Saturday, 15 July 2017

பருவமழைப் பயணம் - குட்டிக்கானம் (நிறைவு)


பருவமழைப் பயணம்-குட்டிக்கானம் (பாகம்-1) இங்கே        

ஐந்து நிமிடம் நின்ற மழை நாம் அறையை அடைவதற்குள் மீண்டும் பெய்யத் தொடங்கியது. மழையும் பனியும் மாறி மாறிக் கண்ணாமூச்சி காட்டி விளையாடின. சூழல் தெளிவாக இருக்கும் அடுத்த நொடி பனி நம்மைச் சூழ்ந்துவிடும். மழை நின்றதுபோல் இருக்கும் ஆனால் அடுத்த நொடியே மீண்டும் பெய்யத் தொடங்கும். நம்மூர் மழைக்கும் கேரளத்து மழைக்கும் உள்ள வித்தியாசம் கோயில் யானைக்கும் காட்டு யானைக்கும் உள்ள வித்தியாசம். ஒரே நிமிடத்தில் லட்சம் லிட்டர் நீரைக் கொட்டும் கட்டுக்கடங்காத மழை அது. பெய்தால் ஒரு நாள் முழுதும் கூடப் பெய்யும். எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்று கணிக்க முடியாது. 



முற்றத்தில் மழையின் சங்கீதத்தை ரசித்துக்கொண்டு நின்றோம். சிலருக்கு அது இறைச்சல். சிலர் ‘பட்டாசு சத்தம் போல’ என்பர். நமக்கு அது சங்கீதம்…. பனியும், மழையும், காற்றும் ஒன்று சேர்ந்து கச்சேரி செய்தன. பனியும் மழையும் ஒரே நேரத்தில் காட்சியளித்தது குட்டிகானத்தில் மட்டுமே. காற்றின் வேகம் மழையை முற்றத்திற்குள் கொண்டுவந்து விட்டது..



ஒன்பது மணியளவில் ஊர் அடங்கிவிடுகிறது. அறையிலேயே இரவு உணவை முடித்து, மழையின் தாலாட்டில் துயில் கொண்டோம். 


காலை ஆறு மணி… தானாக விழிப்பு வந்து எழுந்தோம். மழை தன் தாலாட்டை நிறுத்தியிருக்கவில்லை. கதவைத் திறந்தபோது அதற்காகவே காத்திருந்தது போல் காற்று, மழைச்சாரலை அள்ளி முகத்தில் தெளித்தது. ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. சிறிது நேரத்தில் எதிரே இருந்த டீக்கடை திறந்ததும் போய் ஒரு சாயா அருந்தினோம். சூடான சாயா குளிரைத் தற்காலிகமாக விரட்டியது. சாலையில் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்படியே காலாற ஒரு நடை சென்றோம். அதிகாலைக் காற்றும் நடையும் தூக்கக் கலக்கத்தை நீக்கிப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.


ஐஐஐ..... ஜாலி.....

அறைக்கு வந்து விடுதி பொறுப்பாளரிடம் சுடுதண்ணீர் கேட்டோம். அவர் இல்லை என்றார். உணவகங்களில் கூடக் குடிக்க சுடுதண்ணீர் கொடுக்கும் கேரளத்தில் குளிக்க சுடுதண்ணீர் இல்லை என்றது விசித்திரமாக இருந்தது. வேறு வழியின்றிப் பச்சைத் தண்ணீரில் நடுங்கிக்கொண்டே குளித்தோம்.

மழை நின்றதும் பாஞ்சாலிமேடு என்ற இடத்திற்குக் கிளம்பினோம். பனி மிக அதிகமாக இருந்தது. விளக்கொளியுடன் மட்டுமே பைக்கைச் செலுத்த முடிந்தது. குட்டிக்கானத்தில் இருந்து கோட்டயம் சாலையில் ஒரு மூன்று கிமீ சென்றதும் ஓரிடத்தில் தண்ணீர் விழும் பேரிறைச்சல் கேட்கிறது. தொடர்ந்து சென்றபோது வலஞ்சகானம் நீர்வீழ்ச்சி  சுமார் 75 அடி உயரத்தில் இருந்து விழுந்துகொண்டிருக்கிறது. சாலை ஓரத்திலேயே இருக்கிறது இந்த அழகிய அருவி. விழுந்த வேகத்தில் கீழிருந்து மேலெழும் நீர்த்துளிகள் நம் மீது பட்டு சிலிர்ப்பைக் கொடுக்கிறது.


வலஞ்சகானம் அருவி
அருவியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் பாஞ்சாலிமேடு செல்லும் சாலை இடதுபுறம் பிரிகிறது. அடர்ந்த காடுகள் சூழ்ந்த அழகிய இயற்கைக் காட்சிகள் பல நிறைந்த குறுகிய சாலை அது. ஆங்காங்கே மரங்கள் வெட்டப்பட்டு மலைச்சரிவுகளில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. சில இடங்களில் பாக்கு மரங்கள் அணிவகுக்கின்றன.



ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் சாலை ஓரத்தில் அருவி கொட்டிக்கொண்டிருந்தது.

பாஞ்சாலிமேடு செல்லும் வழியில்
குட்டிக்கானத்தின் மற்றொரு சிறப்பு இப்படி அதைச் சுற்றிச் சாலை ஓரங்களில் கொட்டிக்கொண்டிருக்கும் எண்ணிலடங்கா அருவிகள். காண்போரை வசீகரிக்கக்கூடியவை அவை.  ரசித்துக்கொண்டே பாஞ்சாலிமேட்டை அடைகிறோம். பாஞ்சாலிமேடு அழகிய புல்வெளி சூழ்ந்த ஒரு மலைக்குன்று. வனவாசத்தின்போது பாண்டவர்களுடன் பாஞ்சாலி இங்கு வந்து தங்கியதாகக் கூறுகின்றனர். தற்போது அது கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தளம். 



பாஞ்சாலிமேடு அடிவாரம்
அடிவாரத்தில் இருந்து மலையுச்சி வரை சிலுவை நிறுவப்பட்டிருக்கிறது. சுற்றிலும் புல்வெளி சூழ்ந்திருக்க மலையேறுகிறோம். மழைநீரால் செழித்து இளம்பசும்புற்கள் இரண்டு அடி உயரம் வளர்ந்திருந்தது. செழித்து வளர்ந்த புற்கள் காற்றில் அசைந்து ரம்யமான சூழலை ஏற்படுத்தியது. பச்சை நிறத்திற்கு ஒரு பண்பு உண்டு. நம்மைச் சுற்றி பசுமையாக இருந்தால் அது புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி அது மனதிற்கு அமைதியையும் தெளிவான சிந்தனையையும் கொடுக்கக்கூடியது. கவிஞர்கள் பலர் கவிதை எழுத இயற்கையான சூழலைத் தேடிச் செல்வது இதனால் தான்.  புல்வெளியைப் பனி வளைத்திருந்தது.


பச்சை மற்றும் வெண்மையைத் தவிர அங்கு வண்ணங்கள் எதுவும் இல்லை. இரண்டே வண்ணங்களில் இறைவன் வரைந்த அழகிய ஓவியம் அது.


மேலே செல்லச் செல்ல குன்றின் அகலம் குறுகிப் பாதையின் அகலத்திற்கு வருகிறது. அதுமட்டுமின்றி காற்றின் வேகமும் அதிகரித்து நம்மைத் தள்ளுகிறது. மூடுபனியும் அளவுக்கு அதிகமாக ஆகிப் பார்வையை மறைத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் முன்னேற இயலவில்லை.


நம்மைத் தவிர அப்போது அங்கு வேறு யாரும் இல்லை. சூழ்ந்திருக்கும் பனி, குளிர் காற்று, உயர்ந்து வளர்ந்த புற்கள், அதோடு மிதமான சாரலும் சேர்ந்துகொள்ள இவை அனைத்தும் ஒரு அற்புதமான சூழலைக் கொடுத்தது. சிறிது நேரம் அங்கு இருந்து அந்த அற்புதக் சூழலை அனுபவித்துவிட்டு நகர்ந்தோம். 


பாஞ்சாலிமேடு
அறையை அடைந்து ஊருக்குக் கிளம்பினோம். சாரல் அடித்துக்கொண்டே இருந்தது. பீர்மேடைக் கடந்து செல்லும்போது வலதுபுறம் பருந்தும்பாறை என்று பெயர்ப் பலகையைக் கண்டு பைக்கைத் திருப்பினோம். அருவிகளும் தேயிலைத் தோட்டங்களும் சூழ்ந்த அழகிய சாலை நம்மை அழைத்துச் செல்கிறது.  

பீர்மேடு-குமுளி சாலையில்

பருந்தும்பாறை ஒரு எழில்மிகு பள்ளத்தாக்கு. நீண்டு செல்லும் மலைத்தொடர் பசுமையால் போர்த்தப்பட்டிருக்கிறது. பாறை முழுதும் பச்சை வண்ணம் தீட்டப்பட்டது போல் புசும்புற்கள் அப்பிக் கிடக்கிறது. புற்களுக்கிடையில் மழை நீர் கசிந்து வழிந்து பள்ளத்தாக்கில் போய் மறைந்தது.

பருந்தும்பாறை
மலைவிளிம்பில் நின்று சபரிமலைக் காடுகளைக் காணலாம்.  பருந்தும்பாறையின் கீழிருந்து மேலே வரும் காற்று பறவையைப் போல் நம்மையும் தூக்குகிறது. மலைவிளிம்பில் நின்று கைகளைச் சிறகாய் விரித்துப் பறக்க முயல்கிறோம். உடல் மட்டும் அங்கிருக்க மனது அந்தப் பள்ளத்தாக்கு முழுதும் சிறகடித்துப் பறக்கிறது.




நாம் அங்கு சென்றவுடன் மழை கொட்ட ஆரம்பித்தது. அங்கே இருந்த ஒரு தேனீர் கடையின் தாழ்வாரத்தில் நின்று மழையை ரசித்தோம். அப்போது அங்கு நாம் கண்ட காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அனைவரும் மழைக்கு ஒதுங்கியிருக்க ஒரு தந்தை மட்டும் ஒரு கையில் குடையுடன், தன் சிறு மகனைத் தோளில் சுமந்துகொண்டு மலைவிளிம்பில் உலா வந்தார். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று கட்டுப்படுத்தாமல் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுத்த அந்தத் தந்தையின் செயலுக்கு ரசிகனானோம்.  அந்தக் குழந்தை தான் எத்தனை பாக்கியம் செய்தது.


பருந்தும்பாறை-வண்டிப்பெரியார் சாலையில்
பைக்கைக் கிளப்பி வண்டிப்பெரியார் வழியாக சாரலில் நனைந்துகொண்டே சென்று குமுளியை அடைந்தோம். நம் பயணத்தின் முடிவு என்பதை உணர்ந்து தான் என்னவோ இரண்டு நாட்களாக அற்புதமான தருணங்களைக் கொடுத்த மழையும் இப்போது பெய்வதை நிறுத்தியிருந்தது. மலைச்சாலையில் இறங்கி லோயர்கேம்பில் உள்ள முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய “கர்னல்.ஜான் பென்னிகுவிக்” அவர்களின் மணிமண்டபத்திற்குச் சென்றோம்.

பென்னிகுவிக் மணிமண்டபம்
சென்றமுறை வாகமன் வந்தபோது அவரைக் காணாது சென்றுவிட்டோம். அவரைப்போல் மழையின் அருமையை உணர்ந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. ஆகையால் இந்தப் பருவமழைப் பயணத்தை அவரை தரிசித்து முடிப்பதே உசிதமாக இருக்கும் என்று தோன்றியது.

கர்னல்.ஜான் பென்னிகுவிக்

மணிமண்டபத்தின் உள்ளே சென்று அவரின் திருவுருவச்சிலையை மானசீகமாக வணங்கிவிட்டு ஊருக்குத் திரும்பினோம். கேரளத்தில் மழை நம்மை வழியனுப்ப தமிழகத்தில் கதிரவன் தன் கதிர்களால் நம்மை ஆசீர்வதித்து வரவேற்றது. அப்போது தான் நாம் சூரியனைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிறது என்பதை உணருகிறோம். வீட்டை அடைந்து உள்ளே நுழையும் போது மேலே பார்க்கிறோம். ஒரு சொட்டு மழைத்துளி நம் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது. அது “என்னை விரும்பிய உன்னை எவ்வாறு விட்டு இருப்பேன்? அதான் உன்னோடு வந்துவிட்டேன்” என்று சொல்வது போல் இருந்தது.

முற்றும்...



Sunday, 2 July 2017

பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை - திருவானைக்காவல்


திருச்சி, தஞ்சை பகுதி கோயில்களுக்குச் செல்கிறோம் என்றதுமே அந்தப் பகுதியின் சிறந்த உணவகங்களைத் தொகுத்து ரகசியமாக வைத்துக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருந்து கல்லூரி நண்பர்கள் திண்டுக்கல் பிரபாகரன் மற்றும் கோவை அரூண் ஆகியோருடன் காரில் பயணம். திருச்சியை அடைந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கூகிள் மேப்பின் வழிகாட்டுதலின்படி சென்றுகொண்டிருந்தோம். காலை உணவிற்கு ஸ்ரீரங்கம் ஆருகில் திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை என்று குறித்திருந்தேன். ஆனால் நண்பர்களின் குறி ரங்கநாதராக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தசாரதி விலாஸை மறந்தேன்.

ஆனால் 'கூகிள் ஆண்டவரின்' தவறான வழிகாட்டுதலில் நமது வண்டி தானாக திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் ஆலயம் முன் போய் நின்றது. "ஜம்புகேஷ்வரா!! உன் மகிமையே மகிமை!!"  என்று வேண்டிக் கொள்கிறோம். சரி அங்கிருந்து ஸ்ரீரங்கத்திற்கு வழி கேட்க அரூண் எத்தனிப்பதற்குள், கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனமின்றி அரூணை முந்திக்கொண்டு பார்த்தசாரதி விலாஸ் உணவகத்திற்கு வழி கேட்கிறோம். அருகிலேயே இருந்தது அந்த உணவகம். ஜம்புகேஷ்வரர் ஆலய நுழைவாயிலின் முன்புறம் உள்ள தெருவில் (மேல விபூதி பிரகாரம்) நம் வலதுபுறம் திரும்பி சிறிது தூரம் நடந்தால் வண்ணமயமான பெயர் பலகையுடன் பார்த்தசாரதி விலாஸ் நம்மை வரவேற்கிறது. 



உள்ளே செல்கிறோம்.  உணவகத்தின் பாரம்பரியம் கட்டிடத்தில் தெரிகிறது.  பழைய காலத்துக் கட்டிடம் அது. தேக்கு மரக் கட்டைகள் வரிசையாய் அடுக்கப்பட்டு அதன் மேல் கான்கிரீட் போடப்பட்டிருந்தது. இருவர் சேர்ந்து அணைக்கும் அளவுக்கு பருமனான சதுரத் தூண்கள் அந்தக் கட்டைகளைத் தாங்குகின்றன. அறை முழுதும் சாமி படங்கள் நிறைக்க அங்கு வீசிய சாம்பிராணி மணம் நாம் ஒரு உணவகம் அன்றி மடத்திற்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. 



நாம் உள்ளே சென்றதில் இருந்து "ஒரு சூப்பர்... ரெண்டு சூப்பர்" என்று சத்தம் கேட்க, ஒன்றும் புரியாமல் இருக்கையில் சென்று அமர்கிறோம். பளிங்கு மேசை நமக்காக துடைக்கப்பட்டு, இளம் வாழை இலை விரிக்கப்பட்டு ஒரு குவளையில் தண்ணீரும் வைக்கப்படுகிறது. தண்ணீர் வைத்த அம்மையார் "வெளியூரில் இருந்து வருகிறீர்களா?" என்று நம்மைக் கேட்டு, "இங்கு நெய் தோசை நன்றாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாம் கேட்காமலேயே நமக்குப் பரிந்துரைத்தார். 

சப்ளையர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க நாம் நெய் என்று ஆரம்பித்து  தோசை என்று முடிப்பதற்குள் "மூனு சூப்பர்" என்று கூறிவிட்டு நகர்ந்தார். 'சூப்பர்' என்றால் அங்கு நெய் தோசை என்று அப்போது புரிந்தது. 'மாவு' என்றால் ஊத்தாப்பமாம். 

சிறிது நேரத்தில் நெய் தோசை வந்து இலையை நிறைத்தது. இலையில் விழுந்த வேகத்தில் சூடான தோசையில் இருந்து வந்த ஆவி நெய் மணத்தையும் தன்னோடு பரப்பியது. நெய் தாராளமாக விடப்பட்ட பொண்ணிற தோசையில் மாஸ்டர் தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுழற்றியதால் ஏற்பட்ட ரேகை காவி நிறத்தில் வளையமாய் இருந்தது. தோசையைக் கொஞ்சமாய் பிட்டு சாம்பார் சட்னி எதுவும் தொடாமல்  முதல் வாய் அப்படியே சாப்பிட்டு நெய் மணத்தை அனுபவித்தோம். உணவு உண்ணாத குழந்தை கூட தோசை என்றால் ஒன்றுக்கு இரண்டாக சாப்பிடும் அல்லவா, நாமும் அது போலவே இந்த நெய் தோசையின் சுவையில் குழந்தையானோம். திருவானைக்காவலில் குடிகொண்டிருக்கும் ஜம்புகேஷ்வரரைச் சுற்றி எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருப்பதைப் போல நெய் தோசையின் சுவையில் நமது நாவிலும் நீர் ஊறுகிறது. உண்மையாகவே 'சூப்பர்' சூப்பர் தான்....


பிறகு அந்த நெய் தோசையைக் கொஞ்சம் சாம்பாரில் நனைத்து சுவைத்தபோது எப்போதும் சாப்பிடும் தோசையில் ஒரு புதிய சுவை தெரிந்தது. நம் ஊரில் கிடைக்கும் பருப்பு சாம்பார் அல்லாமல் சின்ன வெங்காயம் போடப்பட்ட சாம்பார் அருமையாக இருந்தது. நெய் தோசையும் வெங்காய சாம்பாரும் போட்டி போட்டுக் கொண்டு சுவையைக் கொடுத்தன. பிறகென்ன ஒரு வாய் நெய் மணத்தோடு தோசை மட்டும், ஒரு வாய் சாம்பாருடன், ஒரு வாய் சட்னியுடன் என மாறி மாறி சுவைத்து முடித்தோம். 

அரூண்

பிரபாகரன்

தோசையின் சுவையோடு நம் மனதை நிறைத்தது அந்த தோசையின் விலை. ஆம், வெறும் 40 ரூபாய் தான். இந்த விலையில் வேறெங்கும் நெய் தோசை கிடைக்குமா என்பது ஐயமே.. இன்றைய கார்ப்பரேட் உணவகங்களுக்கிடையில் இது போன்ற ஜனரஞ்சகமான உணவகங்கள் கொடுக்கும் சுவை உண்பதைக் கூட ஒரு நல்ல அனுபவமாக மாற்றி விடுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரரின் ஆலயத்தைப் போல் பார்த்தசாரதி விலாஸ் தோசையின் ருசி காலத்தைக் கடந்து நிற்கிறது.

(பின்குறிப்பு: நெய் தோசையின் மணத்தில் மயங்கி அதை சுவைக்க ஆரம்பித்துவிட்டேன். இடையில் நினைவு வர பிறகு படம்பிடிக்கப்பட்டது தான் அந்த மீதி தோசை )

Friday, 23 June 2017

இயன்றவரும்... இயலாதவரும்...

நேரம், காலை 8:15. சென்னை  எழும்பூரிலிருந்து 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' கிளம்புகிறது. சொந்த வேலையாக  சென்னை சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து மதுரைக்கு முதல் முறை பகலில் ரயில்பயணம். எனக்கு 'சைடு அப்பர் பெர்த்'  முன்பதிவாகி இருந்தது. லோயர் பெர்த்தில் திருச்சி செல்ல வேண்டிய ஒருவர். என்னைக் கீழே அமரச் சொல்லிவிட்டு அவர் மேலே சென்று படுத்துக்கொண்டார். ஜன்னல் காற்றை அனுபவித்துக்கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணித்தேன்.

ரயில் தாம்பரம் தாண்டியதும் கால்கள் செயலிழந்த ஒருவர் தவழ்ந்து கொண்டு வந்தார். அவர் கையில் ஒரு துணி இருந்தது. வந்தவர் அந்தத் துணியை வைத்து நடைபாதையில் இருந்த தூசுகள் முழுதும் துடைக்க ஆரம்பித்தார். துடைத்துவிட்டு நடைபாதையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். வாய் திறந்து யாரிடமும் எதும் கேட்கவில்லை. ஒரு சிலர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினார். 

பிறகு செங்கல்பட்டில் ஒரு திருநங்கை ஏறி அனைவரிடமும் பணம் வேண்டினார்.  யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்று நன்கு அறிந்து வைத்திருக்கிறார். குடும்பமாய் வந்திருந்தவர்களை அவர் தொந்தரவு செய்யவில்லை. இளைஞர்கள் பலர் அவர் கேட்பதற்குள்ளாகவே பணத்தை நீட்டினர். பணம் தரத் தயங்கிய ஒரு சிலரையும் அவர் விடவில்லை. நின்று பெற்றுக் கொண்டே கிளம்பினார். பணம் கொடுத்தவர்களின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கையில் பத்து ரூபாய் நோட்டுக்கள் கத்தையாய்  இருந்தன. மேல்மருவத்தூர் வந்ததும் இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் போய் குத்தவைத்து அமர்ந்துகொண்டார்.  

அடுத்து ஒரு தட்டில் அம்மன் படம், விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டும், 'ஓம்சக்தி.... ஓம்சக்தி...' என்று கூறிக்கொண்டும் சிவப்பும் மஞ்சளும் கலந்த உடை அணிந்த மூன்று பெண்கள் ரயிலில் ஏறிக் காணிக்கை கேட்டனர். மறக்காமல் கையில் வேப்பிலையும் எடுத்து வந்திருந்தனர். வந்ததற்காக சிலர் சில்லரைக் காசுகளைக் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. திண்டிவனம் வந்ததும் இறங்கிவிட்டனர்.

கொஞ்ச நேரத்தில் வெள்ளை நிற கவுன் அணிந்த ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை வந்தது. பல நாள் உடுத்தியதில் வெள்ளை உடை மஞ்சளாய் காவியாய் மாறியிருந்தது. திடீரென்று அந்தக் குழந்தை, ரயில் பெட்டியின் ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் பல்டி அடித்துக்கொண்டே சென்றது. அதை பார்த்த ஒரு வயதான அம்மா அந்தக் குழந்தையை அழைத்து கையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து "நீ இதெல்லாம் செய்ய வேண்டாம்" என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்ற குழந்தை நேராகப் போய் கதவருகே மறைந்து அமர்ந்திருந்த தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்தது. அடுத்து கையில் வைத்திருந்த வளையத்தை கால் வழியாக இடுப்பிற்கு கொண்டுவந்து , உடலை ரப்பர் போல் வளைத்துத் தலையை மேலிருந்து கீழாக வளையத்திற்குள் விட்டு முதுகு வழியாக வளையத்தை வெளியே எடுத்தது. இதைப் பார்த்துப் பதறிய அந்த வயதான அம்மா அந்த குழந்தையை மீண்டும் மீண்டும் அழைத்தும் அந்தக் குழந்தை அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் காரியத்தில் கருத்தாக இருந்தது. பிறகு ஒரு தட்டைக் கொண்டுவந்து அனைவரிடமும் நீட்டியது. அந்த வயதான அம்மையார் அருகில் வந்தபோது வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, வளர வளர வெட்டப்படும் தேயிலைச் செடி ஏனோ என் நினைவிற்கு வந்தது.

விழுப்புரத்தில் அவர்கள் இறங்கிவிட அங்கே பார்வையற்ற ஒருவர் ரயிலில் ஏறினார்.  ஏடிம் கவர், ரேசன் கார்டு கவர் போன்றவற்றை விற்று அதில் வரும் பணத்தைப் பார்வையற்றோர் ஆசிரமத்திற்கு அளிப்பதாகக் கூறினார். பெரிய வரவேற்பு இல்லை அவருக்கு. ஒரு சிலர் மட்டும் அனுதாபத்தில் அவர் விற்ற பொருட்களை வாங்கினர்.

இவ்வாறாக திருச்சி வரை ஒவ்வொருவராக மாறி மாறி தங்கள் பிழைப்புக்காக அந்த ரயிலைப் பயன்படுத்தினர். திருச்சியில் முக்கால்வாசிக் கூட்டம் இறங்கிய பிறகு மதுரை வரை வேறு யாரும் இவ்வாறு வரவில்லை

இந்த ரயில் பயணத்தில் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. இயலாதவர் கூட யாசிக்க மறுத்து உழைக்கிறார், ஆனால் இயன்றவரோ உழைக்க மறுத்து மற்றவரை அண்டிப் பிழைக்கிறார். 

அந்தக் கால் இழந்தவரும், கண் இல்லாதவரும் உழைத்துப் பிழைக்க நினைத்ததில் எனக்கு மேலாகத் தெரிந்தனர். சமூகப் புறக்கணிப்பால் யாசிக்கும் அந்தத் திருநங்கையின் செயல் கூடத் தவறாகத் தெரியவில்லை. ஆனால் அம்மன் பெயரைச் சொல்லி யாசித்த அந்தப் பெண்களின் கண்களுக்கு உழைத்துப் பிழைக்கும் அந்த மாற்றுத்திறனாளிகள் தெரியவில்லையோ?? அதுபோல் பெற்ற குழந்தையை யாசிக்க வைத்து வேடிக்கை பார்த்த அந்தத் தாயின் செயலும் ஒப்பவில்லை. தான் யாசித்துக் கூட பெற்ற பிள்ளையைக் காப்பற்றலாம் என்று ஏனோ அந்தத் தாய்க்குத் தோன்றவில்லை.  "இயலாதவரால் இயலும்போது, இயன்றோர் இயலாதவரானார்".


இவர்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது கடவுள் நமக்கு எவ்வளவோ மேலான வாழ்வை வழங்கியிருக்கிறார் அல்லவா??


Saturday, 17 June 2017

வாகமன் பயணம் - நிறைவு


மாலையில் கிளம்பி எலப்பாரா சாலையில் இருக்கும் தற்கொலை முனை என்று அழைக்கப்படும் மூப்பன்பாறாவிற்குச் சென்றோம். சாலையில் இருந்து ஒரு இரண்டு கிமீ உள்ளே செல்ல வேண்டும். சொந்த வாகனத்தில் செல்லலாம். உள்ளே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆகையால் அவர்களின் வாகனத்தைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பைக்கை நிறுத்திவிட்டு நடராஜா சர்வீசில் கிளம்பினோம். இருமருங்கும் இருக்கும் புல்மேவிய குன்றுகளுக்கு நடுவில் பாதை நம்மை அழைத்துச் செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி மட்டுமே. பூமிக்குப் பச்சிலையை அரைத்து அப்பியது போன்ற தோற்றம். வாகமனின் ஆளமில்லா மண் மரங்கள் வேரூன்ற வசதியில்லாததால் புல்வெளியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே தேங்கிய மண்ணில் காட்டுக் கொய்யா மரங்கள் மொய்த்து வளர்ந்திருக்கிறது. மலைவிளிம்பில் பாராகிளைடிங் நடப்பதைக் காண முடிந்தது. பூதக் கண்ணாடியைக் கொண்டு தூரத்தில் இருந்து ரசித்தோம். அதற்குள் சூழலைப் பனி ஆக்கிரமித்ததால் நாம் அருகில் சென்றபோது முடித்திருந்தனர். 

மலை விளிம்பிற்குச் சென்றோம். மலைச்சரிவும் புல்வெளி படர்ந்திருக்கிறது. புல்வெளியோடு சேர்த்து வென்பனி நம்மையும் அணைத்தது. நேரம் ஆக ஆக அந்த அணைப்பின் இறுக்கம் அதிகமாகி சிலிர்ப்பைக் கொடுத்தது. இயற்கையின் அரவணைப்பில் கவலையைத் துறந்த துறவியானோம்.

மூப்பன்பாறா
நாம் கண்ட பள்ளத்தாக்குகளிலேயே அழகானது இது தான். இதற்கு தற்கொலை முனை என்று தவறான பெயர் வைத்தது யாரோ?? பூலோக சொர்க்கம் இங்கிருக்க, இங்கே வந்து தற்கொலை செய்து சொர்க்கம் செல்ல யார் விரும்புவார்? வாழ்வை வெறுத்து தற்கொலை எண்ணம் கொண்டவரும் இங்கு வந்தால் போதும் இவ்விடத்தின் ரம்யம் மனதை இளக்கி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்யும். 




தூரத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி யாரும் அங்கே செல்ல இயலாதபடி காவல் அமைக்கப்பட்டிருந்தது. புல்வெளியில் சிறிது நேரம் படுத்து வானை நோக்கினோம். மனதின் பாரங்கள் இறங்கி காற்றாய் உணர்ந்தோம். வானத்தைப் போல் எண்ணங்களும் எங்கோ பறந்து உயரே சென்றது.  வழக்கமான அலுவல் நாட்களின் கசகசப்பு நீங்கி மனம் புத்துணர்வு பெற்றது.


திரும்பி நடராஜாவில் கிளம்பி புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஒரு வால்வோ கார் எங்கள் அருகில் வந்து நிற்க அதில் வந்த உதயநிதி அவர்களை ரசிகர்கள் மொய்த்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாமும் தான்.   நடன மாஸ்டர் பிருந்தா இருந்தார். வினோத்  கலா அக்காவைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று சொல்ல அவர் சிரித்துவிட்டுச் சென்றார்.

உதயநிதி

பிருந்தா மாஸ்டருடன்..

‘மொட்டைக்குன்று’ என்று அழைக்கப்படும் வாகமன் புல்வெளிகளுக்குச் சென்றோம். பையா படத்தில் கார்த்தியும், தமன்னாவும் ‘அடடா, மழடா.. அடமழடா…’ என்று ஆடிப் பாடும் அழகிய பாடல் இங்கே படமாக்கப்பட்டது. அனுமதி நேரம் முடிந்ததால் உள்ளே செல்ல இயலவில்லை. அறைக்கு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தோம். இரவு உணவாக புரோட்டாவும் சிக்கனும் அந்த நாளை நிறைவாக முடித்து வைத்தது.


இருள் மெல்ல விலகிப் புதிய விடியலைக் கொடுத்தது. அறைக்கு வெளியே வந்து பார்த்தோம். ஊரே ஃபிரிட்ஜில் வைத்தது போல் ஃபிரஷாக இருந்தது.  இருள் விலகினாலும் பனி விலக மறுத்து காதலன் காதலியைப் பிரிய மனமின்றிப் பிரிவதுபோல் பனி மெல்ல மெல்ல விலகியது. 


அதிகாலை பைக்கில் ஒரு சுற்று சென்று வரக் கிளம்பினோம். ஆள்நடமாட்டம் இல்லாத பனி சூழ்ந்த சாலை.. குளிர் காற்று.. சுற்றிலும் பசுமை.. பைக்கில் நாம்…. பறவையானோம்... இலக்கின்றிப் பறந்தோம்..

வழியில் குரிசுமலை ஆசிரமத்தின் நுழைவாயிலைக் கண்டு அலசக் கிளம்பினோம் உள்ளே. குரிசுமலை ஆசிரமம் ஒரு தனி சாம்ராஜியம். உள்ளேயே குடியிருப்பு, பள்ளிக்கூடம், கடைகள், உணவகங்கள், பால்பண்ணை, சர்ச் என அத்தனையும் உள்ளது. 

குரிசுமலை ஆசிரம நுழைவாயில்
சாலையின் முடிவு நம்மை குரிசுமலையின் அடிவாரத்தில் கொண்டு போய் விட்டது. பைக்கை நிறுத்திவிட்டு மலையேறத் துவங்கினோம். கற்பாறைகளை ஒவ்வொன்றாய் கடந்து ஏறினோம்.

குரிசுமலை அடிவாரம்
தங்கல்பாறை போன்று இல்லாமல் முதல் பாதி தூரம் செங்குத்தாக ஏற வேண்டியுள்ளது.


அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை இயேசுநாதர் சிலுவை சுமப்பது முதல் சிலுவையில் அறையப்படுவது வரை உள்ள காட்சிகள் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஜெபம் செய்து மேலே ஏறுகிறார்கள்.
                                                 


எதிரே முருகன்மலை தெரிகிறது. இந்துக்களின் வழிபாட்டுத் தளம். இவ்வாறு மூன்று மதத்தினரும் ஆளுக்கொரு மலையைத் தங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

முருகன் மலை

இரண்டாம் பாதி ஏற எளிதாக உள்ளது. கரும்பாறையும் , பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் வளர்ந்த புற்களும் ஓவியம் போல் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் வெண்பனி வளைத்திருந்தது.


பூமி மேகத்திற்கு மேல் மிதப்பதைப் போல் உணருகிறோம். உச்சியை அடைந்தோம். ஒரு சிறிய தேவாலயம் அங்கே உள்ளது. ஆடம்பரங்கள் இன்றி எளிமையாக அமைந்த அந்த தேவாலயம் அவ்விடத்தின் அழகில் கலந்தது.

உச்சியில் உள்ள  தேவாலயம்
தேவாலயத்தின் பின்புறம் அழகிய பள்ளத்தாக்கு. அழகிய அவ்விடத்தைக் கண்டதும் மிட்டாயைக் கண்ட குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தோம். பாறைகள் ஒவ்வொன்றாய் ஏறி, இறங்கி, தவழ்ந்து, தாவிக் குதித்து மலையின் விளிம்பில் சென்று அமர்ந்தோம். சொர்க்கத்தின் மற்றொரு பரிணாமத்தைக் காண்கிறோம்.


காலுக்குக் கீழ் அடர்ந்த சோலைக்காடுகள் கண்களைக் குளிர்விக்க, கீழிருந்து மேல்நோக்கி வரும் காற்று உடலைக் குளிர்விக்கிறது. பல நேரம் அங்கே அமர்ந்து பள்ளத்தாக்கின் அழகிலும் அழத்திலும் மூழ்கினோம். 



அடிவாரத்தை அடைந்து பைக்கைக் கிளப்பி ஆசிரமத்திற்குட்பட்ட இந்தோ-சுவிஸ் பால்பண்ணையைப் பார்க்கச் சென்றோம். குளிர்பிரதேசங்களில் வளரும் அதிகப் பால் தரும் வெளிநாட்டு மாடுகள் அங்கே பராமரிக்கப்படுகிறது. நுழைவாயிலில் இருந்து நடந்து சென்றோம். நடுவே குறுகிய சாலை. இருபுறமும் அடர்ந்த புல்வெளி. புல்வெளியில் ஆங்காங்கே பைன் மரங்கள். அதன் நிழலில் பசும்புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் கன்றுகளும் பசுக்களும்... இவ்வளவு அழகான உணவுக்கூடம் யாருக்கும் வாய்க்காது.. அந்தப் பசுக்கள் மூன்று வேளை பால் கறக்கக் கூடியவை. அவை பசுக்கள் அல்ல பால் கறக்கும் இயந்திரங்கள்.


உள்ளே ஒரு சிறிய தேவாலயம் உள்ளது. அங்கே இறைபணி செய்த சன்னியாசிகளின் சமாதி அதன் வளாகத்தில் உள்ளது. அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. சிறிது நேரம் தியானம் செய்தோம். 

தேவாலயம்

அறைக்கு வந்து தயாரானோம். புட்டும் தொட்டுகொள்ள கடலைக் குழம்பும் காலை உணவாகக் கொண்டோம்.  அறையைக் காலிசெய்து விடுதி உரிமையாளருக்கு நன்றி கூறிக் கிளம்பினோம். செல்லும் வழியில் உள்ள  வாகமன் புல்வெளிக்கு பைக்கைச் செலுத்தினோம்.  வாகமனுக்கு ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று பெயர் வாங்கிக் கொடுத்த இடம் அது. அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே சென்றோம். டென்னிஸ் பந்துகளை அடுக்கி வைத்தது போல் அடுக்கடுக்காய் பச்சைப் புற்கள் மேவிய சிறு சிறு குன்றுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எல்லையின்றிச் செல்கிறது.


அடித்த வெயிலில் புல்வெளி சம்மர் கட்டிங் அடித்ததுபோல் இருந்தது. புல்வெளியில் காலாற நடந்தோம். சிறிது தூரத்தில் புல்வெளியின் நடுவே ஒரு அழகிய ஏரியைக் கண்டோம். சுற்றிலும் பசுமையான குன்றுகளால் சூழப்பட்ட ஏரி. ஏரியைச் சுற்றி உள்ள புற்களின் பச்சையைக் கறைத்துவிட்டது போல் தண்ணீர் பச்சையாய்க் காட்சியளித்தது.


ஏரியில் தொடங்கப்பட்டுள்ள நீர் விளையாட்டுக்கள் சூழ்நிலைக்கு ஒப்பவில்லை. பிரபுவும், வினோத்தும் படகு சவாரி செல்ல, மனோ பலூன் சார்பிங் (balloon zorbing) செய்தார். நம் மனதுக்கு அந்த இயற்கை மட்டுமே தேவைப்பட்டது. மாலை வேளையில் வந்தால் சூழ்நிலை இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

மதியம் தேனியில் இருக்க திட்டம். வெளியே ஒரு கடையில் குளுக்கிய சர்பத் அருந்தி நமது பயண விரதத்தை முடித்துக் கிளம்பினோம். மீண்டும் செங்கரா வழியாகப் பசுமையின் ஊடே குமுளி திரும்பினோம். வழியில் ஃபாத்திமுக்கு என்ற இடத்தில் ஒரு கள்ளுக்கடையைக் கண்டோம். அங்கே சிறிது நேரம் இளைப்பாறினோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்திருந்தேன்.

குமுளியில் ‘கோழிக்கோடு அல்வா’ கிடைக்கும். சுவைக்கக் கொஞ்சம் அன்னாசி அல்வா வாங்கிக் கொண்டு கிளம்பினோம். மலையிறங்கி தமிழகம் வந்தோம். வெயில் சற்று அதிமாக இருந்தது. உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்று பாலத்தைக் கடக்கிறோம். இருபுறமும் தென்னை மரம் சூழ்ந்து தண்ணீர் பச்சையாக ஓடிக்கொண்டிருந்தது கேரளாவை நினைவூட்டியது. ஊருக்குப் போகும் எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு வெயிலைத் தணிக்க ஆற்றில் இறங்கிவிட்டோம்.

முல்லை பெரியாறு இடம்: உத்தமபாளயம்
இடுப்பளவு தண்ணீர், தடுப்பணையால் குளம் போல் தேங்கி வழிந்து சென்றது. நீந்திக் குளித்தோம். தடுப்பணையில் தலை சாய்த்து 'பில்லா' போல் போஸ் கொடுத்தோம். தண்ணீருக்கடியில் மீன்கள் பாதத்தைக் கடித்து குறுகுறுப்பூட்டின. ஆற்றுக் குளியல் அலுப்பையும் வெயிலையும் ஒரேடியாக விரட்டியது.


தேனியை அடையும்போது இருட்டியிருந்தது. ஊரை அடையும்போது நள்ளிரவாகி இருந்தது.. கட்டிலில் படுத்தபோது தூங்க மனமில்லை. வாகமனை விட்டு வந்துவிட்டோம் ஆனால், வாகமனின் பசுமை மட்டும் மனதை அப்பியிருந்தது.