நேரம், காலை 8:15. சென்னை எழும்பூரிலிருந்து 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' கிளம்புகிறது. சொந்த வேலையாக சென்னை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து மதுரைக்கு முதல் முறை பகலில் ரயில்பயணம். எனக்கு 'சைடு அப்பர் பெர்த்' முன்பதிவாகி இருந்தது. லோயர் பெர்த்தில் திருச்சி செல்ல வேண்டிய ஒருவர். என்னைக் கீழே அமரச் சொல்லிவிட்டு அவர் மேலே சென்று படுத்துக்கொண்டார். ஜன்னல் காற்றை அனுபவித்துக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணித்தேன்.
ரயில் தாம்பரம் தாண்டியதும் கால்கள் செயலிழந்த ஒருவர் தவழ்ந்து கொண்டு வந்தார். அவர் கையில் ஒரு துணி இருந்தது. வந்தவர் அந்தத் துணியை வைத்து நடைபாதையில் இருந்த தூசுகள் முழுதும் துடைக்க ஆரம்பித்தார். துடைத்துவிட்டு நடைபாதையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். வாய் திறந்து யாரிடமும் எதும் கேட்கவில்லை. ஒரு சிலர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார்.
பிறகு செங்கல்பட்டில் ஒரு திருநங்கை ஏறி அனைவரிடமும் பணம் வேண்டினார். யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார். குடும்பமாய் வந்திருந்தவர்களை அவர் தொந்தரவு செய்யவில்லை. இளைஞர்கள் பலர் அவர் கேட்பதற்குள்ளாகவே பணத்தை நீட்டினர். பணம் தரத் தயங்கிய ஒரு சிலரையும் அவர் விடவில்லை. நின்று பெற்றுக் கொண்டே கிளம்பினார். பணம் கொடுத்தவர்களின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கையில் பத்து ரூபாய் நோட்டுக்கள் கத்தையாய் இருந்தன. மேல்மருவத்தூர் வந்ததும் இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் போய் குத்தவைத்து அமர்ந்துகொண்டார்.
அடுத்து ஒரு தட்டில் அம்மன் படம், விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டும், 'ஓம்சக்தி.... ஓம்சக்தி...' என்று கூறிக்கொண்டும் சிவப்பும் மஞ்சளும் கலந்த உடை அணிந்த மூன்று பெண்கள் ரயிலில் ஏறிக் காணிக்கை கேட்டனர். மறக்காமல் கையில் வேப்பிலையும் எடுத்து வந்திருந்தனர். வந்ததற்காக சிலர் சில்லரைக் காசுகளைக் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. திண்டிவனம் வந்ததும் இறங்கிவிட்டனர்.
கொஞ்ச நேரத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்த ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வந்தது. பல நாள் உடுத்தியதில் வெள்ளை உடை மஞ்சளாய் காவியாய் மாறியிருந்தது. திடீரென்று அந்தக் குழந்தை, ரயில் பெட்டியின் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் பல்டி அடித்துக்கொண்டே சென்றது. அதை பார்த்த ஒரு வயதான அம்மா அந்தக் குழந்தையை அழைத்து கையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து "நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்ற குழந்தை நேராகப் போய் கதவருகே மறைந்து அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தது. அடுத்து கையில் வைத்திருந்த வளையத்தை கால் வழியாக இடுப்பிற்கு கொண்டுவந்து , உடலை ரப்பர் போல் வளைத்துத் தலையை மேலிருந்து கீழாக வளையத்திற்குள் விட்டு முதுகு வழியாக வளையத்தை வெளியே எடுத்தது. இதைப் பார்த்துப் பதறிய அந்த வயதான அம்மா அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அழைத்தும் அந்தக் குழந்தை அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் காரியத்தில் கருத்தாக இருந்தது. பிறகு ஒரு தட்டைக் கொண்டுவந்து அனைவரிடமும் நீட்டியது. அந்த வயதான அம்மையார் அருகில் வந்தபோது வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, வளர வளர வெட்டப்படும் தேயிலைச் செடி ஏனோ என் நினைவிற்கு வந்தது.
விழுப்புரத்தில் அவர்கள் இறங்கிவிட அங்கே பார்வையற்ற ஒருவர் ரயிலில் ஏறினார். ஏடிம் கவர், ரேசன் கார்டு கவர் போன்றவற்றை விற்று அதில் வரும் பணத்தைப் பார்வையற்றோர் ஆசிரமத்திற்கு அளிப்பதாகக் கூறினார். பெரிய வரவேற்பு இல்லை அவருக்கு. ஒரு சிலர் மட்டும் அனுதாபத்தில் அவர் விற்ற பொருட்களை வாங்கினர்.
இவ்வாறாக திருச்சி வரை ஒவ்வொருவராக மாறி மாறி தங்கள் பிழைப்புக்காக அந்த ரயிலைப் பயன்படுத்தினர். திருச்சியில் முக்கால்வாசிக் கூட்டம் இறங்கிய பிறகு மதுரை வரை வேறு யாரும் இவ்வாறு வரவில்லை
இந்த ரயில் பயணத்தில் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இயலாதவர் கூட யாசிக்க மறுத்து உழைக்கிறார், ஆனால் இயன்றவரோ உழைக்க மறுத்து மற்றவரை அண்டிப் பிழைக்கிறார்.
அந்தக் கால் இழந்தவரும், கண் இல்லாதவரும் உழைத்துப் பிழைக்க நினைத்ததில் எனக்கு மேலாகத் தெரிந்தனர். சமூகப் புறக்கணிப்பால் யாசிக்கும் அந்தத் திருநங்கையின் செயல் கூடத் தவறாகத் தெரியவில்லை. ஆனால் அம்மன் பெயரைச் சொல்லி யாசித்த அந்தப் பெண்களின் கண்களுக்கு உழைத்துப் பிழைக்கும் அந்த மாற்றுத்திறனாளிகள் தெரியவில்லையோ?? அதுபோல் பெற்ற குழந்தையை யாசிக்க வைத்து வேடிக்கை பார்த்த அந்தத் தாயின் செயலும் ஒப்பவில்லை. தான் யாசித்துக் கூட பெற்ற பிள்ளையைக் காப்பற்றலாம் என்று ஏனோ அந்தத் தாய்க்குத் தோன்றவில்லை. "இயலாதவரால் இயலும்போது, இயன்றோர் இயலாதவரானார்".
இவர்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கடவுள் நமக்கு எவ்வளவோ மேலான வாழ்வை வழங்கியிருக்கிறார் அல்லவா??