Tuesday 16 May 2017

குலுக்கிய சர்பத் - வாகமன் (கேரளா)

கோடைக்காலம் வந்தாலே குளிர்பான விற்பனை அமோகமா இருக்கும். சாலை ஓரங்களில் ஆங்காங்கே இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு விற்கும் சீசன் கடைகள் முளைத்திருக்கும். இந்தக் கடைகளும் இல்லனா வெயில சமாளிக்கிறது ரொம்பக் கஷ்டம். அந்த வகையில் இந்தக் கடை வச்சுருகிறவங்க எல்லாம் நம்மைக் காக்க வந்த அவதாரப்புருசர்கள் தான்.

இப்படிக் கோடைய சமாளிக்க மனிதன் கண்டுபிடித்த பானங்களில் ஒன்று தான் சர்பத். நம்மில் சர்பத் குடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டோம். கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் வராத காலங்களில் சர்பத் மட்டுமே நம் தாகம் தீர்த்த குளிர்பானம். அந்தக்கால டீக்கடைகளில் இருக்கும் மர மேஜையின் முன்புறம் நம் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் கண்ணாடி பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் மூடி போட்டு மூடப்பட்டிருக்கும் நீளமான கண்ணாடி பாட்டில்கள். அதில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளை நிற லேபிளில் கோட்டு அணிந்த சேட்டு போன்ற ஒருவரின் படம் இருக்கும். அதில் தேன் பதத்தில் இருக்கும் அந்த சிவப்பு நிற திரவத்தைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறாத குழந்தைகள் யாரும் இருந்திருக்க மாட்டோம்.

அம்மா கடைக்குப் போகச் சொன்னால் கால் வலிக்கிறது, முடியாது என்று அடம்பிடிக்கும் நாம், சர்பத் வாங்கிவரச் சொன்னால் முதல் ஆளாக சொம்பை தூக்கிக்கொண்டு ஓடுவோம் கடைக்கு.. கடைக்காரரிடம் ஒரு சர்பத் என்று சொம்பை நீட்டிவிட்டு அந்த சிவப்பு நிற பாட்டில்களையே பார்ப்போம். கடைக்காரர் அதில் ஒரு பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்து அதில் இருக்கும் சிவப்பு திரவத்தைக் கொஞ்சம் சொம்பில் ஊற்றுவார். பிறகு அதில் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அதன்மேல் ஐஸ்கட்டிகளைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கிக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு செல்லும்போது ஐஸ்கட்டியின் குளிர்ச்சியால் சொம்பின் வெளிப்புறம் வியர்த்து நீர்த்துளிகளாய் இருக்கும். சொம்பைக் கண்ணத்தில் வைத்து குளிர்ச்சியை அனுபவித்துப் பரவசப்படுவோம்.

வீட்டில் அம்மா அதை டம்ளரில் ஊற்றித் தரும்போது, டம்ளரின் விளிம்புவரை வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிக் குடிப்போம். அதும் போதாது என்று அம்மாவின் பங்கில் பாதியையும் ஆட்டையைப் போட்டுவிடுவோம். குடித்து முடித்தபின் சர்பத் எசன்ஸால் சிவந்திருக்கும் நாக்கைப் பார்த்து யருக்கு அதிகமாக சிவந்திருக்கிறது என்று போட்டி போடுவோம். நாகரீக மாற்றத்தால் இன்று பன்னாட்டுக் குளிர்பானங்கள் வந்த பின்பு சர்பத் அருந்துவது குறைந்தாலும் அதை விரும்புவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய சர்பத் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையில் பரவியிருக்கிறது. அப்படி ஒரு வகை தான் கேரளாவில் கிடைக்கும் 'குலுக்கி(ய) சர்பத்'.  

தங்கல்பாறை
சமீபத்தில் நண்பர்களுடன் வாகமன் சென்றிருந்தோம். அங்கே தங்கல்பாறை என்ற மலையில் இஸ்லாமிய வழிபாட்டுத் தளம் உள்ளது. ஒரு மணி நேரம் மலையேறி உச்சியை அடையலாம். மலையேறிவிட்டு இறங்கியதும் கலைப்பு நீங்க எதாவது குளிர்பானம் அருந்தலாம் என்று அங்கிருந்த ஒரே ஒரு கடைக்குச் சென்று கேட்டபோது, குலுக்கி சர்பத் (மலையாளத்தில் குலுக்கி மட்டுமே) இருக்கிறது என்றார். பெயரே வித்தியாசமாக இருந்ததால் அதைப் பருக ஆவலாய் ஆளுக்கொன்று சொல்லிவிட்டு குலுக்கி சர்பத் தயாராவதை வேடிக்கை பார்த்தோம். 




முதலில் பாழுக்காத பச்சை எலுமிச்சங்காயில் இருந்து சாற்றை ஒரு கண்ணாடி டம்ளரில் பிழிந்துவிட்டு அந்த எலுமிச்சந்தோலையும் அதில் போடுகிறார். சிறிதளவு உப்பு சேர்த்து, அரைத்து வைத்த இஞ்சி பேஸ்ட் கொஞ்சம் போடும்போது ஏனோ சிறு பயம் நமக்கு, சர்பத் என்றால் இங்கு வேறு அர்த்தமோ என்று.  பிறகு வழக்கமான சர்பத் எசன்ஸுக்கு பதில் சர்க்கரைப் பாகு சேர்க்கிறார். அடுத்து துளசி விதைகள் (கஸ்கஸ்) சேர்க்கிறார்.  அது பார்க்கத் தவளை முட்டை போன்றே இருக்கிறது. பச்சை மிளகாயையும் அதில் வெட்டிப் போடும்போது நமது பயம் அதிகமாகி அவரையே நோக்குகிறோம். இறுதியாக ஐஸ்கட்டிகளைச் சேர்த்து மீதி டம்ளரைத் தண்ணீரால் நிரப்புகிறார்.

குலுக்கி சர்பத்
இப்போது இன்னொரு எவர்சில்வர் டம்ளரை எடுத்து அதன் வாயால் இந்தக் கண்ணாடி டம்ளரின் வாயை மூடி, மேலும் கீழுமாய் ஒரு 30 நொடிகள் குலுக்கித் திறந்ததும் அது மிக்சரில் அடித்தது போல் நன்றாக நுரைத்திருக்கிறது. இப்போது குலுக்கிய சர்பத் நாம் பருகத் தயார். மிளகாய் எல்லாம் போட்டிருக்கிறாரே என்று முதல் வாய் ஐயத்துடனே எடுத்துப் பருகி இரு நொடிகள் சர்பத்தை வாயிலேயே வைத்துக் கண்களை மூடி சுவையை அரிய முயல்கிறோம். சும்மா சொல்லக் கூடாது ‘பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு’ என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒரே நேரத்தில் எலுமிச்சையின் புளிப்பும், சர்க்கரையின் இனிப்பும், இஞ்சி மற்றும் மிளகாயின் கார்ப்பும் இவற்றோடு ஐஸ்கட்டியின் குளிர்ச்சியும் சேர்ந்துகொள்ள சுவையில் நா திக்குமுக்காடிவிடுகிறது. பிறகு ஒவ்வொரு வாயும் மெல்ல ரசித்து ரசித்துப் பருகிவிட்டு நாம் கேட்டது “சேட்டா ஒன்ஸ்மோர்”. ஆம், மீண்டும் ஒரு குலுக்கிய சர்பத்தைக் கேட்டு வாங்கிச் சுவைத்து மகிழ்ந்தோம். விலை வெறும் 20 ரூபாய் தான் ஆனால் அந்த சுவை அளித்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. 


குலுக்கி சர்பத் V2.0


குலுக்கி சர்பத்துக்கு அடிமையாகிப் போன நாம் வாகமன் விட்டுக் கிளம்பும்போது மீண்டும் ஒருமுறை இங்கு வந்து சுவைத்துவிட்டுச் செல்ல எண்ணினோம். ஆனால் நேரமின்மையால் தங்கல்பாறை வரை செல்ல இயலாததால் வேறு இடத்தில் குலுக்கி சர்பத்தைத் தேடியபோது 'வாகமன் புல்வெளி' அருகில் ஒரு கடையைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து ஒரு குலுக்கி சர்பத் என்றோம். இங்கே குலுக்கி சர்பத்தில் மேற்சொன்னவைகளோடு சர்க்கரைப் பாகுக்கு பதில் சீனி சேர்த்து, மேலும் சிவப்புக் கலரில் ஒரு விதையும் சேர்த்து வழங்கினார். சுவை சற்று வித்தியாசமாக நன்றாகவே இருந்தது. 




இவ்வளவு சுவையான குலுக்கி சர்பத் கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கள்ளைப் போல் கேரளாவில் அவசியம் சுவைக்க வேண்டிய பானம். இதிலேயே சோடா, அன்னாசித் துண்டுகள் அல்லது தர்பூசணி சேர்த்து அவரவர் சுவைக்கேற்ப பருகலாம்.  இப்போதெல்லாம் வீட்டில் தாகமாக இருந்தால் குலுக்கி சர்பத் தான்.


4 comments:

  1. சர்பத் போல் இனிக்கும் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி

      Delete
  2. சிறு வயது நினைவலைகள் மீட்டிச் சென்றது நண்பரே - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.. வந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே..

      Delete