகிழ்வைக் கொடுத்தது. பொதுவாக மலைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்துவிட்டுக் கீழே இறங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் குறைந்து வெயில் ஏறும் பாருங்கள் அப்படியே திரும்பி மலைக்கே சென்றுவிடலாம் என்று தோன்றும். அதுவும் இந்த வருடக் கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியது இல்லை. இருந்தாலும் நம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்தப் பயணத்திற்கான நேரம் கைகூடக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதிலும் நம்முடைய காத்திருப்பு பிரிந்திருக்கும் காதலியைக் காணக் காத்திருக்கும் காத்திருப்பை விடக் கொடிது…
காத்திருப்போம் காலம் கைகூட…. 

முற்றும்….

மண்ணவனூர் பயணிக்க டிப்ஸ்:

Ø  மண்ணவனூர் செல்லும் பயணிகள் கொடைக்கானல் நகர் வந்தே செல்ல வேண்டும்.
Ø  கொடைக்கானலலில் இருந்து பைன் மரக்காடு செல்லும் சாலையில் சென்று மோயர் பாயிண்டுக்கு முன்பாக வலதுபுறம் பூம்பாறை செல்லும் சாலையில் 35 கிமீ சென்றால் மண்ணவனூரை அடையலாம்.
Ø  சாலை பூம்பாறை பிரிவு வரை அருமையாக உள்ளது. அதன் பிறகு கொஞ்சம் மோசம். ஆனால் அனைத்து வாகனங்களும் செல்லலாம்.
Ø  35 கிமீ-யும் காட்டிற்குள் பயணம் என்பதால் இருட்டிய பிறகு பயணிப்பதைத் தவிர்க்கவும்.
Ø  மண்ணவனூரில் இரண்டே தங்கும் விடுதிகள் உள்ளன. நாங்கள் தங்கிய விடுதி மிகச் சிறிய அறைகளைக் கொண்ட சுமாரான விடுதி. ஆனால் விடுதி பொறுப்பாளர் தங்கவேல் (மொபைல் எண்:9442023671) மிக நல்ல மனிதர். வேண்டிய உதவிகளை இன்முகத்தோடு செய்து கொடுப்பார். 
Ø  நல்ல அறைகள் வேண்டும் என்றால் இரவு கொடைக்கானலில் தங்கிப் பகல் சுற்றுலாவாக மண்ணவனூர் வரலாம்.
 [மண்ணவனூர் பயணக்கட்டுரையைப் படித்துவிட்டு, மண்ணவனூர் வனத்துறையில் பணிபுரியும் வனவர் திரு.டேவிட் ராஜா அவர்கள் நம்மை அழைத்திருந்தார். வனத்துறை சார்பாக மண்ணவனூரில் இயற்கையான சூழலில் தங்கவும், உணவும், காட்டுக்குள் சென்றுவர வழிகாட்டி மற்றும் வனத்திற்குள் தங்க கூடார வசதியும் தற்போது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வனத்துறையின் இந்த முயற்சி பாராட்டக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி மகிழலாம். தொடர்புக்கு: திரு.டேவிட் ராஜா, வனவர், செல்போன் எண்:9751495138 ]
Ø  பார்க்க வேண்டிய இடங்கள் மண்ணவனூர் ஏரி, தென்மண்டல ஆராய்ச்சி நிலையம் (ஆட்டுப்பண்ணை). ஆட்டுப்பண்ணை என்று தவிர்க்க வேண்டாம். அருமையான இடம்.
Ø      தவிர, பார்க்கும் இடமெல்லாம் இயற்கை கொட்டிக் கிடக்கும்.
Ø கிராமத்து உணவகங்கள் போன்ற சிறிய உணவகங்கள் தவிர பெரிய ரெஸ்டாரண்டுகள் இங்கு இல்லை. அரசு மதுபானக் கடை உள்ளது..
Ø  போதைக் காளான் அதிகம் கிடைக்கும் இடம். எவரேனும் அதோடு அனுகினால்  எச்சரிக்கை தேவை.

சந்தோஷமாய் போய் சந்தோஷமாய் வாங்க…..


நன்றி….

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம்-பாகம் 1

இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கல..  அதுக்குள்ள சூரிய பகவான் செஞ்சுரி போட்டாப்ல.. வெளிய போய் வீட்டுக்கு வர்றதுக்குள்ள எண்ணை தடவாமயே நல்லா வருத்து அனுப்புறாப்ல.. அவருகிட்ட இருந்து தப்பிச்சு எங்கயாவது கோடை வாசஸ்தளம் போய் தஞ்சமடைந்து,
              
              “ நீல வானம் ...................நீயும் நானும்...............
                            கண்களே பாஷையாய்... கைகளே ஆசையாய்...
                            வையமே கோயிலாய்... வானமே வாயிலாய்...
                            பால்வெளி பாயிலே, சாய்ந்து நாம் ஆடுவோம்..."

என்று உங்கள் மனம் பாட ஏங்குதா? அப்ப வாங்க மண்ணவனூருக்கு… 


என்னடா இது கேள்விப்படாத ஊரா இருக்கேனு பாக்குறீங்களா?? மேற்சொன்ன பாடலை ‘மன்மதன் அம்பு’ படத்தில் உலகநாயகன் கமல் பிரெஞ்சு நடிகை கரோலினுடன் பாடுவது இங்கு தான். அதே படத்தில் மற்றொரு பாடலில் சூரியாவும் திரிஷாவும் உய்யாலா.. உய்யாலா.. என்று குத்தாட்டம் போடுவதும் இங்கு தான். தெனாலி, குட்டி போன்ற படங்களும், ஐ படத்தில் எமி ஜாக்சன் கட்டியிருப்பாரே ஒரு கனவு இல்லம் அந்தக் காட்சி எல்லாம் படமாக்கப் பட்டது இங்கு தான். எல்லையில்லாப் புல்வெளியும் நடுவில் ஒரு அழகிய ஏரியும் பறவைகளின் ஒலியைத் தவிர வேறு எந்தத் தொந்தரவும் இல்லாத இடத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அதனால் மண்ணவனூர் எப்போதும் சினிமாக்காரர்களின் சொர்க்கபுரியாகவே இருக்கிறது. 




கொங்கு நாட்ட கோடைல இருந்து காப்பாத்துறது ஊட்டினா, நம்ம பாண்டிய நாட்டுக்கு கொடைக்கானல் தாங்க.. எங்க ஊர்ல இருந்து வெறும் 80 கிமீ தூரத்துல இருக்குறதால திடீர்னு டூர் போனும்னா விடு வண்டிய கொடைக்கானலுக்குனு கிளம்பிருவோம். அப்படி எல்லோருக்கும் தெரிந்த கொடைக்கானலில் பலருக்கும் தெரியாத ஒரு அழகுப்பிரதேசம் தான் மண்ணவனூர். கொடைக்கானலில் இருந்து கவிஞ்சி, பூண்டி செல்லும் வழியில் சுமார் 35 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. வெட்கத்தில் தன் முகம் மறைக்கும் பருவ மங்கை போல் கொள்ளை அழகை எவரும் அறியாமல் மறைத்துக் கிடக்கிறது மண்ணவனூர். 


பொதுவாகக் கொடைக்கானல் செல்லும் நாம் நேராகப் பேருந்து நிலையம் அருகில் அறை எடுத்துத் தங்கி, அப்படியே பைன் மரக்காடு, குனா குகை, மோயர் பாய்ண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக் என்று ஒரு ரவுண்டு வந்து விட்டு, மதியம் தாவரவியல் பூங்காவில் இளைப்பாறிவிட்டு மாலை படகு சவாரியை முடித்துவிட்டு ஊர் திரும்பி விடுவோம். ஆனால் இன்றைய நிலையில் இவ்விடங்கள் எல்லாம் இயற்கையை இழந்து செயற்கையாய் மாறிக் கிடக்கிறது என்பது என் கருத்து. உண்மையான இயற்கையை ரசிக்க வேண்டும் என்றால் கொடைக்கானலைத் தாண்டி அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களுக்குத் தான் செல்ல வேண்டும். அப்படி ஒரு இடம் தான் மண்ணவனூர்.

சென்ற மாதம் நான், நண்பர்கள் மனோ, கண்ணன், பழனி ஆகியோருடன் மேகமலைப் பயணம் சென்று வந்த பின், மீண்டும் அதே அணி மற்றொரு பயணம் செல்ல ஆவலாய் இருந்தோம். குரங்கனி – கொழுக்குமலை டிரெக்கிங், வாகமன் போன்ற இடங்களைப் பரிசீலித்து விடுப்பு எடுப்பதில் பிரச்சனை இருந்ததால் ஒரு நாள் பயணமாக அருகில் எங்காவது செல்லலாம் என்று திட்டமிட்டு மண்ணவனூரைத் தேர்ந்தெடுத்தோம். அறை முன்பதிவு செய்ய கூகுள் செய்தபோது எதுவும் சிக்கவில்லை. பின்னர் நண்பர் கண்ணன் அவர்கள் கொடைக்கானலில் தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மூலம் மண்ணவனூரில் உள்ள ஒரு விடுதியின் தொலைபேசி எண்ணைப் பெற்றுத் தந்ததால் அறை முன்பதிவு செய்தோம். சனிக்கிழமை மாலை கிளம்பி மண்ணவனூரில் தங்கிவிட்டு ஞாயிறு மாலை ஊர் திரும்புவதாகத் திட்டம்.

ஆனால் எதிர்பாராதவிதமாகத் தங்களின் சொந்தக் காரணங்களுக்காகக் கண்ணனும், பழனியும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. மனோவும் நானும் மட்டும் இப்போது மிச்சம். ஒரு பயணம் செல்லத் திட்டமிட்டு அதை ரத்து செய்தால் அது மனதை உருத்திக்கொண்டே இருக்கும். ஆகையால் எப்படியாவது பயணத்தை முடித்து விட்டால் தான் நமக்கு நிம்மதி. மனோவும் என்னைப்போல் தான். பயணத்திற்கு அடிமைப்பட்டவர்கள் நாங்கள். ஆகையால் நாங்கள் எப்படியும் மண்ணவனூரைப் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தோம்.

மனோவுக்குக் கொடைக்கானலில் சொந்த வேலைகள் இருந்ததால் வெள்ளிக்கிழமையே கிளம்பிவிட்டார். எனக்கு சனிக்கிழமை அரை நாள் அலுவலகம் இருந்ததால் காலையில் அலுவலகம் சென்றுவிட்டு மதியம் பெரியகுளத்தில் இருந்து தனியாக என் பைக்கைக் கிளப்பினேன் கொடைக்கானலுக்கு..

பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லத் தேவதானப்பட்டி வழியாகக் கட் ரோடு (ghat road) சென்று அங்கிருந்து  காமக்காபட்டி வழியாகச் செல்லும் மலைப்பாதையில் செல்ல வேண்டும். மொத்தம் 70 கிமீ. அதில் 52 கிமீ மலைப்பாதை. கொடைக்கானல் செல்லும் மலைப் பாதை மற்ற மலைப்பாதைகள் போல் அதிக ஆபத்தில்லாதது. அதிகக் கொண்டைஊசி வளைவுகளோ, ஏற்றமோ இல்லாத வளைந்து நெலிந்து செல்லும் அகலமான சாலை. பிரதான சுற்றுலாத்தளம் என்பதால் சாலையும் நன்றாகப் பராமரிக்கப் படுகிறது.

கட் ரோடில் பைக் டயரில் காற்றழுத்தத்தைச் சோதனை செய்துவிட்டுக் கிளம்பினேன். வெயில் சற்றுத் தூக்கலாகவே இருந்தது. மலைப்பாதையின் ஆரம்பத்தில் இருபுறமும் இளநீர்க் கடைகளும், சின்னச் சின்ன உணவு விடுதிகளும் வரிசை கட்டுகிறது. சாலையின் இருபுறமும் புளியமரங்கள் அடர்ந்திருக்கிறது.


 சின்னச் சின்ன ஊர்களையும் வனத்துறை சோதனைச் சாவடியையும் கடந்து சாலை கொஞ்சம் கொஞ்சமாக உயரே செல்கிறது.

மலைச் சாலை ஆரம்பம்
சிறிது நேரம் மலைப் பாதையில் பயணம் செய்த பின்பு இடதுபுறம் மஞ்சலாறு அணை நம் கண்களுக்குப் புலப்படுகிறது. சுற்றிலும் தென்னந்தோப்பால் சூழப்பட்ட அழகிய அணை. வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி பகுதிகளுக்கு நீர் ஆதாரம். 


மஞ்சலாறு அணை
கொஞ்ச தூரம் சென்றதும் டம்டம் பாறை என்ற இடம் வருகிறது. அங்கிருந்து மஞ்சலாறு அணையையும் இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான தலையாறு அருவியையும் ரசிக்கலாம். எலி வால் அருவி மற்றும் கேத்தரின் அருவி என்று இந்த அருவிக்கு வேறு பெயர்களும் உள்ளன. அருவியின் மொத்த உயரம் 300 மீ.  அருவியில் அதிகமாக நீர் விழும்போது அந்தச் சத்தம் ‘டம் டம்’ என்று இந்த இடத்தில் கேட்குமாம். அதனால் தான் இந்த இடத்திற்கு டம்டம் பாறை என்று பெயர் வந்ததாம். 
தூரத்தில் தலையாறு அருவி

தலையாறு அருவி (image source : wikimapia)

தலையாறு அருவி (image source:wikimapia)
ஒரு காட்சிக் கோபுரம் பயன்பாடின்றி உள்ளது. இங்கே வருவோரிடம் உணவுகளை வாங்கி உண்ண எப்பொழுதும் குரங்குக் கூட்டம் இங்கே இருக்கிறது. நாமாகக் கொடுக்கவில்லையெனில் அவை பறிக்கவும் தயங்காது. மனிதன் கொடுத்துப் பழக்கியதால் நாளடைவில் அவை உணவைத் தேடி உண்பதை மறந்து நம்மையே எதிர்பார்த்துப் பழகிவிட்டிருக்கிறது. அந்தப் பழக்கம், நாம் கொடுக்க மறுக்கும்போது நம்மைத் தாக்கவும் உந்துகிறது. அதனால் தான் நாம் காடுகளுக்குச் செல்லும் இடங்களில் வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என்று அறிவிப்புப் பலகைகளை வனத்துறை வைத்துள்ளது. 
காட்சிக் கோபுரம்
குரங்கு தெரிகிறதா??
தொடர்ந்து பயணிக்கிறோம். வளைந்து நெலிந்து செல்லும் சாலையில் நாம் பைக்கில் பயணிப்பது சுகானுபவமாக இருக்கிறது.




கும்பரை பிரிவு, ஊத்து, பெருமாள் மலை ஆகிய ஊர்களைக் கடந்து செல்லச் செல்லக் குளிரும் மெல்ல மெல்ல அதிகரிப்பதை உணருகிறோம். பெருமாள்மலையைக் கடந்தவுடன் வெள்ளி அருவியை அடைகிறோம். அருவியில் வழியும் நீர் வெள்ளியை உருக்கி ஊற்றுவதுபோல் இருப்பதால் இந்தப் பெயர். குளிக்க இயலாது. புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பிரட் ஆம்லெட், மிளகாய் பஜ்ஜிக் கடைகள் வரிசையாய் இருக்கின்றது. ஷ்வெட்டர் மற்றும் பொம்மைக் கடைகளும்… கொடைக்கானலில் அனைத்து இடங்களிலும் இந்தக் கடைகளைக் காணலாம். வழியெங்கும் ஆங்காங்கே பழக்கடைகள் இருக்கின்றன. கொடைக்கானல் மலையில் விளையும் பிளம்ஸ், பேரிக்காய், வெண்ணைப் பழம், பேஸன் பழம் போன்றவற்றை வாங்கலாம். 


வெள்ளி அருவி
அனைத்தையும் கடந்து மனோ இருக்கும் விடுதியை அடைந்தேன். மனோவின் மாப்பிள்ளை 'தென்னரசு'வும் நம் பயணத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். தென்னரசு சிவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தென்னரசு வந்ததும் மண்ணவனூர் கிளம்பினோம். மண்ணவனூர் செல்லப் பைன் மரக்காடு செல்லும் சாலையில் சென்று, மோயர் பாயிண்டுக்கு முன்னர் வலதுபுறம் பிரியும் பூம்பாறை செல்லும் சாலையில் செல்ல வேண்டும். உயர்ந்த மரங்களால் சூழப்பட்ட இந்தச் சாலை இயற்கைக் காட்சிகள் நிறைந்து, பயணம் செல்ல அருமையான சாலை என்று பலராலும் விரும்பப்படுகிறது. பூம்பாறை வரை இருக்கும் சாலை ஒரு தேசிய நெடுஞ்சாலையைப் போல் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சாலையில் நமது பைக் கியரை அவ்வளவாக மாற்றாமல் வளையும் சாலைக்கேற்ப நமது பைக்கை சாய்த்து ஓட்டுவது தனி உற்சாகம். செல்லும் வேகத்தில் எதிர்வரும் குளிர்காற்று குண்டூசிக் கணைகளாய் நம் மீது பட்டுத் தெறிக்கிறது. பூம்பாறை கொடைக்கானல் பகுதியில் உள்ள அழகிய கிராமங்களில் ஒன்று. TERRACE FARMING எனப்படும் மலையைப் படிக்கட்டு போல் அடுக்கடுக்காகச் செதுக்கிச் செய்யப்படும் விவசாய முறை இங்கு நடைபெருகிறது. நாம் உண்ணும் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, கேரட் போன்றவை இந்த மலைமக்கள் கஷ்டப்பட்டு விளைவிப்பவை தான். பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை, பூண்டி, பள்ளங்கி, மண்ணவனூர் உள்ளிட்ட அனைத்து மலைக் கிராமங்களிலும் இந்த முறையில் விவசாயம் நடைபெறுகிறது.

பூம்பாறை செல்லும் சாலை வலதுபுறம் பிரிய நாம் கவுஞ்சி செல்லும் சாலையில் தொடர்ந்து செல்கிறோம். பூம்பாறைக்குப் பிறகு சாலை சேதமடைந்துள்ளது. இங்கிருந்து 12 கிமீ சென்றால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மண்ணவனூரை அடைகிறோம். நாம் தங்கும் விடுதி மண்ணவனூர் பிரிவிலேயே உள்ளது. ஊருக்குள் செல்ல வேண்டியதில்லை.  விடுதிக்குப் பொறுப்பாளராகத் தங்கவேல் என்ற பெரியவர் இருந்தார். அறையைச் சென்று பார்த்தோம். மிக மிகச் சிறிய அறை ஒரு கட்டில் போடும் அளவுக்கு மட்டும் இருந்தது. கொஞ்சம் தூய்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேறு வழி இல்லை. இரண்டு அறைகளைப் பெற்றுக்கொண்டோம். மண்ணவனூரில் இருக்கும் ஒரு பிரச்சனை தங்க நல்ல அறைகள் உள்ள விடுதிகள் இல்லை. இருப்பது இரண்டு விடுதிகள் மட்டுமே. மற்றொன்று இதைப் போன்றே என்று உள்ளூர்வாசிகள் சொல்லக் கேட்டோம். புதிதாக ஒரு விடுதி இப்பொழுதுதான் கட்டப்படுகிறது. 

[ மண்ணவனூர் பயணக்கட்டுரையைப் படித்துவிட்டு, மண்ணவனூர் வனத்துறையில் பணிபுரியும் வனவர் திரு.டேவிட் ராஜா அவர்கள் நம்மை அழைத்திருந்தார். வனத்துறை சார்பாக மண்ணவனூரில் இயற்கையான சூழலில் தங்கவும், உணவும், காட்டுக்குள் சென்றுவர வழிகாட்டி மற்றும் வனத்திற்குள் தங்க கூடார வசதியும் தற்போது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வனத்துறையின் இந்த முயற்சி பாராட்டக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி மகிழலாம். தொடர்புக்கு: திரு.டேவிட் ராஜா, வனவர், செல்போன் எண்:9751495138 ]

மண்ணவனூர்
கீழே இருந்த ஒரு சின்ன உணவகத்தில் இரவு உணவு சொல்லிவிட்டு வெளியே சென்றோம். இருள் சூழ ஆரம்பித்திருந்தது. சாலையின் இருபுறமும் சில தேனீர் மற்றும் உணவு விடுதிகள் இருந்தன. ஒரு அரசு மதுபானக் கடையும் இருந்தது. விடுதிக்கு எதிரே மத்திய அரசுக்குச் சொந்தமான செம்மறியாடு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. ஒரு அரை கிமீ தூரத்தில் நாம் காண வந்த மண்ணவனூர் ஏரி உள்ளது. குளிருக்கு இதமாக ஒரு தேனீர் அருந்திவிட்டு அறைக்கு வந்தோம்.