Saturday, 22 April 2017

மேகமலைப் பயணம் - பாகம் 3

                                                 
      மேகமலைப் பயணம் - பாகம் 1                    
      மேகமலைப் பயணம் - பாகம் 2

நிழலும் குளிர்காற்றும் சேர்ந்து உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்த தூக்கத்திலிருந்து மெல்ல மீண்டோம். மேகமலையின் சிறப்பே அதுதான். வெயிலில் நிற்கும்போது வெப்பம் வியர்வையை வரவழைத்தாலும் அருகில் ஒரு நிழலில் ஒதுங்கிப் பாருங்கள் நிழலுடன் சேரும் காற்றால் நீங்கள் ஒரு ஸ்வெட்டரையும் ஒரு கப் தேனீரையும் தேடுவீர்கள். நாமும் தேனீரைத் தேடி முருகன் கடைக்குப் போனோம்.
முருகன் கடை முன்பு

மணி ஐந்தை நெருங்கியதால் நாளை  மஹாராஜாமெட்டு செல்லத் திட்டமிட்டு இப்போது தூவானம் டேம் வரைக் காலாற நடந்துவரத் திட்டமிட்டோம். பஞ்சாயத்து அலுவலக நுழைவாயிலை விட்டு வெளியே வந்தவுடன் இடதுபுறம் செல்லும் சாலை வழியாக ஒரு 2 கிமீ வரை நடந்து சென்றால் தூவானம் டேம் செல்லலாம். சாலையின் தொடக்கத்திலேயே மின்துறைச் செக்போஸ்ட் உள்ளது. வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதிக ஏற்றம் இல்லாத சாலை. நடக்க எளிதாகவே இருந்தது.
தூவானம் செல்லும்போது

உயரே சென்று சாலையின் ஒரு வளைவில் நின்று பார்த்தால் ஊர் மிக அழகாகத் தெரிகிறது. வியூ பாயிண்ட் போல் உள்ளது அந்த இடம்.

ஹைவேவிஸ் எழில் தோற்றம்
தொடர்ந்து போகும்போது தேயிலைத் தோட்டத்தை விடுத்துக் காட்டிற்குள் நடந்து செல்கிறோம். வழியெங்கும் யானையின் கழிவுகள் சாலையிலேயே கிடப்பது லேசாக பயத்தைத் தோற்றுவிக்கின்றது. யானை வந்தால் எப்படித் தப்பிப்பது என்று எங்களுக்குள் விவாதித்துக்கொண்டு முன்னேறினோம். அப்போது ஒரு செங்குத்தான பாறையில் யானையின் கழிவைக் கண்ட பழனி, யானை எப்படி அவ்வளவு உயரத்தில் ஏறிச் சாணமிட்டது என்ற ஒரு கடினமான கேள்வியைக் கேட்டார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அதற்குள் இருட்டத் தொடங்கியதால் டேம் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே திரும்பினோம்.
தூவானம் செல்லும் பாதை

விடுதியை அடைந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. இருட்டில் நான் முருகன் கடைக்கு முன் உள்ள ஒரு இரண்டாடி ஆழமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் காலை விட்டு தடுமாறி விழப்போனேன். நல்ல வேலையாக அது கழிவுநீர் இன்றிக் காய்ந்திருந்தது. அப்போது ஒருவர் என்னை விழாமல் தாங்கிப்பிடித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தேன். பிறகு வெளிச்சத்தில் அவரப் பார்த்தபோது எங்கோ பார்த்ததுபோல் இருந்தது. எனக்கு பிடிபடவில்லை. மனோ தான் அவர் சினிமா நடிகர் என்று கூறினார். கொம்பன் போன்ற படங்களில் பெரும்பாலும் போலீஸ் வேடங்களில் நடித்திருக்கிறார். மதுரைக்காரர். நிஜத்திலும் அவர் போலீஸ் SI ஆகப் பணியாற்றுவதாக அவர் உடன் வந்தவர்கள் கூறினார்கள். கண்ணனைத் தொடர்ந்து அனைவரும் அவருடன் கைகுலுக்க அவரும் உற்சாகமாகி நம்முடன் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். குளிர் அதிகமாக இருந்ததால் இரவு உணவு தயாராகும்வரை கேம்ப் ஃபயர் போட்டுக் குளிர் காய்ந்தோம்.
நடிகருடன்..

உற்சாகமாய் நம் பழனி..

சிறிது நேரத்தில் இரவு உணவாகச் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் அறைக்கு வந்தது. சிக்கன் அருமையாக இருந்தது. சப்பாத்தி தான் வறண்டும் ரப்பர் போலும் இருந்தது. கோதுமையில் அரிசி மாவைக் கலந்து சுட்டால் இப்படி இருக்கும் என்று கண்ணன் அதற்கான காரணத்தைக் கூறினார். அனைவரும் அவரவர் பணி, குடும்பச் சூழல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். குழுவில் பழனி மட்டுமே பேச்சிலர். தனது திருமணத் திட்டம் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் வரும் ‘ ஊருவிட்டு ஊருவந்து காதல் கீதல் பண்ணாதீங்க ‘, பாடலைப் போட்டு எல்லோரும் சேர்ந்து பாடி அவரைக் கலாய்த்தோம். நாளைக் காலை மஹாராஜாமெட்டு சென்றுவிட்டு மதியம் ஊர் திரும்புவதாகத் திட்டம். மனோ மட்டும் காலை பணிக்குச் செல்ல வேண்டிய காரணத்தால் காலையிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. மனோவைத் தனியாக அனுப்ப யாருக்கும் மனசு இல்லை. கண்ணன் எப்படியாவது மனோவைத் தங்க வைத்துவிட முயற்சித்தார். ஆனால் மனோ தன்னுடைய நிலையை விளக்கியதும் மனமின்றித் தலையசைத்தார். அரட்டையை முடித்து அந்த நாளுக்கு விடைகொடுத்தோம்.
போர்த்தி இருந்த கம்பிளிக்குள் ஊடுருவிய குளிர் உடலையும் துளைத்துத் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. அருகில் இருப்பதால் எத்தனையோ முறை கொடைக்கானல் சென்றுள்ளேன், ஆனால் இப்படி ஒரு குளிரை அனுபவித்தது இல்லை. என்னைப் பொருத்தவரைக் கொடைக்கானலை ஒப்பிடும்போது மேகமலையில் குளிர் அதிகமே. ஏரி அருகிலேயே இருப்பதால் கூட அவ்வாறு இருக்கலாம். அரைக்கண்ணில் விழித்துப் பார்த்தேன். ஒரு உருவம் அறையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தது. மனோ தான் அது. எனக்கு முன்னரே விழித்திருந்தார். ஆறு மணியளவில் அவர் கிளம்பி ஆக வேண்டும். அப்போது தான் அவன் 9:30க்குள் கல்லூரியை அடைய முடியும். உடை மாற்றித் தயாராக இருந்தார். மொபைலில் மணியைப் பார்த்தேன், 5:30 ஆகி இருந்தது. குப்புறப்படுத்து முயற்சித்தும் தூக்கம் வராததால் வேறு வழியுன்றி நானும் எழுந்துவிட்டேன். எனது தூக்கத்தைக் கெடுத்த குளிரால் கண்ணன் மற்றும் பழனியை எதுவும் செய்ய முடியவில்லை. முரட்டுத் தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தனர் இருவரும். வெளியே எட்டிப்பார்த்தேன். டியூப் லைட் வெளிச்சத்திலும் பனி அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிகாலைப் பனி
மணி 6 ஆகி இருந்தது. முருகன் கடை திறந்திருந்தால் டீக் குடிக்கலாம் என்று கீழே சென்றோம். அப்போது தான் கடையைத் திறந்துகொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் பழனியும் கண்ணனும் வந்துவிட்டனர். 


கண்முன்னே பசும்பால் கறந்து டீ போட்டுக் கொடுத்தார்கள். குளிருக்கு இதமாக இருந்தது. இருள் விலகி லேசாக வெளிச்சம் வந்திருந்தது ஆனால் பனி விலகவில்லை. நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மனோ எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மனமின்றி விடை கொடுத்தோம். 
விடைபெறும் மனோவுடன்

மனோவை அனுப்பிவிட்டு ஏரிக்கரைக்குச் சென்றோம். நேற்றுப் பகல் வெளிச்சத்தில் பளிச்சென்று இருந்த ஏரி இப்போது வேறுமாதிரியாக உருமாறி இருந்தது. கோனில் நிரப்பிய ஐஸ்கிரீம் போல் ஏரியில் இருக்கும் நீர் தெரியாத அளவுக்கு அதன்மேல் பனி சூழ்ந்திருந்தது. வெள்ளை உடை அணிந்த தேவதை வானிலிருந்து இறங்கி வந்து பூமியில் உலாவுவது போல் வெண்பனி அந்த ஏரி முழுவதும் தவழ்ந்து சென்றது வாழ்வில் பார்க்க வேண்டிய காட்சி. காதலர்கள் காதல் செய்ய ஏற்ற அருமையான சூழல்.
அதிகாலை ஏரிக்கரையில்...

குளிரைப் பொருட்படுத்தாமல் பனி விழகும்வரை அங்கேயே இருந்து அந்தக் காட்சியை ரசித்துக்கொண்டு இருந்தோம்.


வெயில் வருவதற்குள் பைக்கில் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று கண்ணன் விருப்பப்பட்டதால் கிளம்பினோம். இப்போது விடுதி காம்பவுண்டை விட்டு நேராக வெளியே வந்து சின்னமனூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் செக்போஸ்ட் போடப்பட்ட ஒரு சாலை செல்கிறது. அந்தச் சாலையில் தொடர்ந்து சென்றோம். வழியில் எஸ்டேட் வேலையாட்கள் மலையில் இருந்து வழிந்து வரும் தூய நீரைப் பிடித்து களைக்கொல்லி மருந்தைக் கலக்கிக்கொண்டு இருந்தனர், தேயிலையின் ஊடே இருக்கும் களையை அழிக்க.  சரிவில் வழிந்தோடும் நீர் சமதளம் வரை சென்று புல்த்தரைக்குள் மறைகிறது. நாங்கள் தேயிலையின் ஊடே இறங்கி அருகில் சென்று பார்த்தபோது புற்களுக்குள் நீர் ஓடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது. அருமையான இடம். தேயிலைப் பள்ளத்தாக்கு என்று சொல்லலாம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
தேயிலைச் சரிவு

மீண்டும் பாதைக்கு வந்தோம். தேயிலைத் தோட்டத்தின் மேல் வரிசையாக இருந்த மரங்களின் ஊடே புகுந்து வெளியேறிய சூரியக்கதிர் விசிறியைப் போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. புகைப்படம் எடுக்க அருமையான பேக்கிரவுண்ட். மொபைல் கேமராவில் எடுத்ததால் ஓரளவிற்கு மேல் அதன் அழகைப் பதிய முடியவில்லை.

சூரிய விசிறி

பழனியின் மிரட்டல் போஸ்.. ஹா..ஹா...
பைக்கை எடுத்து சிறிது தூரம் சென்றபோது வழியில் ஒருவர் நம்மை மறித்து எங்கே செல்கிறோம் என்று கேட்டார். சுற்றிப் பார்க்க வந்தோம் என்றோம். இது தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் என்றும் வெளியாட்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்றும் அதனால் தான் சாலையின் தொடக்கத்தில் செக்போஸ்ட் போட்டிருப்பதாகக் கூறினார். நாம் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. இந்த இடத்தைப்போல் ஒரு அழகான இடத்தைக் கண்டதில்லை என்று கூறினோம். அவர் ஒன்றும் சொல்லவில்லை. இவ்வளவு அழகான இடத்தில் வாழ்கிறீர்கள் என்று பழனி கூறியதற்குமலங்காட்டில் என்னங்க சந்தோசம்?” என்று அவர் கூறியது எங்களை யோசிக்க வைத்தது. ஆம் உல்லாசப் பயணம் சென்ற நமக்கு அதன் அழகு மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த மலங்காட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு மட்டுமே அவர்கள் வாழ்வின் வலி தெரியும். ஆம், அடிப்பாடை வசதிகள் ஏதும் இல்லாத அங்கு மழை, குளிர், அட்டைக் கடியைப் பொருட்படுத்தாமல் சொற்ப வருமானத்திற்காக அந்தத் தேயிலைக் காடுகளை நம்பி தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் அந்த மக்கள். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் சின்னமனூர் சென்றுப் பரீட்சை முடியும்வரை அங்கேயே அரசு விடுதியில் தங்கி இருந்து பரீட்சைகளை முடித்துவிட்டு ஊர் திரும்புகிறார்கள். சுற்றிப் பார்க்க மட்டுமே சென்ற நமக்கு அவர்களின் வாழ்வின் இன்னல்கள் விளங்க வாய்ப்பில்லை. எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். மதுரை என்றோம். எஸ்டேட் மேலாளர் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் கிளம்புங்கள் என்றார்


அவர்களையும் குறை சொல்ல முடியாது. இது போன்ற இயற்கையான இடங்களைச் சுற்றிப் பார்க்க வருகிறவர்கள் அந்த இடங்களைத் தாங்கள் ரசிப்பதுபோல் மற்றவர்களும் ரசிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். மாறாக அந்த இடங்களில் தங்களின் எச்சங்களை விட்டு வருகின்றனர். ஆம், ஆங்காங்கே சில பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், மது பாட்டில்கள் ஆகியவற்றைக் காண முடிகிறது. மேகமலை வருபவர்கள் இதே அழகைத் தங்கள் வாழ்நாள் முழுதும் அனுபவிக்க வேண்டும் என்றால் சூழல் பொறுப்புடன் நடந்துகொள்வது நல்லது. விடைபெற்றுத் திரும்பினோம்.

மஹாராஜாமெட்டு
அறைக்குச் சென்று கிளம்பித் தயார் ஆனோம். நேராக மஹாராஜாமெட்டு

 சென்றுவிட்டு வந்து அறையைக் காலி செய்து மதியம் ஊருக்குக் கிளம்ப வேண்டும். பொதுவாக மதியம் 12 மணிக்கு அறையைக் காலி செய்ய  வேண்டும். அன்று அறைகள் எதும் முன்பதிவு செய்யப்படாததால் உதவியாளர் கண்ணன் எங்களை மெதுவாகக் காலி செய்ய அனுமதித்தார். முருகன் கடையில் காலை உணவாகத் தோசை கொடுத்தார்கள். சாப்பிடுமளவுக்கு இருந்தது.  நேற்று அந்தக் கடையில் இருந்த ஒருவர் மஹாராஜாமெட்டுக்கு பைக்கில் செல்வது சிரமம் என்று சொல்லியிருந்தாலும் நாங்கள் துணிந்து பைக்கில் செல்ல முடிவு செய்தோம். உதவியாளர் கண்ணன் மஹாராஜாமெட்டு செல்ல அணைக்குள் செல்லும் ஒரு குறுக்குப்பாதையைக் கூறினார். விடுதியை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பும் சாலையில் மஹாராஜாமெட்டு செல்லலாம்.. ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து துருத்திக்கொண்டும் தண்ணீர் தேங்கியும் உள்ள கரடுமுரடான குறுகிய சாலை.
மஹாராஜாமெட்டு செல்லும் சாலை

செல்லும் வழியெங்கும் ஏரி நம்மோடு பயணிக்கிறது. ஏரியின் மறுகரையில் அந்தச் சாலை செல்கிறது. வழியெங்கும் இயற்கையை ரசித்துக்கொண்டு பயணிக்கலாம். சாலை ஆங்காங்கே சில பிரிவுகளைக் கொண்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாததால் நாமே முடிவெடுத்து முன்னேற வேண்டும். 

பயணம் தொடரும்...   மேகலைப் பயணம் - நிறைவு இங்கே


மேகமலைப் பயணம் - பாகம் 1 (திட்டமிடல்)


மேகமலை!!! பெயருக்கேற்ப அது மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஒரு அழகிய மலைப் பிரதேசம்!! தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மேகமலை இறைவனின் படைப்புத் திறமைக்கு ஒரு சான்று. மலைகளின் ராணி என்று ஊட்டியையும் இளவரசி என்று கொடைக்கானலையும் சொல்பவர்கள் மேகமலையைப் பார்த்தால் தங்கள் கூற்றை மறுபரிசீலனை செய்ய நேரிடும். ஊட்டி, கொடைக்கானல் உடன் ஒப்பிடும் அளவுக்கு மேகமலையில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது. அதற்கு என்னுடைய பதில் ‘ஒன்றுமே இல்லை’ என்பது தான். ஆம், ஊட்டி, கொடைக்கானல் போல் பூங்காவோ, படகு சவாரியோ, கடைத் தெருக்களோ எதுவும் மேகமலையில் இல்லை. அதுதான் மேகமலை. மேகமலையில் இருப்பதெல்லாம் இயற்கை… இயற்கை… இயற்கை… அமைதியான ஏரி, அடுக்கடுக்கானப் பசுந்தேயிலைத் தோட்டங்கள், அதற்கு வேலி போல் அமைந்த நீண்ட மரங்களை உடைய காடுகள், முடிவில் பசுமையான பள்ளத்தாக்குகள் இது தான் மேகமலையின் அடையாளம் உலகத்து அழகை தன்னகத்தே கொண்டுள்ள மேகமலை ஒரு கடவுளின் தேசம்!!!! 


மதுரை மண்ணில் பிறந்து, கடந்த மூன்று வருடங்களாகத் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணி புரிந்தாலும் சமீபத்தில் தான் மேகமலை பற்றி அறிந்தேன். முதலில் மேகமலை பற்றிய அறிமுகம் எனக்கு திகிலாகவே இருந்தது. “அங்க ஒன்னுமே இல்ல… வெறும் காடு…. மோசமான ரோடு…. ரோடே இல்ல…. ஒரு நாள் கூட தங்க முடியாது… வனவிலங்குகள் தொந்தரவு…” இப்படிப் பல விமர்சனங்கள். அனால் நான் எதிர்பார்ப்பது அந்தத் திரில் தானே. மேகமலையைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்குள் சபதமே செய்து விட்டேன். வலைதளத்தில் மேகமலை பற்றிய பகிர்வுகள் என் ஆவலை மேலும் அதிகரித்தன. ஒற்றைக்கால் கொக்காக மேகமலை செல்லச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மூணாறு, சிறுமலை, கொடைக்கானல், இடுக்கி, ராமக்கல்மேடு, வால்பாறை என்று பயணங்கள் சென்று வந்த போதிலும் மேகமலைப் பயணம் மட்டும் எனக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. இத்தனைக்கும் நான் பணிபுரியும் இடத்தில் இருந்து மேகமலை வெறும் 60 கிமீ தான். கனவுகளில் மட்டும் மேகமலை வந்து சென்றது.
ஆனால் என் காத்திருப்பு வீணாகவில்லை. தேவதானப்பட்டியைச் சேர்ந்த என் நண்பர் கண்ணன் அவர்கள் சுகர் மருந்துகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் ரீஜனல் மேனேஜராகப் பணிபுரிபவர். பணி நிமித்தமாகத் தமிழகம் முழுதும் பயணம் செய்பவர். திருமணமான முதல் நாளே இயற்கையை நோக்கியத் தன் பயணங்களுக்குத் தன் மனைவியிடம் வாழ்நாள் ஒப்புதல் பெற்றவர். வருமுன் காப்பது என்பது இதுதானோ???!!!
கண்ணன்
கண்ணன் அவர்களுடனான ஒரு யதார்த்தமான சந்திப்பில் பயணத்திற்கான விதை விழுந்தது. ஒரு இயற்கைப் பயணம் செல்லவேண்டும் என்ற தன் ஆவலைக் கூறி அதற்காகத் திட்டமிடக் கேட்டுக் கொண்டார். அடுத்த பயணத்திற்கு அழைப்பதாகக் கண்ணனிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றபோதும் எங்கே செல்வது, எப்போது செல்வது என்ற உறுதி இல்லாமலேயே இருந்தேன். ஒரிரு தினங்களுக்குப் பின் கண்ணன் விதைத்த விதை என் மனதில் துளிர்க்க ஆரம்பித்தது. இம்முறை மேகமலை செல்லும் ஆசையை நிறைவேற்ற விரும்பினேன். கண்ணனுக்கு ஏற்கனவே மேகமலையின் மறுபுறம் உள்ள வெள்ளிமலைக்குக் காட்டுப்பயணம் செய்த அனுபவம் இருந்ததால் தன் சம்மதத்தை உடனே தெரிவித்தார். 

அடுத்து யார் யாரை இந்தப் பயணத்திற்கு அழைக்கலாம் என்று எண்ணியபோது என் மனதிற்குத் தோன்றியவர்கள் பழனியப்பன், மனோபாலா ஆகிய என் நண்பர்கள்.பெரியகுளத்தைச் சேர்ந்த பழனியப்பன் அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டிங் பிரிவில் தமிழகம் முழுதும் சென்று பணிபுரிபவர். நான் செல்லும் பயணப் புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் அறிந்துகொண்டு அடுத்த பயணத்திற்கு அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருந்தார். அவரிடம் திட்டத்தைப் பற்றிச் சொன்னவுடனே குதூகலம் ஆகிவிட்டார்.
பழனி
அடுத்து என் நண்பர் மனோபாலா. என் ஊர் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். சிறு வயது முதல் என்னுடன் எப்போதும் இருப்பவர். என் அனைத்து சுக துக்கங்களிலும் இவரின் பங்கு உண்டு. தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிபவர். பயணம் என்றால் போதும் தலை போகிற வேலையாக இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டு இவர் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்.

மனோ
ஆக, நாங்கள் நால்வர் சேர்ந்து இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவு செய்தோம். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் அல்ல. இந்த மேகமலைப் பயணத்திற்க்காக என் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. மேகமலை செல்கிறோம் என்று முடிவானவுடனே நான் செய்த முதல் காரியம் பயணத் திட்டமிட வாட்ஸ்அப்பில் ‘மேகமலைக் கனவுகள்’ என்று ஒரு குழு தொடங்கி இவர்கள் மூவரையும் அதில் இணைத்தது தான். அது எங்கள் திட்டதிற்கு பெரிதும் உதவியதோடு ஒருவருக்கொருவர் அறிமுகமாக நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதனால் பயண நாளன்று எல்லோரும் இயல்பாகப் பழக முடிந்தது. குரூப் தொடங்கிய அன்று முதல் மேகமலைக் கனவுகளில் திழைத்தேன்.
முதலாவதாக எவ்வாறு பயணம் செய்வது என்று விவாதித்தோம். பயணம் என்றாலே எனக்குப் பிடித்தது பைக்கில் செல்வது தான். சிறுமலை, மூணாறு, கொடைக்கானலுக்கு ஏற்கனவே பைக்கில் சென்ற அனுபவம் இருந்ததால் மேகமலைக்கும் பைக்கில் செல்வது என்று முடிவு செய்தோம். தடுப்புச்சுவர்களற்ற மேகமலையின் மோசமான சாலை மனதில் சிறு பயத்தை ஏற்படுத்தினாலும் அந்தத் திரில்லுக்காகவே பைக்கைத் தேர்ந்தெடுத்தோம். மேகமலை செல்லும் சாலையின் மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு அனைவரும் தனித் தனி பைக்கில் செல்வது என்று தீர்மானித்தோம்.
விடுமுறை எடுப்பதில் அனைவருக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் ஓர் இரவு மட்டும் தங்குவது என்று தீர்மானித்து ஒரு நல்ல நாளையும் குறித்தாகி விட்டது. அடுத்து தங்கும் அறை.
மேகமலையில் நான்கே நான்கு இடங்கள் மட்டுமே பயணியர் தங்க உள்ளது. 
1. ஹைவேவிஸ் அணைக்கரையில் உள்ள inspection bangalow.
2. ஹைவேவிஸ் ஏரிக்கரையில் அமைந்துள்ள panchayat guest house
3. Sand river cottage
4.cloud mountain bangalow     
முதல் இரண்டும் அரசுக்குச் சொந்தமானது. ஹைவேவிஸ் பேரூராட்சியிலேயே உள்ளது. வாடகையும் குறைவு. மற்ற இரண்டும் தனியார்த் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமானது. சொகுசு பங்களாக்கள். அங்கே ஒரு நாள் தங்கச் சில பல ஆயிரங்களை நீங்கள் செலவு செய்ய நேரிடும். அதுமட்டுமல்லாது இந்த விடுதிகள் தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் இருப்பதால் இவைகளை அடைய நீங்கள் ஹைவேவிஸ் தாண்டி மேலும் 10 கிமீக்களுக்கும் மேல் பயணிக்க வேண்டும்.        
நான் தங்கும் அறை முன்பதிவு செய்ய ஹைவேவிஸ் பாஞ்சாயத் அலுவலகம் அருகில் உணவகம் நடத்தி வரும் திரு.முருகன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் இன்னொரு முருகன் என்பவரின் செல் நம்பரைக் கொடுத்தார். அந்த முருகனைத் தொடர்புகொண்டு அறை முன்பதிவு செய்தேன். முன்பதிவு செய்ய நமது பெயர், முகவரி, தொடர்பு எண், எத்தனை அறைகள் அடங்கிய விவரங்களை SMS செய்தால் போதும். நேரில் சென்று வாடகையைச் செலுத்திக் கொள்ளலாம். முன்பதிவு செய்துவிட்டு மேகமலை செல்லும் நாளுக்காகக் காத்திருந்தோம்.
அந்த நாளும் வந்தது…

முதல் நாள் இரவு ஒவ்வொருவராகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வரவை உறுதி செய்தேன். கண்ணன் தயாராக இருந்தார். பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த மனோவின் மனைவி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று, அவரிடம் சொல்லாமல் ஊரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ஒரு வழியாக அவர் மனைவியிடம் விஷயத்தை எடுத்துக்கூறிச் சம்மதம் வங்கியாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் தனக்குப் போன் செய்து எழுப்பிவிடும்படிக் கேட்டுக்கொண்டார் மனோ.  அடுத்து பழனி, பணி விஷயமாக சென்னை சென்றவர் அப்போதுதான் ஊருக்குத் திரும்புகிறார். அதிகாலை ஊரை அடைந்து விடுவதாகவும் குறித்த நேரத்தில் ஆஜராகி விடுவதாகவும் உறுதியளித்தார். எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ‘பயணக்களைப்பில் வந்து அப்படியே தூங்கிவிடுவாரோ?’ என்று. மறுநாள் காலை எட்டு மனிக்கு அனைவரும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே சந்திப்பதாகத் திட்டம். பயணத்திற்குத் தேவையானவைகளை பேக் செய்துவிட்டு, முறையே அதிகாலை 5:20, 5:25, 5:30 மணிக்கென்று மூன்று அலாரங்களை வைத்துவிட்டு (என் மேல அவ்வளவு நம்பிக்கை) தூங்கச் சென்றேன்...

பயணம் தொடரும்......       மேகமலைப் பயணம் - பாகம் 2 இங்கே



மேகமலைப் பயணம் - பாகம் 2


        மேகமலைப் பயணம் - பாகம் 1

தூக்கம் கலைந்து விழித்தபோது நேரம் நள்ளிரவு 2:00 மணி. தண்ணீர் அருந்திவிட்டுப் படுத்தேன். மீண்டும் 3 மணிக்கு விழிப்புத் தட்டியது. அதன்பிறகு 4 மணி, பிறகு தூக்கமே வரவில்லை. மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தேன். 6 மணிக்கு மனோவுக்கு கால் பண்ணினேன். ஏற்கனவே எழுந்திருந்தார். குரூப்பில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டேன். அனைவரிடமும் உடனே பதில் வந்தது. 6:30க்கு வீட்டை விட்டுக் கிளம்பி மனோவைப் போய்ப் பார்த்தேன். உசிலையில் இருந்து இருவரும் 7 மணிக்குக் கிளம்பினோம். கிளம்பும் முன் தேவைக்கு அதிகமாகவே பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஆண்டிபட்டி வழியாக தேனியை 7:45க்கு அடைந்து ஒரு டீ அருந்திக்கொண்டு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கண்ணன் மற்றும் பழனிக்காகக் காத்திருந்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி கண்ணன் தேவதானப்பட்டியில் இருந்து கிளம்பி பெரியகுளம் வந்து பழனியை அழைத்துக்கொண்டு 8:00மணிக்குத் தேனி வந்துவிட்டார்.  நண்பர்கள் முதல் முதலாகச் சந்தித்துக்கொண்டதால் ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைத்தேன்.

மேகமலைக்குச் செல்ல நாம் தேனியில் இருந்து 22 கிமீ சின்னமனூர் சென்று அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் வெள்ளையம்மாள்புரம் என்ற ஊரின் வழியாக 5 கிமீ சென்றால் மேகமலை செல்லும் மலைப்பாதையை அடையலாம். அங்கிருந்து 18 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து மேலும் ஒரு 35 கிமீ சென்றால் நாம் தங்கும் இடமான ஹைவேவிஸை அடையலாம். வழியில் தவித்தால் தண்ணீர் கூடக் கிடைக்காது. அகையால் சின்னமனூரில் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பத் திட்டமிட்டோம். தேனியில் இருந்து கிளம்பும்போது கண்ணன் அவர்கள் எல்லோரும் நிதானமாக ஒருவர் பின் ஒருவராக 60கிமீ வேகத்தை மிகாமல் செல்ல அறிவுருத்தினார். ஆனால் தேனி நகரைக் கடந்தவுடன் வண்டியை விரட்டிக்கொண்டு முதல் ஆளாகச் சின்னமனூரை அடைந்தது அவர்தான்.


வழியில் வீரபாண்டி அருகே முல்லைப் பெரியாற்றைக் கடந்து செல்கிறோம். முல்லைப்பெரியாறு தேனி, மதுரை உள்ளிட்ட 5 தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம். சென்ற வருடம் பருவமழை பொய்த்தாலும் சிறிதளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்து சென்றால் வழியெங்கும் தென்னந்தோப்புகளும் அருவடை செய்யப்பட்ட வயல்களும் தான். பைக் பயணம் செய்ய அருமையான சாலை. சின்னமனூரை அடைந்து 9 மணியளவில் காலை உணவை முடித்துவிட்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு நாம் கிளம்பும் தகவலை முருகன் அவர்களுக்குப் போன் பண்ணித் தெரிவித்துவிட்டு உற்சாகத்தோடு மேகமலைக்கு பைக்கைக் கிளப்பினோம்.

போகும் வழியில் வனத்துறை செக்போஸ்ட் ஒன்று திறந்தே உள்ளது. பொதுவாக பைக்கில் செல்பவர்களை அவர்கள் ஏதும் கேட்பது இல்லை என்று கூறுகிறார்கள். பாதையின் இருபுறமும் திராட்சைத் தோட்டங்கள் அரண் அமைகின்றன. நாம் சென்ற சமயம் பழங்கள் இல்லை. சின்னமனூர், கம்பம் பகுதி திராட்சை விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. செக்போஸ்டைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் மேகமலை செல்லும் மலைப்பாதை அழகாய்க் காட்சியளிக்கிறது. அடிவாரத்தில் இருக்கும் வழிவிடு முருகனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம் மனதில் உற்சாகத்தோடும், திகிலோடும்……..

மலைபாதை ஏற ஆரம்பித்தவுடனே பாதையின் கரடுமுரடானத் தன்மை வெளிப்பட ஆரம்பித்தது. மேகமலைக்கு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலாவதாக சாலையை அகலப்படுத்துவதற்காக பக்கவாட்டில் இருக்கும் பாறைகள் வெடி வைத்தும் இயந்திரங்களைக் கொண்டும் உடைக்கப்படுகின்றன. வெடித்துச் சிதறிய கற்கள் பாதையை அடைத்திருக்கும்பட்சத்தில் கற்கள் அகற்றப்படும்வரை நாம் காத்திருந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே பக்கவாட்டுச் சுவர்கள் கான்கிரீட் கொண்டும், சில இடங்களில் கம்பிவலைக்குள் கற்களை அடுக்கி வைத்தும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.அனைத்து பணிகளும் ஒரு வருடத்திற்குள் முடிந்துவிடும் என்று அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள்.
40 கிமீ மண்சாலை


சாலைப்பணியால் குண்டும் குழியுமான சாலை மண்பாதையாய் மாறியிருக்கின்றது. கொஞ்சம் வேகமாகச் சென்றாலே பைக்கை வாரிவிடுகிறது. ஆகையால் நிதானமாகவே பைக்கை செலுத்த வேண்டியுள்ளது, குறிப்பாகக் கொண்டைஊசி வளைவுகளில்.. பாதையில் இருந்து கிளம்பும் புழுதியால் ஹெல்மெட் இன்றி பைக் ஓட்ட இயலாது. உடைகளில் ஆங்காங்கே மண்துகள்கள் இயல்பாகப் படிந்திருக்கின்றன. இதற்கெல்லாம் சற்றும் அஞ்சாத நம் கண்ணன் அவர்கள் தனது பைக்கை இயன்ற வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.
ஆரம்பத்தில் வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தெரிந்தாலும் உயரே செல்லச் செல்லக் காற்றின் குளுமையை உணர முடிகிறது. ஆரம்பத்தில் ஒருபுறம் மலையும் மறுபுறம் சமவெளியையும் காணும் நாம் சிறிது தூரம் சென்றதும் இரண்டு மலைகளுக்கிடையே பயணிக்கிறோம். இருபுறமும் உயர்ந்து வளர்ந்த மரங்களால் சாலை நிழல் படிந்து சூரியஒளியின்றி இருண்டிருக்கிறது. அதனால் ஏற்படுகின்ற குளிர் மேகமலையில் நாம் அனுபவிக்கப் போகும் குளிருக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது.




கிட்டத்தட்ட 25 கிமீ சென்றவுடன் மேகமலை கிராமம் வருகிறது. அது மிகக்சிறிய மலைக் கிராமம். நாம் செல்ல வேண்டியதோ ஹைவேவிஸ் பேரூராட்சி. பயணத்தைத் தொடர்கிறோம். மீண்டும் காடுகள். கேள்விப்பட்டது போல் எங்கும் தேயிலைத் தோட்டங்களைக் காணவில்லை. கிட்டத்தட்ட ஹைவேவிஸ் நெருங்கும்வரை இதே நிலை. ஹைவேவிஸ் நெருங்க நெருங்கத்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேயிலைத் தோட்டங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. பின் எங்கெங்குக் காணினும் தேயிலைக்காடுகள். ஹைவேவிஸில் நம்மை முதலில் வரவேற்பது ஹைவேவிஸ் அணை. இந்த அணைக்கரையில் தான் நான் மேலே சொன்ன inspection bangalow உள்ளது. அந்த வளாகத்தின் உள்ளேயே அரசு மதுபானக் கடை உள்ளது. நாம் அணையை அடைந்தபோது வெடி வைக்கப்பட்டுச் சிதறியக் கற்களால் சாலைத் தடைபட்டிருந்தது. சாலை சீராகும் வரை அணைக்குள் சென்று பார்க்க முயற்சித்தோம். ஆனால் அங்குள்ள காவலாளி நம்மை அனுமதிக்க மறுத்துவிட்டார். பிறகு வேலியின் அருகில் நின்றே சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.
ஹைவேவிஸ் டேம் நுழைவாயில்

ஹைவேவிஸ் டேம்
அணையைக் கடந்து சென்றபோது நாம் கண்ட காட்சி நம் வாழ்விலும் கண்டிறாதது. ஆம், நடுவில் ஏரியும், அதன் கரையில் அமைந்த கிராமமும் அதனைச் சூழ்ந்த தேயிலைத் தோட்டமும் சினிமாவில் வரும் காதல் பாடல்களில் வரும் வெளிநாட்டு லொக்கேஷனை நியாபகப்படுத்தியது. மேகமலையில் நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். தூரத்தில் அமர்ந்து இந்த மலைக் கிராமத்தின் அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும் உங்களுக்குப் பசிக்காது, தூக்கம் வராது, கவலைகள் அனைத்தும் மறந்து போகும். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு கிளம்பினோம். 
ஹைவேவிஸ் கிராமத்தின் எழில் தோற்றம்


இப்படி இளைப்பாறலும் பயணமுமாகக் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து 12 மணி அளவில் நாம் தங்கும் பஞ்சாயத்து கெஸ்ட் ஹவுஸை அடைந்தோம். கரடு முரடான சாலையில் நாம் மேற்கொண்ட இந்த 3 மணி நேரப் பயணம் நமக்குள் ஒரு சிறு சோர்வைக்கூட ஏற்படுத்தவில்லை. மாறாக நமக்குள் தன்னம்பிக்கையும் உற்சாகமுமே அதிகமாகி இருந்தது.


பஞ்சாயத்து அலுவலகம் எரிக்கரையிலேயே அமைந்துள்ளது. அருமையான இடம். முன்னால் புல்வெளியும் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் போன்றவையும் உள்ளன.  புல்வெளியில் அமர்ந்து ஏரியின் அழகை மணிக்கணக்கில் ராசித்துக்கொண்டு இருக்கலாம். நாம் சென்றபோது சிலர் அங்கே அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அதற்கும் ஏற்ற இடம் தான். ஏரிக்கரையின் மறுபுறம் தேயிலைத் தோட்டம்.

ஓய்வு

குதூகலம்

காம்பவுண்டுக்குள்ளேயே முருகன் அவர்களின் கடை உள்ளது. வெளியே அமர்ந்திருந்த அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அறைக்குச் சென்றோம். தங்கும் அறைகள் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ளது. அன்றைய பணியில் கண்ணன் என்பவர் இருந்தார். அப்போது தான் கேரளாவிலிருந்து வந்தவர்கள் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கண்ணன் அவர்களை அனுப்பிக்கொண்டிருந்தார். நாம் அறை முன்பதிவு செய்திருப்பதைத் தெரிவித்தோம். அறை தயாராக அரை மணி நேரம் அகும் என்று தெரிவித்தார். அதற்கிடையில் நாம் முருகனிடம் சென்று மதிய உணவு ஆர்டர் செய்தோம். மதியம் 60 ரூபாய்க்குச் சாப்பாடு மட்டுமே கிடைக்கிறது. 15 ரூபாய்க்கு சிங்கிள் ஆம்லெட் கொடுக்கிறார்கள். அசைவத்தில் பிராய்லர் சிக்கன் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் முழுக் கோழியாக நாம் வங்கிக்கொண்டால் மட்டுமே கொடுக்கிறார்கள். முருகன் அதை நாட்டுக்கோழி என்கிறார். கிராமத்தில் வளர்ந்த நமக்கு பிராய்லருக்கும் நாடுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியாதா?? கிலோ 160 ரூபாய். அதை சமைக்க கிலோவுக்கு 80 ரூபாய். நாம் 2.5 கிலோ சிக்கன் ஆர்டர் செய்தோம். மொத்தம் 600 ரூபாய்.  உரித்தால் 2 கிலோ வரும் என்றார். ஒரு கிலோ மதிய உணவுக்கு வருவல் செய்து தரச் சொன்னோம். மீதம் ஒரு கிலோவை இரவு உணவுக்குச் சப்பாத்தியுடன் கிரேவி செய்யச் சொல்லிவிட்டு சுற்றிப் பார்க்கும் இடங்கள் பற்றி விசாரித்தோம். அப்போது அவருடன் இருந்தவர் 15 கிமீ தூரத்தில் உள்ள மகாராஜாமெட்டு அருமையான இடம் என்றும் அங்கே பைக்கில் செல்வது மிகவும் கடினம் ஆதலால் தங்கள் ஜீப்பை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம் என்றார். 

அறை தயாரானதும் கண்ணன் அழைத்தார். பெயர் விலாசம் உள்ளிட்டவற்றை பதிவு செய்துவிட்டு வாடகை பெற்றுக்கொண்டார். மூன்று பேர் தங்க அறை வாடகை ரூபாய் 825-/-. எக்ஸ்ட்ரா பெட் ரூபாய் 350-/-. அனைவரும் ஒரு அறையில் தங்கிக்கொள்ள முடிவு செய்தோம். அறை நன்றாகவே இருந்தது. நமது வீட்டைப் போன்ற அறை. சுத்தமாகவே இருந்தது. டைனிங் டேபிளுடன் ஒரு வரவேற்பறை, பிறகு பெட்ரூம் அதில் டீவி இல்லை. பாத்ரூம் வெஸ்டர்ன் டாய்லெட், வாட்டர் ஹீட்டர் உடன் உள்ளது. ஒரு அரசு விடுதி இவ்வளவு சுத்தமாக இருப்பது பெரிய விஷயம். மதிய நேரத்திலேயே அறைக்குள் அவ்வளவு குளிராக இருந்தது. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். அதற்குள் உதவியாளர் கண்ணன் மதிய உணவு அருந்த ஒரு டைனிங் டேபிளை நமக்காகப் பால்கனியில் செட் செய்து கொடுத்தார். பால்கனியில் சிறிது நேரம் அமர்ந்து ஏரியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். நாம் மதியம் கடைக்கே சென்று சாப்பிட்டோம், வேண்டுமென்றால் அறைக்கும் அனுப்பி வைப்பார்கள். மதிய உணவு நாட்டுக்கோழியுடன்??!! பரிமாறப்பட்டது. சிக்கன் நன்றாகவே செய்திருந்தார்கள். சாப்பாடு தான் சுமார். உணவை முடித்துவிட்டு அப்படியே ஏரியோரமாகவே நடந்து சென்றோம்.
ஏரிக்குள் செல்லும் பாதை
தொலைவில் சில வீடுகள் பயன்பாடின்றிப் பாழடைந்துச் சுற்றிப் புதர் மண்டிக் கிடந்தது. தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் முன்பு வாழ்ந்த குடியிருப்புகள் போலும் அவை.
கைவிடப்பட்ட குடியிருப்பு
வாழ்நாள் முழுவதையும் அந்தத் தேயிலைத் தோட்டங்களில் செலவழித்து, உடல் தளர்ந்து, வயது முதிர்ந்து, இனிப் பணி செய்ய இயலாது என்ற நிலையில் ஓய்வு பெற்று வேறு இடம் தேடிச் சென்றபோது விட்டுச் சென்ற எச்சங்கள் அவை. ஏனோ அவை என் மனதில் ஒரு இனம்புரியாத சோகத்தை வரவழைத்தன. அங்கே யார் வாழ்ந்திருப்பார்கள்? எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்தார்கள்? அப்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இன்று அவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருப்பார்கள்?! இப்படிப் பல பல வினாக்கள் என்னுள். விடைதெரியா அக்கேள்விகளுடனே நிழலில் படுத்து ஏரியைப் பார்த்த போது மனம் வெறுமையாய் உணர்ந்தது. அப்படியே நானும் மனோவும் தூங்கிப் போனோம். பழனியும், கண்ணனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். 

ஏரிக்கரையில் இளைப்பாறல்



பயணம் தொடரும்........ மேகமலைப் பயணம் - பாகம் 3 இங்கே                                                              

Tuesday, 14 February 2017

ரயில் பயணியின் அறிமுகம்

அன்பு நண்பர்களே,
     வணக்கம்…..
     முதலாவதாக அனைவருக்கும் மனமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்... இந்த பொன்னான நன்னாளில் இந்த  வலைதளம் மூலமாக தங்களை சந்திப்பதில் நிறைந்த மகிழ்ச்சி!!!
கடல் போன்ற வலைதள உலகில் ஒரு சிற்றாறாய் இன்று நானும் கலக்கிறேன். தளம் ஆரம்பிக்கும் எண்ணம் என்னுள் நீண்ட நாட்களாகவே இருக்கும் ஆசை தான். ஆனால், பலர் கலக்கிக்கொண்டு இருக்கும் இந்த வலை உலகில் என்னால் ஒரு தளத்தை சிறப்பாக நடத்த முடியுமா என்று பல யோசனைகள் என்னுள்..
     நம்மல பொருத்தவரை ஒரு வேலைய செஞ்சா நல்லா செய்யனும் இல்லனா செய்யக் கூடாது… அதான் ஒரு வழியா மனச தைரியப்படுத்திக்கிட்டு என் குலதெய்வத்த வேண்டிக்கிட்டு களத்துல இறங்கிட்டேன்.. காப்பத்து தாயீ…..
     பொதுவா என்னுடைய எண்ணம் எப்போதுமே இயற்கையை நேசிப்பதிலும், பயணம் செய்வதிலும் நிலைத்திருக்கும். வீட்டுக்கு தெரியாம எங்கயாவது சுத்திட்டு வந்துருவேன். உணவுக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணுல பிறந்ததாலோ என்னவோ சாப்பாடு மேலயும் அலாதி பிரியம் நமக்கு. அதனால் இவை பற்றிய பதிவுகள் இந்த தளத்தில் பெரும்பாலும் எதிர்பார்க்கலாம்.
     எத்தனையோ பிளாக்குகளை படிக்கும்போது எப்படி எல்லாம் பின்றாங்களேனு ஆச்சரியமா இருக்கும். சிலர் அதில் எனக்கு தூண்டுதலாகவும் இருக்கின்றனர். என்னால் முடிந்த அளவு என்னுடைய அனுபவங்களை எனக்கு தெரிந்த வகையில் இந்த ரயில் பயணத்தில் தங்களுடன் பகிர்ந்துகொள்ள முயல்கிறேன். பிழை இருப்பின் எடுத்துகூறி திருத்துங்கள். நல்லவை ஏதேனும் இருப்பின் தட்டிக்கொடுங்கள்.
     
     பயணிப்போமா……..

பிரியமுடன்
ராஜ்கண்ணன்