திருச்சி, தஞ்சை பகுதி கோயில்களுக்குச் செல்கிறோம் என்றதுமே அந்தப் பகுதியின் சிறந்த உணவகங்களைத் தொகுத்து ரகசியமாக வைத்துக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருந்து கல்லூரி நண்பர்கள் திண்டுக்கல் பிரபாகரன் மற்றும் கோவை அரூண் ஆகியோருடன் காரில் பயணம். திருச்சியை அடைந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கூகிள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுகொண்டிருந்தோம். காலை உணவிற்கு ஸ்ரீரங்கம் ஆருகில் திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை என்று குறித்திருந்தேன். ஆனால் நண்பர்களின் குறி ரங்கநாதராக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தசாரதி விலாஸை மறந்தேன்.
ஆனால் 'கூகிள் ஆண்டவரின்' தவறான வழிகாட்டுதலில் நமது வண்டி தானாக திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயம் முன் போய் நின்றது. "ஜம்புகேஷ்வரா!! உன் மகிமையே மகிமை!!" என்று வேண்டிக் கொள்கிறோம். சரி அங்கிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வழி கேட்க அரூண் எத்தனிப்பதற்குள், கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமின்றி அரூணை முந்திக்கொண்டு பார்த்தசாரதி விலாஸ் உணவகத்திற்கு வழி கேட்கிறோம். அருகிலேயே இருந்தது அந்த உணவகம். ஜம்புகேஷ்வரர் ஆலய நுழைவாயிலின் முன்புறம் உள்ள தெருவில் (மேல விபூதி பிரகாரம்) நம் வலதுபுறம் திரும்பி சிறிது தூரம் நடந்தால் வண்ணமயமான பெயர் பலகையுடன் பார்த்தசாரதி விலாஸ் நம்மை வரவேற்கிறது.
உள்ளே செல்கிறோம். உணவகத்தின் பாரம்பரியம் கட்டிடத்தில் தெரிகிறது. பழைய காலத்துக் கட்டிடம் அது. தேக்கு மரக் கட்டைகள் வரிசையாய் அடுக்கப்பட்டு அதன் மேல் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. இருவர் சேர்ந்து அணைக்கும் அளவுக்கு பருமனான சதுரத் தூண்கள் அந்தக் கட்டைகளைத் தாங்குகின்றன. அறை முழுதும் சாமி படங்கள் நிறைக்க அங்கு வீசிய சாம்பிராணி மணம் நாம் ஒரு உணவகம் அன்றி மடத்திற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது.
நாம் உள்ளே சென்றதில் இருந்து "ஒரு சூப்பர்... ரெண்டு சூப்பர்" என்று சத்தம் கேட்க, ஒன்றும் புரியாமல் இருக்கையில் சென்று அமர்கிறோம். பளிங்கு மேசை நமக்காக துடைக்கப்பட்டு, இளம் வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்படுகிறது. தண்ணீர் வைத்த அம்மையார் "வெளியூரில் இருந்து வருகிறீர்களா?" என்று நம்மைக் கேட்டு, "இங்கு நெய் தோசை நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாம் கேட்காமலேயே நமக்குப் பரிந்துரைத்தார்.
சப்ளையர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க நாம் நெய் என்று ஆரம்பித்து தோசை என்று முடிப்பதற்குள் "மூனு சூப்பர்" என்று கூறிவிட்டு நகர்ந்தார். 'சூப்பர்' என்றால் அங்கு நெய் தோசை என்று அப்போது புரிந்தது. 'மாவு' என்றால் ஊத்தாப்பமாம்.
சிறிது நேரத்தில் நெய் தோசை வந்து இலையை நிறைத்தது. இலையில் விழுந்த வேகத்தில் சூடான தோசையில் இருந்து வந்த ஆவி நெய் மணத்தையும் தன்னோடு பரப்பியது. நெய் தாராளமாக விடப்பட்ட பொண்ணிற தோசையில் மாஸ்டர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுழற்றியதால் ஏற்பட்ட ரேகை காவி நிறத்தில் வளையமாய் இருந்தது. தோசையைக் கொஞ்சமாய் பிட்டு சாம்பார் சட்னி எதுவும் தொடாமல் முதல் வாய் அப்படியே சாப்பிட்டு நெய் மணத்தை அனுபவித்தோம். உணவு உண்ணாத குழந்தை கூட தோசை என்றால் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடும் அல்லவா, நாமும் அது போலவே இந்த நெய் தோசையின் சுவையில் குழந்தையானோம். திருவானைக்காவலில் குடிகொண்டிருக்கும் ஜம்புகேஷ்வரரைச் சுற்றி எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருப்பதைப் போல நெய் தோசையின் சுவையில் நமது நாவிலும் நீர் ஊறுகிறது. உண்மையாகவே 'சூப்பர்' சூப்பர் தான்....
பிறகு அந்த நெய் தோசையைக் கொஞ்சம் சாம்பாரில் நனைத்து சுவைத்தபோது எப்போதும் சாப்பிடும் தோசையில் ஒரு புதிய சுவை தெரிந்தது. நம் ஊரில் கிடைக்கும் பருப்பு சாம்பார் அல்லாமல் சின்ன வெங்காயம் போடப்பட்ட சாம்பார் அருமையாக இருந்தது. நெய் தோசையும் வெங்காய சாம்பாரும் போட்டி போட்டுக் கொண்டு சுவையைக் கொடுத்தன. பிறகென்ன ஒரு வாய் நெய் மணத்தோடு தோசை மட்டும், ஒரு வாய் சாம்பாருடன், ஒரு வாய் சட்னியுடன் என மாறி மாறி சுவைத்து முடித்தோம்.
(பின்குறிப்பு: நெய் தோசையின் மணத்தில் மயங்கி அதை சுவைக்க ஆரம்பித்துவிட்டேன். இடையில் நினைவு வர பிறகு படம்பிடிக்கப்பட்டது தான் அந்த மீதி தோசை )

அரூண் |
பிரபாகரன் |
தோசையின் சுவையோடு நம் மனதை நிறைத்தது அந்த தோசையின் விலை. ஆம், வெறும் 40 ரூபாய் தான். இந்த விலையில் வேறெங்கும் நெய் தோசை கிடைக்குமா என்பது ஐயமே.. இன்றைய கார்ப்பரேட் உணவகங்களுக்கிடையில் இது போன்ற ஜனரஞ்சகமான உணவகங்கள் கொடுக்கும் சுவை உண்பதைக் கூட ஒரு நல்ல அனுபவமாக மாற்றி விடுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரரின் ஆலயத்தைப் போல் பார்த்தசாரதி விலாஸ் தோசையின் ருசி காலத்தைக் கடந்து நிற்கிறது.
(பின்குறிப்பு: நெய் தோசையின் மணத்தில் மயங்கி அதை சுவைக்க ஆரம்பித்துவிட்டேன். இடையில் நினைவு வர பிறகு படம்பிடிக்கப்பட்டது தான் அந்த மீதி தோசை )