நண்பர்கள் குற்றாலம் பயணத் திட்டமிட்டவுடன் நான் உடனே சம்மதம் தெரிவித்ததும் உள்ளே இருக்கும் குண்டோதரனுக்கு ஒரே குஷி. காரணம் அருவியில் விளையாடுவதற்கல்ல, 'பிரானூர் பார்டர் கடை' புரோட்டா சால்னாவில்(குருமா) புகுந்து விளையாடவே. இன்று என்னைப் போல் பலரும் குற்றாலம் வருவது அருவிகளில் குளித்து மகிழ்வதோடு பார்டர் கடை புரோட்டா, கோழிகளை ஒரு கை பார்க்கும் ஆவலுடன் தான்.
குற்றாலம் சென்று முதலில் மெயின் அருவிக்குச் சென்றால் சுமார் அரை கிமீக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சரி ஐந்தருவிக்குப் போய்ப் பார்க்கலாம் என்றால் அங்கேயும் அதே நிலை. இந்தக் கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று குளிப்பதற்குக் குளிக்காமலேயே இருக்கலாம் என்று இருந்தது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது நமக்கு உள்ளே இருக்கும் குண்டோதரன் தன் வேலையைக் காட்டினான். நான், "கூட்டம் குறைந்ததும் இரவு வந்து குளிப்போம். இப்போது போய் பார்டர் கடையில் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல தூக்கம் போட்டால் என்ன?" என்று கூறவும் நண்பர்களும் அதை ஆமோதித்தனர். குண்டோதரன் குதூகலமானான். ஐந்தருவியில் இருந்து நேராக பைக்கை பார்டர் கடை நோக்கி விரட்டினோம்.
கடையின் எதிரே பைக்கை நிறுத்தினோம். சிமெண்ட் சீட் போடப்பட்ட கட்டிடம்.
பெரிய பெயர் பலகையைத் தவிர ஒரு பிரபலமான உணவகம் என்பதற்கான அடையாளம் எதுவும்
இல்லை. ஆவலுடன் உள்ளே சென்ற நமக்குப் பெரிய அதிர்ச்சி. குற்றால அருவிகளில்
இருந்ததில் பாதிக் கூட்டம் அங்கே தான் இருந்தது. அனைத்து மேஜைகளும் கூட்டத்தால்
நிரம்பி வழிய, மேஜையில் சிக்கிய இடத்தில் எல்லாம் இலையை விரித்து வைத்திருந்தனர்.
ஒவ்வொரு இலையிலும் சால்னா (குருமா) அருவியாக ஓடிக்கொண்டிருக்க, மக்கள் அதில்
மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். “இந்தக் கடையில் அப்படி
என்னதான் இருக்கிறது? இவ்வளவு கூட்டம் அள்ளுகிறது”, என்று உடன் வந்த நண்பர்
கேட்டார். “சாப்பிட்டுப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றேன். ஒவ்வொரு
இருக்கைக்குப் பின்பும் உண்பவர் எழுந்த பின்பு அந்த இருக்கையைக் கைப்பற்ற அடுத்தவர்
தயாராக நின்றுகொண்டிருந்தார். பசி ருசியை மட்டுமல்ல பண்பையும் அறியாது போலும்.
நமக்கு சற்று சங்கடமாக இருந்தது. ஆனால் இப்போதைக்கு சங்கடப் பட்டால் பட்டினி
கிடக்க வேண்டியதுதான் என்று நாமும் ஒரு இருக்கைக்குப் பின்னால் போய் நின்று
காத்துக் கொண்டிருந்தோம்J
காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கடையைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். 'பார்டர் கடை' பெயரே விசித்திரமாக இருக்கிறதல்லவா? அது ஒரு காரணப் பெயர் ஆகும். 1956க்கு முன்னர் மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்படாத சமயத்தில் செங்கோட்டைத் தாலுகா கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது தமிழக-கேரள எல்லை (பார்டர்) இந்தக் கடை இருக்கும் பிரானூர் அருகில் இருந்ததால் இந்தக் கடை 'பார்டர் கடை' என்று பெயர் பெற்றுள்ளது. முதலில் பார்டரில் லாரிகளை நிறுத்தி ஓய்வெடுக்கும் லாரி ஓட்டுனர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை வழங்கிய சுவையில் அதன் புகழ் பரவி இன்று தமிழகமெங்கும் இருந்து ‘மலர் தேடும் வண்டுகளைப் போல்’ சுவை விரும்பிகள் இந்தக் கடையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். குற்றாலம் சென்று வந்தவர்கள் தங்கள் நட்புகளிடம் 'பார்டர் கடையில் சாப்பிட்டேன்' என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.
அதோ இருக்கை காலியாகிவிட்டது. டபக்கென்று புகுந்து இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். பெரிய வெற்றி பெற்றதைப் போல் ஒரு உணர்வு. மேஜை சுத்தம் செய்யப்பட்டு நமக்காக இலை விரிக்கப்படுகிறது. தண்ணீர் தெளித்து மீண்டும் காத்திருந்தோம். வெறும் இலையைப் பார்த்துக் கொண்டு உணவுக்காகக் காத்திருக்கும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களே.. ஆனால் அவர்கள் அதிகம் நம்மைக் காக்க விடவில்லை. ஒரு பெரிய வட்டகை நிறைய புரோட்டா வர, அனைவர் கண்களும் வட்டகையையே நோக்குகிறது. அனைவருக்கும் சமமாக மூன்று புரோட்டாக்களை வைத்துக் கொண்டே வருகிறார்கள். வட்டகையில் புரோட்டாக்கள் குறைந்துகொண்டே வர வர “இங்கே வாருங்கள்”, “எனக்கு வையுங்கள்” என்ற, பல குரல்களின் ஒலி கூடிக் கொண்டே வந்தது. பலரது முகங்களிலும் புரோட்டாவைப் பெற்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தீர்ந்து விடுமோ என்ற ஏக்கமும் தெரிந்தது.
நமக்குக் கிடைத்தது. பொன்னிற புரோட்டாக்கள் ஒவ்வொன்றும் சிறியதாக உள்ளங்கை அளவே இருந்தது. பிறகு ஒரு வாளி நிறைய சால்னா கொண்டு வந்து மேஜைக்கு ஒன்று வைத்து விடுகின்றனர். நாமே வேண்டிய அளவு எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் சால்னா எடுத்து இலையில் ஊற்றியபோது அது கெட்டியாக இல்லாமல் இலையில் ஓடிப் பரவியது. முதலில் கொஞ்சமாக புரோட்டாவைப் பிட்டு கொஞ்சமாகச் சால்னாவில் தொட்டு சுவையை சோதிக்கிறோம். சோதனைக்காகக் குறுகியிருந்த கண்கள் புரோட்டா சால்னா சுவையில் பரவசமடைந்து விரிகின்றன. வழக்கமான சாலனாவின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு புதிய சுவையை உணர்த்தியது. பிறகென்ன புரோட்டாவைச் சால்னாவில் தொட்டுத் தின்பதை விடுத்துக் குழைத்து உண்டோம். நாம் மட்டுமல்ல மேஜையில் இருந்த அனைவரும் அப்போது புரோட்டா சூரியாக மாறியிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அதே போல் ஒரு பெரிய வட்டகை நிறைய வருக்கப்பட்ட
நாட்டுக்கோழியைக் கொண்டு வந்து “வேண்டுமா? வேண்டுமா?” என்று ஒவ்வொரு இலையாகக்
கேட்டுக் கொண்டே வைக்கின்றனர். பீஸ்கள் ஒவ்வொன்றும் பெரிதாக உள்ளது. அதில்
கொஞ்சமாய்ப் பிட்டு சுவைத்தோம். வீட்டு மசால் கலந்து மிளகு தடவப்பட்டு நன்றாக
வருக்கப்பட்ட நாட்டுக்கோழி காரமாக சுவையாக இருந்தது. எண்ணையில் பொறித்தது போல்
அல்லாமல் வேகவைக்கப்பட்டது போல் நாட்டுக்கோழி அவ்வளவு மிருதுவாக இருந்தது.
சால்னாவும்
கோழியும் இவ்வளவு சுவையாக இருக்கக் காரணம்
அவர்கள் வீட்டிலேயே தயாரிக்கும் மசால் தான். புரோட்டாவைச் சால்னாவில் பிரட்டி
அதோடு கொஞ்சம் நாட்டுக்கோழியையும் சேர்த்து வாய்க்குக் கொடுத்து சுவைத்த போது
அங்கே ஒரு இன்னிசைக் கச்சேரியே நடந்தது. அடுத்து ஆம்லெட் வந்தது. நாங்கள் நிமிர்ந்து
பார்க்காமல் புரோட்டாவையும் கோழியையும் வேட்டையாடினோம். மீண்டும் அடுத்த சுற்று
புரோட்டா வர அதையும் ஒரு கை பார்த்தோம். திருப்தியாக உண்டு எழுந்தபோது நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டு டபார் என்று ஒருவர் நம் இருக்கையை பிடித்து அமர்ந்தார்.
சற்று நேரத்திற்கு முன்னால் நாம் உணர்ந்த வெற்றிக் களிப்பு இப்போது அவர் முகத்தில்…
விலைப் பட்டியலில் பல வகை உணவுகள் உள்ளன. அவையெல்லாம் கூட்டம் இல்லாத
சாதாரண நாட்களில் கிடைக்கும். ஆனால் சீசன் நேரங்களில் புரோட்டா, சிக்கன், ஆம்லெட்,
புரோட்டா பிடிக்காதவர்களுக்கு இடியாப்பம் அவ்வளவே கிடைக்கிறது. புரோட்டா ஒன்றுக்கு
எட்டு ருபாயும், நாட்டுக்கோழி வருவலுக்கு 140 ரூபாயும் வாங்குகின்றனர். அந்த
சுவைக்கும், கஞ்சத்தனம் இல்லாமல் அவர்கள் கோழியை அள்ளி வைக்கும் பாங்கிற்கும் அந்த
விலை தாராளமாகக் கொடுக்கலாம். விலையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது குற்றாலம்
வந்த பயணப் பயனை அடைந்தது போல் உணர்ந்தோம். “இப்போது தெரிகிறது, ஏன் இங்கு மட்டும்
இவ்வளவு கூட்டம்”, என்றார் உடன் வந்த நண்பர்.