Saturday 17 June 2017

வாகமன் பயணம் - நிறைவு


மாலையில் கிளம்பி எலப்பாரா சாலையில் இருக்கும் தற்கொலை முனை என்று அழைக்கப்படும் மூப்பன்பாறாவிற்குச் சென்றோம். சாலையில் இருந்து ஒரு இரண்டு கிமீ உள்ளே செல்ல வேண்டும். சொந்த வாகனத்தில் செல்லலாம். உள்ளே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆகையால் அவர்களின் வாகனத்தைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பைக்கை நிறுத்திவிட்டு நடராஜா சர்வீசில் கிளம்பினோம். இருமருங்கும் இருக்கும் புல்மேவிய குன்றுகளுக்கு நடுவில் பாதை நம்மை அழைத்துச் செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி மட்டுமே. பூமிக்குப் பச்சிலையை அரைத்து அப்பியது போன்ற தோற்றம். வாகமனின் ஆளமில்லா மண் மரங்கள் வேரூன்ற வசதியில்லாததால் புல்வெளியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே தேங்கிய மண்ணில் காட்டுக் கொய்யா மரங்கள் மொய்த்து வளர்ந்திருக்கிறது. மலைவிளிம்பில் பாராகிளைடிங் நடப்பதைக் காண முடிந்தது. பூதக் கண்ணாடியைக் கொண்டு தூரத்தில் இருந்து ரசித்தோம். அதற்குள் சூழலைப் பனி ஆக்கிரமித்ததால் நாம் அருகில் சென்றபோது முடித்திருந்தனர். 

மலை விளிம்பிற்குச் சென்றோம். மலைச்சரிவும் புல்வெளி படர்ந்திருக்கிறது. புல்வெளியோடு சேர்த்து வென்பனி நம்மையும் அணைத்தது. நேரம் ஆக ஆக அந்த அணைப்பின் இறுக்கம் அதிகமாகி சிலிர்ப்பைக் கொடுத்தது. இயற்கையின் அரவணைப்பில் கவலையைத் துறந்த துறவியானோம்.

மூப்பன்பாறா
நாம் கண்ட பள்ளத்தாக்குகளிலேயே அழகானது இது தான். இதற்கு தற்கொலை முனை என்று தவறான பெயர் வைத்தது யாரோ?? பூலோக சொர்க்கம் இங்கிருக்க, இங்கே வந்து தற்கொலை செய்து சொர்க்கம் செல்ல யார் விரும்புவார்? வாழ்வை வெறுத்து தற்கொலை எண்ணம் கொண்டவரும் இங்கு வந்தால் போதும் இவ்விடத்தின் ரம்யம் மனதை இளக்கி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்யும். 




தூரத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட பகுதியைத் தாண்டி யாரும் அங்கே செல்ல இயலாதபடி காவல் அமைக்கப்பட்டிருந்தது. புல்வெளியில் சிறிது நேரம் படுத்து வானை நோக்கினோம். மனதின் பாரங்கள் இறங்கி காற்றாய் உணர்ந்தோம். வானத்தைப் போல் எண்ணங்களும் எங்கோ பறந்து உயரே சென்றது.  வழக்கமான அலுவல் நாட்களின் கசகசப்பு நீங்கி மனம் புத்துணர்வு பெற்றது.


திரும்பி நடராஜாவில் கிளம்பி புறப்பட்ட இடம் வந்து சேர்ந்தோம். ஒரு வால்வோ கார் எங்கள் அருகில் வந்து நிற்க அதில் வந்த உதயநிதி அவர்களை ரசிகர்கள் மொய்த்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாமும் தான்.   நடன மாஸ்டர் பிருந்தா இருந்தார். வினோத்  கலா அக்காவைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று சொல்ல அவர் சிரித்துவிட்டுச் சென்றார்.

உதயநிதி

பிருந்தா மாஸ்டருடன்..

‘மொட்டைக்குன்று’ என்று அழைக்கப்படும் வாகமன் புல்வெளிகளுக்குச் சென்றோம். பையா படத்தில் கார்த்தியும், தமன்னாவும் ‘அடடா, மழடா.. அடமழடா…’ என்று ஆடிப் பாடும் அழகிய பாடல் இங்கே படமாக்கப்பட்டது. அனுமதி நேரம் முடிந்ததால் உள்ளே செல்ல இயலவில்லை. அறைக்கு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தோம். இரவு உணவாக புரோட்டாவும் சிக்கனும் அந்த நாளை நிறைவாக முடித்து வைத்தது.


இருள் மெல்ல விலகிப் புதிய விடியலைக் கொடுத்தது. அறைக்கு வெளியே வந்து பார்த்தோம். ஊரே ஃபிரிட்ஜில் வைத்தது போல் ஃபிரஷாக இருந்தது.  இருள் விலகினாலும் பனி விலக மறுத்து காதலன் காதலியைப் பிரிய மனமின்றிப் பிரிவதுபோல் பனி மெல்ல மெல்ல விலகியது. 


அதிகாலை பைக்கில் ஒரு சுற்று சென்று வரக் கிளம்பினோம். ஆள்நடமாட்டம் இல்லாத பனி சூழ்ந்த சாலை.. குளிர் காற்று.. சுற்றிலும் பசுமை.. பைக்கில் நாம்…. பறவையானோம்... இலக்கின்றிப் பறந்தோம்..

வழியில் குரிசுமலை ஆசிரமத்தின் நுழைவாயிலைக் கண்டு அலசக் கிளம்பினோம் உள்ளே. குரிசுமலை ஆசிரமம் ஒரு தனி சாம்ராஜியம். உள்ளேயே குடியிருப்பு, பள்ளிக்கூடம், கடைகள், உணவகங்கள், பால்பண்ணை, சர்ச் என அத்தனையும் உள்ளது. 

குரிசுமலை ஆசிரம நுழைவாயில்
சாலையின் முடிவு நம்மை குரிசுமலையின் அடிவாரத்தில் கொண்டு போய் விட்டது. பைக்கை நிறுத்திவிட்டு மலையேறத் துவங்கினோம். கற்பாறைகளை ஒவ்வொன்றாய் கடந்து ஏறினோம்.

குரிசுமலை அடிவாரம்
தங்கல்பாறை போன்று இல்லாமல் முதல் பாதி தூரம் செங்குத்தாக ஏற வேண்டியுள்ளது.


அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை இயேசுநாதர் சிலுவை சுமப்பது முதல் சிலுவையில் அறையப்படுவது வரை உள்ள காட்சிகள் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் ஜெபம் செய்து மேலே ஏறுகிறார்கள்.
                                                 


எதிரே முருகன்மலை தெரிகிறது. இந்துக்களின் வழிபாட்டுத் தளம். இவ்வாறு மூன்று மதத்தினரும் ஆளுக்கொரு மலையைத் தங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

முருகன் மலை

இரண்டாம் பாதி ஏற எளிதாக உள்ளது. கரும்பாறையும் , பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் வளர்ந்த புற்களும் ஓவியம் போல் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் வெண்பனி வளைத்திருந்தது.


பூமி மேகத்திற்கு மேல் மிதப்பதைப் போல் உணருகிறோம். உச்சியை அடைந்தோம். ஒரு சிறிய தேவாலயம் அங்கே உள்ளது. ஆடம்பரங்கள் இன்றி எளிமையாக அமைந்த அந்த தேவாலயம் அவ்விடத்தின் அழகில் கலந்தது.

உச்சியில் உள்ள  தேவாலயம்
தேவாலயத்தின் பின்புறம் அழகிய பள்ளத்தாக்கு. அழகிய அவ்விடத்தைக் கண்டதும் மிட்டாயைக் கண்ட குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தோம். பாறைகள் ஒவ்வொன்றாய் ஏறி, இறங்கி, தவழ்ந்து, தாவிக் குதித்து மலையின் விளிம்பில் சென்று அமர்ந்தோம். சொர்க்கத்தின் மற்றொரு பரிணாமத்தைக் காண்கிறோம்.


காலுக்குக் கீழ் அடர்ந்த சோலைக்காடுகள் கண்களைக் குளிர்விக்க, கீழிருந்து மேல்நோக்கி வரும் காற்று உடலைக் குளிர்விக்கிறது. பல நேரம் அங்கே அமர்ந்து பள்ளத்தாக்கின் அழகிலும் அழத்திலும் மூழ்கினோம். 



அடிவாரத்தை அடைந்து பைக்கைக் கிளப்பி ஆசிரமத்திற்குட்பட்ட இந்தோ-சுவிஸ் பால்பண்ணையைப் பார்க்கச் சென்றோம். குளிர்பிரதேசங்களில் வளரும் அதிகப் பால் தரும் வெளிநாட்டு மாடுகள் அங்கே பராமரிக்கப்படுகிறது. நுழைவாயிலில் இருந்து நடந்து சென்றோம். நடுவே குறுகிய சாலை. இருபுறமும் அடர்ந்த புல்வெளி. புல்வெளியில் ஆங்காங்கே பைன் மரங்கள். அதன் நிழலில் பசும்புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் கன்றுகளும் பசுக்களும்... இவ்வளவு அழகான உணவுக்கூடம் யாருக்கும் வாய்க்காது.. அந்தப் பசுக்கள் மூன்று வேளை பால் கறக்கக் கூடியவை. அவை பசுக்கள் அல்ல பால் கறக்கும் இயந்திரங்கள்.


உள்ளே ஒரு சிறிய தேவாலயம் உள்ளது. அங்கே இறைபணி செய்த சன்னியாசிகளின் சமாதி அதன் வளாகத்தில் உள்ளது. அந்த இடத்தில் அவ்வளவு அமைதி. சிறிது நேரம் தியானம் செய்தோம். 

தேவாலயம்

அறைக்கு வந்து தயாரானோம். புட்டும் தொட்டுகொள்ள கடலைக் குழம்பும் காலை உணவாகக் கொண்டோம்.  அறையைக் காலிசெய்து விடுதி உரிமையாளருக்கு நன்றி கூறிக் கிளம்பினோம். செல்லும் வழியில் உள்ள  வாகமன் புல்வெளிக்கு பைக்கைச் செலுத்தினோம்.  வாகமனுக்கு ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று பெயர் வாங்கிக் கொடுத்த இடம் அது. அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே சென்றோம். டென்னிஸ் பந்துகளை அடுக்கி வைத்தது போல் அடுக்கடுக்காய் பச்சைப் புற்கள் மேவிய சிறு சிறு குன்றுகள் ஒன்றன்பின் ஒன்றாய் எல்லையின்றிச் செல்கிறது.


அடித்த வெயிலில் புல்வெளி சம்மர் கட்டிங் அடித்ததுபோல் இருந்தது. புல்வெளியில் காலாற நடந்தோம். சிறிது தூரத்தில் புல்வெளியின் நடுவே ஒரு அழகிய ஏரியைக் கண்டோம். சுற்றிலும் பசுமையான குன்றுகளால் சூழப்பட்ட ஏரி. ஏரியைச் சுற்றி உள்ள புற்களின் பச்சையைக் கறைத்துவிட்டது போல் தண்ணீர் பச்சையாய்க் காட்சியளித்தது.


ஏரியில் தொடங்கப்பட்டுள்ள நீர் விளையாட்டுக்கள் சூழ்நிலைக்கு ஒப்பவில்லை. பிரபுவும், வினோத்தும் படகு சவாரி செல்ல, மனோ பலூன் சார்பிங் (balloon zorbing) செய்தார். நம் மனதுக்கு அந்த இயற்கை மட்டுமே தேவைப்பட்டது. மாலை வேளையில் வந்தால் சூழ்நிலை இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

மதியம் தேனியில் இருக்க திட்டம். வெளியே ஒரு கடையில் குளுக்கிய சர்பத் அருந்தி நமது பயண விரதத்தை முடித்துக் கிளம்பினோம். மீண்டும் செங்கரா வழியாகப் பசுமையின் ஊடே குமுளி திரும்பினோம். வழியில் ஃபாத்திமுக்கு என்ற இடத்தில் ஒரு கள்ளுக்கடையைக் கண்டோம். அங்கே சிறிது நேரம் இளைப்பாறினோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்திருந்தேன்.

குமுளியில் ‘கோழிக்கோடு அல்வா’ கிடைக்கும். சுவைக்கக் கொஞ்சம் அன்னாசி அல்வா வாங்கிக் கொண்டு கிளம்பினோம். மலையிறங்கி தமிழகம் வந்தோம். வெயில் சற்று அதிமாக இருந்தது. உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்று பாலத்தைக் கடக்கிறோம். இருபுறமும் தென்னை மரம் சூழ்ந்து தண்ணீர் பச்சையாக ஓடிக்கொண்டிருந்தது கேரளாவை நினைவூட்டியது. ஊருக்குப் போகும் எண்ணத்தைத் தள்ளி வைத்துவிட்டு வெயிலைத் தணிக்க ஆற்றில் இறங்கிவிட்டோம்.

முல்லை பெரியாறு இடம்: உத்தமபாளயம்
இடுப்பளவு தண்ணீர், தடுப்பணையால் குளம் போல் தேங்கி வழிந்து சென்றது. நீந்திக் குளித்தோம். தடுப்பணையில் தலை சாய்த்து 'பில்லா' போல் போஸ் கொடுத்தோம். தண்ணீருக்கடியில் மீன்கள் பாதத்தைக் கடித்து குறுகுறுப்பூட்டின. ஆற்றுக் குளியல் அலுப்பையும் வெயிலையும் ஒரேடியாக விரட்டியது.


தேனியை அடையும்போது இருட்டியிருந்தது. ஊரை அடையும்போது நள்ளிரவாகி இருந்தது.. கட்டிலில் படுத்தபோது தூங்க மனமில்லை. வாகமனை விட்டு வந்துவிட்டோம் ஆனால், வாகமனின் பசுமை மட்டும் மனதை அப்பியிருந்தது.

3 comments: