நண்பர்களுடன் குற்றாலத்திற்குப் பயணம். உசிலம்பட்டியில்
இருந்து கிளம்பி பேரையூர் கடந்து ஸ்ரீவில்லிப்புத்தூரை அடைந்தபோது காலை மணி ஒன்பது.
உள்ளே இருக்கும் குண்டோதரன் கதவைத் தட்ட அவனை அங்கேயே சமாதானப்படுத்த எண்ணினோம். நல்ல
உணவகம் எது என்று விசாரித்தபோது பல கைகள் காட்டிய இடம் ஹோட்டல் கதிரவன்.
ராஜபாளையம்
செல்லும் சாலையில் தேரடிக்கு அருகில் இருபுறமும் இருக்கும் பால்கோவா கடைகளில் இருந்து
வரும் இனிய மணத்தை அனுபவித்துக் கொண்டே சிறிது தூரம் சென்றால் இடதுபுறம் ஒரு வேப்பமரத்தின்
அடியில் இருக்கிறது இந்த உணவகம்.
பழமையான கட்டிடம். முற்றத்தைத் தேக்குமரத்
தூண்கள் தாங்குகின்றன. வெளியே இருந்து பார்க்கும் போது சிறிய உணவகம் போல் தோன்றியது.
அதிக உயரமில்லாத நிலைக் கதவில் முட்டிக்கொள்ளாமல் குனிந்து உள்ளே சென்றபோது தான் கடையின்
அளவு தெரிகிறது. வரிசையாக நான்கு அறைகள் உள்ளன. நம் வீட்டை விட உயரமாக எழுப்பப்பட்ட
கான்கிரீட் கூரை. நாம் சென்ற போது உணவகம் தன் முழு கொள்ளளவில் இயங்கிக் கொண்டிருந்தது.
கை கழுவிவிட்டு, இடம் காலியாகும் வரை ஒரு ஒரமாக
ஒதுங்கி ஓட்டப் பந்தய வீரரைப் போல் இடம் பிடிக்கத் தயாராக நின்றோம். நம்மைப் போல் இன்னும் சிலரும்...
உணவகத்தின் பழமையைப் போல் வருபவர்களைக் கவனிப்பதிலும்
பழைய பண்பு இருக்கிறது. நாம் காத்திருப்பதைப் பார்த்துவிட்டு கடையின் முதலாளி நாம்
எத்தனை பேர் என்று விசாரித்து உட்கார இடம் ஒதுக்கிக் கொடுத்தார். அதே போல் கல்லாவை
மட்டும் கவனிக்காமல் உணவு உண்பவர்களுக்கு இடையிடையே என்ன வேண்டும் என்று கேட்டுத் தருவித்தார்.
ஒவ்வொரு இருக்கைக்கு மேலும் இருக்கை எண் எழுதப்பட்டிருக்கிறது.
சர்வர் வந்து உணவுகளைப் பரிமாறிவிட்டு இருக்கை எண்ணைச் சொல்லவும் கல்லாவில் இருப்பவர்
கணக்கு வைத்துக் கொள்கிறார்.
நல்ல அகலமான வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு
குவளையில் தண்ணீர் வைக்கப்படுகிறது. இலையில் தண்ணீர் தெளித்துவிட்டு முன்பசிக்கு இட்லி
சொல்லலாம் என்று நினைத்தபோது, ஒரு பெரிய தாம்பளத் தட்டு நிறைய இரண்டு இரண்டாகப் பூரிகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு
இலையாக ‘’வேண்டுமா?" என்று கேட்டுக் கொண்டு சர்வர் வர, இட்லியை மறந்து நாமும் ஒரு செட் பூரி வாங்கிக்கொண்டோம்.
மேலே இருக்கும் பூரியை எடுத்தபோது சிற்பிக்குள் இருக்கும் முத்தைப் போல் பூரிகளுக்கு
நடுவில் உருளைக் கிழங்கு மசால் ஒழிந்திருந்தது.
சுத்தமான கோதுமையில் செய்யப்பட்ட பூரி
சிறிதாக இருந்தாலும் மிருதுவாக இருந்தது. பூரியைப் பிட்டு உருளைக் கிழங்கு மசிய வேகவைக்கப்பட்ட
மசாலில் தொட்டுக் கொண்டு சுவைத்தபோது அருமையாக இருந்தது. வித்தியாசமான சுவைக்கு தொட்டுக்கொள்ள
சாம்பாரும் தருகிறார்கள். அதுவும் நன்றாகவே இருந்தது.
அடுத்து ஒரு பொங்கலும் வடையும் வங்கிக் கொண்டோம்.
பச்சரிசியுடன் பாசிப்பருப்பும் நெய்யும் செழிப்பாகக் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பொங்கல்,
சுவையில் பூரிக்கு சளைக்கவில்லை. பாசிப்பருப்பும் பச்சரிசியும் நன்றாகக் குழைந்து ஒன்றோடு
ஒன்று பிணைந்து அல்வா பதத்தில் இருந்தது. ஒரு வாய் எடுத்து சாம்பாரில் பிரட்டி சுவைத்தபோது
அப்படியே கரைந்து போனது. வழக்கமாக பொங்கலில் சேர்க்கப்படும் மிளகு பொங்கலின் சுவையைக்
கூட்ட இடையிடையே இருக்கும் சீரகம் மெல்லப்படும்போது அது அந்த சுவையான உணவுக்கு ஒரு
அற்புதமான மணத்தைக் கொடுக்கிறது.
பொங்கலைப் போல் வடையும் இங்கே நல்ல சுவையில்
கிடைக்கிறது. இன்று உளுந்து விற்கும் விலையில் பல கடைகளில் உளுந்து வடையில் உளுந்துடன்
அரிசியைக் கலந்து மெதுமெதுவென்று இருக்க வேண்டிய வடையை வறவறவென்று தருகின்றனர். ஆனால்
இங்கே சுத்தமான உளுந்தமாவை உருட்டி எண்ணையில் பதமாகப் பொறித்துப் பொன்னிறத்தில் கொடுக்கின்றனர்.
வடை அவ்வளவு மிருதுவாக இருக்கிறது. பொங்கலுக்கு சரியான பங்காளி. உடன் வந்த நண்பர், நெய்
தோசையும் அருமை என்றார். நான் சுவைக்கவில்லை.
ஆண்டால் பாடிய பாசுரங்களைக் கேட்டு ரங்கமன்னார் மயங்கியது போல் கதிரவன் ஹோட்டல் தந்த உணவுகளின் சுவையில் நாங்கள் மயங்கி நின்றோம். இவ்வளவு சுவையான உணவுகளுக்கு அவர்கள் வைத்திருக்கும்
விலை இன்று எங்கெங்கும் முளைத்திருக்கும் பல உயர்தர பவன்களைக் காட்டிலும் குறைவு என்பது மிகச்
சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் – ரங்கமன்னாரை தரிசித்த மனநிறைவோடு கதிரவனில்
வயிறை நிறையுங்கள் அது ஒரு சுகானுபவமாக இருக்கும்.