Sunday, 21 May 2017

நக்சலைட்டுகளுடன் ஒரு நாள்..

அது 2012ம் வருடம். பெங்களூரில் பணியமர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. நுண்ணோக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் பணி. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பயணம் சென்று பணி செய்த நாட்கள். பெரும்பான்மையான இரவுகள் ரயில்பயணங்களில் கழிந்துகொண்டிருந்தன. என்னுடைய பயணப் பசிக்கு நல்ல தீனியாக இருந்ததால் விழைந்து பணி செய்தேன்.


அன்றொரு நாள் சென்னையில் இருக்கும் எனது மண்டல மேலாளரிடம் இருந்து செல்போன் அழைப்பு. பணி நிலவரங்களை விசாரித்தவர், “ஃபிளைட்டில் சென்றிருக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“சரி, நாளை பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஃபிளைட்டில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

பெங்களூரில் இருந்து விமானத்தில் வைசாக் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கிரந்துல் என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். மத்திய அரசுக்குச் சொந்தமான இரும்புச் சுரங்கம் அங்குள்ளது. சுரங்க நிறுவனத்திற்குட்பட்ட மருத்துவமனையில் ஒரு புதிய நுண்ணோக்கியை நிறுவ வேண்டும். இதுவே எனக்கு இட்ட பணி. உற்சாக வெள்ளம் என்னுள். ‘விவரம் தெரிந்து முதல் வடநாட்டுப் பயணம் அதுவும் முதல் முறை விமானப் பயணமாக.. விமானத்தில் அழகழகான பணிப் பெண்கள்  இருப்பார்கள். செல்லும் இடம் ஒரு மலைப் பிரதேசம் என்ற தகவலும் வேறு.. அதுமட்டுமல்லாமல் ஹைதராபாத்தில் நமது கிளை இருந்தும் அங்கிருந்து ஊழியரை அனுப்பாமல் மேலாளர் நம்மை அனுப்புகிறார் என்றால் நம் மீது எவ்வளவு நம்பிக்கை.’ என்று எக்கச்சக்கமான சந்தோஷத்துடனும் கனவுகளுடனும் விமானம் ஏறுகிறோம்.

ஒரு புது அனுபவத்தை எதிர்நோக்கி விமானப் படிக்கட்டுகள் ஒவ்வொன்றாக ஏறி விமானத்தின் உள்ளே சென்ற நம்மை “வெல்கம் டு xxxxxxxx ஏர்லைன்ஸ்” என்று, நாம் கற்பனை செய்த இனிய குரல் அல்லாமல் ஒரு தடித்த ஆண் குரல் வரவேற்கிறது. ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை’ என்று நினைத்துக்கொண்டு, ‘சரி,மத்தவங்க உள்ள நமக்கு கூல்டிரிங்க்ஸ் கலக்க போயிருப்பாங்க போல’ என்று சமாதானம் செய்துகொண்டு இருக்கையில் சென்று அமர்கிறோம். சம்பிரதாயங்கள் முடிந்து விமானம் ஓடுபாதையில் சென்று மேலெழுந்தபோது ராட்டினத்தில் சுற்றும் போது அடிவயிற்றில் ஒரு பீதியான உணர்வு வருமே அதே போன்று உணர்கிறோம். பூமியில் இருப்பவை அனைத்தும் புள்ளிகளாய் சுருங்கிகொண்டிருக்க, விமானம் படிப்படியாக மேலே செல்கிறது. நேரம் தான் சென்றதே தவிர நாம் எதிர்பார்த்தவர்களைக் காணவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ‘சார், கூல்டிரிங்க்ஸ்’ என்று மீண்டும் அதே கடினக் குரல் கேட்க நம் கனவு கனவாகவே போனது. விமானத்தில் பணிப்பெண்கள் மட்டுமல்ல 'பணிஆண்கள்' கூட இருப்பார்கள் என்று உணர்ந்த தருணம் அது. மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே பார்க்கிறோம்.  விமானம் மேகத்திரையைக் கிழித்துக் கொண்டு மேலே செல்கிறது. மேகத்தை வென்றுவிட்டோம் என்று பரவசப்பட்டால், அங்கே விமானதிற்கு மேல் மற்றொரு மேகக் கூட்டம். இயற்கையை வெல்வது அவ்வளவு எளிதன்றே!! மேகம் பல அடுக்குகளால் ஆனது என்று அப்போதே அறிகிறோம்.

மேக அடுக்கு மேலும் கீழும்

 சூழ்ந்த மேகக்கூட்டம் கடைந்த மோரில் இருந்து வெளிவரும் வெண்ணை போன்று பொங்கி நிற்கிறது.


 சில இடங்களில், ஆங்காங்கே குவித்து வைத்த பஞ்சுக் குவியலாய்...


காற்றில் விலகும் திரைச்சீலை போல் மேகம் விலகும்போது பூமி தெரிகிறது. பறவையின் பார்வையில் தெரிந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகள் வெறும் நதிகள் அல்ல, அவை மகாநதிகள். நதிகள் அதன் ஆழத்தை உணர்வுகளாலேயே நமக்குள் புகுத்தக் கூடியவை.



இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் வைசாக்கை அடைகிறோம். வைசாக் விமான நிலையம் கடற்கரையை ஒட்டி அமைந்தது. விமானம் தரையிறங்க மேலே வட்டமடித்துத் தன் வேகத்தைக் குறைக்க வேண்டும்.  வட்டமடிக்க ஒரு பக்கமாகச் சாயும் போது கீழே இருக்கும் சமுத்திரம் ஒரு பக்கமாக சரிந்து அதில் இருக்கும் கப்பல்களையும் படகுகளையும் அடித்துக் கொண்டு பாய்வது போல் ஒரு பயங்கர தோற்றத்தைக் கொடுக்கிறது.


 பேருந்து நிலையம் சென்று மாலை 6 மணிக்கு கிரந்துல் செல்லும் பேருந்தில் கிளம்புகிறோம். இரவு உணவுக்கு ஒரு சிறிய கூரைக்கடை முன் பேருந்து நிற்கிறது. நம்மூர் மோட்டல்கள் கொடுத்த கசப்பான அனுபவங்களை எண்ணிக்கொண்டு உண்ணச் சென்ற நமக்கு இன்ப அதிர்ச்சி. அருமையான ரொட்டியும் முட்டைக் குருமாவும் நம் முன் சுடச் சுட… அந்த சுவையை இப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். நேரம் காலை 6 மணி. திருப்தியாக தூங்கி விழித்த போது பேருந்து கிரந்துல்லை அடைந்திருந்தது. அது ஒரு மலைகிராமம். மலைமக்களும், இரும்புச் சுரங்கத்தில் வேலை செய்பவர்களும் அங்கு வசிக்கிறார்கள். இரவு பெய்த மழையில் கிரந்துல் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு தங்கும் விடுதியும் அடைத்திருந்தது. மொழியறியா ஊரில் வழியறியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். அங்கே இங்கே அலைந்து கடைசியில் அங்கே வந்த ஒருவரிடம் சைகையில் பேசி தங்க இடம் கேட்கிறோம். அவர் ஹிந்தி பேசுகிறார். நமக்கு ஹிந்தி தெரியாது. சைகையைப் புரிந்துகொண்டு ஒரு இடத்திற்குக் கூட்டிப் போகிறார். அடுத்த இரண்டு நாளும் சைகை பாஷை தான் போலும் என்று நினைத்துக் கொள்கிறோம்.
அவர் காண்பித்தது ஒரு குடிசை. வாசலில் கழிவுநீர் ஓடிக்கொண்டு இருந்தது. திறந்து காண்பித்தார். உள்ளே இருந்த ஒரு எலிக்குட்டி ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதியைப் போல் தப்பி சரட்டென்று வெளியே ஓடியது. பூட்டி வைத்திருந்த வாடை  முகத்தில் அறைந்து வெளியே தள்ளியது.  எட்டுக்கு எட்டடியில் அறை. கட்டில், கிழிந்து தொங்கிய மெத்தையுடன். எலியின் விளையாட்டு. உடைந்து போன தகரக் கதவுடன் குளியலறை பக்கவாட்டில் இருந்தது. வானத்தை ரசித்துக்கொண்டே குளிக்கலாம். மேலே கூரை இல்லை. இன்றைக்கு இது தான் நம் வசந்த மாளிகை என்று நினைத்துக் கொள்கிறோம். வேறு வழியும் இல்லை.

தூரத்தில் இரும்புச் சுரங்கம்

ஓய்வுக்குப் பின் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்கிறோம். உணவகம் எதும் தென்படாததால் காலையில் விரதம். அனைவரும் ஹிந்தி பேச, வேற்றுகிரகவாசி போல் நம்மை உணர்கிறோம். அரைகுறை ஆங்கிலம் சில இடங்களில் கைகொடுக்கிறது. அங்கே இருந்தவரிடம் ‘தமிழர்கள் யாரும் இருக்கிறார்களா?’ என்று வினவுகிறோம். மருத்துவமனை கேன்டீனில் ஒருவர் இருப்பதாகக் கூறுகிறார். சிறிது நேரத்தில் அவரே அங்கே தேனீர் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவரை விட நமக்கு.. வேற்றுகிரகத்தில் இருக்கும் நினைவில் இருந்து அப்போது தான் மீள்கிறோம். மதிய உணவு வேளையில் வருவதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். லேசான நிம்மதி நமக்கு.

சொன்னது போல் மதியம் வருகிறார். நம் வேலையைப் பற்றி விசாரித்தவர், தன்னோடு மதிய உணவு அருந்தக் கனிவோடு நம்மை அழைத்தார். உணவருந்திக் கொண்டு தன்னைப் பற்றிக் கூறுகிறார். திருநெல்வேலிக்காரர் அவர். பிழைப்புக்காக தாத்தா காலத்தில் இங்கே வந்துவிட்டர்களாம், சுரங்கத்தில் வேலை பார்க்க. பிறகு இதுவே ஊராகிவிட்டது. திருநெல்வேலி நினைவுகளே மறந்திருந்தது அவருக்கு.   நல்ல வேளையாக நமக்காகத் தமிழை மறந்திருக்கவில்லை. ஒரு தூர தேசத்தில் நம்மில் ஒருவரைக் காணும் இன்பம், பிரிந்திருக்கும் தாயைக் குழந்தை காணும் இன்பத்திற்கு ஈடானது. நம் இனத்தார் என்ற நம்பிக்கை

அவர்களின் வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறோம். இந்தியாவின் மிகப் பின்தங்கிய ஊர்களில் அது ஒன்று. சுரங்கத் தொழிலே அங்கு பிரதானம். படிப்பறிவு அங்கே மிகவும் குறைவு. நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருக்கக் கூடிய இடம். கஷ்டப்படும் அந்த மக்களே நக்சலைட்டுகளின் எளிதான இலக்கு. துடிப்பான ஏழை இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு புரட்சி என்ற பெயரில் நக்சலைட்டுகளாக மாறி அரசுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இரணுவத்தினரையோ அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையோ அவர்கள் உயிருடன் விடுவதில்லை. ஆனால் அவர்கள் பொதுமக்களை மட்டும் துன்புருத்துவது கிடையாது. மறைந்து வாழ மக்களின் ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நக்சலைட்டுகள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருக்கிறார்கள். தங்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுபவர்களை மட்டும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. அதனாலே மக்கள் அவர்களைப் பகைப்பதும் இல்லை.  ‘யார் கண்டார்? நம்மைச் சுற்றிக் கூட இங்கே அவர்கள் இருக்கக் கூடும்!!’ என்றார். எனவே நக்சலைட் என்ற வார்த்தையைக் கூட அவர் மெதுவாகவே சொன்னார். பேச்சு வரவில்லை நமக்கு. சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். நம்மை ஃபிளைட் ஏற்றி அனுப்பிய காரணம் அப்போது தான் புரிந்தது. அந்த இரண்டு நாட்களும் வேலையை முடித்து ஊர் திரும்பினால் போதும் என்றிருந்தது நமக்கு.

வேலையை முடித்து மறுநாள் மாலை கிளம்பும்போது பேருந்து நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். பல நாள் பழகிய நண்பரைப் பிரியும் மனநிலை நமக்கு. நாம் ஒவ்வொருவரும் இது போன்று ஒரு நபரை நம் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும். அவர் நம் வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும். ஆனால் பல சமயங்களில் அவர்களைப் பற்றிய  நினைவுகள் மட்டுமே எஞ்சிய வாழ்வை நிரப்புகின்றன.

வளைவுகளுக்கேற்ப பேருந்து தன்னை வளைத்துக் கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. காடு சூழப்பட்ட சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீர் என்று பேருந்து நிறுத்தப்படுகிறது. கையில் தடியுடன் சால்வை போர்த்திய ஒரு இருபது பேர் காட்டிற்குள் இருந்து சாலையின் குறுக்கே வருகிறார்கள். பயணிகளிடையே பதற்றம். ஆம், அவர்கள் தான் நக்சலைட்டுகள். வந்துவிட்டார்கள்.  பேருந்திற்குள் ஏறி எதையோ தேடுகிறார்கள். பயணிகள் ஒவ்வொருவரும் இருக்கையோடு ஒன்றி மறுகுகிறார்கள். பேருந்து முழுவதும் நிசப்தம். கடைசியில் நடத்துனர் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்ட பேருந்து விடப்படுகிறது. இது அன்றாட வாடிக்கை என்று அருகில் இருந்தவர் கூறுகிறார். அங்கே நிம்மதி பிறக்கிறது. ஆனால் போன உயிர் இன்னும் நமக்கு வந்திருக்கவில்லை.  இரவு முழுதும் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை. வைசாக்கை அடைந்த பின்பே இதயத் துடிப்பு சீரானது. இதுவே, நாம் வந்த பேருந்தில் ஒரு இராணுவ வீரன் வந்திருந்தால் கூட அந்தப் பேருந்தே எரிந்து போய் இருக்கும் இந்நேரம். மனிதப் பிசாசுகளை எதிர்கொள்ளும் நம் இராணுவத்தின் கஸ்டம் ஓரளவு நம்மால் உணர முடிகிறது. 


பெங்களூர் வந்த பின்பு தான் தெரிந்தது நம்மை அங்கே அனுப்பிய காரணம். அலுவலகத்தில் என்னைத் தவிர அனைவரும் குடும்பஸ்தர்கள். நான் மட்டுமே அப்போது ஒண்டிக்கட்டை. சேதாரம் ஏற்பட்டாலும் யாருக்கும் பாதிப்பில்லை என்றெண்ணி என்னை அங்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று. சமீபத்தில் இருபத்தி நான்கு துணை இராணுவப் படை வீரர்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்படிருக்கிறார்கள். சர்வ வல்லமை பொருந்திய ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இராணுவத்தையே எதிர்க்கும் துணிவிருந்தால் அவர்கள் எத்தகைய கொடூரமானவர்கள் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறோம். எதுவாக இருப்பினும் இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.


4 comments:

  1. நல்ல அனுபவம்.எழுதிய வித சிறப்பு.எழுத்துரு மாற்றி னால்(கொஞ்சம் பெரியதானல்) என் போன்றவர்களுக்கு வசதை!
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.. இனி பெரிய ஃபாண்டாகப் பயன்படுத்துகிறேன்..

      Delete
  2. சோதனைச் சாவடி வைத்துள்ளார்களா!!!!

    ReplyDelete