Saturday 15 July 2017

பருவமழைப் பயணம் - குட்டிக்கானம் (நிறைவு)


பருவமழைப் பயணம்-குட்டிக்கானம் (பாகம்-1) இங்கே        

ஐந்து நிமிடம் நின்ற மழை நாம் அறையை அடைவதற்குள் மீண்டும் பெய்யத் தொடங்கியது. மழையும் பனியும் மாறி மாறிக் கண்ணாமூச்சி காட்டி விளையாடின. சூழல் தெளிவாக இருக்கும் அடுத்த நொடி பனி நம்மைச் சூழ்ந்துவிடும். மழை நின்றதுபோல் இருக்கும் ஆனால் அடுத்த நொடியே மீண்டும் பெய்யத் தொடங்கும். நம்மூர் மழைக்கும் கேரளத்து மழைக்கும் உள்ள வித்தியாசம் கோயில் யானைக்கும் காட்டு யானைக்கும் உள்ள வித்தியாசம். ஒரே நிமிடத்தில் லட்சம் லிட்டர் நீரைக் கொட்டும் கட்டுக்கடங்காத மழை அது. பெய்தால் ஒரு நாள் முழுதும் கூடப் பெய்யும். எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்று கணிக்க முடியாது. 



முற்றத்தில் மழையின் சங்கீதத்தை ரசித்துக்கொண்டு நின்றோம். சிலருக்கு அது இறைச்சல். சிலர் ‘பட்டாசு சத்தம் போல’ என்பர். நமக்கு அது சங்கீதம்…. பனியும், மழையும், காற்றும் ஒன்று சேர்ந்து கச்சேரி செய்தன. பனியும் மழையும் ஒரே நேரத்தில் காட்சியளித்தது குட்டிகானத்தில் மட்டுமே. காற்றின் வேகம் மழையை முற்றத்திற்குள் கொண்டுவந்து விட்டது..



ஒன்பது மணியளவில் ஊர் அடங்கிவிடுகிறது. அறையிலேயே இரவு உணவை முடித்து, மழையின் தாலாட்டில் துயில் கொண்டோம். 


காலை ஆறு மணி… தானாக விழிப்பு வந்து எழுந்தோம். மழை தன் தாலாட்டை நிறுத்தியிருக்கவில்லை. கதவைத் திறந்தபோது அதற்காகவே காத்திருந்தது போல் காற்று, மழைச்சாரலை அள்ளி முகத்தில் தெளித்தது. ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் எதிரே இருந்த டீக்கடை திறந்ததும் போய் ஒரு சாயா அருந்தினோம். சூடான சாயா குளிரைத் தற்காலிகமாக விரட்டியது. சாலையில் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியே காலாற ஒரு நடை சென்றோம். அதிகாலைக் காற்றும் நடையும் தூக்கக் கலக்கத்தை நீக்கிப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.


ஐஐஐ..... ஜாலி.....

அறைக்கு வந்து விடுதி பொறுப்பாளரிடம் சுடுதண்ணீர் கேட்டோம். அவர் இல்லை என்றார். உணவகங்களில் கூடக் குடிக்க சுடுதண்ணீர் கொடுக்கும் கேரளத்தில் குளிக்க சுடுதண்ணீர் இல்லை என்றது விசித்திரமாக இருந்தது. வேறு வழியின்றிப் பச்சைத் தண்ணீரில் நடுங்கிக்கொண்டே குளித்தோம்.

மழை நின்றதும் பாஞ்சாலிமேடு என்ற இடத்திற்குக் கிளம்பினோம். பனி மிக அதிகமாக இருந்தது. விளக்கொளியுடன் மட்டுமே பைக்கைச் செலுத்த முடிந்தது. குட்டிக்கானத்தில் இருந்து கோட்டயம் சாலையில் ஒரு மூன்று கிமீ சென்றதும் ஓரிடத்தில் தண்ணீர் விழும் பேரிறைச்சல் கேட்கிறது. தொடர்ந்து சென்றபோது வலஞ்சகானம் நீர்வீழ்ச்சி  சுமார் 75 அடி உயரத்தில் இருந்து விழுந்துகொண்டிருக்கிறது. சாலை ஓரத்திலேயே இருக்கிறது இந்த அழகிய அருவி. விழுந்த வேகத்தில் கீழிருந்து மேலெழும் நீர்த்துளிகள் நம் மீது பட்டு சிலிர்ப்பைக் கொடுக்கிறது.


வலஞ்சகானம் அருவி
அருவியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் பாஞ்சாலிமேடு செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அடர்ந்த காடுகள் சூழ்ந்த அழகிய இயற்கைக் காட்சிகள் பல நிறைந்த குறுகிய சாலை அது. ஆங்காங்கே மரங்கள் வெட்டப்பட்டு மலைச்சரிவுகளில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. சில இடங்களில் பாக்கு மரங்கள் அணிவகுக்கின்றன.



ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் சாலை ஓரத்தில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது.

பாஞ்சாலிமேடு செல்லும் வழியில்
குட்டிக்கானத்தின் மற்றொரு சிறப்பு இப்படி அதைச் சுற்றிச் சாலை ஓரங்களில் கொட்டிக்கொண்டிருக்கும் எண்ணிலடங்கா அருவிகள். காண்போரை வசீகரிக்கக்கூடியவை அவை.  ரசித்துக்கொண்டே பாஞ்சாலிமேட்டை அடைகிறோம். பாஞ்சாலிமேடு அழகிய புல்வெளி சூழ்ந்த ஒரு மலைக்குன்று. வனவாசத்தின்போது பாண்டவர்களுடன் பாஞ்சாலி இங்கு வந்து தங்கியதாகக் கூறுகின்றனர். தற்போது அது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தளம். 



பாஞ்சாலிமேடு அடிவாரம்
அடிவாரத்தில் இருந்து மலையுச்சி வரை சிலுவை நிறுவப்பட்டிருக்கிறது. சுற்றிலும் புல்வெளி சூழ்ந்திருக்க மலையேறுகிறோம். மழைநீரால் செழித்து இளம்பசும்புற்கள் இரண்டு அடி உயரம் வளர்ந்திருந்தது. செழித்து வளர்ந்த புற்கள் காற்றில் அசைந்து ரம்யமான சூழலை ஏற்படுத்தியது. பச்சை நிறத்திற்கு ஒரு பண்பு உண்டு. நம்மைச் சுற்றி பசுமையாக இருந்தால் அது புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி அது மனதிற்கு அமைதியையும் தெளிவான சிந்தனையையும் கொடுக்கக்கூடியது. கவிஞர்கள் பலர் கவிதை எழுத இயற்கையான சூழலைத் தேடிச் செல்வது இதனால் தான்.  புல்வெளியைப் பனி வளைத்திருந்தது.


பச்சை மற்றும் வெண்மையைத் தவிர அங்கு வண்ணங்கள் எதுவும் இல்லை. இரண்டே வண்ணங்களில் இறைவன் வரைந்த அழகிய ஓவியம் அது.


மேலே செல்லச் செல்ல குன்றின் அகலம் குறுகிப் பாதையின் அகலத்திற்கு வருகிறது. அதுமட்டுமின்றி காற்றின் வேகமும் அதிகரித்து நம்மைத் தள்ளுகிறது. மூடுபனியும் அளவுக்கு அதிகமாக ஆகிப் பார்வையை மறைத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் முன்னேற இயலவில்லை.


நம்மைத் தவிர அப்போது அங்கு வேறு யாரும் இல்லை. சூழ்ந்திருக்கும் பனி, குளிர் காற்று, உயர்ந்து வளர்ந்த புற்கள், அதோடு மிதமான சாரலும் சேர்ந்துகொள்ள இவை அனைத்தும் ஒரு அற்புதமான சூழலைக் கொடுத்தது. சிறிது நேரம் அங்கு இருந்து அந்த அற்புதக் சூழலை அனுபவித்துவிட்டு நகர்ந்தோம். 


பாஞ்சாலிமேடு
அறையை அடைந்து ஊருக்குக் கிளம்பினோம். சாரல் அடித்துக்கொண்டே இருந்தது. பீர்மேடைக் கடந்து செல்லும்போது வலதுபுறம் பருந்தும்பாறை என்று பெயர்ப் பலகையைக் கண்டு பைக்கைத் திருப்பினோம். அருவிகளும் தேயிலைத் தோட்டங்களும் சூழ்ந்த அழகிய சாலை நம்மை அழைத்துச் செல்கிறது.  

பீர்மேடு-குமுளி சாலையில்

பருந்தும்பாறை ஒரு எழில்மிகு பள்ளத்தாக்கு. நீண்டு செல்லும் மலைத்தொடர் பசுமையால் போர்த்தப்பட்டிருக்கிறது. பாறை முழுதும் பச்சை வண்ணம் தீட்டப்பட்டது போல் புசும்புற்கள் அப்பிக் கிடக்கிறது. புற்களுக்கிடையில் மழை நீர் கசிந்து வழிந்து பள்ளத்தாக்கில் போய் மறைந்தது.

பருந்தும்பாறை
மலைவிளிம்பில் நின்று சபரிமலைக் காடுகளைக் காணலாம்.  பருந்தும்பாறையின் கீழிருந்து மேலே வரும் காற்று பறவையைப் போல் நம்மையும் தூக்குகிறது. மலைவிளிம்பில் நின்று கைகளைச் சிறகாய் விரித்துப் பறக்க முயல்கிறோம். உடல் மட்டும் அங்கிருக்க மனது அந்தப் பள்ளத்தாக்கு முழுதும் சிறகடித்துப் பறக்கிறது.




நாம் அங்கு சென்றவுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. அங்கே இருந்த ஒரு தேனீர் கடையின் தாழ்வாரத்தில் நின்று மழையை ரசித்தோம். அப்போது அங்கு நாம் கண்ட காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அனைவரும் மழைக்கு ஒதுங்கியிருக்க ஒரு தந்தை மட்டும் ஒரு கையில் குடையுடன், தன் சிறு மகனைத் தோளில் சுமந்துகொண்டு மலைவிளிம்பில் உலா வந்தார். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று கட்டுப்படுத்தாமல் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுத்த அந்தத் தந்தையின் செயலுக்கு ரசிகனானோம்.  அந்தக் குழந்தை தான் எத்தனை பாக்கியம் செய்தது.


பருந்தும்பாறை-வண்டிப்பெரியார் சாலையில்
பைக்கைக் கிளப்பி வண்டிப்பெரியார் வழியாக சாரலில் நனைந்துகொண்டே சென்று குமுளியை அடைந்தோம். நம் பயணத்தின் முடிவு என்பதை உணர்ந்து தான் என்னவோ இரண்டு நாட்களாக அற்புதமான தருணங்களைக் கொடுத்த மழையும் இப்போது பெய்வதை நிறுத்தியிருந்தது. மலைச்சாலையில் இறங்கி லோயர்கேம்பில் உள்ள முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய “கர்னல்.ஜான் பென்னிகுவிக்” அவர்களின் மணிமண்டபத்திற்குச் சென்றோம்.

பென்னிகுவிக் மணிமண்டபம்
சென்றமுறை வாகமன் வந்தபோது அவரைக் காணாது சென்றுவிட்டோம். அவரைப்போல் மழையின் அருமையை உணர்ந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆகையால் இந்தப் பருவமழைப் பயணத்தை அவரை தரிசித்து முடிப்பதே உசிதமாக இருக்கும் என்று தோன்றியது.

கர்னல்.ஜான் பென்னிகுவிக்

மணிமண்டபத்தின் உள்ளே சென்று அவரின் திருவுருவச்சிலையை மானசீகமாக வணங்கிவிட்டு ஊருக்குத் திரும்பினோம். கேரளத்தில் மழை நம்மை வழியனுப்ப தமிழகத்தில் கதிரவன் தன் கதிர்களால் நம்மை ஆசீர்வதித்து வரவேற்றது. அப்போது தான் நாம் சூரியனைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிறது என்பதை உணருகிறோம். வீட்டை அடைந்து உள்ளே நுழையும் போது மேலே பார்க்கிறோம். ஒரு சொட்டு மழைத்துளி நம் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. அது “என்னை விரும்பிய உன்னை எவ்வாறு விட்டு இருப்பேன்? அதான் உன்னோடு வந்துவிட்டேன்” என்று சொல்வது போல் இருந்தது.

முற்றும்...



No comments:

Post a Comment