Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday 17 June 2017

வாகமன் பயணம் - பாகம் 1


வாழ்வில் பல இடங்களுக்குப் பயணம் செய்திருப்போம். ஒரு இடம் சென்று வந்த பின் அடுத்த பயணத்திற்கு வேறு இடம் தேடியிருப்போம். ஆனால் ஒரு சில இடங்கள் மட்டும் சென்று வந்த பின்பும் மீண்டும் நம்மை அழைக்கும். எத்தனை முறை சென்றாலும் தித்திக்கும். அப்படி ஒரு இடம் தான் வாகமன். ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் வாகமன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

புது வீடு கட்டும் ஒவ்வொருவரும் விரும்பும் ஒரு விஷயம் வீட்டின் முன் ஒரு சிறிய புல்வெளி அமைக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். புல்வெளி வீட்டிற்கு அழகையும் மனதிற்கு அமைதியையும் கொடுக்கக் கூடியது. புல்லின் பசுமை மனதை இளக்க,  மாலை வேளையில் புல்வெளியில் படுத்துக் கொண்டு நம்மை மறந்து வானையே பார்த்துக் கொண்டிருக்கும் போது புல்லின் குளிர்ச்சியும், புல் நுணி குத்தி ஏற்படுத்தும் குறுகுறுப்பும் ஒரு பேரானுபவம்.. 

ஒரு சிறு புல்வெளிக்கு ஆசைப்படும் நம் கண் முன் ஒரு ஊரே புல்வெளியாகத் தெரிந்தால் எப்படி இருக்கும்? வாழ்வின் மீதி நாட்களை அங்கேயே உலாவிக் கழித்துவிட எண்ண மாட்டோமா? வாகமனின் சிறப்பு அது தான். எங்கெங்கு காணினும் பச்சைப் புல்வெளி மட்டுமே!!!

இரண்டு வருடங்களுக்கு முன் நாமும் நண்பர் மனோவும் குடும்பத்துடன் வாகமன் சென்று வந்த நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாய் படிந்திருக்கிறது. மீண்டும் அங்கே செல்லப் பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்து இப்போது வாய்த்தது. நம்முடன் இம்முறை மனோ, கண்ணன் மற்றும் கண்ணனின் அலுவலக நண்பர்கள் வினோத்தும் பிரபுவும் சேர்ந்துகொண்டனர். மொத்தம் மூன்று நாள் பயணம் வழக்கம்போல் பைக்கில் செல்வது என்று ஒருமனதானோம். மனோ உசிலையில் இருந்து கிளம்பி தேனி செல்ல நானும் கண்ணனும் பெரியகுளத்தில் இருந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே காலை 10 மணிக்கு மனோவை சந்தித்தோம். பிரபுவும் வினோத்தும் மதுரையில் இருந்து 11 மணிக்கு தேனியை அடைந்ததும் அங்கிருந்து நமது வாகமன் பயணம் ஆரம்பமானது.

தேனியில் 
தேனியில் இருந்து வாகமன் செல்ல நாம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வழியாகக் குமுளியை அடைந்து அங்கிருந்து வண்டிப்பெரியார் வழியாக பீர்மேடு, எலப்பாரா வழியாக 117 கிமீ பயணித்து வாகமனை அடையலாம். ஒருவர் பின் ஒருவராக சீராக பைக்கைச் செலுத்திக்கொண்டு இருக்கும்போது பின்னால் வந்த கண்ணனைக் காணாது பைக்கை வீரபாண்டி அருகே முல்லைபெரியாற்று பலத்தில் நிறுத்திவிட்டு கண்ணனுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் முல்லைபெரியாற்றின் அழகை ரசித்தோம். அது வெறும் ஆறு அல்ல, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வின் ஓர் அங்கம்.

முல்லை பெரியாறு, இடம் : வீரபாண்டி

தனது பையை தேனியிலேயே மறந்து விட்டு வந்ததால் அதை திரும்பிப் போய் எடுத்து வரத் தாமதம் என்று கண்ணன் தெரிவித்தார். பயணம் தொடர்கிறது.

அந்தக் கோடையிலும் தேனி மாவட்டம் பசுமை கட்டி நிற்கிறது. சாலையின் இருமருங்கிலும் முல்லைப் பெரியாற்றைக் குடித்து செழிப்பாக வளர்ந்த தென்னந்தோப்புகள் அரண் அமைக்கின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்கள், அதில் மறுதாம்பாய் தானாய் முளைத்த நெற்பயிர், விதைப்புக்காக நாற்று விடப்பட்ட வயல்கள், வாழைத் தோட்டங்கள், பசுமைக் கூடாரம் போன்ற திராட்சைக் கொடிகள், ஆதில் கனத்துத் தொங்கும் திராட்சைக் கொத்துக்கள்… ரசித்துக் கொண்டே பைக்கைச் செலுத்தினோம். 

தேனி-குமுளி சாலை

கம்பத்தைத் தாண்டி 14 கிமீ சென்றதும் லோயர் கேம்பில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ‘கர்னல் ஜான் பென்னிகுயிக்’ அவர்களின் நினைவு மண்டபம் வருகிறது. அவர் ‘காலத்தை வென்றவர்.... காவியமானவர்.....’. மானசீகமாக அவரை வணங்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். 

பென்னிகுயிக் மணிமண்டபம்

மலைச்சாலையில் செல்லும்போது இந்த ராட்சஷக் குழாய்களைக் கடக்கிறோம். முல்லைப் பெரியாற்றுத் தண்ணீர் இந்தக் குழாய்கள் மூலம் மேலிருந்து கீழே லோயர் கேம்பில் உள்ள நீர் மின் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


அடுத்து இரைச்சல் பாலம் என்ற இடம் வருகிறது. முல்லைபெரியாறு தமிழகம் நோக்கி பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டிற்கு வரும் குழந்தை போல் துள்ளிக் குதித்து வருகிறது. அந்தத் துள்ளலில் நீர்த்துளிகள் பன்னீர் போல் நம் மீது தெறித்து குளிர்ச்சியைத் தருகிறது.

இரைச்சல் பாலம்
அதற்குள் அனைவருக்கும் பசி எடுக்க கண்ணன் அவர்கள்  நமக்காக வீட்டில் இருந்து தயார் செய்து கொண்டு வந்த புளி மற்றும் எழுமிச்சை சாதத்தை அங்கேயே உண்டு பசியாறினோம். பசியில் ருசி இரட்டிப்பானது.



6 கிமீ மலைச்சாலையைக் கடந்து குமுளியை அடைகிறோம். குமுளி ஒரு வாசனை நகரம். மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விளையும் வாசனை பூமி அது. வளைந்து நெலிந்து செல்லும் சாலையின் இருபுறமும் பலா, ஏலக்காய், காபி, தேயிலை மற்றும் மிளகுக் கொடிகளின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே பயணித்து வாகமனை அடைந்தோம். காட்சிகள் மாறியதே தவிர பசுமை மாறவில்லை.




நாம் எலப்பாரா வழியாக வாகமன் செல்லாமல், 10 கிமீ தூரம் குறைவான செங்கரா வழியில் சென்றோம். வாகமனின் முதல் காட்சியே நம்மை மயக்கப் போதுமானதாக இருந்தது.  தூரத்தில் தெரிந்த பசும்புல் அப்பிய மலை வாகமனின் குளிரைத் தாங்காது மலை தனக்குப் போர்த்திக்கொண்ட பிரம்மாண்டக் கம்பளி போல் காட்சிப்படுகிறது.




வாகமன் ஒரு சிறிய நகரம். ஊரின் நுழைவாயிலை இருபுறமும் புல்வெளிகள் அழகுபடுத்துகின்றன. ஊரைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள். தேயிலைத் தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய ஏரி. படகு சவாரி செய்யலாம். மாலை நான்கு மணிக்கே பனி இறங்கிவிடுகிறது. விளக்கொளியுடன் பைக்கை செலுத்தி நகருக்குள் சென்று ஒரு தங்கும் விடுதியில் எங்களுக்கான அறையைப் பதிந்துகொண்டு இளைப்பாறினோம். தங்கும் விடுதிக்கு வாகமனில் பஞ்சமில்லை. எட்டுக்கு ஒரு விடுதி உள்ளது. மாலை எந்தத் திட்டமும் இல்லை. பொதுவாக நமது பயணம் திட்டமிடப்பட்ட சுற்றுலாவாக இருக்காது. பல இடங்களைப் பார்த்து விட வேண்டும் என்ற மனப்பான்மையும் இல்லை. பார்க்கும் இடங்களின் எண்ணிக்கைக்கேற்ப இன்பம் இரட்டிப்பாகும் என்ற எண்ணமும் இல்லை. அத்தகைய எண்ணம் ஒரு மாயை. நம்முடைய பயணம் எப்போதும் பயணிக்கும் இடத்துடன் ஒன்றி சூழ்நிலைக்கேற்ற வாழ்வை வாழ்ந்து விட்டு வருவதாகவே இருக்கும். வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறுபாட்ட வாழ்வை வாழும் ஒரு வாய்ப்பு அவ்வளவே. அது மனதிற்கு அமைதியையும் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுத்தால் போதும்…  

கடைத்தெரு வரை காலாற நடந்து சென்று குளிரை அனுபவித்துத் திரும்பினோம். விடுதிக்கு வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து தூரத்தில் தெரிந்த மலைக் குன்றுகளைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இருட்டத் தொடங்கியது. விடுதியின் உரிமையாளர்  கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். வானத்தில் வெள்ளி முளைக்கவில்லை, மழைக்கான அறிகுறி.. சிறிது நேரத்தில் தூரல் போட்டு கேம்ப் ஃபயரை முடித்து வைத்தது. மீதிக் கச்சேரியைத் திண்ணையில் தொடர்ந்தோம். இரவு உணவாக சப்பாத்தியும் சூடான சிக்கன் கிரேவியும் வந்து, வந்த வேகத்தில் வயிற்றை நிரப்பி மறைந்தது. கேரள உணவின் தீவிர ரசிகன் நான்.. அடுத்து தமிழ் திரைப்படங்களின் லேட்டஸ்ட் குத்துப் பாடல்களுக்கான நடன அரங்கேற்றம் நடைபெற்றது. கண்ணன் நடனத்தில் அனைவரையும் விஞ்சியிருந்தார். உற்சாக மனதுடன் கம்பளிக்குள் தஞ்சமடைந்து தூங்கினோம்.

அதிகாலை… மணி 5:30.. இதமான குளிர்.. கம்பளியின் கதகதப்பு.. விழிப்பு வந்தாலும் எழ மனமின்றி, கதகதப்பை அனுபவித்துப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்துவிட குளிரில் ஒரு நடை சென்றோம். குளிருக்கு இதமாய் ஆளுக்கு ஒரு ‘சாயா’ அடித்தோம். சொம்பு போன்ற பெரிய கண்ணாடிக் கோப்பையில் வழங்கப்பட்ட சாயா, பருக சற்று நேரம் பிடிக்கிறது. நம் ஊர் அளவை விட அதிகம்.


அறையை அடைந்து தயாரானோம். காலை உணவாக ஆப்பமும் முட்டைக் குருமாவும் புதிய சுவையைக் கொடுத்தன. பைக்கை எடுத்துக் கொண்டு எலப்பாரா செல்லும் சாலையில் பயணித்தோம். வலது புறம் ஒரு மிகப்பெரிய கற்பாறை அழகிய ஓவியம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. பூதக் கண்ணாடியில் பார்த்தபோது எறும்பு போல் சாரை சாரையாக மனிதர்கள் அதன் உச்சியில் நடந்து கொண்டிருந்தனர். தங்கல்பாறை அதன் பெயர். இஸுலாமியர்களின் புனிதத் தளம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ‘பீர் முகமது’ என்ற இஸுலாமியத் துறவி அங்கு வந்து தொழுகை செய்த வரலாற்றைக் கொண்டது. நாமும் அங்கே சென்றோம். 

தங்கல்பாறை

பைக்கை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு மலையேறினோம். செங்குத்தாக இல்லாமல் ஏறுவதற்கு எளிதாகவே இருந்தது. உயரே செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது. பாறை இடுக்கில் தேங்கிய மண்ணில் அங்காங்கே எழுமிச்சம் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அதைக் பிடுங்கி அதில் வரும் சுகந்தமான வாசனையை முகர்ந்து புத்துணர்ச்சி அடைந்தோம்.


மலை உச்சியின் குறுக்கே ஓரிடத்தில் பள்ளமான பகுதி வருகிறது. அந்தப் பகுதியின் இருபுறத்தையும் ஒரு ‘வின்ச்’சால் இணைத்துத் தொழுகைக்குத் தேவையான பொருட்களை அதில் கடத்துகிறார்கள். அந்தப் பள்ளத்தின் மறுபக்கத்தை அடைந்தால் பீர் முகமது அவர்கள் தொழுகை செய்த இடத்தை அடையலாம்.


வின்ச்
அப்போது கண்ணனிடம் அவரின் பைக் சாவி இல்லாதது தெரிந்தது. கண்ணன் நம்மை முன்னேறச் சொல்லிவிட்டு பைக் சாவியை தேடச் சென்றார். அனால் அவரை விட்டுச் செல்வது அவ்வளவு நல்ல செயல் அல்ல என்பதால் நாமும் அவரோடு சாவியைத் தேடினோம். கடைசியில் சாவி அவரின் பைக்கிலேயே விட்டு வந்திருக்கிறார். மலையேற்றம் தந்த களைப்பை ‘குலுக்கிய சர்பத்’ அடித்துத் தணித்தோம். அந்த அனுபவம் இங்கே…

குலுக்கிய சர்பத்

தங்கல்பாறையின் இடதுபுறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் ஒரு பசுமையான பள்ளத்தாக்கு உள்ளது. நாங்கள் சென்றபோது யாரும் இல்லை. அங்கிருந்த ஒரு கூடாரத்தில் அமர்ந்து இயற்கையின் துணையை அனுபவித்தோம். வானத்தின் நீலத்தைக் கரைத்துப் பள்ளத்தாக்கு முழுதும் தெளித்ததுபோல், பள்ளத்தாக்கு நீலமாய் தெரிந்தது. பள்ளத்தாக்கில் இருந்து மேல் நோக்கி வரும் காற்று சாமரம் வீசியது. அப்போது பேருந்தில் ஒரு சுற்றுலாக் குழுவினர் அங்கு வர அவர்களுக்கு அந்த இடத்தை விடுத்துக் கிளம்பினோம். 




சூரியன் உச்சிக்கு வந்திருக்க அவரிடம் இருந்து தப்பித்து பைன் மரக்காட்டிற்குள் தஞ்சமடைந்தோம். இது எலப்பாரா செல்லும் சாலையிலேயே உள்ளது. மலைச்சரிவில் ஓங்கு தாங்காய் வளர்ந்த பைன் மரங்கள் அடர்ந்திருக்கும் காடு அது. சூரியக் கதிர்கள் தடை செய்யப்பட்ட பகுதி. மரக்கிளைகள் ஒன்றோடொன்று கைகோர்த்து இயற்கையான குளிர்சாதன வசதியைக் கொடுத்தது. உதிர்ந்த பைன் மர இலைகளின் மேல் நடப்பது மெத்தை மேல் நடப்பது போல் இருந்தது.  மதிய வெயிலுக்கு வாகமனின் முக்கால்வாசி சுற்றுலாப் பயணிகள் அங்கே தான் இருந்தனர். அந்தக் கூட்டம் நமக்கும் இயற்கைக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது போல் தோன்றியது. தனிமையும் அதை நிறப்ப இயற்கையும் ஒரு பேரின்பம். ஒதுக்குப்புறமான இடத்தைத் தேடி சிறிது இளைப்பாறினோம். அறைக்குச் சென்று மதிய உணவு அருந்திவிட்டு சிறிது கண் அயர்ந்தோம். 

பயணம் தொடரும்... வாகமன் பயணம் நிறைவு இங்கே

Friday 9 June 2017

கள்ளும்...கப்பையும்...மீன் குழம்பும்...

சமீபத்தில் வாகமன் சென்றிருந்த போது ‘குளுக்கிய சர்பத்’ அருந்திய அனுபவத்தைப் பகிர்ந்திருந்தேன். இது அதே வாகமன் பயணத்தில் மற்றொரு சுவையான அனுபவம்.


வாகமன் பயணத்தை முடித்துவிட்டுச் ‘செங்கரா’ வழியாகக் குமுளி திரும்பிக் கொண்டிருந்தோம். சாலையின் இருமருங்கும் பசுமை சூழ்ந்திருக்க அதை ரசித்துக் கொண்டு பயணித்தோம். ‘ஃபாத்திமுக்கு’ என்ற இடத்தைக் கடக்கும்போது அந்தப் பசுமைக்குள் இருந்து ஒரு சிறிய கட்டிடம் எட்டிப் பார்க்கிறது. வெள்ளைப் பலகையும் அதில் உள்ள கருப்பு எழுத்துக்களும் நம் கண்களை மின்னச் செய்ய, அதைப் பார்த்ததும் சடன் பிரேக் அடித்து நிற்கிறோம். 


பின்னணியில் "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்.... இந்தப் பார்வை பார்க்கப் பகலிரவா பூத்திருந்தேன்....", என்ற பாடல் வரிகள் நமக்குக் கேட்கிறது. ஆம், நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரளப் புகழ் கள்ளுக் கடை இது தான். நம்மூரில் தலைகீழாய் நின்றாலும் கிடைக்காத ஒன்று.. விட்டுவிடுவோமா? கடைக்குப் படையெடுத்தோம்.

முதலில் நம் மனதைக் கவர்ந்தது அந்தக் கடை அமைந்த இடம். சுற்றிலும் மிளகுக் கொடி படர்ந்த பலா மரங்களும், ஊடே வாழை மரங்களும் சூழ்ந்திருக்க கீழே ஆறு ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது. தோட்டத்தின் நடுவே இந்தக் கடை மட்டுமே..




கடையின் உள்ளே சென்றோம். மிகச் சிறிய கடை இரண்டே இரண்டு பெஞ்ச் போடும் அளவுக்கு இருந்தது. இரண்டையும் நாம் ஆக்கிரமித்தோம். உள்ளே இரண்டு பெரிய அண்டாக்களில் பால் போன்று வெள்ளை நிறத்தில் கள் நிரம்பியிருந்தது. நமக்கு இருந்த ஆவலில் அண்டாவைத் தூக்கி அப்படியே குடித்துவிடத் தோன்றியது. 'கள்ளுண்ணாமை' என்ற அதிகாரத்தில் கள் உண்பது தவறு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இப்படி வெள்ளை வெளேர் என்று வெள்ளந்தியாக இருக்கும் கள்ளை நம்மால் புறக்கணிக்க முடியவில்லை. வள்ளுவரிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு கடைக்காரரிடம் கள் வேண்டும் என்றோம். 'தென்னையா? இல்லை பனையா?' என்றார். 'கேரளாவில் பனை மரம் எங்கே இருக்கிறது?' என்று நினைத்துக் கொண்டு, எதற்கு வம்பென்று தென்னங்கள் கேட்டோம். தொட்டுக் கொள்ள வேக வைத்த கப்பைக் கிழங்கும், மீன் குழம்பும் சொல்லிவிட்டு ஆவலாய் காத்திருந்தோம்.




ஒரு லிட்டர் அளவுடைய இரண்டு பிளாஸ்டிக் குவளைகளில் கள் வந்தது, பின்னாடியே கப்பையும் மீன் குழம்பும்.. ஆளுக்கு ஒரு கண்ணாடிக் கோப்பையில் கள்ளை ஊற்றிக் கொண்டு பயபக்தியுடன் அதை எடுத்து ஒரு வாய் பருகிப் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது, அமிர்தம் என்றால் அது இது தான். நாவின் நுணி இனிப்பை உணர, நாவின் பக்கவாட்டில் உள்ள சுவை நரம்புகள் கள்ளின் புளிப்பைப் பெற்று மூளைக்கு செலுத்துகிறது. புளிப்பும் இனிப்பும் கலந்த அந்தக் கள்ளின் சுவைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்பைப் போல் மயங்கினோம். 


சிறகடிப்போம்

அந்தச் சுவையின் மயக்கத்தில் அப்படியே கப்பைக் கிழங்கை ஒரு விள்ளல் எடுத்து மீன் குழம்பில் தொட்டு, கொஞ்சம் மீனோடு வாய்க்குக் கொடுத்த போது ஏற்கனவே கள்ளின் சுவையில் மெய் மறந்திருந்த நாம் இப்போது மீன் குழம்பின் சுவையில் திக்குமுக்காடி விடுகிறோம். சூரியா ஜோதிகா போல் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் கள்ளும் மீன் குழம்பில் நனைந்த கப்பையும்...



தென்னை மரத்தில் தேங்காய் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு உயரத்தில் ஏறி தென்னம்பாளை பூப்பதற்குள்  அதன் முனையை சீவி விட்டால் அதில் இருந்து அமிர்தம் போன்ற ஒரு திரவம் வரும். அதைப் பருகி இன்புறலாம் என்று கண்டுபிடித்து நமக்குச் சொன்ன நம் முன்னோர்களை என்னவென்று பாராட்டுவது!!

மீன்குழம்பின் காரம் நாவைத் தூண்ட கை தானாகக் கள் இருக்கும் கோப்பையை நாடுகிறது. இவ்வாறு ஒரு ஐந்தாறு கோப்பைகள் தீர்ந்ததும் நமது வயிறோடு மனதும் நிறைந்தது. நினைத்துப் பாருங்கள் பகலெல்லாம் பாடுபட்டு, அந்தி சாய்ந்ததும் இது போன்ற ஒரு இயற்கை நிறைந்த இடத்தில் கையில் ஒரு கோப்பை கள்ளும்   தொட்டுக் கொள்ள கப்பையும் மீன் குழம்பும் இருக்க, கவலை மறந்து வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கும்போது பின்னணியில் ஜேசுதாஸ் "கடலினக்கர போனோரே... காணா பொன்னினு போனோரே..."  என்று பாடிக்கொண்டிருப்பார். மண்ணுலகில் இதை விட சொர்க்கம் வேறென்ன இருக்க முடியும்...

Sunday 21 May 2017

நக்சலைட்டுகளுடன் ஒரு நாள்..

அது 2012ம் வருடம். பெங்களூரில் பணியமர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. நுண்ணோக்கிகள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் பணி. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என்று பயணம் சென்று பணி செய்த நாட்கள். பெரும்பான்மையான இரவுகள் ரயில்பயணங்களில் கழிந்துகொண்டிருந்தன. என்னுடைய பயணப் பசிக்கு நல்ல தீனியாக இருந்ததால் விழைந்து பணி செய்தேன்.


அன்றொரு நாள் சென்னையில் இருக்கும் எனது மண்டல மேலாளரிடம் இருந்து செல்போன் அழைப்பு. பணி நிலவரங்களை விசாரித்தவர், “ஃபிளைட்டில் சென்றிருக்கிறாயா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“சரி, நாளை பெங்களூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஃபிளைட்டில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

பெங்களூரில் இருந்து விமானத்தில் வைசாக் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கிரந்துல் என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். மத்திய அரசுக்குச் சொந்தமான இரும்புச் சுரங்கம் அங்குள்ளது. சுரங்க நிறுவனத்திற்குட்பட்ட மருத்துவமனையில் ஒரு புதிய நுண்ணோக்கியை நிறுவ வேண்டும். இதுவே எனக்கு இட்ட பணி. உற்சாக வெள்ளம் என்னுள். ‘விவரம் தெரிந்து முதல் வடநாட்டுப் பயணம் அதுவும் முதல் முறை விமானப் பயணமாக.. விமானத்தில் அழகழகான பணிப் பெண்கள்  இருப்பார்கள். செல்லும் இடம் ஒரு மலைப் பிரதேசம் என்ற தகவலும் வேறு.. அதுமட்டுமல்லாமல் ஹைதராபாத்தில் நமது கிளை இருந்தும் அங்கிருந்து ஊழியரை அனுப்பாமல் மேலாளர் நம்மை அனுப்புகிறார் என்றால் நம் மீது எவ்வளவு நம்பிக்கை.’ என்று எக்கச்சக்கமான சந்தோஷத்துடனும் கனவுகளுடனும் விமானம் ஏறுகிறோம்.

ஒரு புது அனுபவத்தை எதிர்நோக்கி விமானப் படிக்கட்டுகள் ஒவ்வொன்றாக ஏறி விமானத்தின் உள்ளே சென்ற நம்மை “வெல்கம் டு xxxxxxxx ஏர்லைன்ஸ்” என்று, நாம் கற்பனை செய்த இனிய குரல் அல்லாமல் ஒரு தடித்த ஆண் குரல் வரவேற்கிறது. ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை’ என்று நினைத்துக்கொண்டு, ‘சரி,மத்தவங்க உள்ள நமக்கு கூல்டிரிங்க்ஸ் கலக்க போயிருப்பாங்க போல’ என்று சமாதானம் செய்துகொண்டு இருக்கையில் சென்று அமர்கிறோம். சம்பிரதாயங்கள் முடிந்து விமானம் ஓடுபாதையில் சென்று மேலெழுந்தபோது ராட்டினத்தில் சுற்றும் போது அடிவயிற்றில் ஒரு பீதியான உணர்வு வருமே அதே போன்று உணர்கிறோம். பூமியில் இருப்பவை அனைத்தும் புள்ளிகளாய் சுருங்கிகொண்டிருக்க, விமானம் படிப்படியாக மேலே செல்கிறது. நேரம் தான் சென்றதே தவிர நாம் எதிர்பார்த்தவர்களைக் காணவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே ‘சார், கூல்டிரிங்க்ஸ்’ என்று மீண்டும் அதே கடினக் குரல் கேட்க நம் கனவு கனவாகவே போனது. விமானத்தில் பணிப்பெண்கள் மட்டுமல்ல 'பணிஆண்கள்' கூட இருப்பார்கள் என்று உணர்ந்த தருணம் அது. மனதை திடப்படுத்திக் கொண்டு வெளியே பார்க்கிறோம்.  விமானம் மேகத்திரையைக் கிழித்துக் கொண்டு மேலே செல்கிறது. மேகத்தை வென்றுவிட்டோம் என்று பரவசப்பட்டால், அங்கே விமானதிற்கு மேல் மற்றொரு மேகக் கூட்டம். இயற்கையை வெல்வது அவ்வளவு எளிதன்றே!! மேகம் பல அடுக்குகளால் ஆனது என்று அப்போதே அறிகிறோம்.

மேக அடுக்கு மேலும் கீழும்

 சூழ்ந்த மேகக்கூட்டம் கடைந்த மோரில் இருந்து வெளிவரும் வெண்ணை போன்று பொங்கி நிற்கிறது.


 சில இடங்களில், ஆங்காங்கே குவித்து வைத்த பஞ்சுக் குவியலாய்...


காற்றில் விலகும் திரைச்சீலை போல் மேகம் விலகும்போது பூமி தெரிகிறது. பறவையின் பார்வையில் தெரிந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகள் வெறும் நதிகள் அல்ல, அவை மகாநதிகள். நதிகள் அதன் ஆழத்தை உணர்வுகளாலேயே நமக்குள் புகுத்தக் கூடியவை.



இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் வைசாக்கை அடைகிறோம். வைசாக் விமான நிலையம் கடற்கரையை ஒட்டி அமைந்தது. விமானம் தரையிறங்க மேலே வட்டமடித்துத் தன் வேகத்தைக் குறைக்க வேண்டும்.  வட்டமடிக்க ஒரு பக்கமாகச் சாயும் போது கீழே இருக்கும் சமுத்திரம் ஒரு பக்கமாக சரிந்து அதில் இருக்கும் கப்பல்களையும் படகுகளையும் அடித்துக் கொண்டு பாய்வது போல் ஒரு பயங்கர தோற்றத்தைக் கொடுக்கிறது.


 பேருந்து நிலையம் சென்று மாலை 6 மணிக்கு கிரந்துல் செல்லும் பேருந்தில் கிளம்புகிறோம். இரவு உணவுக்கு ஒரு சிறிய கூரைக்கடை முன் பேருந்து நிற்கிறது. நம்மூர் மோட்டல்கள் கொடுத்த கசப்பான அனுபவங்களை எண்ணிக்கொண்டு உண்ணச் சென்ற நமக்கு இன்ப அதிர்ச்சி. அருமையான ரொட்டியும் முட்டைக் குருமாவும் நம் முன் சுடச் சுட… அந்த சுவையை இப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். நேரம் காலை 6 மணி. திருப்தியாக தூங்கி விழித்த போது பேருந்து கிரந்துல்லை அடைந்திருந்தது. அது ஒரு மலைகிராமம். மலைமக்களும், இரும்புச் சுரங்கத்தில் வேலை செய்பவர்களும் அங்கு வசிக்கிறார்கள். இரவு பெய்த மழையில் கிரந்துல் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு தங்கும் விடுதியும் அடைத்திருந்தது. மொழியறியா ஊரில் வழியறியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். அங்கே இங்கே அலைந்து கடைசியில் அங்கே வந்த ஒருவரிடம் சைகையில் பேசி தங்க இடம் கேட்கிறோம். அவர் ஹிந்தி பேசுகிறார். நமக்கு ஹிந்தி தெரியாது. சைகையைப் புரிந்துகொண்டு ஒரு இடத்திற்குக் கூட்டிப் போகிறார். அடுத்த இரண்டு நாளும் சைகை பாஷை தான் போலும் என்று நினைத்துக் கொள்கிறோம்.
அவர் காண்பித்தது ஒரு குடிசை. வாசலில் கழிவுநீர் ஓடிக்கொண்டு இருந்தது. திறந்து காண்பித்தார். உள்ளே இருந்த ஒரு எலிக்குட்டி ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதியைப் போல் தப்பி சரட்டென்று வெளியே ஓடியது. பூட்டி வைத்திருந்த வாடை  முகத்தில் அறைந்து வெளியே தள்ளியது.  எட்டுக்கு எட்டடியில் அறை. கட்டில், கிழிந்து தொங்கிய மெத்தையுடன். எலியின் விளையாட்டு. உடைந்து போன தகரக் கதவுடன் குளியலறை பக்கவாட்டில் இருந்தது. வானத்தை ரசித்துக்கொண்டே குளிக்கலாம். மேலே கூரை இல்லை. இன்றைக்கு இது தான் நம் வசந்த மாளிகை என்று நினைத்துக் கொள்கிறோம். வேறு வழியும் இல்லை.

தூரத்தில் இரும்புச் சுரங்கம்

ஓய்வுக்குப் பின் கிளம்பி மருத்துவமனைக்குச் செல்கிறோம். உணவகம் எதும் தென்படாததால் காலையில் விரதம். அனைவரும் ஹிந்தி பேச, வேற்றுகிரகவாசி போல் நம்மை உணர்கிறோம். அரைகுறை ஆங்கிலம் சில இடங்களில் கைகொடுக்கிறது. அங்கே இருந்தவரிடம் ‘தமிழர்கள் யாரும் இருக்கிறார்களா?’ என்று வினவுகிறோம். மருத்துவமனை கேன்டீனில் ஒருவர் இருப்பதாகக் கூறுகிறார். சிறிது நேரத்தில் அவரே அங்கே தேனீர் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அவரை விட நமக்கு.. வேற்றுகிரகத்தில் இருக்கும் நினைவில் இருந்து அப்போது தான் மீள்கிறோம். மதிய உணவு வேளையில் வருவதாகச் சொல்லிவிட்டுச் செல்கிறார். லேசான நிம்மதி நமக்கு.

சொன்னது போல் மதியம் வருகிறார். நம் வேலையைப் பற்றி விசாரித்தவர், தன்னோடு மதிய உணவு அருந்தக் கனிவோடு நம்மை அழைத்தார். உணவருந்திக் கொண்டு தன்னைப் பற்றிக் கூறுகிறார். திருநெல்வேலிக்காரர் அவர். பிழைப்புக்காக தாத்தா காலத்தில் இங்கே வந்துவிட்டர்களாம், சுரங்கத்தில் வேலை பார்க்க. பிறகு இதுவே ஊராகிவிட்டது. திருநெல்வேலி நினைவுகளே மறந்திருந்தது அவருக்கு.   நல்ல வேளையாக நமக்காகத் தமிழை மறந்திருக்கவில்லை. ஒரு தூர தேசத்தில் நம்மில் ஒருவரைக் காணும் இன்பம், பிரிந்திருக்கும் தாயைக் குழந்தை காணும் இன்பத்திற்கு ஈடானது. நம் இனத்தார் என்ற நம்பிக்கை

அவர்களின் வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறோம். இந்தியாவின் மிகப் பின்தங்கிய ஊர்களில் அது ஒன்று. சுரங்கத் தொழிலே அங்கு பிரதானம். படிப்பறிவு அங்கே மிகவும் குறைவு. நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருக்கக் கூடிய இடம். கஷ்டப்படும் அந்த மக்களே நக்சலைட்டுகளின் எளிதான இலக்கு. துடிப்பான ஏழை இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு புரட்சி என்ற பெயரில் நக்சலைட்டுகளாக மாறி அரசுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இரணுவத்தினரையோ அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களையோ அவர்கள் உயிருடன் விடுவதில்லை. ஆனால் அவர்கள் பொதுமக்களை மட்டும் துன்புருத்துவது கிடையாது. மறைந்து வாழ மக்களின் ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நக்சலைட்டுகள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருக்கிறார்கள். தங்களுக்கு எதிரான செயலில் ஈடுபடுபவர்களை மட்டும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. அதனாலே மக்கள் அவர்களைப் பகைப்பதும் இல்லை.  ‘யார் கண்டார்? நம்மைச் சுற்றிக் கூட இங்கே அவர்கள் இருக்கக் கூடும்!!’ என்றார். எனவே நக்சலைட் என்ற வார்த்தையைக் கூட அவர் மெதுவாகவே சொன்னார். பேச்சு வரவில்லை நமக்கு. சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். நம்மை ஃபிளைட் ஏற்றி அனுப்பிய காரணம் அப்போது தான் புரிந்தது. அந்த இரண்டு நாட்களும் வேலையை முடித்து ஊர் திரும்பினால் போதும் என்றிருந்தது நமக்கு.

வேலையை முடித்து மறுநாள் மாலை கிளம்பும்போது பேருந்து நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். பல நாள் பழகிய நண்பரைப் பிரியும் மனநிலை நமக்கு. நாம் ஒவ்வொருவரும் இது போன்று ஒரு நபரை நம் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும். அவர் நம் வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும். ஆனால் பல சமயங்களில் அவர்களைப் பற்றிய  நினைவுகள் மட்டுமே எஞ்சிய வாழ்வை நிரப்புகின்றன.

வளைவுகளுக்கேற்ப பேருந்து தன்னை வளைத்துக் கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. காடு சூழப்பட்ட சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது திடீர் என்று பேருந்து நிறுத்தப்படுகிறது. கையில் தடியுடன் சால்வை போர்த்திய ஒரு இருபது பேர் காட்டிற்குள் இருந்து சாலையின் குறுக்கே வருகிறார்கள். பயணிகளிடையே பதற்றம். ஆம், அவர்கள் தான் நக்சலைட்டுகள். வந்துவிட்டார்கள்.  பேருந்திற்குள் ஏறி எதையோ தேடுகிறார்கள். பயணிகள் ஒவ்வொருவரும் இருக்கையோடு ஒன்றி மறுகுகிறார்கள். பேருந்து முழுவதும் நிசப்தம். கடைசியில் நடத்துனர் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்ட பேருந்து விடப்படுகிறது. இது அன்றாட வாடிக்கை என்று அருகில் இருந்தவர் கூறுகிறார். அங்கே நிம்மதி பிறக்கிறது. ஆனால் போன உயிர் இன்னும் நமக்கு வந்திருக்கவில்லை.  இரவு முழுதும் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை. வைசாக்கை அடைந்த பின்பே இதயத் துடிப்பு சீரானது. இதுவே, நாம் வந்த பேருந்தில் ஒரு இராணுவ வீரன் வந்திருந்தால் கூட அந்தப் பேருந்தே எரிந்து போய் இருக்கும் இந்நேரம். மனிதப் பிசாசுகளை எதிர்கொள்ளும் நம் இராணுவத்தின் கஸ்டம் ஓரளவு நம்மால் உணர முடிகிறது. 


பெங்களூர் வந்த பின்பு தான் தெரிந்தது நம்மை அங்கே அனுப்பிய காரணம். அலுவலகத்தில் என்னைத் தவிர அனைவரும் குடும்பஸ்தர்கள். நான் மட்டுமே அப்போது ஒண்டிக்கட்டை. சேதாரம் ஏற்பட்டாலும் யாருக்கும் பாதிப்பில்லை என்றெண்ணி என்னை அங்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று. சமீபத்தில் இருபத்தி நான்கு துணை இராணுவப் படை வீரர்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்படிருக்கிறார்கள். சர்வ வல்லமை பொருந்திய ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இராணுவத்தையே எதிர்க்கும் துணிவிருந்தால் அவர்கள் எத்தகைய கொடூரமானவர்கள் என்று இப்போது எண்ணிப் பார்க்கிறோம். எதுவாக இருப்பினும் இந்நிகழ்வு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.


Tuesday 2 May 2017

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம் - நிறைவு

மண்ணவனூர் (கொடைக்கானல்) பயணம்-நிறைவு
                

இருளோடு சேர்ந்து குளிரும் சூழ ஆரம்பித்தது. பெரியவர் கேம்ப் ஃபயர் தயார் செய்து கொடுத்தார். கேம்ப் ஃபயர் போட பெரிய இடம் ஒன்றும் இல்லை. விடுதிக்குப் பக்கவாட்டில் இருந்த சிறிய இடத்தில் அமைத்துக்கொண்டோம். பெரியவரும் நம்முடன் சேர்ந்துகொண்டார். மண்ணவனூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து பிள்ளைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்து அவர்களைத் தன் நிலங்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு இந்த விடுதியில் பணிபுறிகிறார்.


மண்ணவனூரின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் தொல்லைக்கு இடையில் விவசாயம் செய்கின்றனர். பள்ளிக்குச் செல்வதிலும் அங்குள்ள குழந்தைகளுக்குப் பெரிய ஆர்வம் இல்லை போலும். வயல் வேலை செய்கின்றனர்.

இந்தப் பகுதிக்குக் கேரளாவில் இருந்து இளைஞர்கள் அதிகமாக வருகிறார்களாம். காரணம் இங்கு கிடைக்கும் மேஜிக் காளான் எனப்படும் போதைக்காளான். உயிருக்கு ஆபத்தான அந்தக் காளான்களை போதைக்காக அவர்கள் வாங்கி உண்பதாக வருத்தப்பட்டார். இங்கிருக்கும் சிலரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கொடுமையைச் செய்கிறார்கள். பொதுவாக அவர்கள் தமிழர்களை அணுகுவதில்லை. சாலையில் காத்திருக்கும் அவர்கள் கேரள வாகனங்களைக் கண்டால் தேடிப்போய் விற்கிறார்கள். காலக் கொடுமை…

அரட்டை தொடர்ந்துகொண்டிருக்க சூடான சப்பாத்தியும், சிக்கன் கிரேவியும் தேடி வந்தது. வழக்கமான காரமான கிரேவியாக இல்லாமல் தேங்காய் சேர்த்து ஒருவித இனிப்பாகத் தயார் செய்திருந்தார். நன்றாகவே இருந்தது. சப்பாத்திகளை உள்ளே தள்ளிவிட்டு நிறைந்த மனதும், நிறைந்த வயிறுமாய் இரவுக்கு விடைகொடுத்தோம். கடும் குளிருக்குக் கம்பிளி கொடுத்த கதகதப்பில் படுத்தவுடன் தூங்கிப் போனோம். 



காலை 6 மணிக்கெல்லாம் விழிப்புத்தட்ட எழுந்துவிட்டோம். ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு தேனீர் அருந்தக் கிளம்பினோம். காலை, தேனீர் தயார் செய்து வைத்திருப்பதாகச் சொன்ன ஹோட்டல்காரர் இன்னும் கடையைத் திறந்திருக்கவில்லை. நேற்று தேனீர் அருந்திய கடைக்குச் சென்றோம். தேனீர் அருந்திவிட்டு அப்படியே காலாற நடந்தோம்.

எங்கள் அறைக்கு எதிரே

அந்த நேரத்தில் நாம் மட்டுமே உலாவிக்கொண்டிருந்தோம். ஊர் இன்னும் விழித்திருக்கவில்லை. மிதமான குளிர் இதமாக இருந்தது. புல்வெளி பனியால் போர்த்தப்பட்டிருந்தது ரம்யமாக இருந்தது.




வழியில் இந்த ஜீவன் ஜீவனைத் துரந்து சாலையில் கிடந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வாகனம் அதற்கு மோட்சத்தை அளித்திருந்தது. யார் யார் இடத்தில் அத்துமீறியது??!! 

சாலையில் இறந்து கிடந்த பாம்புக்குட்டி

அறைக்கு வந்தோம். குளியலறையில் ஹீட்டர் இருந்தது. ஆனால் அதில் வரும் சுடுதண்ணீர் முகம் கழுவக்கூடப் போதவில்லை. அந்தக் குளிரில்  ஐஸ் போன்ற பச்சைத் தண்ணீரில் குளித்ததில் கொஞ்ச நேரத்திற்கு நாடி நரம்புகள் வேலை செய்யவில்லை. காலை உணவு ஹோட்டலில் முடித்துவிட்டுக் கிளம்பினோம். அப்போது தான் மனோ தன் பைக் சாவி காணவில்லை என்பதை உணர்ந்தார். பையிலும் அறையிலும் இல்லை. கடைசியில் சாவி பைக்கிலேயே இருந்தது. நேற்று இரவு பைக்கை நிறுத்தும்போது அதிலேயே மறந்துவிட்டிருந்தார். மனோவுக்கு நல்ல நேரம்.

முதலில் மத்திய அரசு நிறுவனமான தென்மண்டல செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்தைப் பார்க்கச் சென்றோம். நுழைவுக் கட்டணம் உண்டு. பண்ணையின் மேற்பார்வையாளர் திரு.கணேசன் அவர்கள் நம்மை வரவேற்றுப் பண்ணையைப் பற்றி விளக்கினார். பழகுவதற்கு இனிய மனிதர்.
திரு.கணேசன் அவர்களுடன்
நாம் சென்றபோது நேற்றிரவு காட்டுப்பன்றியால் சேதப்படுத்தப்பட்ட கேரட் வயலை பணியாட்களுடன் சீர் செய்துகொண்டிருந்தார். சுற்றிலும் கம்பிவேலியிடப்பட்ட அந்த வயலை பன்றிகள் வேலிக்கு அடியில் பள்ளம் தோண்டி உள்ளே வந்து நாசம் செய்திருக்கிறது.  


சேதப்படுத்தப்பட்ட கேரட் வயல்

1966ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பண்ணை, 1340 ஏக்கர் பரந்த புல்வெளியைக் கொண்டது. செம்மறியாட்டில் இருந்து தரமான ரோமம் எடுப்பதற்கான ஆராய்ச்சி இங்கு நடைபெறுகிறது. ரஷ்ய நாட்டுச் செம்மறியாட்டினத்துடன் நம் நாட்டின் இனத்தைச் சேர்த்து உருவான தரமான ரோமம் தரும் “பாரத் மெரினோ” என்ற இனத்தை நவீன முறையில் கொட்டகை அமைத்துப் பராமரிக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் ரோமங்கள் ராஜஸ்தானில் உள்ள மத்திய செம்மறியாடு ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே தயராகும் கம்பளியை இங்கே வருவோருக்கு விற்பனையும் செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் கறிக்காக வளர்க்கப்படும் சோவியத் சின்செல்லா மற்றும் வெள்ளை ஜெய்ன்ட்  இன முயல்களும் பராமரிக்கப்படுகிறது.

வெள்ளை ஜெய்ன்ட் 

சோவியத் சின்செல்லா
நாம் சென்றபோது ஆடுகள் சுதந்திரமாகப் புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்தன. குட்டியும் தாயுமாய் அவை மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.  




பண்ணையைச் சுற்றிப் பார்த்தோம். பண்ணைகுள்ளேயே தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதியும் உள்ளது. பண்ணையில் சிறிய அளவில் கேரட்,  கடுகு, கோதுமை, பட்டானி போன்றவை பயிரிடப்படுகிறது.


கோதுமை வயல்

பண்ணையில் குதிரை ஒன்று மேய்ந்துகொண்டு இருந்தது. அதனை வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுத்தோம்.




பண்ணைக்குப் பின்புறம் கண்ணுக்கு எட்டிய தூரம் பச்சைப் புல்வெளி மட்டும் தான். வெறும் ஆட்டுப்பண்ணை என்று எண்ணி வந்த நம் கண்களுக்கு இயற்கை அழித்த விருந்தாகவே தோன்றியது. பரந்த புல்வெளியும் அதன் ஒருபுறம் இயற்கையான ஏரியும் காணக்கிடைக்காத பேரழகு.





 நடுவில் இருந்த புல் மேவிய குன்றும் அதன் மேல் இருந்த சில பைன் மரங்களும் அற்புதம்!! இப்போது புரிந்தது உலகநாயகன் ஏன் இங்கே திரைப்படம் எடுக்க வருகிறார் என்று.. “இள நெஞ்சே வா.. தென்றல் தேடி எங்கும் போய்வரலாம்” என்று பாடிக்கொண்டே புல்வெளி முழுதும் சுற்றி வந்தோம். 




இங்கு நமக்குப் பிடித்த மற்றோரு விஷயம் ‘தூய்மை‘. பண்ணையும் புல்வெளியும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. மனிதர்கள் வந்து செல்லும் இடம் என்பதற்கு எந்தத் தடையமும் இல்லை. அதற்காகப் பண்ணையின் தலைவர் டாக்டர்.ராஜேந்திரன் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்ணையை ஒரு சமயம் மத்திய அரசு மூடுவதற்காக முயற்சி செய்துள்ளது. இங்கு பணி புரிவோரின் கடும் முயற்சியால் தலைமையகத்தில் இருந்த நிறுவனத்தின் தலைவர் இங்கு வரவழைக்கப்பட்டு, அவர் பண்ணையை நேரில் பார்த்த பின் இதன் அருமை உணர்ந்து மூடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டுள்ளது. 




புல்வெளியில் உலாவிவிட்டுத் திரும்பும்போது முன்னர் மேய்ந்துகொண்டிருந்த குதிரை இப்போது சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யத் தயாராக இருந்தது. சவாரி செய்து மகிழ்ந்தோம். குதிரையின் உண்மையான கம்பீரம் அதில் சவாரி செய்யும்போது மட்டுமே தெரியும். ஏற்ற இறக்கங்களையுடைய புல்வெளியைப் பொருட்படுத்தாமல் அது அனாயசமாகச் சுற்றி வந்தது. கணேசன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்து மண்ணவனூர் ஏரிக்குச் சென்றோம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி. நுழைவுக் கட்டணம் உண்டு. வாகனம் நிறுத்த வசதி இல்லை. சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். நுழைவாயில் அருகிலேயே சிற்றுண்டி மற்றும் தேனீர் விடுதி உள்ளது. ஏரிக்குச் செல்லப் பத்து நிமிடம் நடக்க வேண்டும். 

ஏரிக்குச் செல்லும் பாதை
சுற்றிலும் புல்வெளியால் சூழப்பட்ட அழகிய  ஏரி. இறைவன் வரைந்த ஓவியம் என்றே சொல்ல வேண்டும். கண்டதும் காதல் என்பார்களே அது உண்மை தான். முதல் பார்வையிலேயே தன் அழகில் நம்மை மயக்கி விடுகிறாள். கரையில் அமைக்கப்பெற்ற இருக்கைகள் அவளை நாம் நிதானமாக ரசிக்க உதவுகிறது.

மண்ணவனூர் ஏரி


கிராமத்தில் ஆறு குளங்களில் குளித்து மகிழ்ந்த நமக்கு இவ்வளவு அழகான ஏரியைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா?? குதித்துவிடத் தோண்றியது. முடியாது என்பதால் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டோம். தண்ணீரின் குளிர்ச்சி உள்ளங்கால் வழியாக உடலுக்குள் ஏறிச் சில்லிட வைத்தது.


பரிசல் பயணத்திற்கு அனுமதி உண்டு. மூங்கிலால் செய்யப்பட்ட பரிசல்கள். பரிசலில் பயணம் செய்தோம். பரிசலில் ஏரியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தோம். ஏரியின் மறுபுறம் அமைந்த மரத்தாலான ஒரு சின்னப் பாலம் அவ்விடத்தின் அழகைக் கூட்டியது. பரிசலில் சென்று அவ்விடத்தில் இறங்கி ஏரியைச் சுற்றிக் காலாற நடந்து வரலாம். அதற்கான நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. 



ஏரியின் நடுவில் பரிசலில் சென்ற போது பரிசல் ஓட்டி நம்மைப் பரிசலை நன்றாகப் பிடித்துக்கொள்ளச் சொன்னார். எதற்கு என்று நாம் யோசிக்கும் போது துடுப்பால் பரிசலை மெதுவாக நின்ற இடத்திலேயே சுழற்றினார். இவ்வளவு தானா என்று நாம் எண்ண, மெதுவாக ஆரம்பித்த சுழற்சி மெல்ல மெல்ல வேகம் எடுத்து அதே இடத்தில் ராட்டினம் போல் வேகமாக சுழன்றது செம திரில்லாக இருந்தது. உற்சாகத்தில் கூச்சலிட்டோம். தென்னரசுவிற்கு தலை சுற்ற ஆரம்பிக்க பரிசலை நிறுத்தச் சொல்லிவிட்டார். 



பரிசல்காரர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் பரிசலை சுழற்ற கடைசியில் நமக்கும் தலை சுற்றுவதுபோல் ஆகிவிட்டது. ஆனால் தீம் பார்க்குகளில் இருக்கும் ரைடுகளில் கிடைக்கும் திரில்லை ஒரு பரிசல்காரரால் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டோம். இது போன்று கிடைக்கும் எதிர்பாராத சந்தோசத்துக்கு ஈடு ஏதும் இல்லை. இத்தகைய நிகழ்வுகளே பயணத்தை சுவாரஷ்யமாக்குகின்றன. பரிசல்காரருக்கு நன்றிகளைத் தெரிவித்து விடை பெற்றோம்.

பைக்கை எடுத்துக்கொண்டு கவுஞ்சி வரை ஒரு ரைடு சென்றோம். வழியெங்கும் மலையைச் செதுக்கிச் செய்யப்பட்ட விவசாய நிலங்களின் அழகை ஆசை தீர ரசித்துவிட்டுத் திரும்பினோம்.


அப்படியே தொடர்ந்து சென்றால் பூண்டியை அடையலாம். மண்ணவனூரைப் போல் பூண்டியும் அழகிய இடம் என்றும் அங்கே தங்க நல்ல விடுதியும் உள்ளது என்பதை அறிந்தோம். பூண்டியை அடுத்த பயணதிற்கு விட்டுவிட்டுத் திரும்பினோம்.  

அறையைக் காலி செய்து பெரியவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.  மண்ணவனூரில் நாங்கள் இருந்தது குறைந்த நேரமே என்றாலும் அது நமக்கு நிறைந்த மகிழ்வைக் கொடுத்தது. பொதுவாக மலைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்துவிட்டுக் கீழே இறங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர் குறைந்து வெயில் ஏறும் பாருங்கள் அப்படியே திரும்பி மலைக்கே சென்றுவிடலாம் என்று தோன்றும். அதுவும் இந்த வருடக் கோடைக் காலத்தில் சொல்லவே வேண்டியது இல்லை. இருந்தாலும் நம் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அடுத்தப் பயணத்திற்கான நேரம் கைகூடக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதிலும் நம்முடைய காத்திருப்பு பிரிந்திருக்கும் காதலியைக் காணக் காத்திருக்கும் காத்திருப்பை விடக் கொடிது…
காத்திருப்போம் காலம் கைகூட…. 

முற்றும்….

மண்ணவனூர் பயணிக்க டிப்ஸ்:

Ø  மண்ணவனூர் செல்லும் பயணிகள் கொடைக்கானல் நகர் வந்தே செல்ல வேண்டும்.
Ø  கொடைக்கானலலில் இருந்து பைன் மரக்காடு செல்லும் சாலையில் சென்று மோயர் பாயிண்டுக்கு முன்பாக வலதுபுறம் பூம்பாறை செல்லும் சாலையில் 35 கிமீ சென்றால் மண்ணவனூரை அடையலாம்.
Ø  சாலை பூம்பாறை பிரிவு வரை அருமையாக உள்ளது. அதன் பிறகு கொஞ்சம் மோசம். ஆனால் அனைத்து வாகனங்களும் செல்லலாம்.
Ø  35 கிமீ-யும் காட்டிற்குள் பயணம் என்பதால் இருட்டிய பிறகு பயணிப்பதைத் தவிர்க்கவும்.
Ø  மண்ணவனூரில் இரண்டே தங்கும் விடுதிகள் உள்ளன. நாங்கள் தங்கிய விடுதி மிகச் சிறிய அறைகளைக் கொண்ட சுமாரான விடுதி. ஆனால் விடுதி பொறுப்பாளர் தங்கவேல் (மொபைல் எண்:9442023671) மிக நல்ல மனிதர். வேண்டிய உதவிகளை இன்முகத்தோடு செய்து கொடுப்பார். 
Ø  நல்ல அறைகள் வேண்டும் என்றால் இரவு கொடைக்கானலில் தங்கிப் பகல் சுற்றுலாவாக மண்ணவனூர் வரலாம்.
 [மண்ணவனூர் பயணக்கட்டுரையைப் படித்துவிட்டு, மண்ணவனூர் வனத்துறையில் பணிபுரியும் வனவர் திரு.டேவிட் ராஜா அவர்கள் நம்மை அழைத்திருந்தார். வனத்துறை சார்பாக மண்ணவனூரில் இயற்கையான சூழலில் தங்கவும், உணவும், காட்டுக்குள் சென்றுவர வழிகாட்டி மற்றும் வனத்திற்குள் தங்க கூடார வசதியும் தற்போது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். வனத்துறையின் இந்த முயற்சி பாராட்டக்கூடியது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி மகிழலாம். தொடர்புக்கு: திரு.டேவிட் ராஜா, வனவர், செல்போன் எண்:9751495138 ]
Ø  பார்க்க வேண்டிய இடங்கள் மண்ணவனூர் ஏரி, தென்மண்டல ஆராய்ச்சி நிலையம் (ஆட்டுப்பண்ணை). ஆட்டுப்பண்ணை என்று தவிர்க்க வேண்டாம். அருமையான இடம்.
Ø      தவிர, பார்க்கும் இடமெல்லாம் இயற்கை கொட்டிக் கிடக்கும்.
Ø கிராமத்து உணவகங்கள் போன்ற சிறிய உணவகங்கள் தவிர பெரிய ரெஸ்டாரண்டுகள் இங்கு இல்லை. அரசு மதுபானக் கடை உள்ளது..
Ø  போதைக் காளான் அதிகம் கிடைக்கும் இடம். எவரேனும் அதோடு அனுகினால்  எச்சரிக்கை தேவை.

சந்தோஷமாய் போய் சந்தோஷமாய் வாங்க…..


நன்றி….