Saturday 15 July 2017

பருவமழைப் பயணம் - குட்டிக்கானம் (பாகம் 1)


மழை!!!! வானம் பூமிக்குச் செய்யும் ஆசிர்வாதம்.. உயிர்களின் மீதான கருணை… குழந்தைகளின் குதூகலம்… காதலர்களின் சங்கீதம்… நிலத்தில் ஏரோட வேண்டும் என்றால் முதலில் நீரோட வேண்டும்.. மழையைப் பிடிக்காது என்று யாரும் சொல்ல இயலாது. சிறு வயதில் மழை வந்தவுடன் காகிதக் கப்பல் செய்து வீதியில் ஓடும் மழை நீரில் விட்டு ரசித்திருப்போம். திண்ணையில் நின்றுகொண்டு கூரையில் இருந்து வழியும் மழைநீரைக் கையில் பிடித்து ஒருவர் முகத்தில் ஒருவர் தெளித்து விளையாடியிருப்போம். அம்மாவுக்குத் தெரியாமல் மழையில் நனைந்து ஆட்டம்போட்டுவிட்டு பிறகு அடியும் வாங்கியிருப்போம். பெரியவர்களான பிறகும் மழையில் நனையும் ஆசை பலருக்கும் இருந்திருக்கும். ஆனால் இந்த வயதில் அவ்வாறு செய்தால் சுற்றி இருப்போர் நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தானே கூறுவார்கள். அதனாலேயே பலரும் அந்த ஆசையை தமக்குள்ளேயே புதைத்துவிடுவர். மனதில் மறைத்த அந்த ஆசையை அனுபவிக்கவே இந்த பருவமழைப் பயணம். 


மழை என்றால் அதோடு நமக்கு நினைவிற்கு வருவது ‘கேரளா’. இயற்கை வளம் நிறைந்த தேனி மாவட்டத்தில் பணிபுரிவதால் எனக்கு ஒரு வசதி.  சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி ‘என்டே கேரளத்தின்’ அழகை ரசித்துவிட்டு வருவதுண்டு. பொதுவாகக் கேரளாவிற்குப் பயணம் செல்வோர் ஜூன் – செப்டம்பர் வரை உள்ள பருவமழைக் காலத்தைத் தவிர்த்து, குளிர் அல்லது வெயில் காலத்தில் செல்வது வழக்கம்.. ஆகையால் மழைக்காலத்தில் கேரளம் ஆரவாரம் இன்றி இருக்கும். நமக்கு அந்த மழையும், அந்த அமைதியும் தானே வேண்டும். பலமுறை பார்த்த கேரளத்தின் அழகை அதன் மழைப் பருவத்தில் காணக் கிளம்பினோம். இந்தப் பருவமழைப் பயணத்திற்காக நாம் தேர்ந்தெடுத்த இடம் குட்டிக்கானம். கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்த ஒரு அழகிய மழைப்பிரதேசம் அது.



முன்னரே திட்டமிடப்பட்ட பயணமாய் இல்லாமல், பயணத்தின் இரண்டு நாள் முன்னர் நண்பர் மனோவுடன் ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பில் “சென்று பார்ப்போமா?” என்று திடீரென்று பேசிக் கிளம்பிய பயணம். இந்தப் பருவமழைப் பயணத்தின் முதன்மையான நோக்கமே மழைச்சாரல் முகத்தில் பட்டுத் தெறிக்கத் தெறிக்கப் பயணிப்பதே.. பல இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அது இந்தப் பருவமழைப் பயணத்தில் ஈடேறாது. ஆகையால் ஏமாற்றத்தைத் தவிர்க்க மற்ற நண்பர்களை அழைக்காமல் இருவர் மட்டும் கிளம்பினோம்.

நான்-மனோ

ஒரு விடுமுறை நாளின் அதிகாலை ஆறு மணி. ‘அடிக்கடி ஊர் சுற்றுகிறேன்’ என்று எனது தங்கையிடம் திட்டு வாங்கிக்கொண்டே கிளம்பினேன். உசிலம்பட்டியில் இருந்து கிளம்பி ஆண்டிபட்டி வழியாகத் தேனி சென்று அங்கிருந்து கம்பம், குமுளி வழியாக வண்டிப்பெரியாரைக் கடந்து குட்டிகானம் செல்லத் திட்டம். உசிலையில் மிதமான குளிர் காற்றை அனுபவித்துக் கொண்டு மெதுவாக பைக்கைச் செலுத்திய நம்மைத் தேனிப் பக்கம் வீசிய தென்மேற்குப் பருவக்காற்று ஆண்டிபட்டிக் கனவாயில் எதிர் வந்து வரவேற்கிறது. கனவாயைக் கடந்து அண்டிபட்டியை அடைகிறோம். ஆண்டிபட்டியைக் கடக்கும்போது சாரல் கண்களுக்குப் புலப்படாத வகையில் மைக்ரோ துளிகளாய் நம் மீது விழுவதை உணரும்போதே உற்சாகம் அடைகிறோம்.

தேனியை அடைந்து கம்பம் நோக்கி பைக்கைச் செலுத்தினோம். தேனியைத் தாண்டியதும் சாரலின் அளவு பெரிதாகி மழையானது. திடீர் பயணம் என்பதால் பயணத்திற்குத் தேவையானவற்றை தயார் செய்ய இயலவில்லை. வீரபாண்டி அருகே ஒரு தேனீர் விடுதியில் ஒதுங்கி மழையை ரசித்துக் கொண்டே தேனீர் அருந்தினோம். கேரளாவில் மழையை எதிர்பார்த்த நமக்கு தேனியில் எதிர்பாராமல் கிடைத்த மழை போனஸாக இருந்தது.

ஈரமான தேனி-குமுளி சாலை
மழை சாரலாய் மாறியவுடன் பைக்கைக் கிளப்பி நகர்ந்தோம். பெய்யும் சாரல் வழியெங்கும் நம்மைப் பன்னீர் தெளித்து வரவேற்பது போல் இருந்தது.  தேனி-குமிளி சாலை நம்முடைய பல பயணங்களின் பிரதான சாலை. சின்னமனூரைத் தாண்டி கம்பத்தை நெருங்கும்போது மீண்டும் சாரல் பெரிதாக மழைக்கு ஒதுங்கும் சாக்கில் காலை உணவையும் அங்கே முடித்தோம். அது ஒரு இஸுலாமியரின் உணவகம். தோசையுடன் முட்டைக் குருமாக கொடுத்தனர். முட்டைக் குருமாவுடன் மொறு மொறு தோசை அருமையாக இருந்தது. 

கம்பத்தில்...
மழை நின்றவுடன் குமுளி நோக்கிக் கிளம்பினோம். கூடலூரை அடுத்து லோயர் கேம்பில் இருந்து மலைச் சாலை ஆரம்பம். மழையில் நனைந்து மலைச்சாலை மழைச்சாலையானது.

கம்பம்-குமுளி மலைச்சாலை


அடர்ந்த மரங்களால் கூடாரம் போடப்பட்ட சாலை குளிரை அதிகரித்தது.  மரங்களில் இருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது. சாலையில் மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. பைக்கை நிதானமாகச் செலுத்தினோம். குமுளியில் ஒரு கடைக்குச் சென்று ‘மழை அங்கி’ வாங்கிக்கொண்டு கிளம்பினோம். நேரம் காலை 10 மணி. இதுவரை சூரியபகவானைக் காண இயலவில்லை. வெள்ளைத் துணி கொண்டு போர்த்தியது போல் வானம் வெண்மேகத்தால் சூழப்பட்டிருந்தது. குட்டிகானம் நோக்கிச் செல்லும்போது, மனோவுக்கு வாகமன் பயணத்தின்போது சென்ற கள்ளுக்கடைக்குச் செல்லும் ஆசை வர பைக்கை அங்கு திருப்பினோம். 

செல்லும் வழியில் சாலை ஓரத்திலேயே ஒரு சிறிய அருவியைக் கண்டோம். குழந்தையைப் போல் அந்தச் சிற்றருவி, பாறைகள் ஒவ்வொன்றாய்த் தவழ்ந்து கடந்து சாலையில் ஓடியது பார்க்க ரம்யமாக இருந்தது.

குமுளி-செங்கரா சாலையில்
பைக்கை விட்டு இறங்கி அருவி நீரில் கால்களை நனைத்தோம். தண்ணீர் ஐஸ் போல் இருந்தது. செங்கரா என்ற ஊரின் அருகில் உள்ளது அந்தக் கள்ளுக்கடை. நாம் சென்றபோது வேறு யாரும் இல்லை. கீழே ஆற்றில் தண்ணீர் முழு அளவில் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரின் ஓசையைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் அங்கு இளைப்பாறினோம்.  

ஆறு தெரியுதா??

குமுளியில் இருந்து குட்டிக்கானம் வரை காபி, ஏலம், பலா மரங்கள், மிளகுக்கொடிகள், தேயிலைத் தோட்டங்கள் என மாறி மாறிக் கடந்து பயணிக்கிறோம். தேயிலைச் செடிகள் மழைக்குப் புதுத் தளிர் விட்டு இளம்பச்சை நிறத்தில் காட்சியளித்தது. தேயிலைச் சரிவுகள் முழுதும் இளம்பச்சையாய் பார்க்க அத்தனை அழகு.


பலா மரங்களில் பலாப் பழங்கள் பெருத்திருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட போது பள்ளிப்பாடத்தில் படித்த 'வள்ளல் பாரியின்' பரம்புமலைக் காட்சி (தற்போதைய பிராண்மலை) கண் முன் வந்தது. பரம்புமலையைப் பற்றி கபிலர் எழுதிய ஒரு பாடலில் தேனும், தினையும், வாழையும்  செழித்திருக்க பலாப் பழங்கள் பறிக்க ஆள் இன்றிப் பழுத்து வெடித்து அதில் இருந்து ஒழுகும் தேன் காற்றில் கலந்து பரம்புமலை முழுதும் மணம் பரப்புவதாகக் கூறுவார். ஆம், இங்கே சில இடங்களில் கீழே விழுந்து கிடந்தது. சில இடங்களில் மரத்திலேயே பழுத்து வெடித்துப் பலாப்பழ வாடை காற்றில் பரவியது. 


செல்லும் வழியெங்கும் வானம் பன்னீர் தெளித்துக் கொண்டே இருக்கிறது. முகத்தை வான் நோக்கி அந்த வரவேற்பைக் கண்களை மூடி அனுபவிக்கிறோம். முகத்தில் பட்டுத் தெறிக்கும் சாரல், படும் இடங்களில் எல்லாம் உள்ள நரம்பின் முனைகளைத் தனித் தனியே குளிர்விக்கிறது. பைக்கைக் குடிக்கானம் நோக்கிச் செலுத்தினோம். பசுமையின் ஊடே சாலை வளைந்து நெளிந்து செல்கிறது. மழையில் நனைந்த சாலை மாசு மரு இன்றித் தூய்மையாய் இருந்தது. இத்தனை மழையிலும் கேரளத்து சாலைகள் சேதமின்றி அருமையாக உள்ளன. வழியில் மற்றொரு சிறிய அருவி சுற்றிலும் செடிகளும் கொடிகளும் சூழ்ந்து “இளமையெனும் பூங்காற்று” பாடலை நினைவூட்டியது.

செங்கரா-குட்டிக்கானம் சாலையில்
குட்டிக்கானத்தை அடையவும் அடைமழை பிடிக்கவும் சரியாக இருந்தது. பூட்டியிருந்த ஒரு கடையின் தாழ்வாரத்தின் அடியில் தஞ்சமடைந்து மழையை வேடிக்கை பார்த்தோம். 

குட்டிக்கானம்
அப்போது அந்த அற்புதம் நிழந்தது. வெள்ளை உடை தறித்த தேவதைகள் வானத்தில் இருந்து இறங்கி வந்து நம்மைச் சுற்றி நடனமிடுவது போல் எங்கிருந்தோ வந்த வெண்பனி மெல்ல மெல்ல மிதந்து வந்து நம்மைச் சுற்றி வளைத்தது.  எங்கும் வெண்மை மட்டுமே. ‘நார்னியா’ திரைப்படத்தில் காட்டும் கனவுலகத்திற்குள் நுழைந்தது போல் இருந்தது. அதை ரசித்துக்கொண்டிருக்கும்போதே கண்ணாமூச்சி காட்டி வெண்பனி எங்கோ சென்று மறைந்து அடுத்த நொடியே மீண்டும் நம்மை வளைத்தது. ஒரு நிமிடம் அந்தக் காட்சியில் மெய் மறந்து தான் போகிறோம்.



மீண்டும் மழை… 
பெயருக்கேற்றாற் போல் குட்டிக்கானம் ஒரு ‘குட்டி’ மலை(ழை)ப் பிரதேசம். மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு. அதைச் சுற்றி உள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள். ஒரு பள்ளிக்கூடம், ஒரு மதுபானக் கடை, சில வீடுகள் அவ்வளவே. குட்டிக்கானத்தில் சொற்ப விடுதிகளே உள்ளன.. அதில் பல, சில ஆயிரம் வாடகை கொண்ட உயர்தர விடுதிகள். எண்ணிக்கை சொற்பமாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் அறை வாடகை அதிகமாகவே உள்ளது. மழை கொட்டிக்கொண்டே இருந்ததால் சாலைச் சந்திப்பின் அருகில் கிடைத்த ஒரு சிறு விடுதியில் அறையப் பதிந்து தங்கினோம்.  உடை மாற்றி சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். குளிர் அதிகமாக இருந்ததால் கம்பளிக்குள் புகுந்தோம். அது குளிர் காலம் அல்ல. அந்தக் குளிர், மழை இலவசமாகக் கொடுத்த குளிர். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.  முற்றத்திற்கு வந்து வெளியே பார்த்தபோது மழை தன் கச்சேரியை முடித்திருந்தது.

பைக்கில் ஒரு ரவுண்டு கிளம்பினோம். குமுளி சாலையை ஒட்டி வலது புறம் மேலேரும் ஒரு சிமெண்ட் சாலையில் பைக்கைச் செலுத்தினோம். அந்தச் சாலையில் இன்னும் சில நல்ல தங்கும் விடுதிகள் தென்பட்டன.


சிமெண்ட் சாலை முடிந்து மண் சாலையில் தொடர்ந்தோம். வலது புறம் ஒரு சிறிய புல்வெளி. பனியால் சூழப்பட்டிருந்தது. புல்வெளியில் சிறிது நடந்தோம். மழையில் நனைந்து தண்ணீர் ஊறிப்போய் பொது பொதுவென்று இருந்தது. பனியில் பார்வை சில அடியில் முடிந்தது. புல்வெளி தான் என்று ஒரு சரிவில் நடந்து சென்று அருகில் பார்த்தபோது தான் தெரிந்தது அது ஒரு பள்ளத்தாக்கு என்று. பயம் வந்து பிறகு பரவசமானோம்.

முடிவில் பள்ளத்தாக்கு
தொடர்ந்து சென்றபோது சாலையைக் காடு சூழ்ந்தது. மரங்களுக்கிடையில் பனி தவழ்ந்து கொண்டிருந்தது, காடு புகைந்துகொண்டிருப்பதைப் போன்ற தோற்றமளித்தது.


சில தேனீர் கடைகள் இருந்தன. மேலே தகரத்தால் வேயப்பட்டு சுற்றிலும் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்ட சிறிய கடைகள். மீண்டும் மழை பிடித்துவிட சூடாக ஒரு ஆம்லெட்டும், ஒரு சாயாவும் சாப்பிட்டோம், மழையை ரசித்துக்கொண்டே..





தார்ப்பாயைத்  தாண்டி மழைச் சாரல் நம் மீது தெறித்ததுக் குளிர்வித்தது.

மழையில் நனைவோம்... 


பருவமழைப் பயணம்-குட்டிக்கானம் (நிறைவு) இங்கே

3 comments:

  1. பயணம் என்றாலே இனிமை...
    அதுவும் மழையில் பயணம் என்றால்!!!
    மிக இனிமை...

    ReplyDelete
    Replies
    1. ஆம்... அருமையான அனுபவம் அது... நன்றி...

      Delete