Saturday 11 November 2017

நான் ஈ..

கோணாரே..!!கோணாரே..!!
கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே!! 

ஊராருடைய நெல்லே!!
நெல்லுக்கடியில் போகிற நீரே!! 

நீருக்கடியில் போகிற மீனே!! 
மீனைத் திண்ணும் கொக்கே!!

கொக்கு ஏறிய கட்டையே!!
கட்டை ஏறிய கரையானே!!

கரையானைப் பிடிக்கும் காடையே!!
காடையைப் பிடிக்கும் வேடனே!!

வேடனோட ராஜாவே!!
ராஜாவோட குதிரையே!!
என் பெயர் என்ன??
ஈஈஈஈஈஈஈஈ....

என்ன ஒன்றும் புரியவில்லையா? சரி விளக்கமாகச் சொல்கிறேன்.

என் அன்னையுடன் பிறந்த அக்கா வால்பாறையில் இருக்கிறார். சிறு வயதில் ஒவ்வொரு வருடமும் முழுப் பரீட்சை விடுமுறைக்கு நான் அங்கே சென்று ஒரு மாதம் தங்கியிருந்து வருவேன். என் பெரியன்னையின் அண்டை வீட்டுச் சிறுவர்கள் எனக்கு நல்ல தோழர்களாகினர். அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடல் தான் மேலே உள்ளது. அது வெறும் பாடல் அல்ல. அதில் ஒரு கதை அடங்கியிருக்கிறது. தன் பெயர் மறந்த ஒரு ஈ, தன் பெயரைக் கண்டுபிடிக்கும் கதை. கதையைக் கேளுங்கள்.

ஒரு ஊரில் இருக்கும் ஒரு 'ஈ'க்கு தன் பெயர் மறந்துவிடுகிறது.  எவ்வளவு யோசித்தும் ஞாபகம் வரவில்லை. அப்போது அந்த வழியாக ஒரு கோணார் வருகிறார். சரி இவரிடம் கேட்போம் என்று "கோணாரே.. கோணாரே.., என் பெயர் எனக்கு மறந்துவிட்டது. உங்களுக்குத் தெரியுமா? என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்தக் கோணார் "உன் பெயர் எனக்குத் தெரியாது. நீ போய்க் கொம்புச் சத்தம் கேட்ட ஊராரிடம்  கேள்", என்கிறார்.   

சரி என்று அந்த ஈ, ஊராரிடம் போய் "கொம்புச் சத்தம் கேட்ட ஊராரே.., என் பெயர் என்ன?" என்று கேட்கிறது. அதற்கு அந்த ஊராரும் "எனக்குத் தெரியாது. நீ போய் ஊராருடைய நெல்லிடம் போய்க் கேள்", என்கிறார்.   

அவர் சொன்னவாரே அந்த ஈ வயலில் இருக்கும் நெல்லிடம் போய் "ஊராருடைய நெல்லே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த நெல் "எனக்குத் தெரியாது. நீ நெல்லுக்கடியில் ஓடும் நீரிடம் போய்க் கேள்" என்கிறது. 

உடனே அந்த ஈ, நீரிடம் சென்று, "நெல்லுக்கடியில் ஓடும் நீரே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அதற்கு அந்த நீர், "எனக்குத் தெரியாது. நீ நீருக்கடியில் ஓடும் மீனிடம் கேள்" என்கிறது. 

அந்த ஈயும், "நீருக்கடியில் ஓடும் மீனே.., என் பெயர் என்ன?" என்று கேட்க, அந்த மீனும் அதேபோல் "உன் பெயர் எனக்கு எப்படித் தெரியும். நீ மீனைத் திண்ணும் கொக்கிடம் போய்க் கேள்" என்று சொல்கிறது.

உங்களைக் போல் இப்போது ஈக்கும் பயங்கரக் கடுப்பாகிவிட்டது. சரி போய்த் தான் கேட்போம் என்று கொக்கிடம் போய், "மீனைத் திண்ணும் கொக்கே.., என் பெயர் என்ன?" என்று வினவ, அந்தக் கொக்கோ, கொக்கு ஏறிய கட்டையிடம்  போய்க் கேட்கச் சொல்கிறது. 

இதைக் கேட்ட ஈ, கொக்கு ஏறிய கட்டையிடம் சென்று, "கொக்கு ஏறிய கட்டையே.., உனக்காவது என் பெயர் தெரியுமா?" என்று கேட்க,  அதற்கு அந்தக் கட்டையோ, "எனக்குத் தெரியாது. நீ கட்டை ஏறிய கரையானிடம் போய்க் கேள்" என்று சொன்னது.

ஈயும் நேராகக் கரையானிடம் போய்க் "கட்டை ஏறிய கரையானே.., என் பெயர் என்ன?" என்று கேட்டு நிற்க, கரையானோ "எனக்குத் தெரியாது. நீ கரையானைப் பிடிக்கும் காடையிடம் போய்க் கேள்" எனக் கூறியது.

'ஷப்பாஆஆஆ... இப்பவே கண்ண கட்டுதே', என்று நினைத்துக் கொண்டு ஈ, காடையிடம் போய்க், "கரையானைப் பிடிக்கும் காடையே.., நீயாவது என் பேர் என்னனு சொல்லக் கூடாதா?" என்று கேட்க, அதற்கு அந்தக் காடை எல்லோரையும் போலவே "எனக்கும் தெரியாதப்பா, நீ போய்க் காடையைப் பிடிக்கும் வேடனிடம்  கேட்க வேண்டியது தானே" என்று கூற, வேறு வழியில்லை என்று நேராக வேடனிடம் போய் "காடையைப் பிடிக்கும் வேடனே.." என்று விசயத்தைச் சொன்னது.

வேடனும் "உன் பெயர் எனக்குத் தெரியாதப்பு. நீ வேணும்னா, வேடனோட ராஜாவிடம் போய்க் கேட்டுப் பார்" அப்படினு சொல்ல, ராஜாவுக்கு எப்படியும் தெரியும் என்று அவரிடம் போய் "வேடனோட ராஜாவே.., என் பெயர் எனக்கு மறந்து போச்சு. நீங்களாவது சொல்லுங்களேன்" என்று கேட்க, ராஜாவும் யோசித்துவிட்டு "எனக்கும் உன் பெயர் தெரியவில்லை. வேணும்னா என் குதிரையிடம் கேட்டுப் பார்", என்று கூறுகிறார்.

ஈயும் குதிரையிடம் போய் "ராஜாவோட குதிரையே.., நீயாவது என் பெயர் என்னனு சொல்லேன்" என்று கூறிவிட்டு 'முடியலடா சாமி' என்று அப்படியே குதிரையின் மூக்கில் போய் உட்கார்ந்தது. ஈ உட்கார்ந்த குறுகுறுப்பில் குதிரை 'ஈஈஈஈஈஈஈ....' என்று கணைத்தது. உடனே அந்த ஈ "ஓஹோ, ஈ தான் என் பெயரா!!" என்று  தன் பெயரைக் கண்டுபிடித்துவிட்டதில் "நான் ஈ... நான் ஈ.." என்று கத்திக்கொண்டே மகிழ்ச்சியாகத் பறந்து சென்றது. இப்போது மேலே சென்று அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள், கதை புரியும்.