Saturday, 22 April 2017

மேகமலைப் பயணம் - பாகம் 2


        மேகமலைப் பயணம் - பாகம் 1

தூக்கம் கலைந்து விழித்தபோது நேரம் நள்ளிரவு 2:00 மணி. தண்ணீர் அருந்திவிட்டுப் படுத்தேன். மீண்டும் 3 மணிக்கு விழிப்புத் தட்டியது. அதன்பிறகு 4 மணி, பிறகு தூக்கமே வரவில்லை. மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். 6 மணிக்கு மனோவுக்கு கால் பண்ணினேன். ஏற்கனவே எழுந்திருந்தார். குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டேன். அனைவரிடமும் உடனே பதில் வந்தது. 6:30க்கு வீட்டை விட்டுக் கிளம்பி மனோவைப் போய்ப் பார்த்தேன். உசிலையில் இருந்து இருவரும் 7 மணிக்குக் கிளம்பினோம். கிளம்பும் முன் தேவைக்கு அதிகமாகவே பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஆண்டிபட்டி வழியாக தேனியை 7:45க்கு அடைந்து ஒரு டீ அருந்திக்கொண்டு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கண்ணன் மற்றும் பழனிக்காகக் காத்திருந்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி கண்ணன் தேவதானப்பட்டியில் இருந்து கிளம்பி பெரியகுளம் வந்து பழனியை அழைத்துக்கொண்டு 8:00மணிக்குத் தேனி வந்துவிட்டார்.  நண்பர்கள் முதல் முதலாகச் சந்தித்துக்கொண்டதால் ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தேன்.

மேகமலைக்குச் செல்ல நாம் தேனியில் இருந்து 22 கிமீ சின்னமனூர் சென்று அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் வெள்ளையம்மாள்புரம் என்ற ஊரின் வழியாக 5 கிமீ சென்றால் மேகமலை செல்லும் மலைப்பாதையை அடையலாம். அங்கிருந்து 18 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து மேலும் ஒரு 35 கிமீ சென்றால் நாம் தங்கும் இடமான ஹைவேவிஸை அடையலாம். வழியில் தவித்தால் தண்ணீர் கூடக் கிடைக்காது. அகையால் சின்னமனூரில் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பத் திட்டமிட்டோம். தேனியில் இருந்து கிளம்பும்போது கண்ணன் அவர்கள் எல்லோரும் நிதானமாக ஒருவர் பின் ஒருவராக 60கிமீ வேகத்தை மிகாமல் செல்ல அறிவுருத்தினார். ஆனால் தேனி நகரைக் கடந்தவுடன் வண்டியை விரட்டிக்கொண்டு முதல் ஆளாகச் சின்னமனூரை அடைந்தது அவர்தான்.


வழியில் வீரபாண்டி அருகே முல்லைப் பெரியாற்றைக் கடந்து செல்கிறோம். முல்லைப்பெரியாறு தேனி, மதுரை உள்ளிட்ட 5 தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். சென்ற வருடம் பருவமழை பொய்த்தாலும் சிறிதளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்து சென்றால் வழியெங்கும் தென்னந்தோப்புகளும் அருவடை செய்யப்பட்ட வயல்களும் தான். பைக் பயணம் செய்ய அருமையான சாலை. சின்னமனூரை அடைந்து 9 மணியளவில் காலை உணவை முடித்துவிட்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு நாம் கிளம்பும் தகவலை முருகன் அவர்களுக்குப் போன் பண்ணித் தெரிவித்துவிட்டு உற்சாகத்தோடு மேகமலைக்கு பைக்கைக் கிளப்பினோம்.

போகும் வழியில் வனத்துறை செக்போஸ்ட் ஒன்று திறந்தே உள்ளது. பொதுவாக பைக்கில் செல்பவர்களை அவர்கள் ஏதும் கேட்பது இல்லை என்று கூறுகிறார்கள். பாதையின் இருபுறமும் திராட்சைத் தோட்டங்கள் அரண் அமைகின்றன. நாம் சென்ற சமயம் பழங்கள் இல்லை. சின்னமனூர், கம்பம் பகுதி திராட்சை விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. செக்போஸ்டைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் மேகமலை செல்லும் மலைப்பாதை அழகாய்க் காட்சியளிக்கிறது. அடிவாரத்தில் இருக்கும் வழிவிடு முருகனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம் மனதில் உற்சாகத்தோடும், திகிலோடும்……..

மலைபாதை ஏற ஆரம்பித்தவுடனே பாதையின் கரடுமுரடானத் தன்மை வெளிப்பட ஆரம்பித்தது. மேகமலைக்கு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலாவதாக சாலையை அகலப்படுத்துவதற்காக பக்கவாட்டில் இருக்கும் பாறைகள் வெடி வைத்தும் இயந்திரங்களைக் கொண்டும் உடைக்கப்படுகின்றன. வெடித்துச் சிதறிய கற்கள் பாதையை அடைத்திருக்கும்பட்சத்தில் கற்கள் அகற்றப்படும்வரை நாம் காத்திருந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே பக்கவாட்டுச் சுவர்கள் கான்கிரீட் கொண்டும், சில இடங்களில் கம்பிவலைக்குள் கற்களை அடுக்கி வைத்தும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அனைத்து பணிகளும் ஒரு வருடத்திற்குள் முடிந்துவிடும் என்று அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள்.
40 கிமீ மண்சாலை


சாலைப்பணியால் குண்டும் குழியுமான சாலை மண்பாதையாய் மாறியிருக்கின்றது. கொஞ்சம் வேகமாகச் சென்றாலே பைக்கை வாரிவிடுகிறது. ஆகையால் நிதானமாகவே பைக்கை செலுத்த வேண்டியுள்ளது, குறிப்பாகக் கொண்டைஊசி வளைவுகளில்.. பாதையில் இருந்து கிளம்பும் புழுதியால் ஹெல்மெட் இன்றி பைக் ஓட்ட இயலாது. உடைகளில் ஆங்காங்கே மண்துகள்கள் இயல்பாகப் படிந்திருக்கின்றன. இதற்கெல்லாம் சற்றும் அஞ்சாத நம் கண்ணன் அவர்கள் தனது பைக்கை இயன்ற வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தெரிந்தாலும் உயரே செல்லச் செல்லக் காற்றின் குளுமையை உணர முடிகிறது. ஆரம்பத்தில் ஒருபுறம் மலையும் மறுபுறம் சமவெளியையும் காணும் நாம் சிறிது தூரம் சென்றதும் இரண்டு மலைகளுக்கிடையே பயணிக்கிறோம். இருபுறமும் உயர்ந்து வளர்ந்த மரங்களால் சாலை நிழல் படிந்து சூரியஒளியின்றி இருண்டிருக்கிறது. அதனால் ஏற்படுகின்ற குளிர் மேகமலையில் நாம் அனுபவிக்கப் போகும் குளிருக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது.




கிட்டத்தட்ட 25 கிமீ சென்றவுடன் மேகமலை கிராமம் வருகிறது. அது மிகக்சிறிய மலைக் கிராமம். நாம் செல்ல வேண்டியதோ ஹைவேவிஸ் பேரூராட்சி. பயணத்தைத் தொடர்கிறோம். மீண்டும் காடுகள். கேள்விப்பட்டது போல் எங்கும் தேயிலைத் தோட்டங்களைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஹைவேவிஸ் நெருங்கும்வரை இதே நிலை. ஹைவேவிஸ் நெருங்க நெருங்கத்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேயிலைத் தோட்டங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. பின் எங்கெங்குக் காணினும் தேயிலைக்காடுகள். ஹைவேவிஸில் நம்மை முதலில் வரவேற்பது ஹைவேவிஸ் அணை. இந்த அணைக்கரையில் தான் நான் மேலே சொன்ன inspection bangalow உள்ளது. அந்த வளாகத்தின் உள்ளேயே அரசு மதுபானக் கடை உள்ளது. நாம் அணையை அடைந்தபோது வெடி வைக்கப்பட்டுச் சிதறியக் கற்களால் சாலைத் தடைபட்டிருந்தது. சாலை சீராகும் வரை அணைக்குள் சென்று பார்க்க முயற்சித்தோம். ஆனால் அங்குள்ள காவலாளி நம்மை அனுமதிக்க மறுத்துவிட்டார். பிறகு வேலியின் அருகில் நின்றே சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.
ஹைவேவிஸ் டேம் நுழைவாயில்

ஹைவேவிஸ் டேம்
அணையைக் கடந்து சென்றபோது நாம் கண்ட காட்சி நம் வாழ்விலும் கண்டிறாதது. ஆம், நடுவில் ஏரியும், அதன் கரையில் அமைந்த கிராமமும் அதனைச் சூழ்ந்த தேயிலைத் தோட்டமும் சினிமாவில் வரும் காதல் பாடல்களில் வரும் வெளிநாட்டு லொக்கேஷனை நியாபகப்படுத்தியது. மேகமலையில் நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். தூரத்தில் அமர்ந்து இந்த மலைக் கிராமத்தின் அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் உங்களுக்குப் பசிக்காது, தூக்கம் வராது, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு கிளம்பினோம். 
ஹைவேவிஸ் கிராமத்தின் எழில் தோற்றம்


இப்படி இளைப்பாறலும் பயணமுமாகக் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து 12 மணி அளவில் நாம் தங்கும் பஞ்சாயத்து கெஸ்ட் ஹவுஸை அடைந்தோம். கரடு முரடான சாலையில் நாம் மேற்கொண்ட இந்த 3 மணி நேரப் பயணம் நமக்குள் ஒரு சிறு சோர்வைக்கூட ஏற்படுத்தவில்லை. மாறாக நமக்குள் தன்னம்பிக்கையும் உற்சாகமுமே அதிகமாகி இருந்தது.


பஞ்சாயத்து அலுவலகம் எரிக்கரையிலேயே அமைந்துள்ளது. அருமையான இடம். முன்னால் புல்வெளியும் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் போன்றவையும் உள்ளன.  புல்வெளியில் அமர்ந்து ஏரியின் அழகை மணிக்கணக்கில் ராசித்துக்கொண்டு இருக்கலாம். நாம் சென்றபோது சிலர் அங்கே அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அதற்கும் ஏற்ற இடம் தான். ஏரிக்கரையின் மறுபுறம் தேயிலைத் தோட்டம்.

ஓய்வு

குதூகலம்

காம்பவுண்டுக்குள்ளேயே முருகன் அவர்களின் கடை உள்ளது. வெளியே அமர்ந்திருந்த அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றோம். தங்கும் அறைகள் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ளது. அன்றைய பணியில் கண்ணன் என்பவர் இருந்தார். அப்போது தான் கேரளாவிலிருந்து வந்தவர்கள் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களை அனுப்பிக்கொண்டிருந்தார். நாம் அறை முன்பதிவு செய்திருப்பதைத் தெரிவித்தோம். அறை தயாராக அரை மணி நேரம் அகும் என்று தெரிவித்தார். அதற்கிடையில் நாம் முருகனிடம் சென்று மதிய உணவு ஆர்டர் செய்தோம். மதியம் 60 ரூபாய்க்குச் சாப்பாடு மட்டுமே கிடைக்கிறது. 15 ரூபாய்க்கு சிங்கிள் ஆம்லெட் கொடுக்கிறார்கள். அசைவத்தில் பிராய்லர் சிக்கன் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் முழுக் கோழியாக நாம் வங்கிக்கொண்டால் மட்டுமே கொடுக்கிறார்கள். முருகன் அதை நாட்டுக்கோழி என்கிறார். கிராமத்தில் வளர்ந்த நமக்கு பிராய்லருக்கும் நாடுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியாதா?? கிலோ 160 ரூபாய். அதை சமைக்க கிலோவுக்கு 80 ரூபாய். நாம் 2.5 கிலோ சிக்கன் ஆர்டர் செய்தோம். மொத்தம் 600 ரூபாய்.  உரித்தால் 2 கிலோ வரும் என்றார். ஒரு கிலோ மதிய உணவுக்கு வருவல் செய்து தரச் சொன்னோம். மீதம் ஒரு கிலோவை இரவு உணவுக்குச் சப்பாத்தியுடன் கிரேவி செய்யச் சொல்லிவிட்டு சுற்றிப் பார்க்கும் இடங்கள் பற்றி விசாரித்தோம். அப்போது அவருடன் இருந்தவர் 15 கிமீ தூரத்தில் உள்ள மகாராஜாமெட்டு அருமையான இடம் என்றும் அங்கே பைக்கில் செல்வது மிகவும் கடினம் ஆதலால் தங்கள் ஜீப்பை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என்றார். 

அறை தயாரானதும் கண்ணன் அழைத்தார். பெயர் விலாசம் உள்ளிட்டவற்றை பதிவு செய்துவிட்டு வாடகை பெற்றுக்கொண்டார். மூன்று பேர் தங்க அறை வாடகை ரூபாய் 825-/-. எக்ஸ்ட்ரா பெட் ரூபாய் 350-/-. அனைவரும் ஒரு அறையில் தங்கிக்கொள்ள முடிவு செய்தோம். அறை நன்றாகவே இருந்தது. நமது வீட்டைப் போன்ற அறை. சுத்தமாகவே இருந்தது. டைனிங் டேபிளுடன் ஒரு வரவேற்பறை, பிறகு பெட்ரூம் அதில் டீவி இல்லை. பாத்ரூம் வெஸ்டர்ன் டாய்லெட், வாட்டர் ஹீட்டர் உடன் உள்ளது. ஒரு அரசு விடுதி இவ்வளவு சுத்தமாக இருப்பது பெரிய விஷயம். மதிய நேரத்திலேயே அறைக்குள் அவ்வளவு குளிராக இருந்தது. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். அதற்குள் உதவியாளர் கண்ணன் மதிய உணவு அருந்த ஒரு டைனிங் டேபிளை நமக்காகப் பால்கனியில் செட் செய்து கொடுத்தார். பால்கனியில் சிறிது நேரம் அமர்ந்து ஏரியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். நாம் மதியம் கடைக்கே சென்று சாப்பிட்டோம், வேண்டுமென்றால் அறைக்கும் அனுப்பி வைப்பார்கள். மதிய உணவு நாட்டுக்கோழியுடன்??!! பரிமாறப்பட்டது. சிக்கன் நன்றாகவே செய்திருந்தார்கள். சாப்பாடு தான் சுமார். உணவை முடித்துவிட்டு அப்படியே ஏரியோரமாகவே நடந்து சென்றோம்.
ஏரிக்குள் செல்லும் பாதை
தொலைவில் சில வீடுகள் பயன்பாடின்றிப் பாழடைந்துச் சுற்றிப் புதர் மண்டிக் கிடந்தது. தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் முன்பு வாழ்ந்த குடியிருப்புகள் போலும் அவை.
கைவிடப்பட்ட குடியிருப்பு
வாழ்நாள் முழுவதையும் அந்தத் தேயிலைத் தோட்டங்களில் செலவழித்து, உடல் தளர்ந்து, வயது முதிர்ந்து, இனிப் பணி செய்ய இயலாது என்ற நிலையில் ஓய்வு பெற்று வேறு இடம் தேடிச் சென்றபோது விட்டுச் சென்ற எச்சங்கள் அவை. ஏனோ அவை என் மனதில் ஒரு இனம்புரியாத சோகத்தை வரவழைத்தன. அங்கே யார் வாழ்ந்திருப்பார்கள்? எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தார்கள்? அப்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இன்று அவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள்?! இப்படிப் பல பல வினாக்கள் என்னுள். விடைதெரியா அக்கேள்விகளுடனே நிழலில் படுத்து ஏரியைப் பார்த்த போது மனம் வெறுமையாய் உணர்ந்தது. அப்படியே நானும் மனோவும் தூங்கிப் போனோம். பழனியும், கண்ணனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். 

ஏரிக்கரையில் இளைப்பாறல்



பயணம் தொடரும்........ மேகமலைப் பயணம் - பாகம் 3 இங்கே                                                              

3 comments: