Wednesday, 16 August 2017

பருவமழைப் பயணம் - வட்டக்கானல் (கொடைக்கானல்) நிறைவு


பருவமழைப் பயணம்-வட்டக்கானல் பாகம் 1 இங்கே

ஓரிடத்தில் தண்ணீர் ஓடும் சத்தம் சலங்கை ஒலி போல் கேட்கிறது. ஒரு சிற்றாறு பள்ளத்தில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இறங்கிச் சென்று பார்த்தோம். ஒரு நிமிடம் நம் கண்களை நம்ப முடியவில்லை. காட்டுக்குள் ஒரு அழகிய அருவி விழுந்துகொண்டிருந்தது.


படிக்கட்டுகள் போல் அமைந்த பாறை அமைப்பில் அந்த அருவி தவழ்ந்து வழிந்து ஓடியதைப் பார்க்க அற்புதமாக இருந்தது. சுற்றிலும் பைன் மரங்களும், செடிகளும், கொடிகளும், பசும்புல்வெளிகளும் அருவியைச் சூழ நந்தவனம் போல் இருந்தது அந்த இடம். சிறிது நேரம் அருவிக்கரையில் அமர்ந்து அதன் அழகில் நனைந்தோம். 

அருவியின் மேற்புறம்


பைக்கைக் கிளப்பி வட்டக்கானலை அடைந்தோம். பெரிய கிண்ணம் போல வட்ட வடிவில் நீலமலைச் சிகரங்களால் சூழப்பட்ட ஒரு பசுமையான பள்ளத்தாக்கு. வானம் இறங்கிவந்து பூமியுடன் சேர்ந்தது போல் வானத்தின் நீலமும், பள்ளத்தாக்கின் பசுமையும் கலந்து பள்ளத்தாக்கு முழுதும் கருநீலமாய் காட்சியளிக்கிறது. இறைவன் கைவண்ணத்தில் மிளிரும் அழகிய ஓவியம் அது. மலைவிளிம்பில் வரிசையாய் அமைந்த வீடுகள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள். 

வட்டக்கானல்
கையில் ஒரு கோப்பைத் தேனீருடன் மலைவிளிம்பில் இருந்து பள்ளத்தாக்கைப் பார்த்துகொண்டே இருக்கலாம். அது ஒரு தியனத்திற்கு இணையான பலனைக் கொடுக்கும் என்றே சொல்லுவேன். வட்டக்கானலைப் பலரும் நாடுவது அதற்காகத் தான். வட்டக்கானல் பேரமைதியாக இருந்தது. கொடைக்கானல் வரும் மக்கள் அருகில் உள்ள இடங்களைப் பார்த்துவிட்டு வட்டக்கானலைத் தங்கள் கடைசித் தேர்வாகவோ அல்லது தவிர்த்துவிட்டோ செல்கின்றபடியால் வந்த அமைதி. அந்த அமைதி நமக்கு லாபமானது.  அன்று வானம் பளிச்சென்று இருந்தது. மழைக்கான அறிகுறி இல்லை. மலைவிளிம்பில் இருந்த ஒரு உணவகத்தில் காலை உணவை அருந்தினோம். தேனீர் விடுதிக்கோ உணவகத்திற்கோ சென்றால், “தங்குவதற்கு அறை வேண்டுமா?” என்று தாங்களாகவே வினவுகின்றனர். அதுமட்டுமின்றி சீசன் நேரங்களில் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகள்’ தயாரித்து விற்பனையும் செய்கின்றனர்.
இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள ‘டால்பின் மூனை’ என்ற இடத்திற்குச் சென்றோம். மலையின் விளிம்பு டால்பினின் மூக்கைப் போல் இருப்பதால் அப்படிப் பெயர். பைக்கில் செல்ல இயலாது, சரிவான காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இறக்கம் பல இடங்களில் செங்குத்தாக இருந்ததால் இறங்குவதே சற்று சிரமமாக இருக்கிறது. அப்படியானால் ஏறுவதற்கு சொல்ல வேண்டியதே இல்லை.

டால்பின் முனை செல்லும் பாதை
மண்தரை மழையில் நனைந்து நெகிழும் தன்மையுடன் இருந்தது. கால் வழுக்கிய தடங்களைப் பல இடங்களில் காண முடிந்தது. வழியில் பல இடங்களில் தேனீர் மற்றும் குளிர்பானக்கடைகள் இருக்கின்றன. அனைத்து அங்காடிகளிலும் குலுக்கோஸ் நீர் தவறாமல் விற்கிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை.


மலையின் விளிம்பில் படுத்துக்கொண்டு பள்ளத்தாக்கை எட்டிப் பார்ப்பது போல் அமைந்த ஒரு செவ்வகமான பாறை. அதன் மேல் இரண்டு சிறிய பாறைகள். டால்பின் முனை என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியது. நாங்கள் செல்லும்போது புதுமணத் தம்பதிகள் முனையில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

டால்பின் முனை
ஜோடியாக வரும் அனைவரும் தவறாமல் டைட்டானிக் போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். அதைப் பார்த்து பெருமாளுக்குக் கொஞ்சம் பொறாமை வந்தது. சீக்கிரம் திருமணம் முடித்து மனைவியுடன் இங்கு வந்து இதே போல் போஸ் கொடுப்பேன் என்று மலைவிளிம்பில் நின்று சபதம் செய்துகொண்டார். நேற்று அருந்திய உணவு ஒவ்வாமையைக் கொடுக்க மனோ அன்று சோர்வாக இருந்தார். புதுத் தம்பதிகள் சென்ற பின்பு டால்பின் முனைக்குச் சென்றோம். 

வேறு கோணத்தில் டால்பின் முனை
மலைவிளிம்பில் அந்தக் கல் வெளியே நீட்டிக் கொண்டிருக்க இருபுறமும் பள்ளத்தாக்கு. கல்லின் அகலம் மூன்றடியே இருக்கும். இதுவரை மலைவளிம்பில் நின்று முன்னால் இருக்கும் பள்ளத்தாக்குகளை ரசித்திருக்கிறோம் ஆனால் முதல் முறை காலுக்கடியில் பள்ளத்தாக்கைக் கண்டு பரவசமானோம். தன்னிச்சையாகக் கால்கள் நடுங்கியது. டால்பின் மூக்கின் மேல் அமர்ந்து கீழே இருக்கும் பள்ளத்தாக்கைக் கண்டோம். வனூர்தியில் பறப்பதுபோல் இருக்கிறது.

மனம் லேசானது. இயற்கைக்கு மருத்துவம் தெரியும். அது உடற்பிணி, மனப்பிணி இரண்டையும் போக்கவல்லது. நாம் செய்யவேண்டியதெல்லாம் அதனோடு நேரம் செலவிட வேண்டியது அவ்வளவே. மூவரில் அதிகம் சந்தோசப்பட்டது பெருமாள் தான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு பயணம் வருவதாகத் தெரிவித்தார். பயணிகளின் கூட்டம் வரவும் அமைதி வேண்டி வேறிடம் நகர்ந்தோம்.
டால்பின் முனையில் இருந்து சற்று தள்ளி ‘எக்கோ பாயிண்ட்’ என்ற இடம் உள்ளது. அங்கு சென்றோம். செல்லும் வழி மலைச்சரிவை ஒட்டிய ஒரு இரண்டடிப் பாதை. சரிவை மரங்கள் மறைத்ததால் முதலில் நாங்கள் அதைக் கவணிக்கவில்லை. பாதையை தொடர்ந்து ஒரு பாறை மேல் ஏறி தொடர்ந்து நடந்தபோது திடீரென்று பள்ளத்தாக்கின் விளிம்புக்கு வந்துவிட்டோம். ஒரு நிமிடம் உறைந்து போனோம்.

எக்கோ பாயிண்ட்
ஏற்கனவே ஒவ்வாமையில் இருந்த மனோவுக்கு அந்தக் காட்சி தலை சுற்றுவதுபோல் ஆக்கிவிட்டது. கீழே போய் அமர்ந்துகொண்டார். நாம் சென்றபோது பள்ளத்தாக்கு முழுதும் மூடுபனி மூடியிருந்தது. காற்று வந்து தள்ள, பனி மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்தது. அதுவரை சூழலைப் பனி சூழ்ந்திருக்க பக்கவாட்டில் ஒரு மலை இருப்பதற்கான தடையமே தெரியவில்லை. பனித்திரை விலக வெளியே எட்டிப்பார்த்த மலை அவதார் திரைப்படத்தில் வரும் மிதக்கும் மலைகள் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. கனவுலகத்தில் நுழைந்தது போல் பிரம்மிப்பில் ஆழ்த்திய காட்சி அது.

மூடுபனி
பனி விலகிகும்போது
மலைவிளிம்பில் நின்று "ஊஊஊஊ…" வெனக் கத்தினோம். மலையும் பதிலுக்கு "ஊஊஊஊ…" என்றது… "நலமா?" என்றோம் பதிலுக்கு அதுவும் "நலமா?" என்று நம்மைக் கேட்டது. இயற்கையெனும் பெருவெளியில் ஒரு சிறு புள்ளியாய் உணர்ந்தோம்.


கனவுலகில் இருந்து மீண்டு மெல்லத் திரும்பி ஏற்றத்தில் நடந்தோம். ஏறும்போது கெண்டைக்கால் சதைகள் பிடித்து இழுத்துக் கால்கள் நோகின. நோவு அதிகமாகும்போது பாதையிலேயே அமர்ந்து வலி குறைத்தோம். இழந்த தெம்பை மீட்க வழியில் ஒரு கடையில் குலுக்கோஸ் வாங்கிப் பருகிவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினோம்.



வட்டக்கானலை அடைந்து பைக்கைக் கிளப்பி அறைக்கு வந்தோம்.
 
மதிய உணவு முடித்து மாலை வரை குட்டித் தூக்கம். மாலை ஊர் திரும்ப வேண்டும். ஆனால் மனது வரவில்லை நமக்கு. மனோவும் பெருமாளும் அத்தகைய எண்ணத்திலேயே இருந்தனர். இன்று இரவும் தங்கிவிட்டு காலையில் கிளம்புவதாக முடிவெடுத்தோம். சமயத்தில் எடுக்கப்படும் இத்தகைய ஒருமித்த முடிவுகள் சூழ்நிலையை மேலும் இனிமையாக்கும்.
இன்று முழுதும் மழை பெய்யவில்லை. அந்தியில் கொடைக்கானல் ‘நட்சத்திர ஏரி’க்குச் சென்றோம். நகரின் நடுவே நட்சத்திர வடிவில் அமைந்த அழகிய செயற்கை ஏரி. ஏரியில் படகு சவாரி செல்லலாம். ஏரியைச் சுற்றி சைக்கிளில் உலா வருவதும், குதிரை சவாரி செய்வதும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் செயல்கள். ஏரியைச் சுற்றி பைக்கில் உலா வந்தோம். ஏரியைச் சுற்றிப் பல இடங்களில் படகுக் குழாம்கள் உள்ளன. திண்பண்டங்கள் விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் பல உள்ளன. குளிருக்கு மிளகாய் பஜ்ஜியும் தேனீரும் எடுத்துக் கொண்டோம்.

செயல்படாத படகுக் குழாம்
கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஏரிக்கரையில் சென்று அமர்ந்தோம். காற்று தள்ளுவதால் தண்ணீர் வரி வரியாகச் சிற்றலை போட்டுக் கரையில் வந்து மோதிச் சென்றது. நமது வாழ்வும் அப்படித் தானே. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ குடும்பம், சமூகம், பணி போன்ற வெளிப்புற சக்திகளால் தள்ளப்பட்டு தண்ணீரைப் போல் போகிற போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். நகரின் சத்தங்கள் அப்போது கேட்கவில்லை. சில நேரம் தண்ணீரின் ஆழத்திற்குச் சென்று அமைதியானது மனம். கதிரவனும் மறைந்திருந்தது. ஆனால் கதிரின் ஒளி வானத்தில் பட்டு எதிரொளித்தது. இருப்பதைக் கொண்டு இல்லாமையை நிறைக்கும் செயல் அது.   

கொடைக்கானல் நட்சத்திர ஏரி


அறைக்கு வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் தொலைகாட்சி பார்த்தோம். விஜய் டீவி பிக்பாஸில் ஆர்த்தியும், காயத்திரியும் ஜூலியை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். ஓவியாவும் ஆரவும் சொல்லிக் கொடுத்தது போல் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். கடுப்பாவதற்குள் தொலைகாட்சியை அணைத்துவிட்டு படுத்தோம். அலாரம் எழுப்ப காலை 5:30 க்கு எழுந்தோம். இன்று அலுவலகம் உள்ளது. சேத்தாண்டி வேடம் போட்டது போல் பைக் முழுவதும் சேறாக அப்பியிருந்தது. இப்படியே சேறோடு அலுவலகம் செல்ல இயலாததால் குளிரில் நடுங்கிக் கொண்டே பைக்கைக் கழுவினோம். குளித்து முடித்து விடுதிப் பொறுப்பாளர் கொடுத்த சூடான காபியையும் அருந்திவிட்டு காலை 6:30 க்கு பெரியகுளத்தை நோக்கி பைக்கைக் கிளப்பினோம். இப்போது அடுக்கம் வழி செல்லாமல் கட் ரோடு வழியாகப் பெரியகுளம் சென்றோம். அதிகாலையில் மலைச் சாலையில் பயணிப்பது இதுவே முதல்முறை. ஆச்சரியமாய் குளிர் அவ்வளவாகத் தெரியவில்லை. குளிர் மிதமாக பைக் பயணத்தை சுகமானதாக்கியது. இடையில் டம்டம் பாறையில் தேனீருக்காக நிறுத்தினோம். வழக்கம்போல் அங்கு வந்த பயணிகளிடம் குரங்குகள் தின்பண்டங்களைப் பிடுங்கிக் கொண்டிருந்தன. 9 மணிக்குப் பெரியகுளத்தை அடைந்தோம். மழையோடு ஆரம்பித்த பருவமழைப் பயணம் மழையின்றி முடிந்தது. அலுவலகம் வந்துவிட்டோம். ஆனால் மனம் கொடைக்கானல் மலையின் பள்ளத்தாக்குகளில் எங்கோ உலாவிக் கொண்டிருந்தது.

பருவமழைப் பயணம் - வட்டக்கானல் (கொடைக்கானல்) பாகம் 1


இந்த வியாதி இன்று நேற்றுப் பிடித்ததல்ல. சிறு வயதிலிருந்தே இருக்கிறது. கல்லூரியில் வருடா வருடம் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ என்ற பெயரில் ஊர் சுற்றிப் பழகிவிட்டபின், பெங்களூரில் பணி நிமித்தமாகக் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா என்று சுற்றியதில் அது சற்று முற்றிவிட்டிருந்தது. இப்போது அது கைமீறிப் பயணம் என்பது வாழ்வில் நீக்கமற நிலைத்த ஒன்றாகவே ஆகிவிட்டது. 
குட்டிக்கானத்திற்குப் பருவமழைப் பயணம் சென்று வந்த இனிய அனுபவத்தில் மீண்டும் ஒரு பருவமழைப் பயணம் செல்ல முடிவெடுத்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்போது பயணத் திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை. குட்டிக்கானம் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு மின்சார வாரியத்தில் பணிபுரியும் நண்பர் பெருமாள் தனக்காக ஒரு பயணம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் முடிவானதே இந்தப் பயணம்.


திடீர் பயணம் என்றால் நம்முடைய பிரதானத் தேர்வு கொடைக்கானல் தான். கொடைக்கானல், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தளம். கோடைக்காலத்தில் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளால் கொடைக்கானல் மலைக்கே மூச்சு முட்டும். வாகனங்கள் ரயிலைப் போல் வரிசையாகச் சென்று கொண்டிருக்கும். தேனீக்கள் தேன்கூட்டை மொய்ப்பது போல் தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு அவ்வளவு ஆரவாரமாக இருந்த கொடைக்கானல் ஒரு அமைதியான மலையாக மாறிவிடும். அதுமட்டுமின்றி தமிழ்நாடே காய்ந்துகொண்டிருக்க கேரளாவைப் போல் இங்கும் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிடும். ஆகவே இப்போது மீண்டும் ஒரு பருவமழைப் பயணம். 

நான், மனோ, பெருமாள்
ஒரு விடுமுறை நாளின் மதியம்…. பெரியகுளத்தில் இருந்து நமது பைக்கைக் கிளப்புகிறோம். நம்முடன், பெருமாளும், வழக்கம் போல் மனோவும் இந்தப் பயணத்தில் வருகிறார்கள். பொதுவாகக் கொடைக்கானல் செல்ல  வத்தலக்குண்டு தேனி சாலையில் உள்ள ‘கட் ரோடு’ (ghat road) சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலையில் பயணிக்க வேண்டும். அந்தச் சாலை நல்ல அகலமானதும், நன்றாகப் பராமரிக்கப்படும் கொடைக்கானலுக்குச் செல்லும் பிரதான சாலையும் ஆகும். ஆனால் நாம் அதை விடுத்து ஒரு திரில்லுக்காக பெரியகுளத்தில் இருந்து ‘அடுக்கம்’ வழியாகச் செல்லும் சாலையைத் தேர்ந்தெடுத்தோம். இந்தச் சாலை அதற்கு நேர்மாறான தடுப்புச்சுவர்களற்ற மிகக் குறுகிய  சாலை. 



பெரியகுளத்தைவிட்டு வெளியேறி கும்பக்கரை அருவி செல்லும் சாலையில் பயணிக்கிறோம். இருபுறமும் பிரம்மாண்டமான புளியமரங்கள் குடைபிடிக்கின்றன. தொடர்ந்து செல்லும்போது காட்சிகள் மாறித் தென்னந்தோப்புகளால் சூழப்படுகிறோம். அதற்கடுத்தாற்போல் சென்றால் எங்கும் மாந்தோப்புகள் மட்டுமே. கல்லாமை, செந்தூரா, பங்கனப்பள்ளி, காளைப்பாடி என்று வகை வகையாய் மாமரங்கள். தந்தையின் தோள்களைப் பிடித்துத் தொங்கும் குழந்தையைப் போல் மரங்களில் மாங்காய்கள் சடைபிடித்துக் காய்த்துத் தொங்கின. மாங்காய்களின் கணம் தாங்காமல் கொப்புகள் தரைதட்டின. அவை ஒடிந்துவிடாமல் இருக்க நீளமான கொம்புகள் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் சேலத்தைப் போல் பெரியகுளமும் மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது. 
வானம் மேகங்களால் சூழப்பட்டிருந்தது. பொங்களுக்கு வெள்ளையடிக்கப்பட்டது போல் கொடைக்கானல் மலையே வெண்மை படர்ந்திருந்தது. மேகத்தில் இருந்து கசிந்து நீர்த்துளிகள் சாரலாய் பொழிந்து இந்தப் பருவமழைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி நம்மை உற்சாகமூட்டியது. முகத்தைக் கொடுத்து சாரலை வரவேற்று நனைந்துகொண்டே பைக்கைச் செலுத்தினோம். நம்மோடு உற்சாகமான சாரலும் சிறிது நேரத்தில் மழையெனப் பெருகிப் பொழிந்தது. பைக்கை நிறுத்தி ஒரு புளியமரத்தடியில் ஒதுங்கினோம். அரை மணி நேரம் அடித்தது மழை. மரத்தடியில் நின்று மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பசி எடுத்தது. தண்ணீர் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஒரு இன்ப அதிர்ச்சி நமக்கு. சிறிது தூரத்தில் இருந்த சில மாமரங்களில் மஞ்சள் நிறத்தில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்கின. சுற்றிலும் வேலி கூட இல்லை. நனைந்துகொண்டே அருகில் சென்று பார்த்தோம். தரையிலும் நிறையப் பழங்கள் பழுத்து விழுந்திருந்தன. விலையின்மையின் காரணமாய் காய்கள் பறிக்கப்படாமல் விடப்பட்டிருந்தது. அந்த ஒற்றைக் காட்சி விவசாயிகளின் துன்பத்தைச் சொல்லப் போதுமானதாக இருந்தது. மாம்பழங்களைப் பறித்து உண்டு பசியாறினோம். இன்று அந்த முகம் தெரியாத விவசாயியின் துன்பத்தில் தான் எங்கள் பசியாறியது. இன்று மட்டுமல்ல நாம் தினமும் உண்ணும் உணவு தண்ணீரில் மட்டுமல்ல ஒரு விவசாயியின் கண்ணீரிலும் வளர்ந்ததே. 

நான், பெருமாள், மனோ
மழை நின்றதும் கிளம்பினோம். மழையில் நனைந்து சாலை கன்னங்கரேல் என்றிருந்தது. மரங்களும் செடிகொடிகளும் குளித்துப் பச்சைப்பசேல் என்றிருந்தன. அடிவாரத்தை அடைந்து மலைச்சாலையில் ஏறுகிறோம். சாலையைக் காடு சூழ்கிறது. ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டு வளர்ந்த மரங்கள் புதர் போல் இருக்கிறது. அதில் காட்டுக்கொடிகள் வழுக்கட்டாயமாகப் படர்ந்துகிடந்தன.


சாலையின் மறுமுகம் தெரிகிறது. இதுவரை வழவழவென்று அகலமாக  இருந்த சாலை இப்போது அகலம் குறுகி ஒற்றைப் பாதையாக மாறுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் எதிர் எதிரே வந்தால் கடப்பது சிரமம் தான். மேலே செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக சாலை மறைந்து மண் பாதையாக மாறியது. சில இடங்களில் சரலையாகவும் சில இடங்களில் சகதியாகவும்… 


சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கிய மழைத் தண்ணீரில் பேப்பர் கப்பல் விடலாம். சகதியில் பைக்கைச் செலுத்துவது சிரமமாக இருந்தது. பைக்கின் சக்கரம் சகதியில் பதிந்து எண்ணையில் கால் வைத்தது போல் வழுக்கியும் வாரியும் விட்டது. பக்கவாட்டில் தடுப்புச்சுவரும் இல்லை. சகதியின் தயவால் பைக் நேராகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தாக்கை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது. சாலை கொடுத்த சவாலில் பல இடங்களில் மழை கொடுத்த குளிரையும் மீறி வியர்த்தது. கால்களைத் தரையில் ஊன்றி முதல் கியரிலேயே மெதுவாக நகர்த்தினோம்.


வழியெங்கும் இயற்கை கொட்டிக்கிடக்கிறது. தாவரங்கள் அனைத்தும் புதுத்தளிர் துளிர்த்து இளம்பச்சை நிறம் பூசியிருந்தன. காட்டுமலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துப் புன்முறுவல் செய்தன. மூன்று பறமும் மலைச் சிகரங்கள் உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.


ஒரு புறம் சமவெளிப் பகுதி தெரிகிறது. மலை பல மடிப்புகளைக் கொண்டு முடிவின்றிச் செல்ல நாமும் அதைத் தொடர்கிறோம். மலைசரிவுகளில் வாழையும், பலாவும் அதிகமாகப் பயிரிடப்பட்டிருக்கிறது. மலைப் பாதையில் ஒருவர் நம்மிடம் அடுக்கம் வரை லிஃப்ட் கேட்கிறார். அவரை ஏற்றி அடுக்கத்தில் இறக்கிவிட்டோம். அடுக்கம் விவசாயம் செய்யும் ஒரு சிறிய மலைக்கிராமம். மொத்தம் ஐம்பது வீடுகளுக்குள்ளாகவே இருக்கும். நாம் ஒரு சாகசப் பயணமாக இந்தச் சாலையில் வந்தோம். அந்த மக்களுக்கோ இது அன்றாடம்.

அடுக்கம் மலை கிராமம்
சகதிச் சாலையில் தொடரும் பயணம் அடர்ந்த தைல மரக் காடுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. வீசும் காற்று தைலத்தின் நறுமணத்தை அள்ளிக் காடெங்கும் பரப்பிப் புத்துணர்ச்சியளித்தது. சிறிது நேரம் அந்த வாசனைக் காட்டில் இளைப்பாறி அந்த நறுமணத்தை அனுபவித்தோம். வரண்ட நிலங்களில் கூட செழித்து வளரக்கூடிய அவை அபரிமிதமான மழை நீரைக் குடித்து ராட்சஷ உருவில் வளர்ந்திருந்தன. 



தைலக் காட்டைக் கடந்து பெருமாள்மலை என்ற இடத்தில் கொடைக்கானலின் பிரதான சாலையை அடைகிறோம்.  இதுவரை 30 கிமீயைக் கடக்க இரண்டரை மணி நேரம் பிடித்தது. மேகமலைப் பயணத்திற்குப் பின் ஒரு அருமையான சாகசப் பயணம். அட்ரினல் சுரப்பை அதிகரித்த பயணம் இது. சாகச விரும்பிகளுக்கு ஏற்ற சாலை. உடல் கலைத்திருந்தாலும் தன்னம்பிக்கை அதிகரித்திருந்தது. இங்கிருந்து பன்னிரண்டு கிமீ சென்றால் கொடைக்கானலை அடையலாம். கலைப்பு நீங்கப் பெருமாள் மலையில் ஒரு தேனீர் விடுதியில் இளைப்பாறினோம். மழை விட்டுத் தாழ்வாரங்களில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. பூமி குளிர்ந்திருந்தது. நாமும் தான்..
கடைக்கார அக்கா, ஒரு தட்டில் இரண்டு மிளகாய் பஜ்ஜியைப் பிய்த்துப் போட்டு, பஜ்ஜிகள் மூழ்கும் அளவுக்கு சூடான குருமாவும் ஊற்றிக் கொடுத்தார். ஒரு விள்ளலை எடுத்து முடிந்த அளவு குருமவையும் அள்ளி சுவைத்தபோது அந்தச் சுவை அந்தக் குளிருக்கு அமிர்தத்தினும் மேலாக இருந்தது. இதை எழுதும்போதும் நாவில் நீர் ஊறுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் ஒரு கோப்பைத் தேனீரையும் அருந்திவிட்டு கொடைக்கானலை அடைந்தோம்.
நம்மோடு சேர்ந்து இரவும் தன் வரவைக் கொடுத்தது. ஜியோன் பள்ளி அருகில் உள்ள கோகுலம் காட்டேஜ். நாம் எப்போதும் தங்கும் விடுதி. நகரத்திற்குள் ஒரு அமைதியான இடம். விடுதி பொறுப்பாளர் நம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து நலம் விசாரித்தார். அறைக்குச் சென்று சிறிது நேரம் அயர்ந்தோம்.


இன்று திட்டங்கள் எதுவும் இல்லை. இரவு உணவை எதிரே உள்ள உணவு விடுதியில் பெற்றுக்கொண்டோம். எங்கள் ஒரு அறையைத் தவிர மற்ற அறைகளை சென்னையில் இருந்து வந்த ஒரு கல்லூரியின் மாணவர்கள் பதிந்திருந்தனர். இரவு முழுதும் அவர்களின் ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது, கல்லூரி நாட்களை நினைவுப்படுத்தியது. கவலைகளே இல்லாத நாட்கள் என்று அதைக் கூறலாம். ஆகையால் அவர்களின் கூச்சலைப் பொருட்படுத்தாது அவர்களுக்காக சந்தோசப்பட்டோம். கொடைக்கானலில் இது மழைக் காலம். ஆனால் அடித்த குளிர், குளிர் காலத்திற்கு இணையான குளிர். கம்பளியின் கதகதப்பில் அப்படியே தூங்கிப் போனோம்.
காலை ஆறு மணி. கம்பளியை ஊடுறுவிய குளிர் தட்டி எழுப்பத் துயில் கலைந்தோம். அறைக்கு வெளியே பனிக் காற்று.. விடுதிப் பொறுப்பாளர் காபியுடன் காலை வணக்கம் கூறினார். வராந்தாவில் அமர்ந்து காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். ஒரு மலை!! இறைவனின் இயற்கைப் படைப்பு. அதற்கு எத்தனை சக்தி!! சிலவன அதனால் வாழ்கின்றன. சிலவன அதனால் மகிழ்கின்றன.. உலகத்து உயிர்களைத் தன்னகத்தே ஈர்க்கும் ஈர்ப்பு எத்தகையது. விளக்கைக் கண்ட பூச்சிகளைப் போல் மாந்தர்கள் இம்மலையால் ஈர்க்கப்படுகிறார்கள். அது தான் இறைவனின் படைப்புத் திறமை. இயற்கையின் சக்தி…

கிளம்பித் தயாரானோம். கொடைக்கானல் மலையின் உண்மையான அழகை ரசிக்க நகரத்திற்கு அப்பால் வட்டக்கானல் என்ற இடம் நோக்கிச் சென்றோம். கொடைக்கானலில் இருந்து ஆறு கிமீயில் இருக்கிறது அந்த இடம்.


‘குட்டி இஸ்ரேல்’ என்று அழைக்கப்படும் வட்டக்கானல் இஸ்ரேலியர்களின் விருப்பமான இடம். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இங்கு வரும் இஸ்ரேலியர்கள் மாதக்கணக்கில் தங்கியிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள். பாம்பார்புரம் சென்று அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில் சென்றால் வட்டக்கானல் செல்லலாம். மிகக் குறுகிய சாலை அடர்ந்த பைன் மற்றும் தைலமரக் காடுகளுக்குள் ஊடுருவிச் சென்றது. இருபுறமும் எதிரெதிரே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று கைகோர்த்து கதிரொளி உட்புகாத வண்ணம் பசுமைக் கூடாரம் அமைக்கின்றன. எதிர் வரும் குளிர்காற்று காதுமடல்களைத் தீண்டிக் குறுகுறுப்பூட்டியது.


வழியில் காவல்துறையின் சோதனைச் சாவடி வருகிறது. இங்கே சோதனைச் சாவடி அமைக்கக் காரணம் வட்டக்கானல் பகுதியில் பிரபலமாகியிருக்கும் போதைக் காளான் கலாச்சாரம். இயற்கையை ரசிக்கப் பலர் இங்கு வரும்போது சிலரோ போதையை அனுபவிக்க வட்டக்கானலில் குவிகின்றனர். சோதனைச் சாவடியைக் கடந்து செல்கிறோம். 


பயணம் தொடரும்.... பருவமழைப் பயணம்-வட்டக்கானல் நிறைவு இங்கே

Saturday, 5 August 2017

குழந்தைப் பருவப் பாடல்

வாழ்வில் ஒரு சமயம் சலிப்புறும்போது குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றியிருக்கலாம். கவலையே அறியாத பருவம் அல்லவா அது!! எவ்வளவு பெரிய விசயத்தையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.  அப்படி சிறு வயதில் விளையாட்டுத்தனமாக நாங்கள் பாடிய பாடல் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.


"இரண்டு மனம் வேண்டும்... 
 இறைவனிடம் கேட்டேன்..
 நினைத்து வாழ ஒன்று.. 
 மறந்து வாழ ஒன்று..." 

என்று நடிகர் திலகம் காதல் தோல்வியில் பாடும் பாடல் அனைவரும் கேட்டிருப்போம்.  கேட்போர் மனதை உருகச் செய்யும் சோகமயமான பாடல் அல்லவா அது? கவியரசு கண்ணதாசன் அதை அற்புமாக எழுதியிருப்பார். ஆனால் அந்தப் பாடலை நாங்கள் பாடிய விதத்தைக் கண்ணதாசன் கேட்டால் என்ன செய்திருப்பாரோ, தெரியவில்லை. அந்தப் பாடல் கீழே..


"இரண்டு இட்லி வேண்டும்.. 
 சர்வரிடம் கேட்டேன்..
 சட்னியோடு ஒன்று.. 
 சாம்பாரோடு ஒன்று..

அரிசியின் தண்டனை மாவு வழி..
 மாவின் தண்டனை இட்லி வழி..
 இட்லியின் தண்டனை வயித்து வலிலிலிலி....
 சர்வரை தண்டிக்க என்ன வழி???" 

இவ்வாறு பாடிக்கொண்டிருப்போம். இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. 

Saturday, 15 July 2017

பருவமழைப் பயணம் - குட்டிக்கானம் (பாகம் 1)


மழை!!!! வானம் பூமிக்குச் செய்யும் ஆசிர்வாதம்.. உயிர்களின் மீதான கருணை… குழந்தைகளின் குதூகலம்… காதலர்களின் சங்கீதம்… நிலத்தில் ஏரோட வேண்டும் என்றால் முதலில் நீரோட வேண்டும்.. மழையைப் பிடிக்காது என்று யாரும் சொல்ல இயலாது. சிறு வயதில் மழை வந்தவுடன் காகிதக் கப்பல் செய்து வீதியில் ஓடும் மழை நீரில் விட்டு ரசித்திருப்போம். திண்ணையில் நின்றுகொண்டு கூரையில் இருந்து வழியும் மழைநீரைக் கையில் பிடித்து ஒருவர் முகத்தில் ஒருவர் தெளித்து விளையாடியிருப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் மழையில் நனைந்து ஆட்டம்போட்டுவிட்டு பிறகு அடியும் வாங்கியிருப்போம். பெரியவர்களான பிறகும் மழையில் நனையும் ஆசை பலருக்கும் இருந்திருக்கும். ஆனால் இந்த வயதில் அவ்வாறு செய்தால் சுற்றி இருப்போர் நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தானே கூறுவார்கள். அதனாலேயே பலரும் அந்த ஆசையை தமக்குள்ளேயே புதைத்துவிடுவர். மனதில் மறைத்த அந்த ஆசையை அனுபவிக்கவே இந்த பருவமழைப் பயணம். 


மழை என்றால் அதோடு நமக்கு நினைவிற்கு வருவது ‘கேரளா’. இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் பணிபுரிவதால் எனக்கு ஒரு வசதி.  சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி ‘என்டே கேரளத்தின்’ அழகை ரசித்துவிட்டு வருவதுண்டு. பொதுவாகக் கேரளாவிற்குப் பயணம் செல்வோர் ஜூன் – செப்டம்பர் வரை உள்ள பருவமழைக் காலத்தைத் தவிர்த்து, குளிர் அல்லது வெயில் காலத்தில் செல்வது வழக்கம்.. ஆகையால் மழைக்காலத்தில் கேரளம் ஆரவாரம் இன்றி இருக்கும். நமக்கு அந்த மழையும், அந்த அமைதியும் தானே வேண்டும். பலமுறை பார்த்த கேரளத்தின் அழகை அதன் மழைப் பருவத்தில் காணக் கிளம்பினோம். இந்தப் பருவமழைப் பயணத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த இடம் குட்டிக்கானம். கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்த ஒரு அழகிய மழைப்பிரதேசம் அது.



முன்னரே திட்டமிடப்பட்ட பயணமாய் இல்லாமல், பயணத்தின் இரண்டு நாள் முன்னர் நண்பர் மனோவுடன் ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பில் “சென்று பார்ப்போமா?” என்று திடீரென்று பேசிக் கிளம்பிய பயணம். இந்தப் பருவமழைப் பயணத்தின் முதன்மையான நோக்கமே மழைச்சாரல் முகத்தில் பட்டுத் தெறிக்கத் தெறிக்கப் பயணிப்பதே.. பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அது இந்தப் பருவமழைப் பயணத்தில் ஈடேறாது. ஆகையால் ஏமாற்றத்தைத் தவிர்க்க மற்ற நண்பர்களை அழைக்காமல் இருவர் மட்டும் கிளம்பினோம்.

நான்-மனோ

ஒரு விடுமுறை நாளின் அதிகாலை ஆறு மணி. ‘அடிக்கடி ஊர் சுற்றுகிறேன்’ என்று எனது தங்கையிடம் திட்டு வாங்கிக்கொண்டே கிளம்பினேன். உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி ஆண்டிபட்டி வழியாகத் தேனி சென்று அங்கிருந்து கம்பம், குமுளி வழியாக வண்டிப்பெரியாரைக் கடந்து குட்டிகானம் செல்லத் திட்டம். உசிலையில் மிதமான குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டு மெதுவாக பைக்கைச் செலுத்திய நம்மைத் தேனிப் பக்கம் வீசிய தென்மேற்குப் பருவக்காற்று ஆண்டிபட்டிக் கனவாயில் எதிர் வந்து வரவேற்கிறது. கனவாயைக் கடந்து அண்டிபட்டியை அடைகிறோம். ஆண்டிபட்டியைக் கடக்கும்போது சாரல் கண்களுக்குப் புலப்படாத வகையில் மைக்ரோ துளிகளாய் நம் மீது விழுவதை உணரும்போதே உற்சாகம் அடைகிறோம்.

தேனியை அடைந்து கம்பம் நோக்கி பைக்கைச் செலுத்தினோம். தேனியைத் தாண்டியதும் சாரலின் அளவு பெரிதாகி மழையானது. திடீர் பயணம் என்பதால் பயணத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்ய இயலவில்லை. வீரபாண்டி அருகே ஒரு தேனீர் விடுதியில் ஒதுங்கி மழையை ரசித்துக் கொண்டே தேனீர் அருந்தினோம். கேரளாவில் மழையை எதிர்பார்த்த நமக்கு தேனியில் எதிர்பாராமல் கிடைத்த மழை போனஸாக இருந்தது.

ஈரமான தேனி-குமுளி சாலை
மழை சாரலாய் மாறியவுடன் பைக்கைக் கிளப்பி நகர்ந்தோம். பெய்யும் சாரல் வழியெங்கும் நம்மைப் பன்னீர் தெளித்து வரவேற்பது போல் இருந்தது.  தேனி-குமிளி சாலை நம்முடைய பல பயணங்களின் பிரதான சாலை. சின்னமனூரைத் தாண்டி கம்பத்தை நெருங்கும்போது மீண்டும் சாரல் பெரிதாக மழைக்கு ஒதுங்கும் சாக்கில் காலை உணவையும் அங்கே முடித்தோம். அது ஒரு இஸுலாமியரின் உணவகம். தோசையுடன் முட்டைக் குருமாக கொடுத்தனர். முட்டைக் குருமாவுடன் மொறு மொறு தோசை அருமையாக இருந்தது. 

கம்பத்தில்...
மழை நின்றவுடன் குமுளி நோக்கிக் கிளம்பினோம். கூடலூரை அடுத்து லோயர் கேம்பில் இருந்து மலைச் சாலை ஆரம்பம். மழையில் நனைந்து மலைச்சாலை மழைச்சாலையானது.

கம்பம்-குமுளி மலைச்சாலை


அடர்ந்த மரங்களால் கூடாரம் போடப்பட்ட சாலை குளிரை அதிகரித்தது.  மரங்களில் இருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சாலையில் மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. பைக்கை நிதானமாகச் செலுத்தினோம். குமுளியில் ஒரு கடைக்குச் சென்று ‘மழை அங்கி’ வாங்கிக்கொண்டு கிளம்பினோம். நேரம் காலை 10 மணி. இதுவரை சூரியபகவானைக் காண இயலவில்லை. வெள்ளைத் துணி கொண்டு போர்த்தியது போல் வானம் வெண்மேகத்தால் சூழப்பட்டிருந்தது. குட்டிகானம் நோக்கிச் செல்லும்போது, மனோவுக்கு வாகமன் பயணத்தின்போது சென்ற கள்ளுக்கடைக்குச் செல்லும் ஆசை வர பைக்கை அங்கு திருப்பினோம். 

செல்லும் வழியில் சாலை ஓரத்திலேயே ஒரு சிறிய அருவியைக் கண்டோம். குழந்தையைப் போல் அந்தச் சிற்றருவி, பாறைகள் ஒவ்வொன்றாய்த் தவழ்ந்து கடந்து சாலையில் ஓடியது பார்க்க ரம்யமாக இருந்தது.

குமுளி-செங்கரா சாலையில்
பைக்கை விட்டு இறங்கி அருவி நீரில் கால்களை நனைத்தோம். தண்ணீர் ஐஸ் போல் இருந்தது. செங்கரா என்ற ஊரின் அருகில் உள்ளது அந்தக் கள்ளுக்கடை. நாம் சென்றபோது வேறு யாரும் இல்லை. கீழே ஆற்றில் தண்ணீர் முழு அளவில் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் அங்கு இளைப்பாறினோம்.  

ஆறு தெரியுதா??

குமுளியில் இருந்து குட்டிக்கானம் வரை காபி, ஏலம், பலா மரங்கள், மிளகுக்கொடிகள், தேயிலைத் தோட்டங்கள் என மாறி மாறிக் கடந்து பயணிக்கிறோம். தேயிலைச் செடிகள் மழைக்குப் புதுத் தளிர் விட்டு இளம்பச்சை நிறத்தில் காட்சியளித்தது. தேயிலைச் சரிவுகள் முழுதும் இளம்பச்சையாய் பார்க்க அத்தனை அழகு.


பலா மரங்களில் பலாப் பழங்கள் பெருத்திருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட போது பள்ளிப்பாடத்தில் படித்த 'வள்ளல் பாரியின்' பரம்புமலைக் காட்சி (தற்போதைய பிராண்மலை) கண் முன் வந்தது. பரம்புமலையைப் பற்றி கபிலர் எழுதிய ஒரு பாடலில் தேனும், தினையும், வாழையும்  செழித்திருக்க பலாப் பழங்கள் பறிக்க ஆள் இன்றிப் பழுத்து வெடித்து அதில் இருந்து ஒழுகும் தேன் காற்றில் கலந்து பரம்புமலை முழுதும் மணம் பரப்புவதாகக் கூறுவார். ஆம், இங்கே சில இடங்களில் கீழே விழுந்து கிடந்தது. சில இடங்களில் மரத்திலேயே பழுத்து வெடித்துப் பலாப்பழ வாடை காற்றில் பரவியது. 


செல்லும் வழியெங்கும் வானம் பன்னீர் தெளித்துக் கொண்டே இருக்கிறது. முகத்தை வான் நோக்கி அந்த வரவேற்பைக் கண்களை மூடி அனுபவிக்கிறோம். முகத்தில் பட்டுத் தெறிக்கும் சாரல், படும் இடங்களில் எல்லாம் உள்ள நரம்பின் முனைகளைத் தனித் தனியே குளிர்விக்கிறது. பைக்கைக் குடிக்கானம் நோக்கிச் செலுத்தினோம். பசுமையின் ஊடே சாலை வளைந்து நெளிந்து செல்கிறது. மழையில் நனைந்த சாலை மாசு மரு இன்றித் தூய்மையாய் இருந்தது. இத்தனை மழையிலும் கேரளத்து சாலைகள் சேதமின்றி அருமையாக உள்ளன. வழியில் மற்றொரு சிறிய அருவி சுற்றிலும் செடிகளும் கொடிகளும் சூழ்ந்து “இளமையெனும் பூங்காற்று” பாடலை நினைவூட்டியது.

செங்கரா-குட்டிக்கானம் சாலையில்
குட்டிக்கானத்தை அடையவும் அடைமழை பிடிக்கவும் சரியாக இருந்தது. பூட்டியிருந்த ஒரு கடையின் தாழ்வாரத்தின் அடியில் தஞ்சமடைந்து மழையை வேடிக்கை பார்த்தோம். 

குட்டிக்கானம்
அப்போது அந்த அற்புதம் நிழந்தது. வெள்ளை உடை தறித்த தேவதைகள் வானத்தில் இருந்து இறங்கி வந்து நம்மைச் சுற்றி நடனமிடுவது போல் எங்கிருந்தோ வந்த வெண்பனி மெல்ல மெல்ல மிதந்து வந்து நம்மைச் சுற்றி வளைத்தது.  எங்கும் வெண்மை மட்டுமே. ‘நார்னியா’ திரைப்படத்தில் காட்டும் கனவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது. அதை ரசித்துக்கொண்டிருக்கும்போதே கண்ணாமூச்சி காட்டி வெண்பனி எங்கோ சென்று மறைந்து அடுத்த நொடியே மீண்டும் நம்மை வளைத்தது. ஒரு நிமிடம் அந்தக் காட்சியில் மெய் மறந்து தான் போகிறோம்.



மீண்டும் மழை… 
பெயருக்கேற்றாற் போல் குட்டிக்கானம் ஒரு ‘குட்டி’ மலை(ழை)ப் பிரதேசம். மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு. அதைச் சுற்றி உள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள். ஒரு பள்ளிக்கூடம், ஒரு மதுபானக் கடை, சில வீடுகள் அவ்வளவே. குட்டிக்கானத்தில் சொற்ப விடுதிகளே உள்ளன.. அதில் பல, சில ஆயிரம் வாடகை கொண்ட உயர்தர விடுதிகள். எண்ணிக்கை சொற்பமாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் அறை வாடகை அதிகமாகவே உள்ளது. மழை கொட்டிக்கொண்டே இருந்ததால் சாலைச் சந்திப்பின் அருகில் கிடைத்த ஒரு சிறு விடுதியில் அறையப் பதிந்து தங்கினோம்.  உடை மாற்றி சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். குளிர் அதிகமாக இருந்ததால் கம்பளிக்குள் புகுந்தோம். அது குளிர் காலம் அல்ல. அந்தக் குளிர், மழை இலவசமாகக் கொடுத்த குளிர். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.  முற்றத்திற்கு வந்து வெளியே பார்த்தபோது மழை தன் கச்சேரியை முடித்திருந்தது.

பைக்கில் ஒரு ரவுண்டு கிளம்பினோம். குமுளி சாலையை ஒட்டி வலது புறம் மேலேரும் ஒரு சிமெண்ட் சாலையில் பைக்கைச் செலுத்தினோம். அந்தச் சாலையில் இன்னும் சில நல்ல தங்கும் விடுதிகள் தென்பட்டன.


சிமெண்ட் சாலை முடிந்து மண் சாலையில் தொடர்ந்தோம். வலது புறம் ஒரு சிறிய புல்வெளி. பனியால் சூழப்பட்டிருந்தது. புல்வெளியில் சிறிது நடந்தோம். மழையில் நனைந்து தண்ணீர் ஊறிப்போய் பொது பொதுவென்று இருந்தது. பனியில் பார்வை சில அடியில் முடிந்தது. புல்வெளி தான் என்று ஒரு சரிவில் நடந்து சென்று அருகில் பார்த்தபோது தான் தெரிந்தது அது ஒரு பள்ளத்தாக்கு என்று. பயம் வந்து பிறகு பரவசமானோம்.

முடிவில் பள்ளத்தாக்கு
தொடர்ந்து சென்றபோது சாலையைக் காடு சூழ்ந்தது. மரங்களுக்கிடையில் பனி தவழ்ந்து கொண்டிருந்தது, காடு புகைந்துகொண்டிருப்பதைப் போன்ற தோற்றமளித்தது.


சில தேனீர் கடைகள் இருந்தன. மேலே தகரத்தால் வேயப்பட்டு சுற்றிலும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட சிறிய கடைகள். மீண்டும் மழை பிடித்துவிட சூடாக ஒரு ஆம்லெட்டும், ஒரு சாயாவும் சாப்பிட்டோம், மழையை ரசித்துக்கொண்டே..





தார்ப்பாயைத்  தாண்டி மழைச் சாரல் நம் மீது தெறித்ததுக் குளிர்வித்தது.

மழையில் நனைவோம்... 


பருவமழைப் பயணம்-குட்டிக்கானம் (நிறைவு) இங்கே