Friday, 2 June 2017

குளிர்பானத்தில் எய்ட்ஸ் இரத்தம்...



பெண்களிடம் ஒரு விசயத்தைச் சொன்னால் போதும் அது ஒரு நொடியில் ஊரெல்லாம் பரவிவிடும் என்று நம்மூர் பக்கம் கேலியாகச் சொல்வதுண்டு ஊரில் கிழக்குத் தெருவில் நடந்து போகும்போது வீட்டுத் திண்ணைகளில் உட்கார்ந்து வெற்றிலை இடித்து மென்றுகொண்டு இருக்கும் பாட்டிகள் நம்மைப் பார்த்து “ என்னடா, பாலன் மகனே எங்கயோ பட்டணத்துல படிக்கப் போயிருக்கனு சொன்னாக, நீ  ஊருக்குள்ள சுத்திக்கிருக்க…” என்று கேட்க, “பத்து நாள் லீவு விட்ருக்காங்க பாட்டி” என்று பதில் சொல்லிவிட்டு மேலத்தெரு தான் போய் இருப்போம், அங்க இரண்டு பாட்டிகள் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பது நம் காதில் விழும், “அடியே, தெரியுமா சேதி ? பட்டணத்துக்குப் படிக்கப் போன நம்ம பாலன் மகனுக்கு படிப்பு வரலனு வீட்டுக்குப் பத்திவிட்டாகளாம்டீ”. அம்புட்டு ஸ்பீடு.. (மகளிர் மண்ணிக்க..).   அந்த வேகத்தை எல்லாம் மிஞ்சுவதற்குத் தான் வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் வந்துள்ளது. ஒளியின் வேகத்தையும் மிஞ்சி உலக எல்லைகளுக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன, இவை இரண்டும். அதில் வரும் தகவல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் சமீபத்திய உதாரணம். ஆனால் அதில் வரும் தகவல்கள் நூறு சதவிதம் உண்மை தானா என்றால்  இல்லை. அப்படித்தான் கீழ்வருவது போல் ஒரு தகவல் ரொம்ப நாட்களாக உலாவிக்கொண்டு இருக்கிறது. அதாவது,

      “ஒரு பன்னாட்டுக் குளிர்பான நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அவர் தன் இரத்தத்தை அந்நிறுவனத்தின் குளிர்பானத்தைத் தயாரிக்கும்போது அதில் கலந்து விட்டார். அந்த குளிர்பானத்தைக் குடிப்பவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவி விடும், அதனால் யாரும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தைப் பருக வேண்டாம்.” 

இவ்வாறு அந்தச் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவையே மனிதனுக்குப் பெரும்பான்மையான நோய்களைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும். இதில் பூஞ்சையும் பாக்டீரியாவும்  தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். ஆம், டெட்டால் மற்றும் சோப்பு விளம்பரங்களில் வருவது போல் நிலம், நீர், காற்று, நாம் சாப்பிடும் தட்டு, மனித உடல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்... ஆனால் இந்த வைரஸ் இருக்கு பாருங்கள் அது செயல்பட ஒரு உயிருள்ள மீடியம் தேவை. அதாவது மனிதன் உயிர் வாழக் காற்று எவ்வளவு முக்கியமோ அது போல.. உயிருள்ள உடலை விட்டு அது வெளியேறினால் அது செயலற்றுவிடும் (இறந்துவிடும் என்று வைத்துக் கொள்ளுங்கள்)..

எய்ட்ஸ் என்பது HIV (HUMAN IMMUNODEFICIENCY VIRUS) எனப்படும் வைரஸால் பரவக் கூடியது. ஆகவே அந்தச் செய்தியில் வருவது போல் அந்த ஊழியர் எய்ட்ஸ் இரத்தத்தைக் குளிர்பானத்தில் கலந்திருந்தால் அந்த இரத்தம் உடலை விட்டு வெளி வந்த சில நொடிகளிலேயே அதில் இருக்கும் வைரஸ் செயலற்று விடும். ஆகையால் அதைப் பருகும் எவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவ வாய்ப்பில்லை.. அப்படியே அந்தக் கிருமி உயிருடன் இருந்தாலும் (ஒரு பேச்சுக்கு), அதைப் பருகும் போது நம் வாயில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ள நொதிப்பான்கள் (enzymes) வைரஸை நொதித்து விடும். அதையும் மீறி வயிற்றுக்குள் சென்றால் அங்கே இருக்கவே இருக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம், அது அந்த வைரஸை ஒரு வழி பண்ணி விடும், கவலையை விடுங்கள். நீங்கள் பயப்பட வேண்டியதெல்லாம் அந்தக் குளிர்பானங்களில் கலந்திருக்கும் பெயர் தெரியாத இரசாயனங்களுக்கு மட்டுமே..


நினைவில் கொள்ளுங்கள் எய்ட்ஸ் பரவ வேண்டுமானால் எய்ட்ஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் மற்றவரின் இரத்த ஓட்டத்தில் நேரடியாகக் கலக்க வேண்டும் அவ்வளவே.. ஆகையால் இது போன்ற வதந்திகளைப் பரப்பி உங்கள் பொன்னான மொபைல் டேட்டாவை வீணடிக்காதீர்கள். 

3 comments:

  1. பொன்னான மொபைல் டேட்டாவை வீணாக்காதீர்கள் முடிவில் அருமையாக சொன்னீர்கள் நணபரே - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. பயனுள்ள பதிவு...

    ReplyDelete