பருவமழைப் பயணம்-வட்டக்கானல் பாகம் 1 இங்கே
ஓரிடத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் சலங்கை
ஒலி போல் கேட்கிறது. ஒரு சிற்றாறு பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இறங்கிச்
சென்று பார்த்தோம். ஒரு நிமிடம் நம் கண்களை நம்ப முடியவில்லை. காட்டுக்குள் ஒரு அழகிய
அருவி விழுந்துகொண்டிருந்தது.
படிக்கட்டுகள் போல் அமைந்த பாறை அமைப்பில் அந்த அருவி
தவழ்ந்து வழிந்து ஓடியதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. சுற்றிலும் பைன் மரங்களும்,
செடிகளும், கொடிகளும், பசும்புல்வெளிகளும் அருவியைச் சூழ நந்தவனம் போல் இருந்தது அந்த
இடம். சிறிது நேரம் அருவிக்கரையில் அமர்ந்து அதன் அழகில் நனைந்தோம்.
|
அருவியின் மேற்புறம் |
பைக்கைக் கிளப்பி வட்டக்கானலை அடைந்தோம். பெரிய கிண்ணம் போல வட்ட வடிவில் நீலமலைச் சிகரங்களால் சூழப்பட்ட ஒரு பசுமையான பள்ளத்தாக்கு. வானம் இறங்கிவந்து பூமியுடன் சேர்ந்தது போல் வானத்தின் நீலமும், பள்ளத்தாக்கின் பசுமையும் கலந்து பள்ளத்தாக்கு முழுதும் கருநீலமாய் காட்சியளிக்கிறது. இறைவன் கைவண்ணத்தில் மிளிரும் அழகிய ஓவியம் அது. மலைவிளிம்பில் வரிசையாய் அமைந்த வீடுகள்,
தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள்.
|
வட்டக்கானல் |
கையில் ஒரு கோப்பைத்
தேனீருடன் மலைவிளிம்பில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்துகொண்டே இருக்கலாம். அது ஒரு
தியனத்திற்கு இணையான பலனைக் கொடுக்கும் என்றே சொல்லுவேன். வட்டக்கானலைப் பலரும் நாடுவது
அதற்காகத் தான். வட்டக்கானல் பேரமைதியாக இருந்தது. கொடைக்கானல் வரும் மக்கள் அருகில்
உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு வட்டக்கானலைத் தங்கள் கடைசித் தேர்வாகவோ அல்லது தவிர்த்துவிட்டோ
செல்கின்றபடியால் வந்த அமைதி. அந்த அமைதி நமக்கு லாபமானது. அன்று வானம் பளிச்சென்று இருந்தது. மழைக்கான அறிகுறி
இல்லை. மலைவிளிம்பில் இருந்த ஒரு உணவகத்தில் காலை உணவை அருந்தினோம். தேனீர் விடுதிக்கோ
உணவகத்திற்கோ சென்றால், “தங்குவதற்கு அறை வேண்டுமா?” என்று தாங்களாகவே வினவுகின்றனர்.
அதுமட்டுமின்றி சீசன் நேரங்களில் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகள்’ தயாரித்து விற்பனையும்
செய்கின்றனர்.
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள ‘டால்பின்
மூனை’ என்ற இடத்திற்குச் சென்றோம். மலையின் விளிம்பு டால்பினின் மூக்கைப் போல் இருப்பதால்
அப்படிப் பெயர். பைக்கில் செல்ல இயலாது, சரிவான காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
இறக்கம் பல இடங்களில் செங்குத்தாக இருந்ததால் இறங்குவதே சற்று சிரமமாக இருக்கிறது.
அப்படியானால் ஏறுவதற்கு சொல்ல வேண்டியதே இல்லை.
|
டால்பின் முனை செல்லும் பாதை |
மண்தரை மழையில் நனைந்து நெகிழும் தன்மையுடன்
இருந்தது. கால் வழுக்கிய தடங்களைப் பல இடங்களில் காண முடிந்தது. வழியில் பல இடங்களில் தேனீர் மற்றும் குளிர்பானக்கடைகள்
இருக்கின்றன. அனைத்து அங்காடிகளிலும் குலுக்கோஸ் நீர் தவறாமல் விற்கிறார்கள். காரணம்
இல்லாமல் இல்லை.
மலையின் விளிம்பில் படுத்துக்கொண்டு பள்ளத்தாக்கை
எட்டிப் பார்ப்பது போல் அமைந்த ஒரு செவ்வகமான பாறை. அதன் மேல் இரண்டு சிறிய பாறைகள்.
டால்பின் முனை என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியது. நாங்கள் செல்லும்போது புதுமணத்
தம்பதிகள் முனையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.
|
டால்பின் முனை |
ஜோடியாக வரும் அனைவரும்
தவறாமல் டைட்டானிக் போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். அதைப் பார்த்து பெருமாளுக்குக் கொஞ்சம்
பொறாமை வந்தது. சீக்கிரம் திருமணம் முடித்து மனைவியுடன் இங்கு வந்து இதே போல் போஸ்
கொடுப்பேன் என்று மலைவிளிம்பில் நின்று சபதம் செய்துகொண்டார். நேற்று அருந்திய உணவு
ஒவ்வாமையைக் கொடுக்க மனோ அன்று சோர்வாக இருந்தார். புதுத் தம்பதிகள் சென்ற பின்பு டால்பின்
முனைக்குச் சென்றோம்.
|
வேறு கோணத்தில் டால்பின் முனை |
மலைவிளிம்பில் அந்தக் கல் வெளியே நீட்டிக்
கொண்டிருக்க இருபுறமும் பள்ளத்தாக்கு. கல்லின் அகலம் மூன்றடியே இருக்கும். இதுவரை மலைவளிம்பில்
நின்று முன்னால் இருக்கும் பள்ளத்தாக்குகளை ரசித்திருக்கிறோம் ஆனால் முதல் முறை காலுக்கடியில்
பள்ளத்தாக்கைக் கண்டு பரவசமானோம். தன்னிச்சையாகக் கால்கள் நடுங்கியது. டால்பின் மூக்கின்
மேல் அமர்ந்து கீழே இருக்கும் பள்ளத்தாக்கைக் கண்டோம். வனூர்தியில் பறப்பதுபோல் இருக்கிறது.
மனம் லேசானது. இயற்கைக்கு மருத்துவம் தெரியும். அது உடற்பிணி, மனப்பிணி இரண்டையும்
போக்கவல்லது. நாம் செய்யவேண்டியதெல்லாம் அதனோடு நேரம் செலவிட வேண்டியது அவ்வளவே. மூவரில்
அதிகம் சந்தோசப்பட்டது பெருமாள் தான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு பயணம் வருவதாகத்
தெரிவித்தார். பயணிகளின் கூட்டம் வரவும் அமைதி வேண்டி வேறிடம் நகர்ந்தோம்.
டால்பின் முனையில் இருந்து சற்று தள்ளி ‘எக்கோ
பாயிண்ட்’ என்ற இடம் உள்ளது. அங்கு சென்றோம். செல்லும் வழி மலைச்சரிவை ஒட்டிய ஒரு இரண்டடிப்
பாதை. சரிவை மரங்கள் மறைத்ததால் முதலில் நாங்கள் அதைக் கவணிக்கவில்லை. பாதையை தொடர்ந்து
ஒரு பாறை மேல் ஏறி தொடர்ந்து நடந்தபோது திடீரென்று பள்ளத்தாக்கின் விளிம்புக்கு வந்துவிட்டோம்.
ஒரு நிமிடம் உறைந்து போனோம்.
|
எக்கோ பாயிண்ட் |
ஏற்கனவே ஒவ்வாமையில் இருந்த மனோவுக்கு அந்தக் காட்சி தலை
சுற்றுவதுபோல் ஆக்கிவிட்டது. கீழே போய் அமர்ந்துகொண்டார். நாம் சென்றபோது
பள்ளத்தாக்கு முழுதும் மூடுபனி மூடியிருந்தது. காற்று வந்து தள்ள, பனி மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது.
அதுவரை சூழலைப் பனி சூழ்ந்திருக்க பக்கவாட்டில் ஒரு மலை இருப்பதற்கான தடையமே தெரியவில்லை. பனித்திரை விலக வெளியே எட்டிப்பார்த்த மலை அவதார் திரைப்படத்தில்
வரும் மிதக்கும் மலைகள் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. கனவுலகத்தில் நுழைந்தது போல்
பிரம்மிப்பில் ஆழ்த்திய காட்சி அது.
|
மூடுபனி |
|
பனி விலகிகும்போது |
மலைவிளிம்பில் நின்று "ஊஊஊஊ…" வெனக் கத்தினோம். மலையும்
பதிலுக்கு "ஊஊஊஊ…" என்றது… "நலமா?" என்றோம் பதிலுக்கு அதுவும் "நலமா?" என்று நம்மைக் கேட்டது.
இயற்கையெனும் பெருவெளியில் ஒரு சிறு புள்ளியாய் உணர்ந்தோம்.
கனவுலகில் இருந்து மீண்டு மெல்லத் திரும்பி ஏற்றத்தில்
நடந்தோம். ஏறும்போது கெண்டைக்கால் சதைகள் பிடித்து இழுத்துக் கால்கள் நோகின. நோவு அதிகமாகும்போது
பாதையிலேயே அமர்ந்து வலி குறைத்தோம். இழந்த தெம்பை மீட்க வழியில் ஒரு கடையில் குலுக்கோஸ்
வாங்கிப் பருகிவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினோம்.
வட்டக்கானலை அடைந்து பைக்கைக் கிளப்பி அறைக்கு வந்தோம். மதிய உணவு முடித்து மாலை வரை குட்டித் தூக்கம். மாலை ஊர் திரும்ப வேண்டும். ஆனால்
மனது வரவில்லை நமக்கு. மனோவும் பெருமாளும் அத்தகைய எண்ணத்திலேயே இருந்தனர். இன்று இரவும்
தங்கிவிட்டு காலையில் கிளம்புவதாக முடிவெடுத்தோம். சமயத்தில் எடுக்கப்படும் இத்தகைய
ஒருமித்த முடிவுகள் சூழ்நிலையை மேலும் இனிமையாக்கும்.
இன்று முழுதும் மழை பெய்யவில்லை. அந்தியில்
கொடைக்கானல் ‘நட்சத்திர ஏரி’க்குச் சென்றோம். நகரின் நடுவே நட்சத்திர வடிவில் அமைந்த
அழகிய செயற்கை ஏரி. ஏரியில் படகு சவாரி செல்லலாம். ஏரியைச் சுற்றி சைக்கிளில் உலா வருவதும்,
குதிரை சவாரி செய்வதும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் செயல்கள். ஏரியைச் சுற்றி பைக்கில்
உலா வந்தோம். ஏரியைச் சுற்றிப் பல இடங்களில் படகுக் குழாம்கள் உள்ளன. திண்பண்டங்கள்
விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் பல உள்ளன. குளிருக்கு மிளகாய் பஜ்ஜியும் தேனீரும் எடுத்துக்
கொண்டோம்.
|
செயல்படாத படகுக் குழாம் |
கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஏரிக்கரையில் சென்று அமர்ந்தோம். காற்று தள்ளுவதால்
தண்ணீர் வரி வரியாகச் சிற்றலை போட்டுக் கரையில் வந்து மோதிச் சென்றது. நமது வாழ்வும்
அப்படித் தானே. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்பம், சமூகம், பணி போன்ற வெளிப்புற
சக்திகளால் தள்ளப்பட்டு தண்ணீரைப் போல் போகிற போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
நகரின் சத்தங்கள் அப்போது கேட்கவில்லை. சில நேரம் தண்ணீரின் ஆழத்திற்குச் சென்று அமைதியானது
மனம். கதிரவனும் மறைந்திருந்தது. ஆனால் கதிரின் ஒளி வானத்தில் பட்டு எதிரொளித்தது.
இருப்பதைக் கொண்டு இல்லாமையை நிறைக்கும் செயல் அது.
|
கொடைக்கானல் நட்சத்திர ஏரி |
அறைக்கு வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம்
தொலைகாட்சி பார்த்தோம். விஜய் டீவி பிக்பாஸில் ஆர்த்தியும், காயத்திரியும் ஜூலியை வம்பிழுத்துக்
கொண்டிருந்தனர். ஓவியாவும் ஆரவும் சொல்லிக் கொடுத்தது போல் கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.
கடுப்பாவதற்குள் தொலைகாட்சியை அணைத்துவிட்டு படுத்தோம். அலாரம் எழுப்ப காலை 5:30 க்கு
எழுந்தோம். இன்று அலுவலகம் உள்ளது. சேத்தாண்டி வேடம் போட்டது போல் பைக் முழுவதும் சேறாக
அப்பியிருந்தது. இப்படியே சேறோடு அலுவலகம் செல்ல இயலாததால் குளிரில் நடுங்கிக் கொண்டே
பைக்கைக் கழுவினோம். குளித்து முடித்து விடுதிப் பொறுப்பாளர் கொடுத்த சூடான காபியையும்
அருந்திவிட்டு காலை 6:30 க்கு பெரியகுளத்தை நோக்கி பைக்கைக் கிளப்பினோம். இப்போது அடுக்கம்
வழி செல்லாமல் கட் ரோடு வழியாகப் பெரியகுளம் சென்றோம். அதிகாலையில் மலைச் சாலையில்
பயணிப்பது இதுவே முதல்முறை. ஆச்சரியமாய் குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை. குளிர் மிதமாக
பைக் பயணத்தை சுகமானதாக்கியது. இடையில் டம்டம் பாறையில் தேனீருக்காக நிறுத்தினோம்.
வழக்கம்போல் அங்கு வந்த பயணிகளிடம் குரங்குகள் தின்பண்டங்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தன.
9 மணிக்குப் பெரியகுளத்தை அடைந்தோம். மழையோடு ஆரம்பித்த பருவமழைப் பயணம் மழையின்றி
முடிந்தது. அலுவலகம் வந்துவிட்டோம். ஆனால் மனம் கொடைக்கானல் மலையின் பள்ளத்தாக்குகளில்
எங்கோ உலாவிக் கொண்டிருந்தது.
இனிமையான பயணம். மற்ற பகுதிகளையும் படிக்க வேண்டும். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஅருமை தோழர். நல்ல பயணக்கட்டுரை. உதவியாக இருக்கும்
ReplyDelete